Tuesday, March 30, 2010

முயல் வாங்க மூணு கால்.சொந்தக்காரரின்
பெருமை அண்டை வீட்டாரின் பொறாமை ஒனிடாவுக்கு மட்டுமில்லீங்க,

செல்லப்பிராணி வளர்த்தாலும்தான்.

பக்கத்து வீட்டு சிறுவன் மிக பெருமையாக இரண்டு வெள்ளெலிகளை தூக்கி வந்து எம் அனைவர்

மடியிலும் விளையாடி மகிழ்ந்தான். போதாதா?.. பழைய நியாபங்களை குழந்தைகள் மனதில்

கிளறிவிட்டது..

சிறுவன் சென்றதுமே நச்சரிப்புகள் தொடங்கிவிட்டது..

" அம்மா , பிளீஸ் , ஒரு முயல் வாங்கித்தாங்களேன்.."

" அம்மா, எனக்கும்." சின்னவர்..

" இருக்கிற வேலை போதாதா இன்னும் அது வேறயா?.. "

" இல்லம்மா, எல்லாத்தையும் நானே பாத்துப்பேன்.."

" அதுக்கு கூண்டு வாங்குவது பெரிய செலவாச்சே..கூட முயலும் அதிக விலைதானே?.."

" என்ன வேலைனாலும் சொல்லுங்க செய்யுறேன்.. பாக்கெட் மணி தாங்க அதை சேர்த்து வெச்சு

முயல் வாங்கிடலாம்.."

" என்ன வேலைனாலும் செய்வியா?.."

" சரிம்மா.."

" சரி மொதல்ல அடுப்படியில் பாத்திரம் கழுவணும்.."

" ங்ஏ..........ஏஏஏஏஏஏஏஏஏ........ வேற ஏதும் வேலை இல்லையா மா.. இந்த வாஷிங் மெஷின்

போடுற மாதிரி.?.."

" இல்லை.."

சரி என அனைத்து பாத்திரத்தையும் கழுவி முடித்தார்...அப்பாவுக்கு பிடிக்கவில்லை மகன் வேலை

செய்வது...ஏன் ஆண் குழந்தைகள் வேலை செய்ய கூடாதா என ஒரு கருத்தாடல் மேகம் சூழ்ந்தது

ஆனால் மழை பெய்யவில்லை.. ஏனெனில் பையனே மிக ஆர்வமாய் வேலையில் இறங்கியதால்..

வேலை முடிந்து மகிழ்வோடு பணம் பெற்றார்..


அடுத்த நாள் என்ன வேலை செய்யட்டும் என அதிக ஆர்வமாய்..

" சரி இன்னிக்கு சப்பாத்தி போடுறியா?.. "

" சரிமா. அதென்ன பெரிய வேலையா..? .. பாருங்க ஐந்தே நிமிஷத்தில் போட்டு தருகிறேன்.."

மாவு பிசைவதிலிருந்து உருண்டை பிடித்து தேய்ப்பது வரை பாடம் எடுத்தேன்..தேய்த்து தட்டில்

அடுக்கினார்.

என்ன ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவத்தில் அமைந்தது..சரி

பரவாயில்லை..வெட்டிக்கொள்ளலாம் னு சொல்லியதும் திருப்தி..

கடாய் காய்ந்ததும் ஒவ்வொண்ணாக எடுத்து போட முயன்றால் எல்லாம் ஒட்டிக்கொண்டு வரவே

மாட்டேன் னு பிடிவாதம்..

கடைசியில் அத்தனையையும் சுருட்டி மொத்தமாக பந்தாக்கினேன்.. மீண்டும் நானே தேய்த்து

காண்பித்தேன் விரைவாக..

" அட இவ்வளவு கஷ்டமா மா, சப்பாத்தி தேய்க்க..?." னு ஒத்துக்கொண்டார் ஒருவழியாக..:)

அடுத்து வீடு கூட்டுவது.. என்னவோ ஜன்னலை தூசு தட்டுவது போல நினைத்துக்கொண்டார்.

அவர் தூக்க தூக்க தூசி எஸ்கேப் ஆகுது..

" இந்த வேக்கூம் கிளினர் எங்கேயிருக்கும்மா..?"

