Wednesday, July 9, 2008

அலீமா இப்போது நலமாயுள்ளார்.. பயப்படும்படி ஒன்றுமில்லை... அவளுக்காக வேண்டிய நல்லிதயங்களுக்கு நன்றி..

---------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து நான் பார்த்த கடவுள்..


என் பக்கத்து வீட்டு ஆன்டி சரஸ் ஆன்டி ..கடவுள்னா எப்படி இருப்பார்னு நினைப்போம்.நல்லவர், சாந்தமுள்ளவர், பொறுமையானவர்

கோபமே வராது, எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைப்பவர்..எதிரிகளே இருக்கமாட்டார்கள்.. இப்படி எத்தனை சொன்னாலும்

அதற்கெல்லாம் தகுதியானவர் சரஸ் ஆன்டி...

எனக்கு 3 வயதாகும் போது பாளையில் அருகருகே குடிவந்தோமாம்.. இன்றுவரை அதே வீட்டில்...ஆன்டி

அவர்கள் வாழ்க்கையை பற்றி மட்டும் சொல்கிறேன்... கமலாகாமேஷ் உருவ அமைப்பு.. வெள்ளைச்சட்டையும் , சாதாரண

நூல் புடவையும்..வசதி அதிகம் .. ஆனாலும் 2 தங்க வளையில் கையில் எப்போதும் .. அது தவிர பட்டுப்புடவை கட்டிகூட பார்த்ததில்லை அதிகம்..

அவங்க திருமணம் ஆன போதே அவர்கள் நாத்தனாருக்கு மனநிலை சரியில்லை.( திருமண பயத்திலாம்...)

மாமியார்தான் பார்த்துக்கொள்வாராம்..ரொம்ப செல்லமாக வளர்ந்த மகள்.. ஆனால் மாமியாரும் சீக்கிரமே தவறிவிட, அன்றிலிருந்து ஆன் டிதான் பார்த்துக்கொள்வார்கள்..

எப்படி?.. ஒரு மன நிலை சரியில்லாதவரை கவனிப்பதுபோல் இல்லை.. அவர்களுக்கு தனி அறை.. நேரத்துக்கு சாப்பாடு... குளிப்பாட்டுதல்,

உடை அணிவித்தல், நீளமான தலைமுடியை பின்னிவிடுதல்.. மேலும் பூ ரொம்ப பிடிக்குமாம் நாத்தனாருக்கு.. அதனால் தினமும் பூ வாங்கி

தலையில் வைப்பார்கள்... அவர்கள் அருகில் இருந்து பைபிள் வாசிப்பார்கள்.. சில சமயம் முரண்டுபிடிப்பார் நாத்தனார்..அப்பவும் பொறுமையா ஒரு

2 மாத குழந்தையை கையாளுவதைப்போல் மென்மையாக நடந்துகொள்வார்களேயொழிய சலித்துக்கொள்ளவேமாட்டார்கள்..

அப்படி ஒருத்தர் அந்த வீட்டில் இருப்பதே பலருக்கு தெரியாது...

சாப்பிட அழைக்கும்போது அவ்வளவு மரியாதையாக..

" அண்ணி , சாப்பிட வாரீங்களா?.." என்றுதான் கேட்பார்கள்... சிலசமயம் ஊட்டியும் விடுவார்கள்..

எத்தனையோ முறை எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டே நிற்பார்கள்.. பயந்து போயிருக்கேன்..

ஆனாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள்..

1, 2, அல்ல, சுமார் 30 வருடம் இந்த சேவையை மனம் கோணாமல் செய்ததோடு அவர்கள் படுக்கையில் விழுந்தும் அதேபோல் கவனிப்பு..

அடுத்து அவரது தந்தை .. நோய்வாய்ப்பட்டபோது, அதேபோல தந்தையையும் இறுதிவரை கவனித்தார்கள்...

அடுத்து தாய்.. அவருக்கு கான்ஸர் வந்து எல்லாவிதமான சிகிச்சையையும் நெய்யூர் முதலான ஊருக்கு சென்று அலுப்பின்றி

சலிப்பின்றி அருமையாக கவனித்துக்கொண்டார்கள்.. பாட்டியம்மாவுக்குதான் வருத்தமாயிருக்கும்.." என் மகளுக்கு பாரமா இருக்காமல்

சீக்கிரமா போகணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.."

