Sunday, June 27, 2010

பிராயசித்தம் - சிறுகதை..







மொபைலையும் இமெயிலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் முருகேசன்...

" ஏங்க இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க.." டாக்டர் மனைவி 10 வது தடவையா
புன்னகையோடு சொல்லிவிட்டு முதுகில் ஒரு தட்டும் தட்டிவிட்டு சென்றாள்.

இந்தியா சென்றிருந்த மகன் லோகேஷோட அழைப்புக்காக

காத்திருந்த
முருகேசனுக்கு எதுவுமே காதில் விழவில்லை..

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்....................ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.....................

டக்கென எடுத்தார்..


" கண்டுபிடிச்சுட்டேன் அப்பா.."
பதிலேயில்லை.. மகிழ்ச்சியில் மூச்சு முட்டுவது போலிருந்தது

" அப்பா ..அப்பா என்னாச்சு இருக்கீங்களா..?."


" சொல்லுப்பா ரொம்ப மகிழ்ச்சி..சரி மதன் கிட்ட விபரம் சொல்லிட்டு நீ கிளம்பி
வந்துடு.."

" மரகதம் , நாம இப்பவே இந்தியா கிளம்புறோம்.. "

" என்னங்க நீங்க .மருமகள் பிரசவ நேரம். அவளோட பெற்றோர் வந்திருந்தாலும் நானும் கூட இருந்தா தான் நல்லாருக்கும்.. நீங்க கிளம்புங்க.."

---------------------------------------------------------


" என்னால இனியும் வச்சுக்க முடியாது உங்கம்மாவ.. உங்க தம்பிகிட்ட அல்லது
முதியோர் இல்லத்துல விடுங்க.. மீறி வெச்சிருக்கதுன்னா நான் போறேன் எங்கப்பா வீட்டுக்கு.."

குழந்தைகளை இழுத்துக்கொண்டு மாடி ஏறினாள் நீனா..
செய்வதறியாமல் திகைத்து நின்றான் சரவணன்,..

" நான் தான் சொன்னேன்ல மா.. அவ குணத்துக்கு கொஞ்சம் அனுசரிச்சு போ னு.. வாரத்துல ஒரு முறை வீட்டுக்கு வரேன்.,. வந்தா நிம்மதியில்லை.. "

மகன் நிலைமை கண்டே கண்ணீர் வடித்தாள் தாய்..

" சரி வாப்பா தோச ஊத்துறேன்.. " எதையும் மனதில் வைக்காமல் அழைத்தாள்
மகனை..

" நீங்க என்னம்மா நினைக்கிறீங்க..? தம்பி கிட்டயும் இருக்க முடியாது.. மாமனார்
வீட்டோட இருக்கான் தொழில பாத்துகிட்டு.. ...........பே.........சா.................ம......" தயங்கினான் மேற்கொண்டு சொல்ல...

அதை கேட்டு அழ கூட வலுவிழந்தவளாய் திரையை விலக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் முத்துலெஷ்மி..

---------------------------------------------------------------------------

" அட்ரஸ் சரிதானேப்பா.?.. இந்த குறுகலான தெருவிலா.. இரு யாரையாச்சும்
கேட்டுக்குவோம்.."முருகேசன் மதனிடம்..

" ஏம்ப்பா தம்பி, இந்த முத்துலெச்க்மி அம்மா வீடு...??? " முடிப்பதற்குள்.,

" அத்வா சார், தோ லெஃப்டுல கட் பண்ணி நேர போனீனா , கட்சீ வீட்டுக்கு முந்தின பச்சை பெயிண்ட் வீடு.. "

" மதன் , 40 வருடம் கழிச்சு பார்க்க போறோம்..நான் தனியா மொதல்ல போறேன் .
கார் இங்கயே நிற்கட்டும்.." இறங்கி நடந்து வீட்டு வாசலில் கால் வைக்கிறார்..பழைய நினைவுகளோடு...

----------------------------------------------------------------------------

" போறதுன்னா அந்த காவலியோட போய்டு.. குடும்பத்தோட செத்து
தொலையுறோம்.."

" அப்பா எனக்கொண்ணும் தெரியாது.. என்ன நம்புங்கப்பா.." கதறுகிறாள்...

முத்துலெஷ்மியின் பெட்டியை வீசுகிறார் அவர் தகப்பன்..

