Monday, February 21, 2011

நடுநிசி நாய்கள் - வாங்க சைக்கோவாகலாம்.நாய்கள் என்ன பாவம் செய்ததுன்னு தெரியலை.?.. நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..

சரி எதாவது விலங்குகள் கிட்ட?.. அது ஒரு தொத்துவியாதிங்க.. பாடா படுத்திடும்..

இப்ப ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம உளறல்னு நினைக்கிறீங்க..ஆமா உளறலாத்தான் தெரியுது நாட்டு நடப்புகள்..


நாளையிலே இருந்து மருத்துவமனைகள் எல்லாம் அறுவை சிகிச்சைகளை பொது மேடை போட்டு நடுத்தெருவிலேயே கண்ணாடி திரைக்குள் செய்யணும்..

அப்புரம் ,

எல்லா தாம்யத்யங்களும் கூட இதே போல நடுத்தெருவில்..

குப்பை கூளங்களை குப்பை தொட்டியில் கொட்டலாமா ?.. கூடவே கூடாது.. ஏன் காட்டில் குப்பை தொட்டிகள் இருக்கா என்ன?.. விலங்குகள் சுத்தம் செய்வதில்லையா?...

அப்புரம் முக்கியமா யாருமே உடை உடுத்த கூடாது...

என்னங்க பைத்தியமா உங்களுக்கு னு கேட்குறீங்க..

விடை: நான் என்னங்க வித்யாசமா சொல்லிட்டேன்.. வீட்டில் சின்னத்திரையில் இவையெல்லாம் தானே விளம்பரம் என்ற பேரில் விருந்தாக படைக்கின்றீர்கள்.?.. பொழுதுபோக்க , நல்ல விஷயம் கற்க என இருந்த சினிமாக்கள் சைக்கோ ஆவது எப்படி என பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்..

அதனால் இனி எல்லோருமே விலங்காகிவிட்டால் பிரச்னையேயில்லைதானே?..

அன்பா , - அப்படீன்னா என்னங்க.. ?.. அதுவா அது வந்து என் வீட்டில் , என் குழந்தை குடும்பத்தாரிடம் மட்டும் நான் போட்டுகாட்டும் நாடகம்.. அத மாதிரி எல்லாரும் நாடகம் போட்டுக்குவோம்.. பொதுவுல வரும்போது ஒருவரை ஒருவர் வசவுகளால், ஆபாச படங்களால் , மறைமுக மிரட்டலால் , கிசுகிசுக்களால் கிட்டத்தட்ட ஒரு சைக்கோவாக மாறிவிட்டு , பின் வீட்டுக்குள் சென்றதும் நம் நாடகத்தை தொடரணும்...

யுத்தம் செய், என சொல்லி யுத்தம் செய்ய பழக்குவோம்.. மறந்துபோய்கூட பெண்ணை சுயமா எதிர்கொள்ளும்படி கராத்தேவோ, தற்காப்பு கலையோ கற்றுக்கொடுக்காமல் , அவளை ஒருவன் மானபங்கபடுத்தியபின், அவள் தூக்கில் தொங்கியபின் வீரம் வந்து கொலைசெய்ய ஆரம்பிப்போம்.. அதாங்க யுத்தம் செய்ய.. ஏன்னா அதுதான் வீரம் , அதுதான் அழகு.. .அதை வரிக்கு வரி பாராட்டிட்டோம்னா வாழ்நாள் சாதனை செய்த மகிழ்ச்சி.. அப்பாட..நமக்கெதுக்குங்க சமூக அக்கறையெல்லாம் . அத கவனிக்க ஏதாச்சும் இ.வா வேல வெட்டியில்லாம இருப்பாங்க கவனிச்சுக்குவாய்ங்க..( படத்த எப்படி மோசமா எடுத்த என்ன ?. அதான் கலெக்ஷன் ஒரு பங்க அனாத குழந்தைங்களுக்கு குடுக்கோம்ல.. வாய மூடுங்க.. )

என்னோட அல்ப கட்டுரையோ, கவிதையோ, பதிவோ மிக மோசமான பத்திரிக்கையில் வெளிவந்தா கூட போதும். அதுக்காக யார் காலைவேணா பிடிக்க ரெடியாயிருக்கேன்.. யாரை வேணா புகழ்வேன்.. எனக்கு புகழ் முக்கியம்..