" . அதெல்லாம் வேலைக்காரிக்கு கொடுத்தாச்சு எப்பவோ.. கொஞ்சம் குனிந்து வேலை

செய்தால் எளிதாயிருக்கும் முயன்று பாரேன்.."

" அய்யோ . வேற வேலை தாங்க.. "

" சரி வெங்காயம் வெட்டுறியா..?"

" அது ரொம்ப ஈஸி.. அதோடு இன்னிய பாக்கெட் மணி வரும்தானே?."

" கண்டிப்பா... ஆனா 3 பெரிய வெங்காயத்தையும் உரித்து நறுக்கணும்.."

கண்ணில் கண்ணீரோடு வெங்காயத்தை வெட்டி முடித்து வந்தார் , பரிதாபமாக..

சரி இதுக்கு மேலும் கொடுமை படுத்தக்கூடாது என 4 முயல் கடைக்கு அழைத்து சென்று

எல்லாவற்றையும் எல்லா கலரிலும் பார்த்து கடைசியாக வெள்ளை வெளேரென்ற சிவப்பு

கண்கள் , ரோஸ் நிற காதுகள் கொண்ட முயல் வாங்குவதாய் முடிவெடுக்கப்பட்டது..

காசு கொடுக்கும்போது ,

" அம்மா, அது தனியா இருந்தா போரடிக்கும்.,.. அதுக்கு துணையா இன்னொண்ணு பிளீஸ்மா.."

கெஞ்சல்..

" மொதல்ல இதை ஒழுங்கா பராமரிக்கின்றாயா னு பார்க்கலாம்.. ஒரு மாதம் கழித்து அடுத்து.."

அரை மனதோடு அடுத்து கூண்டு வாங்க சென்றால் முயலை விட 3 மடங்க்மு கூண்டும் ,

உபகரணங்களும்..( அதுக்கெல்லாம் பாக்கெட் மணி பத்தலைன்னாலும் கண்டிப்பா வேலை செய்து

பணம் கொடுப்பதாய் சொல்லிட்டார்..)

வீட்டுக்கு வந்ததும் கேரட்டையும் கீரைகளையும் கழுவு கழுவு னு கழுவி, வெட்டிப்போட்டு, அதை

மெதுவாக தொடுவதெப்படி என வகுப்பெடுத்தார் அனைவருக்கும்.. பவ்யமாக

கேட்டுக்கொண்டோம்.. சிறுவனுக்கு வாய் ஓரமா லேசா சிரிப்பு.. " நீ ஸ்கூலுக்கு போனதும்

நாந்தானே தூக்க போறேன்." னு நினைத்தாரோ என்னவோ..கை இரண்டும் குறுகுறுன்னு எப்படா

தூக்கலாம்னு.. பெரியவர் விட்டாதானே?..

தரை வழுக்கியதால் முயல்குட்டியால் நடக்க முடியவில்லை..

" அம்மா, கார்பெட் விரிக்கலாமா?.."

" விட்டா பஞ்சு மெத்தை போடுவாய் போல.. அது பழ்கிக்கும்.." இப்ப அது ஓடுது..தரையில்..துள்ளி

துள்ளி..

இண்டெர்நட்டில் முயல் பற்றிய விபரம் அனைத்தையும் விடிய விடிய படித்து காலங்காத்தாலயே

எமக்கு பாடம் ..:(

முயல் எப்படி மலம் கழிக்கும் என்றும் அதில் எத்தனை வகை என்றும்..

முயல் மகிழ்வாக இருக்கின்றதா என அறிவது எப்படி ..?

முயலை காது பிடித்து தூக்கணும்னு நான் வேற சொல்லிட்டேன்.

அது மிக தவறுன்னு அதற்குண்டான கட்டுரைகளை அனுப்பி என் மெயில் பாக்ஸை நிரப்பிட்டார்...

வேணுமா எனக்கு.?..

இப்படி ஒரு ரிசர்ச் க்கு உண்டான அனைத்து தகவல்களும் அத்துப்படி.. இப்படி படிப்பில் இந்த

ஆர்வத்தை காண்பிக்கப்டாதா?.. நம் தொண்டை கத்துவதாவது மிச்சமாகுமே..:(

முயலுகுக்கு விளையாட பெரிய பெரிய தெர்மாகோல் பெட்டிகளை வெட்டி நீள குகை போல

செய்து பல வாசல்கள் வைத்து அதை விளையாட செய்தால் அதுவும் மிக சுவாரஸ்யமாக

ஒருவழியாய் நுழைந்து மறுவழியாய் துள்ளி ஓடி வந்து மீண்டும் மீண்டும் விளையாடுது..