" மன்னிச்சுருங்க சார்.. தப்பு என்மேல தான்.. என்னை தண்டியுங்க சார்.. " காலை பிடிக்கிறான் முருகேசன்..

" போடா பொறுக்கி .. ஏழை பையன்னு இலவசமா படிப்பு சொல்லி கொடுத்ததுக்கு
நன்றியாடா நாயே.."

-----------------------------------------------------------------------

"என்ன இன்னும் முடிவு பண்ணலையா .. சரி நீங்க இருங்க உங்கம்மாவோட .. நானும் பிள்ளைகளும் கிளம்புறோம்.."

" இரு .. இரு.. பேசலாம்.."

" எனக்கு பொறுமையில்ல..அவங்களே சுமை.. இதுல அவங்கள பார்க்க வருகிற கூட்டத்துக்கும் கொட்ட உங்கப்பா சொத்தா இருக்கு.. ?.."

" நானே போறேன் மா.. நீ அவனையும் குழந்தைகளையும் நல்லபடியா பாத்துக்கோ
மா.. "

" அது எனக்கு தெரியும்.."


பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இதுநாள் வரை தேக்கி வைத்திருந்த
அழுகையை மொத்தமாக கொட்டவும், வாசலில் கேட்டை பிடித்தபடியே அதிர்ச்சியில் நின்றிருந்த முருகேசனை கண்களை சுறுக்கிக்கொண்டு சந்தேகத்தோடு பார்த்தாள் முத்துலெஷ்மி....


" இப்பவாவது என்கூட வருவியா எங்க வீட்டுக்கு லஷ்மி.. உனக்காக அங்கே ஒரு
கூட்டமே இல்ல இல்ல குடும்பமே காத்திருக்கு..........."

------------------------------------------------------------------------------------

Tuesday, June 22, 2010

உலக சிறு செய்திகள்..








இந்த புதிய பக்கம் மூலம் உலகில்

நடக்கும் சின்ன சின்ன செய்திகள் பதிவாக தொடரும்..


ஜகார்தா - இந்தோனேஷியா :
இந்தோனேஷிய

காவல்துறையினர் அக்மாமூல் முக்மினின் என்ற 24 வயது இளைஞரை விலங்குகள் சரணாலய புலியை கொன்றமைக்காக கைது செய்தனர்..

மிக பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினமான புலியை கொன்று அதன் தோலை எடுத்தமைக்காக குறைந்த பட்சம் 5 வருடம் சிறைத்தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்..


சரணாலயம் மூடியபின்பு புலி உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது..

கோலாலம்பூர் - மலேஷியா :

நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான சிறைச்சாலை ஒன்று நாட்டின்

அபிவிருத்திக்காக இடம் தேவைப்படுவதால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..

இதனை வரலாற்றாய்வாளர்கள் எதிர்க்கின்றனர்..

கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் " புடு" எனும் சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது..சுற்றுலா தளமாகவும் ,வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது..

இதன் 394 நீள சுவர் நேற்று இடிக்கப்பட்டு மிகப்பெரிய உணவு விடுதிகளும்,

அடுக்ககங்களும் கட்ட அரசு சார்ந்த கட்டட துறையினர் திட்டமிட்டுள்ளனர்..

சிறை ஒருபோதும் வரலாற்று தலமாகாது என்பதும் , பெருமைப்படக்கூடிய இடமுமல்ல என்பதும் அரசின் முடிவு..



கொசுறு..:

வெலிங்டன் - நியூஸிலாந்து :

மிக அழகான யுவதி ஒருத்தி நேரே அருகில் திறந்திருந்த

வீட்டுக்குள் சென்று வீட்டிலுள்ள நன்றாக மது அருந்திவிட்டு , உணவும் உண்டு விட்டு , உடைகளையும் போட்டுக்கொண்டு , படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்..

வீட்டு ஓனர் , காவல்துறைக்கு அறிவிக்க , காவலர் கையும் களவுமாய் பிடித்தனர்..

விசாரித்ததில் , அன்று என்ன நடந்ததென்றே தெரியவில்லையாம்...!!!!!

நஷ்ட ஈடாக 50,000 ரூபாய் பணமும், நன்னடத்தைக்காக வீட்டு காவலில்

வைக்கும்படியும் தண்டனை பெற்றுள்ளார்..