எழுத்துகளில் பாலியல் தொழில் செய்கிறாரா?. அவரை தூக்கி பிடிக்காட்டி என்னை அந்த நல்ல?? கூட்டத்திலிருந்து ஒதுக்கி வைப்பாங்க.. அதாவது பரவாயில்லை.. கூட்டமா சேர்ந்து தண்ணி அடிக்கும்போது என்னை பற்றி பேசுவாங்க.. பயமா இருக்கு எதுக்கு வம்பு.. பேசாம தலையாட்டிட்டு போறேன்...ஊரோடு ஒத்துவாழ்னு பெரியவா சும்மாவா சொல்லிருக்காங்க.. பெரியவா சொன்னா பெருமாள் சொன்னாப்ல.. கன்னத்துல போட்டுக்குறேன் குவாட்டரும் குடிச்சிக்கிறேன்.. பின்ன ஒசி வேற..


அட அவர் பகுத்தறிவாதிய்யா.. ரொம்ப அறிவாளி..

அப்படியா அப்ப ஏன் அசிங்க அசிங்கமா பேசுறார்?..

ஹ அது அப்படித்தான்.. ஏன்னா அது ஒரு கெத்து பாருங்க.. ஒரு பய கிட்ட வரமாட்டான். கெட்ட வார்த்தைக்கு பயந்தே என்னை அறிவாளின்னு ஒத்துக்குவானா இல்லையா?..

இத பாருங்க ரொம்ப நியாயம் பேசுனீங்கன்னா , உங்க பக்கம் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க அன்னந்தன்னி புழங்கமாட்டாங்க.. ஓஹ் . அப்படியா.. அப்ப நான் என்ன செய்யணும்.. ?.. பிடிக்குதோ பிடிக்கலையோ, தப்புன்னா தட்டி கேக்காம, எல்லா இடத்திலேயும் போய் நல்லபுள்ளையா அட்டெண்டன்ஸ் போட்டுரணும்.. அப்ப உங்களை முன்புறமா குறை சொல்ல மாட்டாங்க ( "1- அப்ப பின்புறமா ?".. "2- ஹலோ ரொம்ப கேள்வி கேட்டா..." " 1- அய்யோ சாரி இனி கேக்கல.. " ).


பெரியார் பெண்ணுரிமைன்னு சொன்னத சிலர் தப்பா புரிஞ்சுட்டாங்க போல.. பாலியல் சுதந்திரம்னு எண்ணி அதுக்கொருபக்கம் கிழி கிழி.. நோக்கமே மறந்து போச்சா இல்லை நோக்கமே இதுதானோ.?..


ஆட்சியில் இருந்துகொண்டு ஊழல்செய்து சிறை செல்வது கூட நட்சத்திர விடுதிக்கு சென்று ஏதோ பத்ம பூஷன் அவார்ட் ரேஞ்சுக்கு மதிப்பு போலவும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறோமே ...?.

ஆக மொத்தம் எவை எவை தடுக்கப்படணுமோ அவை அழகாக கூட்டமாக நிறைவேறிக்கொண்டேயிருக்குது.. சுயநலத்தோடு ஆங்காங்கே..

இதைவிடவா நடுநிசி நாய்கள் பயம் தந்துட போகுது..?.. என்ன மேலே சொன்னதுபோல இனி பொதுவெளியில் விலங்குகள் போல வாழ பழக்குது இத்தகைய அறிவார்ந்த , ஆழமான , கலைநயத்தோடான, கற்பனாசக்தி மிகுந்த , உயர்தர படங்கள்.. வாங்க சைக்கோவாகலாம்..

எல்லாத்தையும் சகிச்சுகிட்டு , தாங்கிகிட்டும் உங்களால அமைதியா இருக்க முடியுதுன்னா, பூர்வ ஜென்ம புண்ணியமா இருக்கலாம்.. அந்த புண்ணியாத்மாக்கள் வயோதிகர் இல்லங்களில் ( அனாதை, மனநிலை சரியில்லாதோர் இல்லம் ) இருந்தா ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்.. .. ஒருமுறை விசிட் செய்வது அவர்களுக்கு 100நாள் பலம் தரும்..அது முடியாதவங்க, தப்புகளை துணிவா தட்டி கேட்கலாம்.. ஆனா உலகின் மொத்த சாக்கடையும் உங்க மீது கொட்டப்படும்..


எங்கே யாரிடமிருந்து ?..


நடுநிசி நாய்கள் - ஜாக்கிரதை... நம்முள்...

ஆனா சமூகத்தையும், சக மனிதர்களையும் அதிகமா, ஆழமா நேசிப்பவராலேயே தப்புகளை துணிவா தட்டி துணிவா கேட்க முடியும்.. அப்ப நீங்க?..எனது கண்டனங்கள் இப்படி படம் எடுத்து சமூகத்தை கெடுக்கும் அனைவருக்குமே..

( அதில் உழைத்திருக்கும் அனைவருக்கும் எனது அனுதாபங்களும் )

மீண்டும் ,


நாய்கள் கிட்ட அன்பா இருந்து பார்த்துள்ளீர்களா?..மனிதர்களை விட அன்பை கொட்டும்..

அவை மட்டுமல்ல எல்லா விலங்குகளையுமே அன்பால் கட்டிப்போட முடியும்போது மனிதர்கள் நாம் மட்டும் ஏன் இப்படி விசித்திரமாய் , விகாரமாய் ?...

அன்பும் கொட்டிக்கிடக்கு.. அள்ள தெரியாமல் , பகிர முடியாமல்... மென்மையை சொல்லும் படங்கள் எப்ப வரும்?..நம் குழந்தைகளுக்கு.?.


படம்: நன்றி கூகுள்..

Monday, February 14, 2011

விதவிதமான காதல்

.

பள்ளி படிக்கையிலே
துள்ளி விளையாட
வள்ளி அவளோடு
வந்ததம்மா ஒரு காதல்..

பருவம் எய்கையிலே
உருவம் குழப்பினாலும்
குருவின் நல்வழியில்
கருத்தாய் கல்விமேல் காதல்.

தேசிய மாணவபடை
தேர்ச்சி சுடுததிலே
தேகம், மனம் ,ஆணாகி
தேடுதலில் ஒரு காதல்

பொறியியல் கல்லூரி
பொறுப்போடு படிப்பிங்கே
பொருந்தாத பலகாதல்
புத்தகமே முழு காதல்

வேலையில் முன்னேற
வேகத்தோடு விவேகமுமே
எப்பொழுதும் உழைப்பென்றால்
எங்கே வரும் ஒரு காதல்

இருமனம் இணைந்திட்ட
திருமணமே முதல்காதல்
மழலைகள் வருகையிலே
மனதெல்லாம் சுககாதல்

எதுவெல்லாம் காதலிங்கே
எனசொல்ல இயலாதே
இடற்பாடும் காதலென்றால்
இனிமைக்கு குறைவுண்டோ?
இறைவனைக்காதலித்தால்
ஏழ்மையை நீக்கிடலாம்
மகேசனை சேவிப்போர் -சக
மக்களை காதலிப்பார்.

இயற்கையை காதலித்தால்
இனி இல்லை அழிவிங்கே
உழைப்பை காதலிப்பவன்
உலகை வெல்வான் காதலினால்தப்பை தட்டிகேட்க
துணிவை நீ காதலி
ஏழ்மை, அடிமை நீங்க
ஏட்டை நீ காதலி
சமூகம் மேம்படவே
சம உரிமையை காதலி
அகிலத்தை உயர்த்திடவே
அறிவை நீ காதலி
சுகாதாரமான வாழ்வுக்கு
சுத்தத்தை நீ காதலி
மல்யுத்த போர் நீங்க
மழலை பேச்சை நீ காதலிஅநியாய கொலை மறைய
ஆபாசத்தை நிறுத்திடுவாய்
வன்முறையை நீக்கிடவே
வஞ்சகக்கூட்டம் சேராமல்
வரம்புகளை மீராமல்
வழிகாட்டியாய் வாழ்ந்திடுவோம்.


ஆதலினால் காதலிப்பீர்
ஆகாயம் இனி தூரமில்லை
ஆர்வத்தோடு பகிர்ந்தளித்தால்
ஆனந்தமான உலகமிங்கே,..
படம் : நன்றி கூகுள்..

Saturday, February 5, 2011

நான் யார்?.. சிறுகதை..
" அய்...யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....." ஓங்கி குரலெடுத்து கதறினாள் மீனாட்சி.

நீதிபதி வெங்கடேசன் மடியில் வைத்து படித்துக்கொண்டிருந்த கீதையை மூடிவிட்டு , கண்ணாடியை கழற்றினார்.

பின் மெதுவாக தான் அமர்ந்திருந்த ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு கால் தரையில் ஊன்றி நிப்பாட்டினார்..

பார்வையாலேயே காவல்காரனுக்கு சம்மதம் தந்தார் மீனாட்சியை உள்ளே விட சொல்லி..