திடீரென்று ஓர்நாள் ஜன்னலில் சன்னமான குரலில் அழைப்பு..என் வீட்டிலும் யாருமில்லை.

" என்ன ஆன்டி "

" சாந்தி கொஞ்சம் வாரீயா?..அம்மாவுக்கு என்னவோ பண்ணுது.."

போய் பார்த்தால் பாட்டி மரணம்.. ஆன் டி துடித்து முதல்முறையாக அதுவும் மெதுவாகவே அழுவதைக்காணமுடியவில்லை..

சிறிது நேரத்துக்கெல்லாம் சமாதானம் அடைந்தார்கள்.. அன்னைமட்டும் அந்த நேரத்துக்கான ஜெபத்தை வாசிக்கச்சொல்லி கேட்டார்கள்..

பின் அங்கிளுக்கு போன் போடச்சொன்னார்கள்... முகத்தைத்துடைத்துக்கொண்டு.. அதன்பின் அழுகையை இறுதிவரை அடக்கிக்கொண்டு

வந்தவர்களுக்கு காபி குடுப்பதிலேயும் கவனிப்பதிலேயும் இருந்தார்கள்..தன் அழுகை கூட யாரையும் வருத்தக்கூடாது என்ற எண்ணம்..

எங்க வீட்டில் எந்த ஒரு பிரச்சனை, விழா என்றாலும் ஆன் டி , அங்கிள்தான் முதலில்...

ஞாயிறனறு தூங்கினால் அம்மா எழுப்பும்போதே

" இந்தா ஆன்டி அங்கிள் வந்திருக்காங்க " னு சொன்னா போதும் , எல்லோரும் துண்டை காணோம் துணியை காணோம்னு

எழும்பி ஓடுவோம் குளிக்க.. அவர்கள் முன் கெட்டவராய் இருப்பதில் அவ்வளவு வெட்கம்..

எங்க வீட்டுல நடக்கிற கலாட்டா அத்தனையும் அவர்களுக்கு அத்துபடி..

" என்ன அழுகை?. காலேஜ் பஸ் போயிடுச்சா?.. சரி நான் கொண்டு விடுறேன்.."

" என்ன மேலே படிக்கமாட்டாயா?.. வேலைக்கு போகணுமா?.. படிச்சால் நல்லதுதானே?.." அக்காவிடம்..உடனே சரிதான் பதில்

" என்ன கல்யாணம் இப்ப வேண்டாமா.. பண்ணிக்கோ.." சரி அங்கிள் - அண்ணா.

ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி...

எங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு எங்கள் தெருவில்..பூக்காரி வந்து அவள் கஷ்டத்தை சொன்னால்கூட அமைதியாய், ஆறுதலாய் கேட்பார்கள்..

நாந்தான் அவர்களை அதிகம் தொந்தரவு செய்திருப்பேன்.. சவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய் , மல்பெரி ஜாம் அடிக்கடி எனக்கு செய்து தருவார்கள்..

இன்றுவரை உலகத்தில் ஆன்டி யின் தேங்காய் மிட்டாய்போல் சுவை எங்குமே கிடைத்ததில்லை.இப்பவும் நான் சென்றால் எனக்காக செய்து தருவார்கள்..

அடிக்கடி அவர்கள் சமையலரையில் இருந்து பைபிள், வாழ்க்கை குறித்த அனைத்து விஷயங்களையும் சொல்லித்தருவார்கள்.

லீவு விட்டால் , குரோஷா, கூடை பின்னுதல், எம்பிராய்டரி, செடி வளர்த்தல் எல்லாமாய் கற்றுக்கொண்டேன்.. இன்னும் அவர்கள்

நினைவில் செடி வளர்க்கிறேன் அபார்ட்மெண்டில்.. செல்லமாய் பூனை , கோழி வளர்த்தார்கள்.. அவர்கள் உலகம் எப்போதும் அன்பானது..

