Friday, January 23, 2009

அம்மா ஏன் இப்படி மாறினார்.?

அம்மா ஏன் இப்படி மாறினார்.?


" டேய் ஊருக்கு போறியா..?ஆனந்த்?.. ரொம்பத்தான் குஷி போல..?... "

" அதெல்லாம் இல்லைடா... கட்டாயத்துக்காகத்தான் போறேன்... விருப்பமேயில்லை.."

" அட.. ரொம்ப அலட்டல் ஓவராயிருக்கு... எப்பவும் துள்ளி குதிது கிளம்பும் நீயா இப்படி சொல்ற?.. அதுவும் பொங்கல் அதுவுமா..?"

" ஆமா டா. நான் ஊருக்கு போறதே அம்மாவுக்காகத்தான்..... ஆனா அம்மாவோட போக்கே இப்ப வித்யாசமா இருக்குடா

எப்பப்பார்த்தாலும்., எரிஞ்சு விழறாங்க.. அத ஒழுங்கா வெக்கல, இத செரியா செய்யலன்னு..ஒரே குறைதான்..."

" டேய் நம்ப முடியலைடா.. என்கிட்டயே பெத்த புள்ள மாதிரி பாசம் காட்டுவாங்களே..ஒரு வேளை வயசானதாலோ?.."

" தெரிலடா.. ஒரு வேளை கூடவே இருந்திருக்கணும் நான்.. இங்க பெங்களூருக்கு வந்த‌திலிருந்து இந்த மாற்றம்..
அதுவும் அவுங்க கட்டாயப்படுத்தி தானே வந்தேன்.."

" சரி கெளம்பு நானும் வாரேன் உன்கூட பொங்கலுக்கு.. பாண்டிச்சேரிக்கு.. அப்படியே எஞ்சாய் பண்ணினா மாதிரியும் இருக்கும்.."

" டேய்.. .......டே..........................ய்....இருடா...........பொறுடா..."

எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஹரி பெட்டியை பேக் செய்வதிலேயே குறியாய் இருந்தான்..

‍‍‍‍‍‍‍‍‍‍ரிசர்வ் வேறு செய்யவில்லை.. இவனோட தொந்தரவு நு மனதில் நினைத்தாலும் அவன் உதவி பல நேரங்களில் தேவையாயுள்ளதே... சமையல் , துணி துவைக்க, கடை செல்ல, வீடு சுத்தம் செய்ய எல்லாவற்றையும் பகிர்ந்து செய்யும் நல்ல நண்பன்... பெரிய குடும்பத்திலுள்ளவன்...வேலை செய்ய கூச்சப்படாதவன்...
ஆனா தான் பிடிச்ச நாய்க்கு இரண்டு வால் என்பான்..( எத்தனை நாள்தான் முயல்?.. பாவம்...)


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ஓவ்வொரு பேரூந்தாய் ஏறி இறங்கி ஊர் வந்து சேர்ந்தாச்சு...

அம்மா வாசலில் அழகாய் கோலம் போட்டுக்கொண்டிருந்த பனிக்காலைப்பொழுது...

பார்த்ததும் பேருக்கு " வா த‌ம்பி" நு மட்டும் சொல்லிவிட்டு உள்ளே நுழையும்போது மறுபடியும் கூட ஹரி வந்திருப்பதைப்பார்த்துவிட்டு,

" வாப்பா ஹரி.. நீ வருவாதாகக்கூட சொல்லலை பாரு அவன்.." நு சொல்லிட்டு கைபிடித்தே அழைத்து சென்றார்..

" பாத்தியா குறை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க .." நு உதட்டை பிதுக்கி அதிருப்தியை முகத்தில் காட்டினான் ஆனந்த்..

" சும்ம பேசாம இரு.. அப்படில்லாம் தெரில " நு கண்ணாலே அதட்டினான் ஹரி..

" என்னங்க ஹரி வந்திருக்கான் " நு சொல்லியே அப்பாவையும் எழுப்ப சத்தம் கொடுத்தார்..

அம்மாவுக்காக வாங்கி வந்த இனிப்புகளை கையில் கொடுக்கும்போதும், வாங்கி பக்கத்தில் வைத்தாரே யொழிய,

வேலையை தொடர ஆரம்பித்துவிட்டார்...

இப்பதான் ஹரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது ஆனந்த் முகத்தை பார்க்கும்போது...

தினமும் 3, 4 முறை தொலைபேசியில் பேசிடுவான்.. அது இப்போது 2 நாளுக்கொருமுறை கடமைக்காக என ஆயிற்று..

என்னாதான் ஆச்சு அம்மாவுக்கு ?.

தனக்கு மட்டும் விழுந்து விழுந்து உபசரிப்பு... ஆனந்துக்கு வேலை செய்ய உத்த‌ரவிடும்போது மட்டுமே பேச்சு...

3 நாள்கள் மிக அருமையான வீட்டுச்சாப்பாட்டுடன் கழிந்தது...


ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது... எப்படியும் அம்மாவிடம் இது பற்றி கேட்க சந்தர்ப்பம் எதிர்பார்த்தான்.. ஆனந்துக்கும் தெரிய கூடாது...அவனை கடைத்தெருவுக்கு அம்மா அனுப்பியதும், மெதுவாக சமையலறைக்குள் நுழைந்தான்...