" ராவுல ,என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸ் புடிச்சுட்டு போச்சுய்யா.. திருட்டு கேஸூன்னு சொன்னாங்க..

வேல பாக்க கம்பெனில திருடிட்டார் னு நிர்வாணமா நிக்க வெச்சு அடிச்சிருக்கான். அப்பவும் அவர் கிட்ட பொருள்

ஏதும் கண்டுபிடிக்க முடியாம போலிஸ் கிட்ட சொல்லி கூட்டிட்டு போனாங்கய்யா.. நான் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சேய்யா.."

கதறினாள்.. மீனாட்சி நீதிபதி அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்பவள்..

" ராவுல உடனே அய்யாவ பாக்க ஓடிவந்தேங்ய்யா . ஐயா தூங்குறாரு எழுப்ப முடியாதுன்னு காவக்காரர் சொல்லிட்டாருங்கய்யா.." கதற சக்தி இல்லாமல்

மூச்சு விட்டு விட்டு பேசினாள்..

ராதிகா சத்தம் கேட்டு வந்தவள் கையிலிருந்த காப்பியை மாமனாருக்கு தந்துவிட்டு மீனாட்சியை ஒரு கணம்தான் கவலையோடு பார்க்க முடிந்தது..

நீதிபதியின் பார்வை அவளை உடனே உள்ளே போக சொன்னது..

"சரி நான் பார்க்கிறேன். நீ போய் ஆக வேண்டியதை கவனி..எந்த ஸ்டேஷன், கம்பெனி விபரம் உதவியாளர் கிட்ட கொடுத்துட்டு போ.. "

" ராதிகா ஒரு 5000 ரூபாய் எடுத்துட்டு வா.."

எடுத்து வந்தவள் , காவலனிடம் கண்ணாலேயே " ஏன் இரவு அனுமதிக்கல ? " னு கேட்டு " என் வேலை போயிருக்குமே மா" என்று கைவிரிப்பே பதிலாய் வந்ததும்

புரிந்துகொண்டாள்..

---------------------------------

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் நீதிபதி வெகுநேரமாய்.. பின் , இறுதியாக ,

" சரி தொகையை கொஞ்சம் கூட்டிடுங்க.. மத்தத நான் பார்த்துகிறேன்.என் தொகையை குறைச்சுக்கலாம்.."

குளித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தவர் , மருத்துவர் மகனிடம் ,

" போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்கிறபடி செய்துகொடுத்துடு " என்று கட்டளையிட்டார்..

இட்லியை பிட்டுக்கொண்டிருந்தவர் தலை அசைத்தார்.

கணவனின் அடிமைத்தனத்தை ஒரு வெறுமைச்சிரிப்போடு கடந்தாள்..

-----------------------------------

" பூஜை சாமான்லாம் தயாரா மா? " மாமியார்

பேரப்பிள்ளைகள் அட்சரம் பிசகாமல் ஸ்லோகம் சொல்வதை ஒரு கணம் கண் மூடி ரசித்தார் நீதிபதி..

அதையே பாராட்டாய் எடுத்துக்கொண்டு வெட்கச்சிரிப்பில் பெருமிதமாய் பூஜை செய்ய ஆரம்பித்தார் மாமியார்..

----------------------------------

குடுகுடுன்னு மாடிப்படி ஏறிய 6 வயது மகளை தடுத்து நிப்பாட்டி ,

" ஏன் இத்தனை வேகம்.. எத்தனை முறை சொல்வேன்.. ஓடாதே.."

" அய்யோ மம்மி. விடுங்க. பென்சில் சீவும் போது கை வெட்டி காளிம்மாவுக்கு ரத்தம் மம்மி.."
விட்டால் அழுதுடுவாள் போல..

" ஒருவாட்டி சொன்னா கேட்கமாட்டியா. ஷார்பனர் இருக்கும்போது ஏன் அவ கிட்ட தரணும்..? " திட்டிக்கொண்டே பின்பக்கம் போக ,

சாதாரணமாய் பெருக்கிக்கொண்டு இருந்தாள் காளி..

" என்னாச்சு காளி .?"

" எதும்மா.. ..ஒஹ். அதுவா. பாப்பா சொல்லிச்சா.. ஹாஹா.. ரத்தத்த பார்த்து கொழந்த பயந்துடுச்சு போல.. அட இங்க பாருங்க.. பிளாஸ்டர் மருந்தெல்லாம் எடுத்து வாரத."