வாழ்க்கையில் அவருக்கு பல சோதனை.. சிலவற்றை பேசி சமாளிக்கலாமோ என நினைப்பேன்.. அப்போதும், அதை கடவுள்

குடுத்த பரிசாகவே எண்ணி மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களே தவிர ஒரு குற்றம் குறை கூறியது கிடையாது....

அவர்கள் வீட்டுக்கு வந்த மருமகனும் , மருமகளும் அவரைப்போலவே மாறியது இன்னொரு அதிசயம்..

அவர்கள் மகனுக்கு, பெண்பார்க்க சொன்னார்கள்.. நானும் என் மிக நெருங்கிய தோழியை சொன்னேன்..ஏனோ ஒத்துவரலை..

" சாந்தி நீ சொல்ற பெண்ணைத்தான் நாங்க முடிவு பண்ணுவோம் "

அதேபோல் அண்ணியை நாந்தான் முதலில் சென்று பார்த்தேன் ஒக்கே சொன்னேன்.. அவர்கள் என் கல்லூரி சீனியரும்..

பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லாதவர்கள்.. அன்பாலேயே எப்படித்தான் வளர்க்கமுடியும்னு

கேட்பேன்... சேட்டை ரொம்ப பண்ணினா என்ன பண்ண?..

" அன்பால கேக்காத பிள்ளை அடித்தாலும் கேட்காது " என்பார்கள்.. என்னவோ நமக்கெல்லாம் அது இன்னிக்கு வரை ஒர்கவுட் ஆனதில்லை..

யாராவது அந்த கடவுளைப்பார்த்தாலே போதும்.. அத்தனை சந்தோஷமாயிருக்கும் உள்ளம்..

பார்க்கணுமா?., தனிமடலில் விவரம் தருகிறேன்... கண்டிப்பாக சந்தியுங்கள்...

***********************************************தொடரும்******************************************

தொடர்ச்சி...- பாகம் 1.

அலீமாவின் வீட்டுக்கு சென்று பார்த்தோம் அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை... முதுகில் வலி.. மாத்திரை சாப்பிட்டும் நிற்கவில்லையாம்..

மேலும் பல பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்களாம்.. அவளுக்கு பயம் .. தண்டுவடம் டிஸ்க் விலகியிருக்கலாமோ என.. வாழ்நாளெல்லாம் கஷ்டப்படணுமே என கவலை..

சொல்லும்போதே கண்களில் நீர்த்துளி..எனக்கும்.." அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.. இருந்தாலும் மருத்துவ உலகில் இப்ப நவீன சிகைச்சையுள்ளது.. சரியாகிவிடும்.."

என ஆறுதல் சொல்ல, " இல்லை, ஆயுசுக்கும் இருக்குமாம்.. எனக்கு குழந்தைகள் பத்திதான் அதிக கவலை " என்கிறாள்..

" அப்படி ஒன்று நேர்ந்தால் ஆயுசுக்கும் நானிருக்கேன் அலீமா.." என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது...எனக்கு உள்ளே பயம் அதிகரித்தது...அவள் வேதனை குறித்தும், இன்னும் என்னை நல்ல நிலைமையில் வைத்திருக்கும் கடவுளை நன்றியோடு எண்ணியும்..நான் செய்ய வேண்டிய வேலை அப்ப நிறைய இருக்கு போல...

அவள் கணவரே எல்லா பணிவிடைகளும் செய்கிறார் அன்பு மனைவிக்கு...

--------------------------------------

3 வருடம் முன்பு.. சலீம் அழைக்கிறார்.. " சாந்தி ஒரு விஷயம். அலீமா வந்து சொல்வாள்.."

என்னவாயிருக்கும்.. வரும்வரை சஸ்பென்ஸ் தாங்கவில்லை.. உள்ளே நுழைந்தவளைப்பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. வாயும் வயறுமாய்..

அதே நேரம் நானும் அதே நிலைமையில் இருப்பதை பார்த்தௌம் அவளுக்கும் மகிழ்ச்சி..

இருவருக்கும் இரண்டாவது குழந்தை 3 மாத வித்யாசத்தில்.. பிரசவத்துக்குமுன் ஓர்நாள் அவளை பார்ப்பதற்காக நான் வருகிறேன் என்றபோது,

" என் கணவர் வந்து அழைத்து வருவார்.. வீடு மாற்றியுள்ளோம்... சிரமம் வேண்டாம் என்றாள்.."

