Monday, May 10, 2010

மூளையில்லையா டா உனக்கு.. ?..


மூளையில்லையா டா உனக்கு.. ?..

" ப்ளைட் எத்தனை மணிக்குடா?..மதன் "

" காலையில 8 மணிக்கு தான்க்கா.. பொண்ணு பார்க்கிறேன் .. புஜ்ஜு குட்டி டான்ஸ் அட்டெண்ட்

பண்றேன் சாயங்காலம் .. உடனே அடுத்த பிளைட் புடிச்சு வந்தாகணும் .. "

" ஏண்டா எப்ப பாத்தாலும் காலுல வெந்நீர் ஊத்திகிட்டு..நீ ஆசப்பட்ட மாதிரியே அழகு படிப்பு,

இளமை எல்லாம் நிறஞ்ச பொண்ணுடா..21 வயசுதான் ஆகுது..அவ அக்கா , உன் அத்தான்கூடதான்

வேலை செய்யுறா.. ரொம்ப தெறமைசாலியாம்..அனேகமா அவதான் வருவா ஏர்போர்ட்டுக்கு..

அப்படியே நீ பொண்ணு பார்க்க வந்துடு அத்தான் கூட .."

" எப்படியோ அக்கா. நம்ம சொந்த ஊருல நீ ஆசப்பட்ட மாதிரியே, வேதமெல்லாம் ஓதி சொந்த

பதங்களையெல்லாம் அழைத்து கொண்டாடணும்..என்னோட வெளிநாட்டு நண்பர்களுக்கெல்லாம்

நம்ம கலாச்சாரம் புரியிற மாதிரி விமர்சையா நடத்திடுவோம்...சந்தோஷம்தானே?.."

" பொண்ணு எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா.."

" உனக்கே பிடிச்சாச்சா..அப்ப எனக்கும் பிடிக்கும்னு சொல்ற..?"

---------------------------------------------------------------------------------------

" ஐயம் சாரி.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டேனா?..பிளைட் லேட்.."

" நோ..நோ. நோ பிராப்ளம்..அக்சுவலா ரொம்ப நாளா படிக்கணும்னு நெனச்சுட்டிருந்த புத்தகத்தை

படிச்சு முடிச்சுட்டேன்.. ஷுட் தேங் யூ ஃபார் தட்.." 40 வயதான நந்தினி, அட்டகாசமான

புடவையில் மிக நேர்த்தியான மேக்கப்புடன் வீடு சேரும்வரை கலகலப்போடு பேசி வந்தாள் உலக

விஷயம் அனைத்தையும்..

நீண்ட விமானப்பயண அலுப்பையும் மறந்து ஆச்சர்யத்தில் சிரிக்க கூட மறந்து கேட்டான் மதன்..

இடையில் வந்த தொலைபேசி அழைப்புகளையெல்லாம் மிக நாசூக்காக பேசி சமாளிப்பதையும்,

அவளின் நகைச்சுவை கலந்த பேச்சையும் ரசித்தவன், பெண்ணும் இப்படி இருப்பாள் என கற்பனை

செய்ய ஆரம்பித்தான்...

பெண் பார்க்கும் படலம் நிறைவாய் நடந்தது.. பெண் ப்ரியா அமைதியாய் அடக்கமாய் வந்துவிட்டு

போனாள்.. தான் நினைத்த கனவுக்கன்னிக்கும் மேலாகவே இருந்தாள் அழகில்.. நந்தினியை விட

அதிக அழகாயும்..

நந்தினிதான் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தாள்..

-----------------------------------------------------------------------------------

வீடு வந்ததுமே அக்கா ,

" என்ன நான் சொன்னேன்ல .. பொண்ணு ஒக்கே தானே?.."

" ம்.."

" என்னடா.?.. சம்மதம்தானே..?. புடிச்சுருக்கா.?"

"ம். புடிச்சுருக்கு.."

" என்னது இவன் மந்திரிச்ச கோழி மாதிரி இருக்கான்..?..என்னங்க நீங்க கேளுங்க.."

" என்னடா அப்ப அவங்க கிட்ட தேதி குறிக்க சொல்லிரலாமா?.."

"ம்."

" என்னடா என்ன கேட்டாலும் தலைய மட்டும் ஆட்டுற.. மயக்கத்துல இருக்கியா என்ன?.."

" ம்."

" அட .. என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற.. வாய தொறந்து சொல்லுடா.. அவங்க பொண்ண கட்டிக்க சம்மதம்தானே?.."

"ம். .ஆமா. ஆனா பிரியாவ இல்ல.. நந்தினிய.."

" பைத்தியாமா மூளையில்லாயா டா உனக்கு.?. உன்ன விட 8 வயது மூத்தவ.. விதவை.."

" நந்தினிய பார்த்து பேசுற வரைக்கும் எனக்கு அப்படி ஏதும் எண்ணமில்லைக்கா.. ஆனா அவளை மாதிரி ஒரு பொண்ணோடு வாழ்க்கைன்னா அது பெரிய அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்..அவள் உடம்புக்கு வேணா வயசாயிருக்கலாம்.. அவ மனதுக்கு வயது 20 தான்.. அறிவுக்கோ 60 வயது..கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் அப்படி ஒரு பெண்ணோடு வாழணும்னு முடிவு பண்ணிட்டேன் கா.."

" நம்ம சொந்தம்லாம் " முடிப்பதற்குள் தடுத்தான் மதன்..

" யார பற்றியும் எனக்கு கவலையில்லை அக்கா.. எந்த சம்பிராதயமும் வேணாம்,...நந்தினியோட சம்மதம் மட்டும் முடிந்தா வாங்கித்தா...இல்லாட்டி நான் பேசுறேன் நந்தினி கிட்ட....ப்ரியா மாதிரி இளமையான பொண்ணு என்னோட பசிகளை வேணா நிரப்பலாம்.. ஆனா நந்தினி மாதிரி பொண்ணுங்க கூட வாழ்வதே ஒரு உற்சாகம்..நந்தினி தவிர வேறு யாரையும் இனி நெனச்சு கூட பார்க்க முடியாது.."

திறந்த வாயை மூடாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் அக்கா..