கலகல வென சிரித்தாள்.. " என் செல்லம், என் தங்கமே.. அம்மா மாதிரியே கொணம் ஒனக்கும்.. என்ன பெத்த தாயே, ஏழ பாழங்களுக்கு இதெல்லாம்

பழக்கம்டா கண்ணு. வலிக்காது கண்ணே.. " னு கொஞ்சினாள்..

----------------------------------------


எல்லா வேலையும் முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு , மாமனார், கணவர் வேலைக்கு சென்றதும்,

மாடிக்கு சென்றாள்.. குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கலக்டர் வீட்டுக்கு செல்லணும்.. பேரப்பிள்ளைக்கு பேர் வைக்கிறார்கள்..

15 ஆயிரம் மதிப்புள்ள டிசைனர் புடவையை எடுத்து வைத்தாள்.. ஏதோ ஒரு எம்.எல்.ஏ வீட்டு பரிசாம்.. அலட்சியமா சிரித்தாள்..

சின்ன நகை டப்பாவில் பரிசை பத்திரப்படுத்தினாள்..தான் சேமித்து வைத்த லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து கைப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டாள்.

அனாதை இல்லம் போகணும் பிராயசித்தமாக என எண்ணிக்கொண்டாள்..

" ரெடியாம்மா " மாமியார் குரல்

" இதோ 10 நிமிஷத்தில் வந்துடுறேன் மா.. "

அவசர அவசரமாய் கணினியில் உட்கார்ந்தாள் .

" கொலையா தற்கொலையா ?. நீதி வேண்டும்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நீதிபதி , மருத்துவர் , காவல்துறை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும்

சகட்டுமேனிக்கு ஆசைதீர கிழி கிழி என கிழித்தாள்.. நீதிபதி வீட்டினரையும் சாபம் விட மறக்கவில்லை.. இறுதியில் - தீகங்கு என கையெழுத்திட்டாள்..

பத்திரமாக தன் ஜெர்மன் தோழிக்கு அனுப்பி வைத்தாள்..அன்று இரவே இணையத்தில் தீகங்கின் எழுத்து வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது . பற்றிக்கொண்டு பற்றி எரிந்தது

நாலாபுரமும்..அதை மனக்கண் முன் கொண்டு வந்து புன்னகைத்தாள் திருப்தியோடு..

எவ்வித சுவடுமின்றி அழகாக அலங்காரம் செய்துகொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் தேவதை போல..

படம் : நன்றி கூகுள்..

Friday, February 4, 2011

மாற்றம் கொண்டுவர காத்திருப்பேன் தோழி..!


கோபத்தை குறைக்க வேண்டிக்கொண்டாய் பிரியமானவளே..

அன்பாகவும் மென்மையாகவும் மட்டுமே எனைப்பார்த்துவந்த என் தோழி.

எனைப்பற்றிய கவலை , என் நலம் மீதான அக்கறை உனக்கு .

கோபம் என்பதே அதிகமான அன்பினால்தான் என புரிவதில்லை உனக்கு.

முகத்தில் உமிழ சொன்ன ஆண்,.நம் பாரதி.. அது கோபமா தோழி?.

அன்பாலே சாதிக்க முடியாதா என்கிறாய்..அன்பானவளே..

அலுத்து தோற்றுவிட்டேன் , பொறுமைக்கிங்கே மதிப்பில்லையே தோழி..

என் வாழ்வு நிறைவாய் முடிந்ததென எப்போது புரிவாய் என் தேவதையே?.

சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் அழுக்குகளுக்கு அன்பெனும் ஆயுதம்

காலாவதியானதை சீக்கிரம் விளங்கிக்கொள்வாயா?.

கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.

மனதைக்கொலை செய்யும் கொலைகார கும்பலிடமிருந்து..

வன்முறையை தடுக்க வன்முறையே தேவை என்ற சாபக்கேடு அறிவாயா?.

யாரையவது பலிகொடுத்தே பல பலிகளை தடுக்க வேண்டிய காலகட்டாயம்..

நேற்றொரு திவ்யா..நாளை யாரோ..!!!!. அன்பெங்கே ???
சாதி , மதம், இனம் , மொழி கடந்து மனித நேயம் வளர தேவை அன்பு.

ஆனால் அதை வளர்க்க தேவை கோபம்.. முரணாயிருக்கிறதா?..

ஆன்மீகம் என்பது அன்பு பாதை மட்டுமல்ல தோழி..

சுயம் அறிவது மட்டுமல்ல , சுற்றுமுற்றும் அறிவதுமே அறிவு என் அன்புத்தோழி..