பள்ளி புராஜக்ட் னா நாம உதவணும்.. முயலுக்குன்னா நாம தூங்கின பிறகு இண்டெர்நட்ல

வாசிச்சே இவரா செய்வாராம்...

எப்படியோ முயலார் வந்ததில் பையன் கொஞ்சம் வீட்டு வேலை செய்ய கத்துக்கிட்டார்..

காலியில் எழுப்ப இனி நான் சுப்ரபாதம் பாடவேண்டியதில்லை.. முயல் தண்ணி பத்தல போல னு

போற வாக்கில் சொல்லிட்டா போதும்.. அடித்து பிடித்து பெட்ஷீட் போர்வையோட முயல் முன் 5

மணிக்கே ஆஜர்..மூன்று காலில்..

முயலுக்கு மூணு காலோ இல்லையோ , இப்ப வீட்டில் எல்லோருக்கும் மூணு கால் அது

சோபாவின் பின்னால் ஒளிந்துகொண்டால் தேட..

இப்ப பள்ளிக்கு போயாச்சு இருவரும்.. நானும் முயலும் வீட்டில்..அது வேற ஆர்டர்

போட்டிருக்கார்.. " அம்மா சும்மா இருக்கும்போது முயலை தோட்டத்துக்கு அழைத்து

செல்லுங்கள்.." என..

" ஆமாப்பா , அடுத்து ஜிம், நீச்சல் குள்ம், டென்னிஸ், இதுக்கும் அழைத்து போக சொல்லுவியே.."

எனக்கும் முயல் வளர்க்கும் ஆசை சின்ன வயதிலிருந்தே உண்டு.. நாய்கள் மட்டுமே இருந்தது

வீட்டில் அப்போது..எப்படியோ என் ஆசையும் ஒருவழியா தீர்ந்தது.. இந்த விஷயம் பசங்களுக்கு

தெரியாது..:)

முயல் பின்னங்காலில் நின்றுகொண்டு, முன்னங்காலால் விளையாடுவது பார்க்க நன்றாகத்தான்

இருக்கின்றது...பக்கத்து வீட்டு சிறுவன் வெள்ளெலியை கொண்டு வந்து கூண்டினில் விட அதை

முயல் கொஞ்சுவதை பார்ப்பது இன்னும் அழகு..

செல்லப்பிராணி வளர்ப்பு மனதுக்கு குதூகலம்தான், சிறுவர்/சிறுமியர் இருக்கும் வீட்டில்..

Monday, March 8, 2010

மாதாவின் மாறுபட்ட பார்வை.....- மகளிர் தின சிறுகதை..


" ரத்னம் கொஞ்சம் இப்படி உட்காரேன். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.."
ஈஸி சேரில் சாய்ந்தபடி அழைத்தார் கணேசன்.

" இருங்க அடுப்புல பால் வெச்சிருக்கேன் முடிஞ்சதும் வாரேன்." அடுப்படியை துடைத்துவிட்டு வந்து அமர்ந்தாள் அருகில்..தரையில்...

"இப்படி இங்கிட்டு உட்காரேன்..".. நாற்காலியை காண்பித்தார்..

" இல்லங்க . எனக்கு இதுதான் வசதி.. என்னிக்கு உங்களுக்கு மேல உசரமா உட்கார்ந்தேன் இப்ப உட்கார ?. " னு சொல்லிட்டு கீரை ஆய ஆரம்பித்தாள்..

" ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டே இருந்ததை கேக்கணும்னு நெனச்சேன்"

ஆச்சர்யமா பார்த்தாள் புருவத்தை சுருக்கி ஒரு புன்னகையோடே..