அடுத்த 1 மணிநேரத்தில் பலத்த மழையில், அவர்கள் வண்டி வந்தது.. மூத்த மகன் ஓடிவந்தான் .. ஏறச்சென்றபோது அதிர்ச்சி...

ஓட்டுனர் இருக்கையில் அலீமா... " என்ன இது.. நீயேன் இந்த நேரத்தில் மழையில் வண்டியை ஓட்டிக்கொண்டு?" திட்டினேன்..

" என் கணவர், உங்களுக்காக இந்திய உணவு ( ரொட்டி ) தயாரிக்கிறார்.. அதனால்தான்..."

இப்படித்தான் 300 கிமீ பயணத்தைகூட சாதரணமாக ஓட்டிச்செல்வாள்.. அதுவே முதுகுவலி வந்திருக்குமோ?..

என் பையன் அதிசயிப்பான், அம்மா ஆண்டி உங்களவிட ரொம்ப ஸ்மார்ட் என்று .. பெருமையாயிருக்கும்...என் தோழியைபற்றி..

என்னவென்று சொல்வது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை, இல்லை, அன்புத்தொல்லையை...???இப்படித்தான் அதிகமா என்னை வருத்தப்படச்செய்வாள்

டெலிவரி சமயம் கண்டிப்பாக என்னை கூப்பிடு.. நான் வருவேன் உடனே என்றேன்.. குழந்தை பிறந்தபின் கூப்பிடுகிறாள்.. எனக்கு உதவ நினைப்பாளே தவிர,

என்னிடம் உதவி கேட்டு என்னை தொந்தரவு செய்துடக்கூடாது என்று நினைப்பாள்...

கணவருக்காக பாகிஸ்தான் உடையணிந்து முஸ்லீமாக மாறி, பாகிஸ்தான் சென்று உறவுகளையும் 2 மாதம் மகிழ்ச்சிபடுத்தி வந்தாள்..

இன்றும் அலுவல் விஷயமாய் மட்டும் தாய்லாந்து உடை, மற்றபடி பாகிஸ்தான் உடையில்.. .

சிலரிடம் அன்பு காட்டினால் ஏமாறலாம்.. ஆனால் அலீமா போன்றோர் அதை பன்மடங்காக்கி திருப்பித்தருகிறார்கள்....நான் இப்ப கடனாளியாய்..

-------------------அடுத்து நான் பார்த்து வளர்ந்த ( சரஸ் ஆன்டி) கடவுள்...------------------------------------------------------

வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர்கள்..


இந்த இழையில் என் வலைக்காகவும் பின்னாளில் நினைவுபடுத்திக்கொள்ளவும் நான் என் வாழ்நாளில் சந்தித்த அதிசயிக்கத்தக்க , அற்புதமானவர்களை பற்றி

எழுதுகின்றேன்.. என் வாழ்வையே மாற்றிய பங்குண்டு, என் வாழ்வை அர்த்தமாக்கியதும் உண்டு...மொத்தத்தில் இவர்களை சந்தித்தது நான் பெற்ற பெரும்பேறு..

இதில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. சம்பவங்கள் மட்டுமே உண்மை..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் அலிமா.... ஐஸ்வர்யாராயைவிட அழகி.. இதுக்குமேல் வெள்ளையாக முடியாத கலர்..நடுத்ததர உயரம்...ஆனால் இவையெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை..

என்னை ஆட்கொண்டது அவளின் குழந்தைத்தனமான, வெகுளித்தனமான புன்னகை... என் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு குடியிருக்க வந்தார்கள், கணவனும், மனைவியும், 2 மாத

கைக்குழந்தையும்.. நான் யாரிடமும் வலிய சென்று பழகுவதில்லை பொதுவாக... வெறும் புன்னகை பறிமாற்றம் மட்டுமே.. கணவர் பாகிஸ்தான், அலிமா, தாய்லாந்து.

காதல் திருமணம்..பலத்த எதிர்ப்பில்..