நச்சு நாகம் வந்து குழந்தைகளை , நல்லவர்களை

நயவஞ்சகமாய் தீண்டும் போது நாதம் கேட்க சொல்வாயோ தோழி?.
நீரின் ஓட்டத்திலேயே பிணமாய் செல்ல நீயே போதும்.. நானல்ல , நாணல்.

அன்பால் என்னை கட்டிப்போட எண்ணாதே.. கோபப்படவிடு..கோபப்பட்டுவிடு

சட்டத்தின் கதவுகளையும் சத்தம் போட்டே தட்டவேண்டியுள்ளதிங்கே..

அமைதிகாக்க அமைதிக்கு விலங்கிடும் சூழலிங்கே..அதுமட்டுமே சாந்தியிங்கே..

கண்முன்னே நடப்பதை கண்டுகொள்ளாமல் ,பதைக்காமல்

கண்மூடி ,கண்ணீரோடு தியானம் செய்யமுடிகிறதா தோழி..?.


நிறைய நேசம் இழந்தாய், எதிரிகளை சம்பாதிக்கணுமா என்கிறாய்..

ஆம், நிஜம் தோழி.. இழந்தது நேசத்தையல்ல.. போலிகளை..

பெற்றது எதிரிகளை அல்ல.. நியாயங்களை..வளரட்டும் எதிரிகள்..

வீசப்பட்டது வீண் விமர்சனங்களல்ல. வீரத்தழும்புகள் அவை.

வலிக்கவில்லை தோழி.. வலிமையே கூடியது..உன் வருத்தேமே என் வலி.

நாளை மரணிக்கவேண்டியிருப்பின் திருப்தியாக இருக்கணும் என்/நம் பயணம் .

தனிப்பட்ட இன்ப துன்பம் ஏகத்துக்கும் அனுபவித்த மகிழ்ச்சி மட்டுமல்ல ,

குரல்கொடுக்க முடிந்த மகிழ்ச்சியும் இதில் அடங்கணும்..

எனக்கான உன் வருத்தம் , உன் அன்பு என்னை தடுக்கக்கூடும்,

துணிவை குறைக்கும் , நான் தோற்கக்கூடும் , ஆகையால் தள்ளியே நில் தோழி..

என்னோடு வந்து இதில் நீயும் கைகோர்க்கும் நாளே

எனக்கு , இல்லையில்லை, நமக்கு வெற்றி., பலம் ..

அன்பொழுக பேசி ஆதாயம் தேடுவோர் பலரிருக்கட்டும்.

அழிக்கவேண்டிய ஊழல்,பேதம்,அடிமைத்தனத்தில் நம் கவனம் இருக்கட்டும்.

அன்பாய் பேசி ஆட்டுக்குட்டிகளாய் மாற்றி பின்னால் வரச்செய்யும்

அருமை வித்தை அறிவேன் தோழி , ஆனால் அதுவா நம் தேவை..?

நாம் தூங்க யாரோ எவரோ எங்கோ விழித்திருக்க , நம் சந்ததி

நாளை நிம்மதியடைய சில நேரம் நாமும் விழிப்போமே தோழி...

கைகோர்ப்பாயா தோழி ?..காத்திருப்பேன் விடியல்வரை..உன் அன்போடிங்கேதிவ்யாவின் தற்கொலைக்கு காரணமான அந்த ஆசிரியர்களுக்கும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்த இந்த சமூகத்துக்கும் என் கடுமையான கண்டனங்கள்..
படம் : நன்றி கூகுள்...

Wednesday, February 2, 2011

வாழ்வின் எதிர்பாரா அதிர்ச்சிகள்


ஓவ்வொரு முறை ஊர் பயனத்தின் போதும் நல்ல சேதியோடு கெட்ட சேதியும் ரகசியமாக காத்திருக்கும்..

எதிர் வீட்டில் மெஸ் நடப்பதால் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரம் வாங்கிக்கொள்ளும் வசதி..

4 பெண் குழந்தையோடு செல்லமாக வளர்க்கப்பட்ட மகன்.சிவா ( கற்பனை பெயர் ) . அப்பா இலங்கையிலேயே ஹோட்டல் நடத்தி இந்தியாவுக்கு வந்தவர்கள் 50 வருடம் முன்பு.

கிட்டத்தட்ட 5 கிரவுண்ட் இடத்தில் முன்பக்கம் வீடும் பின்பக்கம் பால்மாடுகளும் தோட்டமும்..

