Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?






யார் இந்த அன்னா ஹசாரே.?.

நன்றி இட்லிவடை
அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

இந்த 71 வயது இளைஞர் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர்.

அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார்.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

--------

இப்படி அற்புதமா போகுது இவரைப்பற்றிய செய்தி.. ஆனால் நடப்பதென்ன?.

மத்திய அரசு பணிந்தது: உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறார் ஹசாரே.!!!!!!!

காந்தீயம் வென்றுவிட்டது ..

--------------------

இந்தியருக்கு மட்டும் வருடம்பூராவும் ஏப்ரல் ஃபூல் ஏன்.?..

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். - அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்கிற மாதிரி நடிக்கும்..

-
அன்னா ஹசாரே ஏழை.

அவர் மாசற்றவரே.. மிக நல்லவரே.. ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம?..

இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?..அது எத்தனை முக்கியம்..?




அவருக்காக மெழுகுவத்தி ஏந்தும்போது,



வாழ்நாளில் ஊழல் செய்தவன் , துணை போனவன், அடுத்தவன் உழைப்பை சுரண்டியவன் , அடுத்தவன் வாழ்வை அழித்தவன் , மிரட்டியவன், மிரட்டல் வந்ததா கதறி பொய் சொன்னவன் , அதுக்கு தொண போனவன் ,சாதீ ய மும்முரமா வளர்ப்பவன் , பெண்களை இழிவுபடுத்துபவன் , ஆபாசத்தை வளர்த்தெடுத்து சிறார் கொலைக்கு துணை போறவன், எப்பவும் கெட்ட வார்த்தை மட்டுமே பேசி சமூகத்தை கழிப்பிடமாக்குபவன் , மதவெறி பிடித்தவன் , வன்முறை செய்பவன், அதற்கு துணை போகிறவன் கையெல்லாம் பொசுங்கி போற மாதிரி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.. :)))) ( ன்/ள் போட்டுக்கலாம் )

எத்தனை பேரால் மெழுகுவத்தி ஏந்த முடியும்னு தெரிஞ்சிருக்குமே..

என் கையும் பொசுங்கியிருக்குமே..:)..எப்பவோ நானும் லஞ்சத்துக்கு துணை போயிருக்கேனே..அவ்வ்..


அன்பின் அண்ணா ஹசாரே,

அடுத்த முறை உண்ணாவிரதம் இருக்கும்போது உங்களை ஆதரிப்பவர்களும் உங்களைப்போல மாசற்றவராக மட்டுமே இருக்கணும் என வேண்டுகோளை மறக்காமல் சொல்லிடுங்கள்..( இல்லையென்றால் உங்களோடு சேர்ந்து உங்கள் போராட்டத்தையே அசிங்கப்படுத்துகிறோம் திருடர்களாகிய நாங்கள் )


ஊழல் என்ற பூதம் ஏதோ அரசிடம் மட்டுமே இருப்பதுபோல ஊடகம் பூச்சாண்டி காண்பிப்பதும் , அதை விரட்ட , மக்கள் படையெடுப்பதும் பங்கெடுக்கும் எமக்குள்ளே குறுகுறுப்பை தருது..

எங்ககிட்டே குடியிருக்கும் பேயை யார் விரட்டுவது.?..

உங்களிடம் உள்ள சக்தி அரசை திருத்துவதாக மட்டுமல்லாமல் , பொதுமக்களுக்கும் ஒரு பாடமாக இருந்தால் நன்று..


வேர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பலவிதத்தில் பரவியிருக்கு.. தாமிரபரணி தண்ணீரை கொக்கோ கோலா எடுத்தா கண்டுக்க மாட்டோம்,. ஏன்னா அதை பற்றி எடுத்து சொல்ல இன்னொரு காந்தியோ அன்னா ஹசாராவோ தேவை நமக்கு.. இவர் போராட்டம் ஒரு சட்டம் ஏற்ற தான்.. அப்படியென்றால் இதுவரை இருக்கும் சட்டங்கள் பயன்படவில்லை என்றுதானே அர்த்தம்.. அதை நேர்வழியில் செலுத்த எந்த அன்னா ஹசாரா வர காத்திருப்போம்..?

நாம் அன்றாடம் கண்டுகொள்ளவேண்டிய கலங்க வேண்டிய பிரச்னை ஆயிரம் நம்மைசுற்றி இருக்கிறது.. எப்பவும் ஒரு அன்னா ஹசாரேவுக்காக நாம் காத்திருக்கோம்.. அவர் எடுத்த காரியம் வெற்றி பெற்றதும் மறந்திடுவோம்.. எங்கேயோ ஏதோ வெற்றி பெற்றதாகவும் அதில் பங்கெடுத்ததற்காக நம்மை நாமே பாராட்டி ஏமாற்றிக்கொள்வோம்..


ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்குமுன் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டு இனி பங்கெடுப்போம்.. அதையே அன்னா ஹசாரே போன்றோரும் எதிர்பார்ப்பதோடு அழுத்தமும் தரணும்.. இல்லையென்றால் இது பத்தோடு பதினொன்று அவ்வளவே.. நாட்டை திருத்த கூட வேண்டாம்.. முதலில் அன்னா ஹசாராவைப்போல் நம்மால் மாற முடியுமா என எண்ணிப்பார்த்துக்கொள்வோமே.. அப்போது அந்த மெழுகுவத்திக்கும் ஒரு வெளிச்சம் இருக்குமே..

இங்குதான் நாம் தவறு செய்கிறோம்.. போராட்டத்தின் அர்த்தமே நமக்கு தெரியவில்லை.. எங்கோ நடக்கும் போராட்டத்துக்கு ஊடகத்தின் ஆதரவு இருப்பதால் மட்டுமே நாம் ஆதரவு தெரிவிப்பதோடு நின்றிடக்கூடாது.. அன்றாட வாழ்க்கையில் போராட பழக்கணும் குழந்தைகளை , சாதி வெறி, மத வெறி, பெண்ணடிமை , லஞ்சம் , ஊழல், சமூக விரோத செயல்கள் , ஏற்றத்தாழ்வு, திருநங்கை வாழ்வு, வன்முறை, இப்படி பலப்பல.. இதை செய்ய நாள் நட்சத்திரம், துணைக்கு ஆட்படை எண்ணி காத்திருக்க தேவையில்லை. சகஜமாக்கப்படணும் கேள்விகள் கேட்கணும்..தினமும்..

நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.. நம் நட்பிடம் தவறு என்றால் சொல்ல துணியணும்.. நம் கட்சி என்றாலும் நம் ஊர் , நம் இனம் , நம் மொழி என்றாலும் தவறை தவறு என எடுத்து சொல்ல துணிவை வள்:அர்க்கணும்.. இழிவுகளை பாராட்டுகளாக எடுக்க பழகணும்.. இல்லை நான் என் சொந்த பந்தங்களிலெல்லாம் தட்டி கேட்டால் விலக்கிடுவார்கள் , அதனால் நான் அரசை மட்டுமே கேட்பேன் , நானும் திருந்த மாட்டேன் என்றால் தயவுசெய்து அப்படியான நாடகத்தனமான ஆதரவு தருவதை விட நாடு எக்கேடும் கெட்டுப்போகட்டும் என விட்டுடுங்கள்..

மதுரையில் திரு.சகாயம் அவர்கள் பல சிக்கலில் மாட்டியுள்ளார்.. ஒரு நல்ல மனிதரை நல்லது செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவருக்காக போராடலாமா?.. பயம் வருகிறதல்லவா?..

இதுதான் நாம்.. அதனால், காந்தியம் வென்றுவிட்டது , என நம்மை நாமே இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக்கொள்ள பழகிவிட்டோம்..

சமூகத்தில் உள்ள அனைத்து விரோதப்போக்குக்காகவும் , மனிதத்தன்மையற்ற செயலுக்காகவும் போராடணும், அன்றாடம்..நின்றுவிட்டால் மூழ்கிடுவோம்.. இது ஓடும் தண்ணீர் .. இடைவிடாமல் எதிர்நீச்சல் தேவை நமக்கு.. நம்மைப்பார்த்து பின்னால் வருபவர்களும் பழகிடட்டும்..

மெரீனா பீச்சுக்கு போக கூட தேவையில்லை.. கணினி முன் உட்கார்ந்தே உங்கள் கோபமான எழுத்தால் போராடலாம் நாகரீகத்தோடு.. மக்களிடையே உண்மை எது பொய் எது என விழிப்புணர்ச்சி கொண்டு வர போராடலாம்..

போராட்டம் என்பது வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா அல்ல கூட்டம் கூட்ட , பங்கெடுத்து மகிழ..



( போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை காயப்படுத்தவோ அவமானப்படுத்தவோ இந்த பதிவு அல்ல...அவர்கள் பங்கெடுப்புக்கு என் வாழ்த்து, பாராட்டு ஒரு பக்கமுண்டுதான்.. ஆனால் போராட்டம் என்றால் என்ன என புரியாமல் இருக்கிறோமே என்ற வருத்ததில் சில கருத்துகளை பகிர மட்டுமே.. புரிவோம்.. பங்கெடுப்போம் தினமுமே.. )

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?..
-----------------------------------------------------------------------------------------------------------------

பதில் : நான் அன்னா ஹசாரே போல் சிறிதளவாவது மாறனும்..





படம் : நன்றி கூகுள்..