என் மூத்த பையனுக்கு அப்ப 3 வயது.. அவனை மட்டும் கூப்பிட்டு விளையாடுவார்கள்.. ஒருநாள் ஒரு விளையாட்டு சாமானுடன் அவன் வீடு திரும்ப,

" அதைக்கொண்டு குடுத்துவிடு என நான் சொல்ல, அதற்குள் அவர் ( சலீம்) " அது அவனுக்குதான் வாங்கினேன் என்றார்... ஆரம்பித்தது எங்கள் நட்பு..

" அலீமாவுக்கு குழந்தை வளர்க்க கொஞ்சம் உதவ முடியுமா?."

" கண்டிப்பாக.. கரும்பு தின்ன கூலியா?.."

அன்றிலிருந்து அவன் எங்கள் வீட்டு செல்லக்குழந்தை...அம்மாவிடம் இருக்கும் குழந்தை நான் வேலைவிட்டு திரும்பியதும் கைபோட்டு என்னிடம் தாவும்..

அப்படியே அழைத்துச்செல்லணும் அவனை.. என் கணவரின் மீசை பார்த்து மட்டும் பயம்.. ( கொஞ்சம் குழந்தைகிட்ட சிரிச்சாத்தான் என்னவாம்னு சொல்லணும்) அனேக நாட்களில்

என் வீட்டில்தான் அவனுக்கு தூக்கம் சாப்பாடு எல்லாம்..இத்தனைக்கும் அலிமாவும் நானும் அதிகம் கதை பேசுவதுகூட நேரமிருக்காது.. எல்லாம் குழந்தை பற்றி தான் பேச்சு இருக்கும்...

என்னைவிட என் பையன்மேல் அவர்கள் இருவரும் அன்பு செலுத்துவதும், அவன் பள்ளிவிட்டு

வந்ததும், அவனுக்கு வேண்டிய பழங்களை நான் சொல்லாமலே அழகாக வெட்டி மேசையில் வைப்பதும், அவனுடன் விளையாடுவதும்... சந்தோஷமான நாட்கள்., அவை.

அதேபோல் நான் வாரம்தோறும் வெளியே போனால் அவள் குழந்தையில்லாமல் செல்லுவதில்லை.. அவனுக்கு வேண்டிய பாலுடன் ,டயப்பருடன் 2 மணிநேரம்

அமைதியாக எந்த குழப்பமும் இல்லாமல் வருவான்.. அவளுக்கோ ஆச்சர்யமாயிருக்கும்.. அவளிடம் அத்தனை குழப்படி..நான் சொன்னால் உடனே கேட்பான் குழந்தை..

அவளிடம் பிடிவாதம்.. இப்படியாக என் குழந்தை அவளிடமும், அவள் குழந்தை என்னிடமும்...

ஆனாலும் அவளிடம் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும்... கணவர் மிக அன்பானவர் என்றாலும் குடிகாரர்.. . அதனால் அடிக்கடி பிரச்சனை...வெளியில் காண்பிக்க மாட்டாள்.

அவள் கோபிப்பதும் அவர் அவளை கொஞ்சி கொஞ்சி ( ஹனி ஹனின்னு ) சமாதானப்படுத்துவதும் அற்புதமான ஓர் தாம்பத்யம்....

ஒரு நாள் இரவு 11 மணி. சலீமிடமிருந்து போன்.." அலீமாவை பார்த்தீர்களா?."

வீடு சென்று தட்டினால் ஆள் இல்லை... பதருகிறேன் நான்.." என்னாச்சு உங்க கிட்ட சொல்லலையா?.. போன் எடுக்கவில்லையா?.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு போனாளா?.."

" ஆமா.. கொஞ்சம் பிரச்சனை... ஆனா இப்ப எங்க போனான்னு தெரியலை.. பயமாயிருக்கு..."

" சரி நீங்க பயப்படாதீங்க . என் கணவர் சென்று தேடிப்பார்த்து கூட்டி வருவார்... வந்ததும் தகவல் தருகிறேன்..."

1 மணிநேரம் தேடியும் காணோம்.. அக்கம்பக்கத்தில் எங்கும் இல்லை..

பின்பு 2 மணிநேரம் கழித்து வந்தாள், அழுது முகம் வீங்கி....எனக்கு பயங்கர வருத்தமும், கோபமும்.. இத்தனை பழகியும் என்னிடம் கூட சொல்லாமல்..?

