

பெண் பார்க்க செல்லும்போதே ஏகப்பட்ட கேள்விகள் ரகு மனதில்..
" அக்கா , பொண்ணு நேரில் பார்க்க அழகா இருப்பாளா.?"
" படிச்சதெல்லாம் கான்வெண்டில் தானே?.."
" ஆங்கிலம் சரளமா பேசுவாளா.?"
" மாடர்ன் உடை உடுத்துவாளா.?."
எல்லாவற்றையும் பொறுமையா கேட்ட அவன் அக்கா,
" அதான் புகைப்படம் அனுப்பினேனே.. அதில் உன் கேள்விக்கான விடையும் இருக்கு.. கான்வெண்டில் படிச்சவ தான் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவள்தான்."
மனதுக்குள் ஒரு வித கலக்கத்துடனே நகரத்திலுள்ள அந்த பெரிய உணவு விடுதிக்கு சென்றார்கள்...
கல கல சிரிப்புடனே எல்லோரிடையேயும் பேசி சிரித்துக்கொண்டிருக்காளே அவளா பெண்?..
நடிகை மீனா சாயலில் , கொஞ்சம் தெத்துப்பல்லோடு...பிங்க் நிற சேலையில்.. ஒடிசலாக..
கூட ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மற்ற பெண்ணொருத்தி, அது அவள் தங்கையாக இருக்கணும்..
இன்னும் கொஞ்சம் பருமனா ஆனா அழகா தோழி போல ஒரு பெண்.. அவள் அண்ணியாக இருக்கணும்..
அடுத்து வயதான அம்மா. வேஷ்டி கட்டிய அப்பா, மரியாதை கலந்த பயத்தோடு தம்பியும் அண்ணனும்.. இவர்கள் வந்ததை பார்த்ததும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு மிக சகஜமாக இருந்தாள்..
ரகுவுக்கு இருந்த அளவு ஆர்வமேதுமில்லை...அவளிடம்... அக்காவிடம் கண் ஜாடையிலேயே கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டான் அவள்தான் பெண் என்று.. பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது..
ஆனால் அவளோ தன் அக்காவிடமும் அக்கா குழந்தை சுமி கிட்டயும் பேசுவதில்தான் ஆர்வம் காட்டினாள். எல்லோரும் அறிமுகப்படுத்திக்கொண்டு எதிரெதிர் அமர்ந்தார்கள்.. உணவு ஏதும் சுவையாக இல்லை ரகுவுக்கு..
ஆனால் அவளோ ஒவ்வொன்றையும் ரசித்து விமர்சித்து அதை பற்றி தன் அண்ணியிடம் கேட்டும் தெரிந்துகொண்டாள்.. தனியாக பேச அனுமதிக்கமாட்டார்களா என ஏங்கியவனை புரிந்தார்போல் , பெண்ணின் தகப்பனார் , அத்தானிடம் ,
" வேணும்னா தனியா பேசட்டுமே " என சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்து சென்றார்.
எந்த வித வெட்கமும் படாமல் , மிக சகஜமாக இருந்தவளிடம் , திக்கி திணறி ,
" உங்க ஹாபீஸ் என்ன.?"
அடுக்க ஆரம்பித்தாள்... தோட்டக்கலையிலிருந்து , மிருகங்கள் , சேவை , அது இது என..
சப்பென்று ஆனது..
பிரபல ஆங்கில நாவல்களின் பெயரை, கவிஞர்களை பற்றி கேட்டான்.. ம்ஹூம்..
அதில் ஆரவமில்லை என சொன்னாள் நேரடியாக..
அவள் செல்லும் , செய்யும் ஷாப்பிங் பற்றி கேட்டதற்கும் ,
" எல்லாம் அம்மா அண்ணியே வாங்கி தருவார்கள் " என்றாள்.
" அப்ப மாப்பிள்ளையும் அப்படித்தானா?."
" ஆமாம்.." நேரடி பதில் அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு..
" அப்ப அவங்களுக்கு பிடிச்சிருந்தா போதுமா?.. உனக்குன்னு ஏதும் ஆசைகள் எண்ணங்கள் இல்லையா.?"
" ம்................................. இல்லை.." னு யோசித்து சொன்னாள்..
" என்னைவிட அவங்க நல்லா பார்ப்பாங்க " னும் சொல்லி வைத்தாள் வெகுளியாக.
தான் எதிர்பார்த்த மாடர்ன் பெண் அல்ல இவள் என புரிந்துகொண்டான்.. இவளை எப்படி அமெரிக்கா கூட்டி செல்வது..
" உனக்கு அமெரிக்கா வர விருப்பம்தானே?."
" ம்.. இல்ல.. ஆனா அப்பாக்கு சரின்னா எனக்கு ஒக்கே.."
அதிர்ந்தான்..
" கட்டாயப்படுத்தினார்களா..?"
" நோ , நோ.... கல்யாணம் கட்டினா மாப்பிள்ளை கூட போகணும்தானே.. அது அயனாவரம்னா என்ன , அமெரிக்கா னா என்ன.?"
எவ்வளவு எளிதா எடுத்துக்குறா?..
தான் எதிர்பார்த்தவை இல்லையென்றாலும், ஏனோ அவளின் வெகுளித்தனமான வெளிப்படையான பதில்கள், சிரிப்பு , அழகு பிடிச்சிருந்தது..
" உனக்கு ஏதாவது கேள்வி இருக்கா என்னிடம்?"
"ம்..ம்.. " யோசித்தாள்... பின்பு கடக் என சிரித்தாள்...
" என்ன " னு கேட்டான்.
" ம்.. ஹஹ,.. இல்ல..நீங்க புகை பிடிப்பீங்களா.?."
சட்டென்று என்ன சொல்ல னு தெரில அவனுக்கு.. ரெகுலரா பிடிக்காட்டியும் அவ்வப்போது குடித்ததுண்டு.. மதுவும் கூட. ஒருவேளை உண்மையை சொல்லி அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டால்?.
" இல்ல எனக்கு அந்த பழக்கமில்ல " அவள் அந்த பதிலை ஏற்றாளா னு ஒரே குழப்பமாய் இருந்தது அவள் பார்வை.
பேசி முடிந்ததும் , அக்கா வந்து கல்யாணத்துக்கு நாள் குறித்துள்ளதாகவும் , அதில் ஒன்றை தேர்வு செய்யும்படியும் சொன்னார்.
அப்பவே அவளை கூட அழைத்துக்கொண்டு சென்றுவிடலாமா என தோணியது ரகுவுக்கு...
--------------தொடரும்...