Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--