தொடரும்....

Saturday, June 19, 2010

மொக்கை என்பது யாதெனில்...




அவசரமான உலகம், போராட்டமான வாழ்க்கை , விதிக்கப்பட்ட வாழ்க்கை என வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களுக்கு நகைச்சுவையை ரசிக்க நேரமின்றி மறத்துத்தான் போகிறது வாழ்க்கை..

எப்போதும்
சீரியஸாகவே இருப்பவரிடம் விளையாட்டாய் ஒரு நகைச்சுவை
சொல்லிப்பாருங்கள்.. கொலைவெறியோடு திருப்பி தாக்குவார்..

நாம்
கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்..
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றுகூட விளக்கிட முடியாது..

ஏனெனில்
அவர் நிலைமை அப்படி..அவர் சூழல் அப்படி..

ஆராய்ச்சியாளார்கள் சொல்கிறார்கள் , நகைச்சுவையும் , மனம் விட்டு சிரிப்பதும் மகிழ்ச்சியையும் , உற்சாகத்தையும் கொடுப்பதோடு மனதுக்கும் அதன் வழியாக உடம்புக்கும் மிக நல்லது..எப்படி.?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது , நம் உடம்பின் நேர்மறை சக்தியை அதிகரிக்குது , வலிகளை குறைக்கின்றது...மேலும் மன அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தை வேறோடு அழிக்கின்றது..


நகைச்சுவை
ஒரு தொற்று நோய்.. இருமல், தும்மலை விட உடனே
பற்றிக்கொள்ளும்..அது முன்பின் தெரியாத மனிதரையும் இணைத்துவிடும் பசைகொண்டுள்ளது..

சீக்கிரமாகவும்
மிக எளிதாகவும் நம்மை ஒரு சமநிலைமைக்கு கொண்டு வருகின்றது..அடுத்த 45 வினாடிகளுக்கு அந்த புத்துணர்ச்சி நம் தசைகளை தளர்த்தி வலி குறைத்து வலிமையை அதிகரிக்கின்றது..


மனம்
விட்டு சிரிக்கும்போது நம் உடம்பில் எண்டார்ஃபின் என்ற நல்ல ஹார்மோன் சுரந்து வலி குறைப்பதோடு, முழு ஆரோக்கியத்தை வழங்குகின்றது..
அது மட்டுமா, ரத்த ஓட்டத்தை நாளங்களில் அதிகரித்து இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் தடுக்கின்றது..

உடற்பயிற்சி செய்ய முடியாத இருதய நோயாளிகள் கூட வயறு குலுங்க ( கவனிக்க தொப்பை குலுங்கணும் ) சிரிப்பது உடம்புக்குள்ளேயே ஒரு ஓட்டப்பயிற்சி செய்வதற்கு சமம்.. ( எதுக்கும் பாஸ் பக்கத்தில இருக்காரா னு பார்த்துட்டு சிரிங்க)


அது
மட்டுமா , வயறு குலுங்கும்போது சுவாசப்பையிலுள்ள காற்று உள்ளிழுப்பதைவிட அதிகமாய் வெளியேற்றப்படுகிறது.. இந்த சுற்றப்படுத்துதல் ஆழ்மூச்சுப்பயிற்சிக்கு சமம்..இது முக்கியமா எம்ஃபைசைமா , போன்ற சுவாச நோயுள்ளவர்களுக்கு மிகுந்த
பலன் தரும்..

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடில் வைத்திருக்க ஆண்களைவிட பெண்களுக்கு அதிக பயனளிக்குது..

இது
பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருக்கு..நோய்கள் பற்றி, நேர்மறை எண்ணம் பற்றி , சிரிப்பு ஜீன்கள் னு லட்ச விஷயங்கள்.. என்ன எழுத தான் நேரமில்லை,.. ( மொக்கை வேற போடணுமே..நானும் கொஞ்சூண்டு சிரிக்கணுமே தினமும்.. )


சரி
மொக்கைக்கும் சிரிப்புக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா, நகைச்சுவையின் ஆணி வேரே இந்த மொக்கை , கும்மி தானுங்க..