" ஏன் அலிமா, இந்த குளிருக்குள் குழந்தையையும் தூக்கிக்கொண்டு..?." அழுகிறாள்....

மறுநாள் பிரச்சனையை சொன்னபோது " இதெல்லாம் சகஜம் என்றும், நாளாக சரியாகிவிடும் என்று மட்டுமே ஆறுதலளிக்க முடிந்தது..செத்துவிடலாம் என்றுதான்

போனாளாம், பின் குழந்தையை கொல்ல மனமில்லாமல், ஒரு பேரூந்தில் ஏறி ஊர் முழுக்க சுற்றிவிட்டு வந்துள்ளாள்.. காதல் திருமணம் அதுவும் பாகிஸ்தானியருடன் என்பதால்

அவள் குடும்பத்திலும் மரியாதை இல்லையாம்.. குடும்பத்தில் மிகவும் பாசமுள்ளவள்... அன்றிலிருந்து என்னை அன்னையுமாக்கினாள்...எப்போதும் அவளை சந்தோஷப்படுத்தி

ஊக்கப்படுத்தி வெளியில் அழைத்துச்சென்று ஜாலியாக பார்த்துக்கொள்ளும் கூடுதல் மகிழ்ச்சியான பொறுப்பெனக்கு...

சலீம் குடும்பத்தில் மூத்த பையன், அப்பா கிடையாது. 3 தங்கை 2 தம்பி.. அனைவருக்கும் பணம் அனுப்பணும்.. பொறுப்புகள் அழுத்த அதிகம் குடிப்பார்.. ஆனால் மிகவும்

நல்லவர்...குடியை மட்டும் விடவே முடியவில்லை.. அவர்கள் புது வியாபாரம் ஆரம்பிப்பதால் வீடு மாற வேண்டிய சூழ்நிலை.. எனக்கு கவலையெல்லாம் அந்த குழந்தை

எப்படி என்னைவிட்டு பிரியும், நான் பிரிந்தாலும்.. என் பையனுக்கு சாம்பார் சாதம் ஊட்டும்போது என் கையை பிடித்து அவன் வாய்க்குள் வைப்பானே..என்மேல் படுத்து தூங்குவான்.

அதன்படியே பிரிந்தார்கள்..ஆனால் 1 மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் மறுபடியும் வந்தார்கள்... ஆனால், அடுத்த 3 மாதத்தில் வேலைநிமித்தம் நாங்கள் மாறவேண்டிய சூழ்நிலை..

இப்படி 8 வருட பழக்கம்.. மாறியபின் தொலைபேசியில் தொடர்பு.. சிலசமயம் 3 மாதம், 6 மாதம் கூட பேசாமல் இருப்போம், அவரவர் வேலை பழுவில்..

ஆனால் திடீரென்று அழைப்பு வரும்.. " இன்று வரலாமா.." ..

" என்ன கேள்வி அலீமா... உடனே வாம்மா.." என்ன வேலை இருந்தாலும் அலீமா குடும்பத்தினருக்கு முதலிடம்...பெரிய வண்டியை ( land rover) எடுத்துக்கொண்டு குழந்தையை அழைத்துக்கொண்டு

வந்திடுவாள்..சிலசமயம் கடற்கரை அல்லது குழந்தைகள் பூங்கா செல்வோம்.. மனம்விட்டு பேசுவாள்.. அவள் ஆறுதலைடைந்ததாக நினைத்துக்கொண்டு.. ஆனால்

நானல்லவோ மகிழ்ந்திருப்பேன் அவள் அன்பை கண்டு... இரக்க குணம் கண்டு...அழகு , அறிவு, வசதி எல்லாம் இருந்தும் அப்படி ஒரு எளிமை.. இன்னும் ஊருக்கு

போனால் அவள் அன்னையுடன் வயல் வேலையில் உதவி செய்வாளாம்.. அப்பா இல்லாமல் ஒத்தையாக அவள் அன்னை 4 பெண் , 1 பையனை படிக்கவைத்துள்ளார்.

