Saturday, February 5, 2011

நான் யார்?.. சிறுகதை..




" அய்...யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....." ஓங்கி குரலெடுத்து கதறினாள் மீனாட்சி.

நீதிபதி வெங்கடேசன் மடியில் வைத்து படித்துக்கொண்டிருந்த கீதையை மூடிவிட்டு , கண்ணாடியை கழற்றினார்.

பின் மெதுவாக தான் அமர்ந்திருந்த ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு கால் தரையில் ஊன்றி நிப்பாட்டினார்..

பார்வையாலேயே காவல்காரனுக்கு சம்மதம் தந்தார் மீனாட்சியை உள்ளே விட சொல்லி..

" ராவுல ,என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸ் புடிச்சுட்டு போச்சுய்யா.. திருட்டு கேஸூன்னு சொன்னாங்க..

வேல பாக்க கம்பெனில திருடிட்டார் னு நிர்வாணமா நிக்க வெச்சு அடிச்சிருக்கான். அப்பவும் அவர் கிட்ட பொருள்

ஏதும் கண்டுபிடிக்க முடியாம போலிஸ் கிட்ட சொல்லி கூட்டிட்டு போனாங்கய்யா.. நான் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சேய்யா.."

கதறினாள்.. மீனாட்சி நீதிபதி அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்பவள்..

" ராவுல உடனே அய்யாவ பாக்க ஓடிவந்தேங்ய்யா . ஐயா தூங்குறாரு எழுப்ப முடியாதுன்னு காவக்காரர் சொல்லிட்டாருங்கய்யா.." கதற சக்தி இல்லாமல்

மூச்சு விட்டு விட்டு பேசினாள்..

ராதிகா சத்தம் கேட்டு வந்தவள் கையிலிருந்த காப்பியை மாமனாருக்கு தந்துவிட்டு மீனாட்சியை ஒரு கணம்தான் கவலையோடு பார்க்க முடிந்தது..

நீதிபதியின் பார்வை அவளை உடனே உள்ளே போக சொன்னது..

"சரி நான் பார்க்கிறேன். நீ போய் ஆக வேண்டியதை கவனி..எந்த ஸ்டேஷன், கம்பெனி விபரம் உதவியாளர் கிட்ட கொடுத்துட்டு போ.. "

" ராதிகா ஒரு 5000 ரூபாய் எடுத்துட்டு வா.."

எடுத்து வந்தவள் , காவலனிடம் கண்ணாலேயே " ஏன் இரவு அனுமதிக்கல ? " னு கேட்டு " என் வேலை போயிருக்குமே மா" என்று கைவிரிப்பே பதிலாய் வந்ததும்

புரிந்துகொண்டாள்..

---------------------------------

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் நீதிபதி வெகுநேரமாய்.. பின் , இறுதியாக ,

" சரி தொகையை கொஞ்சம் கூட்டிடுங்க.. மத்தத நான் பார்த்துகிறேன்.என் தொகையை குறைச்சுக்கலாம்.."

குளித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தவர் , மருத்துவர் மகனிடம் ,

" போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்கிறபடி செய்துகொடுத்துடு " என்று கட்டளையிட்டார்..

இட்லியை பிட்டுக்கொண்டிருந்தவர் தலை அசைத்தார்.

கணவனின் அடிமைத்தனத்தை ஒரு வெறுமைச்சிரிப்போடு கடந்தாள்..

-----------------------------------

" பூஜை சாமான்லாம் தயாரா மா? " மாமியார்

பேரப்பிள்ளைகள் அட்சரம் பிசகாமல் ஸ்லோகம் சொல்வதை ஒரு கணம் கண் மூடி ரசித்தார் நீதிபதி..

அதையே பாராட்டாய் எடுத்துக்கொண்டு வெட்கச்சிரிப்பில் பெருமிதமாய் பூஜை செய்ய ஆரம்பித்தார் மாமியார்..

----------------------------------

குடுகுடுன்னு மாடிப்படி ஏறிய 6 வயது மகளை தடுத்து நிப்பாட்டி ,

" ஏன் இத்தனை வேகம்.. எத்தனை முறை சொல்வேன்.. ஓடாதே.."

" அய்யோ மம்மி. விடுங்க. பென்சில் சீவும் போது கை வெட்டி காளிம்மாவுக்கு ரத்தம் மம்மி.."
விட்டால் அழுதுடுவாள் போல..

" ஒருவாட்டி சொன்னா கேட்கமாட்டியா. ஷார்பனர் இருக்கும்போது ஏன் அவ கிட்ட தரணும்..? " திட்டிக்கொண்டே பின்பக்கம் போக ,

சாதாரணமாய் பெருக்கிக்கொண்டு இருந்தாள் காளி..

" என்னாச்சு காளி .?"

" எதும்மா.. ..ஒஹ். அதுவா. பாப்பா சொல்லிச்சா.. ஹாஹா.. ரத்தத்த பார்த்து கொழந்த பயந்துடுச்சு போல.. அட இங்க பாருங்க.. பிளாஸ்டர் மருந்தெல்லாம் எடுத்து வாரத."

கலகல வென சிரித்தாள்.. " என் செல்லம், என் தங்கமே.. அம்மா மாதிரியே கொணம் ஒனக்கும்.. என்ன பெத்த தாயே, ஏழ பாழங்களுக்கு இதெல்லாம்

பழக்கம்டா கண்ணு. வலிக்காது கண்ணே.. " னு கொஞ்சினாள்..

----------------------------------------






எல்லா வேலையும் முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு , மாமனார், கணவர் வேலைக்கு சென்றதும்,

மாடிக்கு சென்றாள்.. குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கலக்டர் வீட்டுக்கு செல்லணும்.. பேரப்பிள்ளைக்கு பேர் வைக்கிறார்கள்..

15 ஆயிரம் மதிப்புள்ள டிசைனர் புடவையை எடுத்து வைத்தாள்.. ஏதோ ஒரு எம்.எல்.ஏ வீட்டு பரிசாம்.. அலட்சியமா சிரித்தாள்..

சின்ன நகை டப்பாவில் பரிசை பத்திரப்படுத்தினாள்..தான் சேமித்து வைத்த லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து கைப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டாள்.

அனாதை இல்லம் போகணும் பிராயசித்தமாக என எண்ணிக்கொண்டாள்..

" ரெடியாம்மா " மாமியார் குரல்

" இதோ 10 நிமிஷத்தில் வந்துடுறேன் மா.. "

அவசர அவசரமாய் கணினியில் உட்கார்ந்தாள் .

" கொலையா தற்கொலையா ?. நீதி வேண்டும்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நீதிபதி , மருத்துவர் , காவல்துறை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும்

சகட்டுமேனிக்கு ஆசைதீர கிழி கிழி என கிழித்தாள்.. நீதிபதி வீட்டினரையும் சாபம் விட மறக்கவில்லை.. இறுதியில் - தீகங்கு என கையெழுத்திட்டாள்..

பத்திரமாக தன் ஜெர்மன் தோழிக்கு அனுப்பி வைத்தாள்..அன்று இரவே இணையத்தில் தீகங்கின் எழுத்து வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது . பற்றிக்கொண்டு பற்றி எரிந்தது

நாலாபுரமும்..அதை மனக்கண் முன் கொண்டு வந்து புன்னகைத்தாள் திருப்தியோடு..

எவ்வித சுவடுமின்றி அழகாக அலங்காரம் செய்துகொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் தேவதை போல..

















படம் : நன்றி கூகுள்..