நாங்கள் அனைவரும் ஓடி விளையாடி களைத்த இடம்..

தெருவுக்கே பால் சப்ளை அங்கிருந்துதான்..

தீபாவளிக்கு சிவா போடும் வெடிகள் கோபம் ஏற்படுத்துபவை.,. ஆனால் நம் கோபம் அவனுக்கு சிரிப்பு.:)

நான்கு பெண்களையும் சிறப்பா திருமணம் செய்துகொடுத்தாலும் , மகன் மட்டும் படிக்காமல் கெட்ட நட்போடு வீணாகிக்கொண்டிருந்தான்..

தந்தை அவனுக்கு ஒரு ஹோட்டல் வைத்து தந்தார் மருத்துவமனை எதிரில்.. நல்ல கூட்டம்..

கார் வாங்கினான்.. வசதி கூடியது.. அதோடு தீய நட்பும் அதிகரித்தது...

பெண் தர பலர் மறுத்ததால் ஏழை பெண்ணொருத்தி , அதிகம் படிக்காதவளை மணமுடித்து வைத்தனர்..

அவளுக்கு 16 வயது..

இரண்டு பெண் குழந்தைகள்.. மிக அருமையான குழந்தைகள்.. நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் எங்க வீட்டு பொடியனை கொஞ்ச வருவார்கள்..

விளையாடுவார்கள்..

போனமுறை அவசரமாக நான் வங்கிக்கு செல்லும்போது

" யக்கா , கண்ணே தெரியலையா?.. நானும் கவனிக்கிறேன் நாலு நாளா.. கண்டுக்காம போறீங்களே..!" என உரிமையா கோபக்குரல்..முகம் நிறைய சிரிப்போடு..

திரும்பிப்பார்த்து ,

" மன்னிச்சுக்கோ சிவா.. கவனியாமல் இல்லை.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளிடம் பேசினேன்.. நீ ரொம்ப பிஸி என்பதால் தொந்தரவு செய்ய

வேண்டாமேன்னு நினைத்தேன்.."

எல்லா விசாரிப்புக்கு பின் அவன் மெஸ் ஆரம்பித்து மீண்டும் நல்லபடியாக முன்னேறி வருவது குறித்து என் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி ஊக்கமளித்தேன்.

( அவன் தந்தை மறைவுக்கு பின் அந்த ஹோட்டலை வித்துவிட்டு வீட்டிலேயே மெஸ்.. இதற்கு காரணமும் குடி கெட்ட நட்பும் )

குடி போதையில் , அம்மாவை , மனைவியை அடிப்பதும் அவர்கள் கோவித்துக்கொண்டு போவதும் வழக்கமானது..

இப்படி போன வருடம் மனைவி முடிவோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுவிட , அம்மா, சகோதரி வீட்டுக்கு செல்ல ( எல்லோருமே சென்னை)

இவன போய் மனைவியிடம் சமாதானம் பேசி அழைக்க அவள் மறுக்க. , சகோதரி வீட்டுக்கு சென்று திட்டு வாங்கி கொஞ்சம் அழுதுவிட்டு ,

நேரே ஊருக்கு வந்து வெறுமையில் , தனிமையில் தற்கொலை செய்துவிட்டான்..

யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவன் நன்மைக்குத்தான் திட்டியிருப்பார்கள்..

கேள்விப்பட்டதுமே சென்று பார்த்தேன்.. அவன் அம்மா கட்டிபிடித்து கதறினார்..

மனைவி மெலிந்த தேகம் எப்பவுமே.. அவளுக்கு அழ கண்ணீர் இல்லை.,. எல்லாவற்றையும் ஏற்கனவே அழுது முடித்திருக்கணும்..

அந்த குழந்தைகள் சென்னையில். அவள் தம்பி வீட்டிலிருந்து படிக்கிறார்கள்.. . நல்லவேளை நான் காணவில்லை..:(

மனைவிக்கு 26 வயது.. !!!!!!!!!!..

இரண்டு பெண்கள் தனிமையில்..சொந்த வீட்டைவிட்டு , 50 வருடம் பழகிய இடத்தை விட்டு போக மனமின்றி அந்தம்மா..

அவன் என்னை அனுப்பியிருக்கணுமே.. அவன் குழந்தைக்காவது தகப்பனா இருக்கக்கூடாதா என கதறினார்கள்..

எங்கே நடந்தது தவறு?.. யாரை கேட்க?..