சிறப்பா நகைச்சுவை சொல்லும் கலை சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் மொக்கை/கும்மி போட எல்லாருக்கும் தெரியும்... மொக்கை போடும்போது ஈகோ அழிகிறது.. இழிவை கூட நகைச்சுவையாக ஏற்கமுடிகிறது.. அதிலுள்ள குற்றம் தவிர்த்து நகைச்சுவையை உணர முடிகிறது..



அதனால
இந்த சீரியஸ் கட்டுரையை இப்ப நிப்பாட்டிக்கிறேன்.. அட இதுவும்
மொக்கைதான் னு நீங்க நினைச்சா, வலிக்காம சிரிச்சுட்டு போங்க...

மொக்கை போடுங்க, முழுசா வாழுங்க...

முன்னேறுவதற்காக நேரம் செலவழிப்பதோடு நகைச்சுவைக்கென நேரம் ஒதுக்கிட பழக்கிக்கணும்.. அல்லது அப்படியான நட்போடு இருக்கவாவது பழகிக்கணும்... ஆனாலும் நகைச்சுவை என அதிகமா சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தாக்குதலையும் நடத்துவார்கள்.. அவர்களிடம் கவனமாயும் இருந்திடணும்..:)


மொக்கை
என்பது யாதெனில்...யாதொன்றும் தீமை இல்லாத சொல்..


----- தொடரும்...

( பொன்னான நேரத்தை பின்னூட்டமிடுவதில் செலவிடவேண்டாமே..)

Thursday, June 17, 2010

சிறை சந்திப்பு - தவறை உணர்தல்..-2










அந்த
பாகிஸ்தானிய இஸ்லாமியர் கூறியதை அப்படியே இங்கு பதிகிறேன்.

" நான் அடிக்கடி கார்மெண்ட் விஷயமாக பாங்காக் வழியாக ஹாங்-காங் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை செல்லும்போது என் விசா முடிவடைய நான் ஹாங்-காங் விமான நிலையத்திலிருந்து பாங்காக் டிடென்ஷன் செண்டருக்கு அனுப்பப்பட்டேன்..

அங்கு
ஒருநாள் இருந்துவிட்டு என்னை அதிகாரிகள் மீண்டும் விமான நிலையம் அனுப்பினர்..
நான் மீண்டும் பாகிஸ்தானுக்கு தான் அனுப்ப போகிறார்கள் போலும் என நிம்மதியாக இருந்தேன்..

திடீரெனெ
2 அதிகாரிகள் வந்து என் பேக்-பேக் பையை பரிசோதனையிட்டு
அதிலிருந்து சுமார் 200 கிராம் எடையுள்ள போதை மருந்தினை எடுத்தனர்..எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும்..

என்ன
நடக்கிறது என நான் புரிவதற்குள் , ஏதும் பேசாமல்
என்னை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.. நான் ஹாங்-காங்கிலிருந்து வந்ததையும் டிடென்ஷன் செண்டரில் வைக்கப்பட்டதையும் எடுத்து சொல்லியும் யாரும் செவி மடுப்பதாயில்லை..

பிடிக்கணும்
னா பல சோதனைகளை தாண்டி வந்த போதே என்னை
பிடித்திருக்கலாமே. அல்லது நான் அப்படி போதை பொருள் கடத்தணும்னா , அதை என் லக்கேஜில் வைத்திருப்பேனேயொழிய கேரி லக்கேஜிலா வைப்பேன்..எல்லாரும் பார்க்கும்படி?..

எனக்காக
ஆஜரான அரசாங்க வக்கிலோ ஆமா, சரி என்ற இரு வார்த்தையை தவிர ஏதும்
பேசவில்லை.. எனக்கு தண்டனை குறைந்த பட்சம் 15 வருடம் என தெரியும்..

ஆனால்
இவர்களோ , ஃப்ர்ஸ்ட் டிகிரி, செகண்ட் டிகிரி, தேர்ட் டிகிரி என என்னெல்லாம் போட முடியுமோ அத்தனையையும் போட்டு 100 வருடம் தண்டனை என சொல்லிவிட்டனர்..கேட்டதும் அப்படியே பிரமை பிடித்தவனானேன்.. உலகமே இருண்டது..

கொஞ்சம்
வசதியான சூழலில் வளர்ந்து பழக்கப்பட்ட நான்
கைதிக்கான உடையணிந்து கூட்டத்தோடு அடைக்கப்பட்டேன்.. சிறைக்குள் பல விதமான குற்றவாளிகள்.. முரடர்கள்.. என பல்வேறு நாட்டினர்...

