பொது வாழ்த்து..
நல்லுலகம் படைத்தவனே!
நலமளித்த இறையவனே!!
சொல்லெடுத்து நான்வணங்க
சுகமளிப்பாய் தமிழாலே!
பாலோடு பண்பாட்டை;
பாசத்தை அளித்(த) தாயே
வாழ்வதனை எளிதாக்கி
வழிகாட்டும் தந்தையவர்
கலை,கல்வி , ஒழுக்கத்தை
கற்பித்த ஆசான்கள்
இன்பத்தில் துன்பத்தில்
இணைந்திட்ட நட்புகளே
அன்புக்கு காட்டாக
அகமகிழும் உறவுகளே
எங்கெங்கே போனாலும்
இனிமைக்குத் தமிழேயாம்
அனைவருக்கும் என்வணக்கம்
அழகான முகமன்தான்
கவியரங்கத்தலைவருக்கு நன்றி
கவியரங்க கச்சேரியில்
கருத்தாய் கலகலப்பூட்டி
ஆளுக்கொரு கவிபடைத்து
அசத்திய அசாத்திய ஆசாத்(ஜீ)
வாழ்த்திடவே தடைபோட்டு
வாய்ப்பினையே பறித்துவிட்டீர்
வணங்கி ஆசிபெற வர
வரவேற்று வழிநடத்துவீர்..
ஆனைகள் பெருமிதத்தில்
அசைந்தாடி களிக்குமிங்கு
பூனைக்கொரு மிடங்கொடுத்தீர்
பூரித்தேன் நன்றி ஐயா..
சபையோர்க்கு வணக்கம்..
மொக்கையே பிரதானமென
மொழிபழக கலந்துவந்தேன்
அரவணைத்தீர் அன்பொழுக,
பயிற்றுவித்தீர் பண்புடனே.
கவிதையை சமர்ப்பிக்க
கவியரங்கில் வாய்ப்பளித்தீர்
பயத்துடனே எண்ணத்தை
படைத்துவிட்டேன் சபையினிலே
பக்குவமாய் பிழைதிருத்தி
படிகளேற துணைசெய்வீர்..
இனி வரும் நாளில்.....
அருமையா தூங்குற பச்சபுள்ள
அழவிட்டு பள்ளி போவதென்ன.?
அலுவலகம் சென்ற அம்மாவோ
அவசரமாய் வருகின்ற அவலமென்ன ?
நிதானமாய் ஒதுங்க இடமில்லை
நிழல்தரும் மரமோ செத்தொழிந்ததென்ன?
நித்தமொரு கட்சி கூட்டமுன்னு
நிலமுழுதும் குழியாய் ஆனதென்ன..?
அரசாங்க வேலை செய்வதற்கே
அட்டைபோல் லஞ்சம் உரிவதென்ன?.
காசு பணமாய் காண்பித்தால்தான்
கட்டையுமிங்கு வேகுவதென்ன?
கன்னி தான திருமணத்தினிலே
கற்போடு பணம் விலையானதென்ன?
சன்னிதான பூஜையிலுமிங்கு
சல்லிக்காசே பெரிதானதென்ன?
பொக்கிஷமான பெரியோரெல்லாம்
பொதிகளாகவே போன பொறுப்பென்ன?
வெட்கி வேதனை பட வேண்டியதும்
விதியாலே கலாச்சாரமானதென்ன ?
மதிக்க வேண்டிய மத சட்டமிங்கே
மதம்பிடித்து சின வெறிகொண்டதென்ன?
சதிகார கும்பல் மும்பையிலே
சகோதரனை தொலைத்த அவலமென்ன
இனமொன்று இழிநிலை அரசியலால்
இலங்கையில் இன்று அழிவதென்ன
தினம் உழைத்திட்ட விவசாயியும்
தற்கொலையையே நாடுவதென்ன ?..
பிரச்னை, துன்பம் பலவிருந்தாலும்
பிரிந்தே விலகிநின்றால் முடிவென்ன?
அன்பும் மனித நேயமுமே எம்
மதமாய் வாழ்ந்திட்டால் பயமென்ன?
இனிவரும் நாளில் பிறர்வாழ்வையுமே
தன்வாழ்வாய் நினைத்தால் தப்பென்ன?
துன்பத்தை இன்பமாய் மாற்றிடவே
துணிந்தே செயல்பட்டால் துயரென்ன?
சுற்றியுள்ளவர் வாழ வைத்திட்டால்
சுகமே பெற்றிடுவோம் வேறென்ன?
சுற்றுகின்ற பூமியை சுற்றமாக்கினால்
சுதந்தர வாழ்வினிமேல் தூரமென்ன?
முதியோர், குழந்தை பாசத்தையும்
முழுதுமே பயன்பட்டிட வழியென்ன?
குடும்பத்தின் சொத்தே அனுசரிப்பில்
கூடியே வாழ்ந்திட்டால் பழியென்ன?
அரசியலும் ஒருவித நல்தியானமே
ஆழம் கண்டுவிட்டால் வெறுப்பென்ன?
நற்செயல்கள் தீயாய் பரவிவிட்டால்
வன்முறை ஒழித்திடலாம் தோல்வியென்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment