Friday, August 29, 2008

ஆண்மகனுக்கோர் கவிதை...

பெண் என்றால் எல்லா கலைகளும்
தெரிந்திருக்கணுமென எல்லாம் கற்றுகொள்ளச்செய்தாய்.

மணமானதும் கணவன் பேச்சை மட்டும் கேள்,
மணாளன் ரசிக்காததை விட்டுவிடு..

மாப்பிள்ளைக்கு பிடித்தமாதிரி நடந்துகொள் என்கிறாயே??
இதுதான் அதிமுக்கியமான கலையா அண்ணா?.

உன்மீது வருத்தமில்லை அண்ணா, ஆனால்
வரப்போகிற அண்ணியிடம் நீயாவது ரசிக்கக்கற்றுக்கொள்..

ஆண்மகனுக்கோர் கவிதை

ரிமோட் எடுக்கும் உன் பிஞ்சு கைகளை
பிடித்து இழுத்து முத்தமிடுகிறேன்..

குளித்து முடித்து உடை உடுத்த ஒடி
ஒளிகின்ற உன் பாதம் எடுத்து கிச்சுமூட்டுகிறேன்..

சமையலறையில் அழிச்சாட்டியம் பண்ணும் உன்னை
இருக அணைத்தே பல்லைக்கடித்து கொஞ்சுகிறேன்..

அலுக்காமல் சேட்டை பண்ணி சலிக்காமல்
தண்டனையும் அன்பாலே பெறுகிறான் குழந்தை..

நான் செய்தால் இத்தண்டனை எனக்குண்டா என்கிறாய்..
தண்டனையில்தானே வந்ததிந்த பெருஞ்சேட்டை என்றறிந்தும்..

ஆண்மகனுக்கோர் கவிதை...

இன்றைய கவி:


இரவு கண்டு பயப்பட்டேன்..
உறங்காதிருப்பேன் அருகில் என்றாய்.

சைக்கிள் கற்க மாட்டேன் என்றேன்,
உபயோகம் சொல்லி கற்றும்தந்தாய்

அறிவியல் பாடம் பிடிக்காதென்றேன்
அறிவாளி என்தங்கை என சொல்லிதந்தாய்..

தண்ணீரென்றாலே பயந்தோடுவேன்,
தள்ளியே விட்டு நீச்சல் பழக்கினாய்..

எல்லாம் கற்றுத் தந்தாய், தந்தையாய்,
கணவரை, குழந்தையை சமாளிக்க கற்கவில்லையே ணா????

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிசயமாய் தானிருக்குது இப்போதெல்லாம்
நீ உன் பைக்கில் என்னை அழைத்துச்சென்று
கல்லூரியில் விடுவதும்,பின்பு காத்திருந்து அழைத்து வருவதும்..

பெட்ரோலுக்கு காசு தருகிறேன் என்றா?.. இருக்காதே...???

ஆனால் ஒன்றுதான் புரியவில்லை ,
அடுத்த தெரு முனைக்கு சென்றதும்
தினமும் மக்கர் பண்ணுதே உன் பைக்கும் உன் மனம் போல..???

பின்பு நடுரோட்டில் வீரன் போல சரி செய்வதும்,
முடித்ததும் கண்ணாடிக்கு முத்தம் கொடுப்பதும்...
நான் வரவில்லையடா அண்ணா நாளையிலிருந்து ...!!!

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

அது ஏன் அண்ணா என் தோழிகள்

நம் வீட்டுக்கு வரும்போது மட்டும்
உன் சாமான்கள் தொலைவதும்,
அதை அவர்கள் அமர்ந்துள்ள
அறைகளில் மட்டும் தேடுவதும்.
எப்போதும் கைபேசிக்கு வரும் அழைப்புகள்
வீட்டு தொலைபேசிக்கு வருவதும்
தொலைக்காட்சி அலறுவதும்,
ஒழுங்காய் உடற்பயிற்சி செய்பவன் போல
அதற்கான உபகரணங்களை எடுத்து செல்வதும்
நீ என்னை என்னடா, என்னம்மா

என செல்லமாக அழைப்பதும்...????

தாங்கத்தான் முடிவதில்லை...:-))

ஆண்மகனுக்கோர் கவிதை...

இனி அண்ணா என்ற கோணத்தில்....

வருகிற மாப்பிள்ளையெல்லாம் பிடிக்கவில்லை
என் நீ தட்டிக்கழிக்கிறாயே அண்ணா..