" நான் 40 வருடமா வேலைக்கு போனபோது உன்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்திருக்கேன். கருப்பு, அழகில்ல , வசதியில்ல, படிப்பில்லன்னு.?.. ஆனாலும் நீ ஏன் ஒரு வாட்டி கூட மறுப்பேதும் சொல்லாமல் எப்படி தாங்கிக்கிட்ட?.. என்னோடு என் குடும்பத்தினருமல்லவா உன்னை பாடாய் படுத்தினார்கள்?.. ஆனா அன்னிக்கு நீ என்னை கவனித்த மாதிரிதான் இப்ப நான் ஓய்வு பெற்ற பிறகும் அதிக அன்போடு கவனிக்கிறாய்...அதிசயப்பிறவிதான் நீ.. " அவர் சொல்லும்போதே கண்கள் கலங்கியிருந்தன..

அதை காணாதவளாய் , பெரிதும்படுத்தாதவளாய் ,
" அட , நான் என்னத்த பெரிசா செஞ்சுட்டேன்.. ?. நல்லா உழைச்சீங்க, பிள்ளைகளை படிக்க வெச்சீங்க வெளிநாட்டுக்கு அனுப்பி பெருமை சேர்த்தீங்க..நாம பட்ட கஷ்டம் பிள்ளைகள் படலையே..அதுக்கு நீங்கதானே காரணம்.?" என விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

" இல்லை ரத்னம் . நான் உன்னை கொடுமைப்படுத்தினது எனக்கு இன்னும் உறுத்துது. மனசார மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறேன்..." அவள் கையை பிடித்துக்கொண்டார்..

" அட என்ன நீங்க சின்ன புள்ள மாதிரி.. வேலை விஷயமா வெளில போற மனிதருக்கு ஆயிரம் தலைவலி இருக்கும்.. அதையெல்லாம் நம் மேல கொட்டாம யார் மேல கொட்டுவார் னு நினைச்சுப்பேன்.. இதப்போய் பெரிசு பண்ணிட்டு.. விடுங்க.."

" இருந்தாலும் உனக்கு மட்டும் அப்படி ஒரு பொறுமை எப்படி ரத்னம்.. வெறுப்பே வரலியா?.."

" வந்துச்சுங்க.. செத்துடலாம்னு கூட தோணிருக்கு மொதல்ல.. அப்புரம் ஒரு நாள் நான் 3வது குழந்தை உண்டாயிருந்தப்ப என் ரத்தம் RH Negative வகையை சேர்ந்ததால் அதற்கான ஊசியை 2வது குழந்தைக்கு பின் சரியாக போடாததால் 3வது குழந்தை மன நலமற்ற குழந்தையாய் பிறக்க வாய்ப்பிருந்தமையால் நாம் அழித்தோமே.. அது எப்பவும் என்னால் மறக்கவே முடியாது.. எனக்கே ஒரு விசேஷ குழந்தை அப்படி கிடைத்திருந்தால் நான் எப்படியெல்லாம் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருந்திருப்பேன் ஊரார் பழிகளை தாங்கிக்கொண்டு.. அதேபோல்தான் நீங்கள் என்னை பழிக்கும்போது ஒரு மனநிலை தவறிய குழந்தையின் செயலாய் எடுத்துக்கொண்டு சகித்தேன்.. இன்னும் அன்பை பொழிய ஆரம்பித்தேன்.. அது என்னை கைவிடவில்லை.."


" ஒரு அன்னைக்கே உரிய அழகான எண்ணம்தான்..என்னையே
மாற்றினாய்..நான் கொடுத்து வைத்தவன்தான்.." பெருமிதப்பட்டார்..


"ஆனா , எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்குங்க..."

" சொல்லு ரத்னம் . அது என் கடமை.." " வாரம் ஒருமுறையாவது அப்படியான விசேஷ குழந்தைகளை சென்று அவர்களோடு நான் பொழுதை கழிக்கணும்னு..........அதுக்கு நீங்க சம்மதிக்கணும்..." என இழுத்தாள் மெதுவாக

" மாட்டேன்... " கறாராய் சொன்னதும் பயந்துபோனாள்.

பின் சிரித்தார்..


" நீ மட்டுமல்ல ரத்னம் . என்னையும் அழைத்து போ.. நானும் அப்படியே பொழுதை உபயோகமாய் செலவிட விரும்புகின்றேன்..."

பெருமையோடு கணவனை பார்த்தாள் ரத்னம்...