Thursday, August 6, 2009
பசி
" உள்ளே வா.."
அவள் கூப்பிட்டதுமே ஒருவித நடுக்கத்தோடுதான் நுழைந்தான்.
" என்ன பயத்தோட பாக்குற..?" என முந்தானையை விலக்கிவிட்டு சாவகாசமாக அமர்ந்தாள்.. பதறினான்...
" அய்யோ வேண்டாம்.. அதெல்லாம்.."
" இங்க பாருடா.. அப்ப ஏன் வந்த?.. " என மீண்டும் முந்தானையை மேலே போட்டுக்கொண்டாள். நின்றுகொண்டிருந்தவனை அருகில் உட்கார சொன்னாள்..
வேண்டாம் என்றவனை கையை பிடித்து
"புத்சா நீயு..? அதெல்லாம் போக போக சரியாயிடும்.. சும்மா உக்காரு..
" என பிடித்திழுத்தாள்.. " அந்த முரட்டு கரங்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவள் கட்டளைக்கு பணிந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.
" என்ன உன்னோட ரவுசா இருக்கு.. வந்தமா சோலிய முடிச்சமான்னு போவேண்டியதுதானே... " எரிச்சலடைந்தாள்
" இல்லீங்க நான் உங்களைப்பற்றி என் வலைப்பூவில் ஒரு கட்டுரை எழுதலாம்னு.."
"ஹஹஹ.. " சிரித்தாள்..
" ஓஹ்.. அந்த ஆளா நீயு..?.. என் படம்லாம் போடுவியா..?
" கிண்டலா சிரித்தாள்.. " இல்லீங்க... நான் பத்திரிக்கை துறை இல்லை.. ஆனால் எல்லோருடைய மருபக்கம் பற்றி எழுத ஆவல் கொண்டவன்.."
" ஹ.. என்னப்பத்தி என்னத்த தெரிஞ்சுக்க போற..?"
" ஏன் இத்தொழிலுக்கு வந்தீங்க.. இத விடும் ஆசையிருக்கா இப்படி...'"
" ஹா.ஹாஹ்..ஹா.. " விழுந்து விழுந்து சிரித்தாள்.. பின் உடனே கோபப்பட்டாள்..
" ஏன்யா ஒனக்கெல்லாம் வேற வேலையே இல்லியா...? பரிதாபப்படுற மாதிரி ஒரு எழுத்த எழுதிப்போட்டு , நாலு பேர்கிட்ட பாராட்டு வாங்க நாங்கதான் கெடச்சோமா..? ஏன் வேற பொழுது போக்கு இல்லியா?..ஒனக்கெல்லாம் ஒழுங்கா 4 நேரம் வயித்துக்கு தீனி கெடக்கிங்கற கொழுப்புதானே?.. ஒனக்கெல்லாம் எங்கள பாத்தா எளக்காரமா தெரியுது..?" அவன் பயந்து அரண்டு விட்டான்...அவள் கோபத்தின் அர்த்தம் புரிந்தது...அமைதியாக இருந்தான்..
பெருமூச்சோடு எழுந்தவள் , கூந்தலை அள்ளி முடித்துவிட்டு , கண்ணாடி அருகில் சென்று தன் ஒப்பனையை சரிசெய்துகொண்டே ,
" நான் அழகா இருக்கேனா னு சொல்லு " என்றாள். அமைதியாய் இருந்தான்...
" சொல்லு .. நானெப்படி இருக்கேன்..? எனக்கு என்ன வயதிருக்கும் னு நினைக்கிறே..?..' பயந்தான் என்ன சொல்வதென்று தெரியாமல்...
எங்கே கூட்டி சொன்னால் குதறி விடுவாள் போல் தெரிந்தது... " ம். 25.."
" ஹிஹி...ம்..இல்ல 33.." புன்னகைத்தாள்.. மகிழ்ச்சியாக..
" நெசம்மா நான் 25 மாதிரி தெரியுறேனா ...
" கண்ணாடியில் முன்னும் பின்னும் கழுத்தை திருப்பி பார்த்துக்கொண்டாள்..' அவள் நிதானத்தில் இருப்பது தெரிந்ததும்
" இந்த தொழிலை விடணும்னு தோணுமா..?" அலட்சியமாக பார்த்தாள்.
' ஏன் ?.. ஆயுசுக்கும் சாப்பாடு போடுவியா..?"
" அப்படி போட்டால் விடுவீர்களா.?"
" எப்படி நம்ப...? கல்யாணம் செஞ்சுக்குவேன் னு பொய் சொல்ல போறியா..?" சிரித்தாள்..
" எனக்கு இம்மாதிரி பொண்ணுங்களுக்கு விடுதலை கொடுக்கணும்னு எண்ணம் இருக்கு...என்னால் முடிந்தவரை நான் எழுதுவேன்.. மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவேன்...என் சம்பளத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவழிப்பேன்...." ஆச்சர்யமாய் கேட்டுக்கொண்டிருந்தாள்...
" சொல்லுங்க எத்தனை பேர் வெளியே வர தயார்....?"
" ம். இரு வாரேன் .." உள்ளே சென்று மொபைலை எடுத்து வந்து அவனை படம் பிடித்தாள்.அவன் தடுக்குமுன்.. " ஏய் என்ன பண்றே..?"
" சரி நீ கிளம்பு...கிளம்பு..."
'ஏன் இன்னும் 1/2 மணி நேரம் இருக்கே....?"
" வேண்டாம்யா உங்கள மாதிரி ஆளுங்க உறவே... நீ நல்லவனா கெட்டவனா னு தெரியாது...ஆனா எங்க மனச கலச்சுராத... வயித்து பசிக்காக இத செய்யுறோம்.. இன்னும் காதல் அது இதுன்னு பேசி எங்க புள்ளங்க மனச கெடுத்துராத...அத தாங்க சக்தியில்லப்பா. .. அத நெசம் னு நம்பி சீரளிஞ்சு செத்து போனவுக ஏராளம்...எங்க ஒடம்பு கெட்டது போதும்..மனச கெடுத்துராத... நீ வெளீல போ மொதல்ல...."
" அய்யோ நான் நிஜமாத்தான் ங்க சொல்றேன்..."
" சொல்றேன்ல இந்த பக்கமா நீ வராத.. அதுக்குதான் போட்டோ எடுத்தேன் .. வெளில கொடுக்க....உன்னை உள்ளே விடாம...வயித்து பசி மட்டும்தான் இப்போதைக்கு இருக்கு... வேற காதல் பசிக்கெல்லாம் அடிமையாக்கிடாத... வெளில போ..."
எத்தனை தூரம் அவநம்பிக்கையோடு இவர்களை வாழ வைத்துள்ளோம் என வெட்கப்பட்டுக்கொண்டே வெளியேறினான்...
Subscribe to:
Posts (Atom)