பெண் குழந்தைகளை மிக நன்றாக படிக்க வைக்க சொல்லி துணிவையும் ஆறுதலையும் மட்டுமே தர முடிந்தது..


தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்த தலையெழுத்து என்று மட்டும் நினைத்து வெளியேறினேன்..

யக்கா , கண்டுக்காம போறீங்களே.." ஒலித்துக்கொண்டே இருந்தது ஒவ்வொருமுறையும் முகம் நிறைய சிரிப்போடு.!!!!!!!

-------------------------------------------------------------------------------------


போன வாரம் வீட்டுக்கு வந்து தன் ஒரே மகன் படிப்பை பற்றியும் அவன் எதிர்கால கனவுகள் பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தவர்,

திடீரென வேலை இழந்தார்..

குடும்பத்தை நினைத்து கதறி கதறி அழுதார் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல்...

ஆண் என்றால் அழமாட்டார்கள் என யார் சொன்னது?...

முடிந்தவரை தாங்குவார்கள்.. அதையும் தாண்டிய துக்கமென்றால்தானே அழுகை வந்திருக்க முடியும் , ?.

உடனடியாக ஏன் இப்படி வேலை விட்டு அனுப்புகின்றார்கள் என கோபம் வந்தது..:((..

அக்குழந்தையின் படிப்பு..?.

ஒவ்வொரு முறையும் இப்படி சிலர் வேலையை விடும்போது அந்த துக்கம் நம்மையும் வந்து சூழ்ந்து கொள்கிறது.. இயலாமை..

எதுவுமே நிரந்தரமற்ற தன்மை கொண்டது இவ்வுலகம்..என்னதான் புரிந்துகொண்டாலும் வாழ்வில் லட்சியம் , எதிர்பார்ப்புகள்

இலக்குகள் வைக்காமல் வாழ்வு நடத்தவும் முடியாதே..

ஓரளவு நாம் கடந்துவிட்டோம் என்றாலும் நம் குழந்தைகள் இதை கடக்கவேண்டியதை நினைத்தால் !!!!!!!..

-------------------------------------------------

ஊரிலிருந்து வந்ததுமே பெரிய மகனுக்கு முக பக்கவாதம் வந்தது ,பள்ளியில்..( Bell's Palsy ). பள்ளியிலிருந்து அழைத்து சென்று காண்பித்தார்கள்.

நானும் உடனே சென்றேன்.. என்னைவிட பள்ளி ஆசிரியர்கள்தான் அதிகம் வருந்தினர். ( அல்லது நான் காண்பித்துக்கொள்வதில்லை )

கண் இமை மூட முடியாது.. ஒரு பக்க உதடு செயலற்று..

இணையத்தில் பல தகவல் சேகரித்தேன்..

முக்கியமா மகனுக்கு ஊக்கம் தந்தேன்.. எதுவானாலும் வாழ்க்கையில் ஏற்க சொல்லி..

ஒரு கஷ்டம் வரும்போதுதான் நம்முடைய மறைந்திருக்கும் மற்ற திறமைகள் வெளிவரும் என நம்பிக்கை கொடுத்தேன்..

( சில நேரம் நினைப்பதுண்டு கஷ்டமே வராமல் இருந்தால் குழந்தைகளுக்கு தலைக்கனம் அதிகமாகுமோ என.

சக மனித உணர்வுகள புரிய தாங்கிக்கொள்ளும் கஷ்டம் வரணுமோ?.. Learning in the hard way?? )

தொடர்ந்து 3 வாரம் மருத்துவமனைக்கு சென்றோம் .. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுக்கவில்லை..அதனால் அவனுமே கண்டுக்கொள்ளவில்லை.

இப்ப 2 நாளா நார்மலுக்கு திரும்பிவருகிறார்.. 90% நார்மல் இப்போது..

துணை நின்ற இணையத்துக்கும் தகவல் அளித்தவர்களுக்கும் நன்றிகள்..

( இத்தனைக்கும் குடும்பம் முழுவதும் மருத்துவர்கள் பல துறையில் இருந்தாலும்

யாரையும் அணுக விடாமல் செய்தது இணையமே.. :)) )

பெல்ஸ் பால்ஸி தகவல்

பெல்ஸ் பால்ஸி பயிற்சி
---------------------------------------------------------------------------

சுய புலம்பல் என்பதால் பின்னூட்டத்துக்கு நேரம் செல்வழிக்க வேண்டாமே..,.அதைவிட மீனவருக்காக டீவீட் செய்தால் மகிழ்வேன்..படம்: நன்றி கூகுள்.