சிலர்
வெறி வந்து சண்டையிடுவதுண்டு.. அலறுவதுண்டு..மனசிதைவில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு.. இதெல்லாம் கண்டு ஆடிப்போனேன்..

நல்லவேளை
எனக்கு திருமணம் ஆகவில்லை.. ஆனாலும் என் சகோதர
சகோதிரிகளுடனும் அவர்கள் பிள்ளைகளுடனும் குடும்பமாக வாழ்ந்து வந்தேன்..குடும்பத்தின் மூத்த மகன் நான்..

இஸ்லாமிய
முறைப்படி வளர்க்கப்பட்டேன்..
என் பெற்றோர் , குடும்பத்தார் 5 முறை தொழுகை செய்பவர்கள்..நாங்கள் சொந்தமாக ஆடை தயாரிக்கும் நிறுவனம் வைத்திருந்தோம்..அடிக்கடி வெளிநாடு செல்வதால் என் பெற்றோரை அதிகமா நான் கவனிக்கவில்லையோ என்ற மனக்குறை எப்போதும் எனக்குண்டு.. ஆனால் என் தம்பியை பாராட்டணும்.

அமெரிக்காவில்
20 வருடம்
இருந்துவிட்டு பாகிஸ்தான் வந்து என் அன்னையை கவனித்துக்கொண்டார் அப்பாவின் மறைவுக்குப்பின்.. அந்த பாவம்தான் எனக்கு இத்தண்டனையை தந்திருக்கணும் என நானே என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.. எனக்கு தண்டனை வழங்கும் காலம் பாகிஸ்தானுக்கும் தாய்லாந்துக்கும் ஒப்பந்தம் ஏதும் இல்லை..

ஆனால்
2 வருடம் கழித்து அந்த நல்ல விஷயமும் நடந்தது.. ட்ரீட்டி
மூலம் என் தண்டனை காலம் 30 வருடமாக குறைக்கப்பட்டது.. அதன்பின் ஒவ்வொரு வருடமும் தாய்லாந்து அரசரின் பிறந்த நாள் மன்னிப்பு என சொல்லி 15 வருடத்துக்கு தண்டனையை குறைத்தார்கள்..

இப்பதான்
கொஞ்சம்
வாழ்க்கையில், பிடிமானமும் நம்பிக்கையும் வந்தது.. பின்பு நன்னடத்தை காரணமாக என்னை இந்த வருடம் ( 11 ஆண்டுக்கு பின் ) விடுவிப்பதாக சொல்லியுள்ளனர்...காகித வேலைகள் முடிவடைந்ததும் என்னை பாகிஸ்தான் அனுப்பிடுவார்கள்..

முதலில்
என் குடும்பத்தாருக்கு கடிதம் போட்டேன்.. பதிலில்லை.. ஒருவேளை காவலர்கள்
முறையாக கடிதத்தை தரவில்லையோ என்ற எண்ணமுமுண்டு...

நல்லவேளை
எனக்கு சர்ச் மூலம் அறிமுகமானார் பிரிட்டனிலுள்ள தோழி ஒருத்தி..
அவர் திருமணமானவர்.. குழந்தைகள் இரண்டு..அற்புதமான பெண்மணி..

எனக்கு
வருடந்தோறும் 100 டாலர் அனுப்புவார்.. என்னைப்போல பலருக்கும்
அனுப்புவாராம்.. அவர் மூலம் என் குடும்பத்தாரை தொடர்பு கொண்டேன் பின்பு.. அதன்பின் யாரையும் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.. என்னால் அவர்களுக்கேதும் பிரச்னையும் வந்திடக்கூடாது..

சிறைக்குள்ளே அவர்கள் கொடுக்கும் உணவைதான் உண்ணணும்.. ஒரு கடை உண்டு.. அதில் கோக் , பெப்ஸி போன்ற பானங்கள் , பண்டங்கள் இருக்கும்.. ஆனால் விலை அதிகம்..

ஒரு கோக் வாங்க நான் ரொட்டி போட்டு விற்று தான் வாங்க முடியும்.. ஆக, கோக் குடிப்பது என்பது எமக்கு அதிகமான ஆடம்பரம்..மேற்படி தனிப்பட்ட செலவுகளை நம் காசில்தான் பார்த்துக்கொள்ளணும்..