" என்னப்பா சூடா தேநீர் தரவா..?"

" தாங்கம்மா... ஆனா நான் கேக்கப்போறதுல நீங்க சூடாயிர கூடாது... சரியாம்மா..?"

" அட , அம்மாகிட்டயே கலய்ப்பா... அப்படி என்ன கேப்பேன்னு தெரியுமே..."புன்னகைக்கிறார்...


" நெஜம்மாவா மா... அதெப்படி ...?????"ஆச்சர்யத்தோடே..

" ம். புள்ளய பெத்தவங்களுக்கு புரியாதா என்ன..?.. புள்ளங்களுக்குத்தான் பெத்தவங்களை புரிவது கஷ்டம்..."
நுனு சர்வ சாதரணமாய் சொன்னாலும், அவர் குரலில் தடுமாற்றத்தை உணர்ந்தான்..

ஒன்றுமே கேட்டிருக்க கூடாதோ நுனு தோணுது அவனுக்கு... அம்மாவை சங்கடப்படுத்தி விட்டோமோ...?

அவர்களுக்கு பேச பிரியமில்லாத விஷயத்தை ஆரம்பித்துவிட்டோமோ என.

" நான் ஏன் ஆனந்த் கிட்ட இப்படி பாசமில்லாம நடந்துக்கிறேனு தான கேக்கப்போற..?" தேநீரை கையில் தருகிறார்..

அவர் கண்களை சந்திக்க முடியவில்லை ஹரியால்..மெளனமாய் அசட்டுப்புன்னகை மட்டும்...தேநீரை பார்த்துக்கொண்டே


" என் மேல உயிரே வெச்சுருக்கான்பா... அதனாலேயே கல்யாணம் பண்ணிக்காம ஒத்திபோடுறான்...நான் தும்மினா போதும் , ஊர கூட்டிடுவான்...என் புள்ள...எல்லா வேலையும் நாந்தான் செய்யணும் அவனுக்கு...அதுக்காகத்தான் பெங்களூர் அனுப்பினேன்.... அங்க போயும் தினமும் 10 வாட்டி போன்... அம்மா , நல்லாருக்கீங்களான்னு...அப்புரம்தான் யோசிச்சேன்.. இவன் இப்படியே இருந்தா முன்னேறிக்கிட மாட்டான்... அம்மா முந்தானையே பிடிச்சு வளர்ந்தவன்...நாளைக்கு அவனுக்குன்னு ஒருத்தி வந்தா கூட இவன் இப்படி நடந்துகிட்டான்னா , அவ என்ன நினைப்பா..?

அதனால்தான்ப்பா, அவன்மேல உள்ள பாசத்தை கட்டுப்படுத்திகிட்டு அவனை கொஞ்சம் விலகி தனித்திருக்க பழக்குறேன்..

எனக்கு மட்டும் வலி இல்லையா.. ஆனா வரப்போறவா கிட்ட இவன் அதிக பாசமா இருக்கணுமேப்பா... அதுதான ஒரு தாய்க்கு சந்தோஷம்...சொல்லு..?...

ஒவ்வொரு நாளும் என் பிள்ளை போன் செய்யும்போதெல்லாம் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, ஏனோ தானோன்னு பேசி முடித்துவிட்டு நான் அழுவேன் இங்கே...சில நல்லதுக்காக சில நாடகம் தேவையாயிருக்கே..."

விழிகளில் கண்ணீருடன்...தேநீர் கோப்பையை வாங்க கை நீட்டுகிறார்.

அம்மாவின் கையை பிடித்த ஹரிக்கு பேச வார்த்தைதான் வரவில்லை..

" நான் இருக்கேன்மா.. அவனை பார்த்துக்கொள்ள" என்று தலையை மட்டும் அசைத்தான் ஹரி..

வெளியில் இதை தற்செயலாய் கேட்ட ஆனந்த், மாடிக்கு சென்றே யாருக்கும் தெரியாமல் ஆனந்த கண்ணீரை துடைத்தான் ...ஆனந்த்..

" பொண்ணு பார்த்துட வேண்டியதுதான்.." என எண்ணிக்கொண்டே..

2 comments:

GIRIJAMANAALAN said...

ஆனந்த் மட்டுமல்ல, இக்கதையைப் படித்துவிட்டு நானும்...என்...க...க..கண்........கண்ணீரைத் துடைத்துக்கொண்டேன்!
பாராட்டுக்கள்!

- கிரிஜா மணாளன்

வல்லிசிம்ஹன் said...

உண்மையான சம்பவம் கூட. எங்க மகனை மாற்ற நானும் கொஞ்சம் இப்படி செய்ய வேண்டிய நேரமும் இருந்தது.

திருமணம் ஆகியும் மாறாத பிள்ளைகள். பாசம் நேரம் குறைந்தாலும் மாறாமல் போன் வழியே வருகிறதுக்காகக் கடவுளுக்கு எல்லா நொடியிலும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அருமையாக இருந்ததும்மா.