சந்தேகமாயிருக்கு, உன் நண்பரான,
சோடாபுட்டியின் பார்வையும்,
நம் வீட்டு ஜன்னலை அரை மணிநேரம்
கடக்கும் யானைக்குட்டி அவனும்,
தெருவில் நின்றே உன்னை எட்டிப்பார்க்கும்
ஒட்டகச்சிவிங்கியும்
எனக்கு மாப்பிள்ளையாய் முடிவு செய்திட்டாயோ என.

தொடர்ச்சியாய் என்னால் கொடுமைப்படுத்த முடியாதென்றும்,
உன் தங்கை உன்னைப்போல் பொறுமைசாலி இல்லையெனவும்
சொல்லிவை அவர்களிடம்...

ஆண்மகனுக்கோர் கவிதை...

பல வேலை பல சுமைகளோடு
பள்ளி செல்லும் குழந்தை அனுப்பி
பகட்டாய் உடுத்தி அலுவல் வந்து
படபடப்புடன் வேலையும் பார்த்து
பத்திரமாய் வாகனம் ஓட்டி
பசியோடு போக்குவரத்தில் சிக்கி
பதில்பேச முடியாது தொலைபேசி செயலிழக்க‌‌,
பயத்தில் நேரமானதால் கற்பனை கொண்டு ,

பட்டம்பூச்சியின் பரிதவிப்புடன் திட்டுகிறாய் நீ.
பரபரப்பிலும் உன் பாசத்தைமட்டும் காண்கிறேன் நான்.

ஆண்மகனுக்கோர் கவிதை...

அதிக காரமாய் இருந்தாலும்
அதிராமல் சாப்பிட்டு
அளவோடு எடுத்துக்கொள்ள
அறிவுறைத்துவிட்டு
அருகேயே நின்ற பொழுதும் உரைக்கவில்லை

என் உறைப்புதாங்காமல்
தும்மும் போது
தலையில் தட்டி
தண்ணீர் கொடுக்கவே
நின்றாய் எனும்போது
கண்ணீர் வந்தது
உறைத்ததால் அல்ல, நீ உரைக்காத( காத)லால்

ஆண்மகனுக்கோர் கவிதை

எதைக்கேட்டாலும்
உனக்கொண்ணும் தெரியாது
என என்னிடம் சொல்லி
எல்லாமே நீயே செய்ய ஆசைப்பட்டாய்.:-)

ஆனால்
எல்லாம் தெரிந்த உன்னிடம்
உன் பிள்ளை வந்தால் மட்டும்
அம்மாவிடம் கேள் என்கிறாய்
புரியவேயில்லை இன்னும்..????

ஆண்மகனுக்கோர் கவிதை...

எனக்கான பொருளையும் நீயே சுமந்து வரும்போது பங்கு கேட்டால் தர மாட்டேன் என்கிறாய்.

காரணம் கேட்டால் என் பிள்ளையை மட்டும் நீ ஒத்தையில் சுமக்கிறாயே, எனக்கு பங்கில்லையா என்கிறாய்.




ஆண்மகனுக்கோர் கவிதை ...


அம்மா வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு
அருமையாய் பேசிவிட்டு என்னிடம் முக‌ம் சுழிப்பு.


அக்கா வீட்டு விசேஷ‌ம் கூட‌மாட‌ ஒத்தாசை.

எப்ப‌டியாவ‌து த‌டுத்துவிட‌ போடுகிறாய் பெரும் ஓசை.


ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌க்க‌த்து வீட்டுக்கு சாப்பாடு.

உன்னைத்த‌விர‌ ஊராரைக்க‌வ‌னிப்ப‌தாய் கூப்பாடு.


உன் அக்கா குழ‌ந்தைக்குதானே காதுகுத்து

அரைப்ப‌வுன் போதும் அதுக்கும் மேலென்றால் வீண் க‌த்து..


வேலைதேடும் கொழுந்த‌னுக்கு உப‌ச‌ரித்து க‌வ‌னிப்பு

வேண்டாத‌வ‌னாயிட்டேனா என‌ ஒரு வீராப்பு...


எல்லாமே ஆண்சிங்கம், தானே முக்கியம் என்ற‌ க‌ர்வ‌ம்..

இருந்தாலும் காரியம் சாதிக்கிறேனே நீதான் என் த‌ங்க‌ம்...