என்னைப்போல் சொந்தம் ஏதும் இல்லாதவர்களை இப்படி உங்களைப்போல சர்ச் மூலமா வந்து பார்ப்பார்கள்.. அது எங்களுக்கு மிகுந்த உற்சாகமும் , ஆறுதலும்..

என்
தந்தையின் நிலமொன்று அரசு எடுத்தது.. ஏக்கர் கணக்கில்.. அது குறித்து கோர்ட்டில்
கேஸ் நடந்தது.. என்னாயிற்று என தெரியவில்லை.. என்னிடம்தான் பவர் ஆஃப் அட்டார்னி இருக்கிறது.. நான் சென்றுதான் குடும்பத்தார்க்கு சில விஷயங்களை செய்யணும்..

ஒருவேளை
அவர்கள் என்னை ஏற்காவிட்டால் என்ன செய்வது என நான் என் மனதை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறேன்..

சிறையில்
நாங்கள் 6.30 திறந்து விடப்படுவோம் ..பின்பு மதியம் 3 மணிக்கு
அடைக்கப்படுவோம்.. காலை 6.30 மணிக்கு சமையலறை சென்று நானும் சிலரும் பரோட்டா போடுவோம்.. நான் கறி பரோட்டா போடுவதில் வல்லுனர் .. இதை கவனித்த பிரிட்டன் கைதி ஒருவர், நான் விடுதலையானதும் கேமரூன் எனும் தீவில் எனக்கு ஒரு சின்ன உணவகம் அமைத்து தருவதாக சொல்லியுள்ளார்..

என்
குடும்பத்தார் என்னை நிராகரிக்கும்பட்சத்தில் அங்கு சென்று ஒரு புது வாழ்க்கையை
தொடங்கலாம் என்றுள்ளேன்..

உங்க
கூட வந்திருக்காங்களே அந்த சிங்கம் போன்ற சிங்களப்பெண்மணி, அவர்தான்
எனக்கு கேமரூன் தீவு பற்றி இணையத்தில் தகவல் எடுத்து அனுப்புவார் புத்தகம் போல.. நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..

சிறைக்குள் நூலகம் இருக்கிறது.. பல விதமான புத்தகங்கள்.. வாசிக்கவோ எழுதவோ நேரமின்று சுற்றிக்கொண்டிருந்த எனக்கு இங்கு அதுதான் முழுநேர வேலை.. அறையில் தொலைக்காட்சி உள்ளது உலக செய்திகள் அறிவேன்.. பகலில் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்..

நான்
பாகிஸ்தானில் டென்னிஸ்
விளையாடியுள்ளேன்..மற்றவர்கள் , முக்கியமா தாய் காரர்கள் கால்பந்து ஆர்வமாய் விளையாடுவார்கள்..

தாய்லாந்து கைதிகளுக்கு மட்டுமே தையல் தொழில் கற்றுத்தந்து சம்பாதிக்கவும் வழி செய்கிறார்கள்.. வெளிநாட்டு கைதிகளுக்கு வேலை ஏதும் இல்லை.. எங்கள் குடும்பம் தையைல் தொழிலில் இருந்ததால் எனக்கு மிக ஆர்வமாய் இருக்கும் அதை காண..

இரவு எழுந்து எழுத தோணும் எழுதுவேன்..
ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சில வார்த்தைகள் எழுத்து வடிவில் வந்து போனது..

எனக்கு அது புரியவில்லை.. ஆனால் உடனே காகிதம் எடுத்து எழுத தூண்டியது.. எழுதும்போது " நான் உன்னை மன்னித்தேன் .. எப்பவும் நேசிக்கிறேன்... " என்று என் அன்னை சொல்வது போல இருந்தது.. அதுவே எனக்கு மிகப்பெரிய விடுதலையாக இருந்தது...

இத்தனை
நடந்தும் நான் மனதளவில் துணிவா இருப்பதற்கு இறை பற்றே காரணம்.."


இவர்
பேசிக்கொண்டிருக்கும்போதெ பல கைதிகள் இவரிடம் வந்து கட்டியணைத்து
அன்பை தெரிவித்துக்கொள்கின்றனர்... விடுதலை ஆகப்போவது குறித்து ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் குடும்பத்தார் வரவேற்பை குறித்து கலக்கத்தோடு காத்திருக்கிறார்...