ஒரு அக்கா அமெரிக்காவுக்கு அரசாங்கமே படிக்க அனுப்பியதாம்.. அமெரிக்கரை ( இந்திய வம்சம்) மணமுடித்து, விவாக ரத்தாகி 12 வயதில் ஒரு பையன்.. அவள் விடுமுறைக்கு

தாய்லாந்து வந்தால் 1 மாதம் புக்கெட் கடற்கரையில் வீடெடுத்து சொந்தங்கள் அனைத்தையும் சந்தோஷப்படுத்துவாராம்...எளிமையிலும் எளிமை..தன் அன்னையின்

மேல் , ஒரு மனநிலை சரியிலாத அக்காவின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு என்னை அதிசயிக்கச்செய்யும்...எல்லாத்துக்கும் சேர்த்தாற்போல் அவள் சகோதரன் மட்டும்

சரியான ஜாலி பேர்வழி. அழிப்பதற்காகவே பிறந்தவன்.. ஆனாலும் மிக மரியாதைக்காரன் நான் பார்த்தவரையில்...20 வயதில் மணமுடித்து பின் மனைவியை

கைக்குழந்தையோடு அனுப்பிவிட, அவளை அலீமா அழைத்துவந்தாள் இங்கு...வெறும் 18 வயது.. அழகான குழந்தையுடன்.. ..அவளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தாள் வேலைக்கு அலிமா..

தன் சகோதரன் மனைவி என பார்க்காமல், ஒரு பெண் என மட்டுமே பார்த்து இளகிய மனம் அவளுக்கு...

( இன்று அலீமாவுக்கு முதுகுவலி.3 மாதத்துக்குபின் சந்திக்க செல்கிறேன்.. அவள் நினைவில் பதிவு..)

*************************************************தொடரும் *****************************************************

வீட்டுல விருந்தாளிகள்!!!!

" அம்மா தேர்வு முடிந்ததும் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். மாட்டேன்னு சொல்லக்கூடாது"
இப்படியான பீடீகை, உருட்டல், மிரட்டல் ஏப்ரல் மாதத்திலிருந்து வர ஆரம்பித்தது...
தேர்வு முடிந்து ரிஸல்ட்டும் வந்தாயிற்று.... அலுவலிருந்து திரும்பியதும் ஓர்நாள்...
" அம்மா இன்னிக்கு கேப்பேன் .. ஆனா இப்ப இல்ல.. நீங்க சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க அப்ப கேட்பேன்..."
" சொல்லு இப்பவே.."
" இப்ப சொன்னா கண்டிப்பா " நோ" தான் சொல்லுவீங்க.."
பையனுக்கு நம்பளோட பல்ஸ் தெரிஞ்சுருக்கே... பரவாயில்லையே...சரி.. அதுக்கே 10 மார்க் குடுத்தாச்சு..
" அம்மா தமிழ் படிக்கவா?..."
அட, என்ன ஆச்சர்யம்?.. வேப்பங்காய குடுத்தாகூட அப்படியே சாப்பிடுவான்.. தமிழ் படிக்கப்போறானா அவனேவா??????
ஹிஹி.. சரி 20 மார்க்...
படித்துக்கொண்டே, " அம்மா, அது ஒண்ணும் அவ்வள்வு விலையெல்லாம் இல்லை.. வேணுமின்னா என்னோட செலைவையெல்லாம்
குறைத்துக்கொள்கிறேன்.."
" இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?.. இதென்ன டிராமா?.."
" இல்லம்மா.. நீங்க ஹேப்பி மூட் வந்தப்புரம்.."
அட நான் எப்ப ஹேப்பி மூட்ல இல்லை?.. சரி பாவம்.. 30 மார்க் வரை கொடுத்தாச்சு.. ஆனாலும் உள்ளூர கலக்குது..
என்னத்த பிளான் பண்ணியிருக்கானோ?.. ஒருவேளை நண்பர்களை வீட்டில் தங்க அழைப்பானோ?..நேரம் ஒதுக்கமுடியாதே.
இல்ல மறுபடியும் அம்யூஸ்மெண்ட் விளையாட்டு ன்னு ஏதாவது?.. அய்யோ முடியாது..
பேசாம லீவுக்கு இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம்... எனக்கு வேணும்... சின்னவனுக்கு துணையிருப்பான்னு நினைச்சேன்...
எல்லா வேலையும் முடிந்ததும், பூனைகுட்டி போல மெதுவா, " அம்மா, அம்மா ன்னு " வழியுறான்...
" சொல்லு.."
" அம்மா நல்ல மூட்ல இருக்கீங்களா?.."
" அது முக்கியம் இல்லம்மா.. தேவைன்னா மட்டும்தான் கிடைக்கும் தெரியுமில்லையா?.. அம்மா மாட்டேன்னு சொன்னா
அழக்கூடாது...சரியா?."
இப்பவே பொத்துன்னு முகம் கீழே தொங்க ஆரம்பித்தது..
" சரி சொல்லு.. உதவ பார்க்கிறேன்.."
" அம்மா."
"ம்."
" அம்மா... ஒரு ஹெம்ஸ்டர் வேணும்...குட்டிதான் அம்மா.. நான் நல்லா பாத்துப்பேன்.."
" தம்பி..........."
" அம்மா இருங்க சொல்லி முடிக்கிறேன்... தயவுசெய்து அதுக்குள்ள " நோ" சொல்லாதீங்க...ஹேம்ஸ்டரால எந்த பிரச்சனையும் இல்லை.
அதுக்கு சாப்பாடு , சுத்தப்படுத்துதல் எல்லாம் நான் பார்த்துப்பேன்...யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன்..."
உனக்கே ஒருத்தர் வேலை செய்யணூம்.. இதுல ஹேம்ஸ்டர் வேறயா?..
" அம்மா, நாய் தான் வாங்கித்தரல, அட்லீஸ்ட் பூனை அதுவுமில்லை... எனக்கு போரடிக்குது..."
எப்படியோ நல்லா என்னை ஐஸ் வெச்சு அழுது, சாதிச்சுட்டான்.. அடுத்த பிரச்சனை அப்பாவை சமாளிக்கணும்..
மனத்தில் டயலாக் ஓடுது.. கேள்வியும் நானே... பதிலும் நானே...
அடுத்த நாள் அவனை அழைத்துச்சென்று வாங்கி வந்தாச்சு... ஒண்ணு மட்டும் கேட்டவன், அங்கு சென்றதும்,
பிளீஸ், என்று 1000 முறை கெஞ்சி, கடைக்காரர் என்னை மிக கொடுமைக்காரியாய் எண்ணுவதற்குள் வாங்கித்தரவேண்டிய
நிர்பந்தத்துக்குள் சதி செய்துவிட்டான்..
இப்ப 3 நாளா அதுகூடதான் .அதுக்கு சொக்கா போடாத குறை.. " அம்மா இந்த துண்டை எடுத்துக்கவா?.."
இணையத்தில் அது குறித்து அனைத்து செய்திகளையும்
வாசித்து, அதுக்கு ராஜ உபசாரம் நடக்குது வீட்டில்... அது என்னடான்னா, ஒரு சுற்றும் வீல் ஒண்ணில் ஏறி நாள்
முழுதும் ஓட்டிக்கொண்டிருக்கும்.. அதை தினமும் தோட்டத்துக்கு அழைத்துச்செல்வதும், அவனை சுற்றி ஒரு மழலைப்பட்டாள கூட்டமும்.
எப்படியோ பொழுது போகுது.. வீட்டை இரண்டு பண்ணுவதோடு, எப்பவும் அதைப்பற்றியே பேசிப்பேசி ..ஷ்ஷ்ஷ்ப்பப்பா..
நேற்று சின்னவனுக்கு காய்ச்சல் ( அதுதான் ரொட்டீனா வருமே..) அடுத்த தலைவலி ஆரம்பம்.. பாட்டுக்கள் ஆரம்பம் அப்பாவிடமிருந்து..
ஹேம்ஸ்டர் வந்ததால் காய்ச்சலும்.. இத்தனைக்கும் அவனை அதன்கிட்ட கூட நெருங்க விட மாட்டான் பெரியவன்..
மத்தளத்துக்கு 2 பக்கம் மட்டும்தான் இடி..
ஹிஹி.. எனக்கு எல்லா பக்கமும்...விருந்தாளிங்கள எப்படி அனுப்பமுடியும்???/