நான்
எடுத்து வளர்த்த குழந்தைகள்
எல்லாம் இப்ப திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறதாம்... என் சகோதர சகோதிரிகள் தாத்தா , பாட்டி ஆகிவிட்டனர் என சிரிக்கிறார்..

எல்லாம்
நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..
அவர் குற்றம் செய்தாரா, இல்லையா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.. அதை சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்.. எமது வேலை குற்றத்தை மனதார உணர்ந்த/உணர வைக்க ஒரு மனித மனத்துக்கு மனிதாபிமானத்தோடு ஆறுதலளிப்பது மட்டுமே...

எல்லாம் நன்றாகவே நடக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்..

அடுத்து டிடென்ஷன் செண்டரிலுள்ள கைதிகள் ( குற்றமிழைத்தவர்கள் அல்ல , விசா , பாஸ்போர்ட் இல்லாதவர்கள் ) முக்கியமா இலான்கை
அகதிகள் பற்றி பார்க்கலாம்...

(பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )

Friday, June 11, 2010

சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...


சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...

தலைநகருக்கு வெளியே கிட்டத்தட்ட 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்குது முக்கிய குற்றவாளிகளின் மிகப்பெரிய சிறை...பாங்குவாங் சிறைச்சாலை..

80 ஏக்கர் பரப்பளவில்..
சுமார் 8000 கைதிகள் இருக்கிறார்கள்.. வெளி சுவர் சுமார் 2400 மீட்டர் நீளமும் , 6 மீட்டர் உயரமும் , 1 மீட்டர் பூமிக்கடியில் ஹை வோல்டேஜ் வயர்கள் பதிக்கப்பட்டும் இருக்கிறதாம்....

இதில்தான் வெளிநாட்டவர் பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..


ஆலயத்தின் மூலம் பலர் சமூக சேவையாக இச்சிறையிலுள்ள வெளிநாட்டவரை
சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பல காலமாக நானும் இதில் பங்கெடுக்க ஆவல் கொண்டிருந்தாலும் வேலை குடும்பம்
நிமித்தமாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமலே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன்..

இந்த வாரம் தோழியர் இருவர் தாம் செல்லவிருப்பதாகவும் முடிந்தால் கலந்துகொள்ளுமாறும் சொல்லவே அதற்கான ஏற்பாடுகளோடு கிளம்பினோம்..

காலை 8 மணிக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு தயாரானேன்..கிட்டத்தட்ட 1
மணி நேர பயணம்.. மழை வேறு தூர ஆரம்பித்தது..தோழி ஃபார்சூனரை அதி வேகத்தில் ( 120-140 கிமீ )மோட்டார் வே யில் முன்னால் ஓட்ட, நான் அவரை பின்பற்றி ஓட்ட , சில நேரம் இடையில் புகும் வாகனங்களும் மழையும் தடுமாற செய்தது...இருப்பினும் அப்பப்போ தொலைபேசிக்கொண்டார்..புது இடம் ...புது வழி..

ஒருவழியாக 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பாஸ்போர்ட் ( அல்லது ஓட்டுனர்
லைசென்ஸ் ) காண்பித்து நாம் சந்திக்கவிருக்கும் நபரின் முழு விபரங்கள் தந்து அங்குள்ள அலுவலில் சமர்ப்பித்து காத்திருந்தோம்.

தோழி ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருந்தார்.. பல நாட்டினர்..யாரை சந்திக்க விருப்பம் என
என்னை கேட்டார்.. எனக்கு என்ன தெரியும் நீங்களே யாரையாவது சொல்லுங்கள்.. என்றேன்.

சரி , ஒரு நபர், சீக்கிரம் விடுதலையாகிறார்.. பாகிஸ்தானியர்.. நன்றாக பேசுவார். என்றார்.


அவர் விபரம், அவர் தங்கியிருக்கும் அறை, கட்டிட எண், நாடு , எல்லா விபரமும்
அளித்தோம்..

தோழிகள் கடந்த 2 வருடமாக சந்தித்துள்ளதால் என்னை தயார்படுத்தினார்கள்..


நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், எப்படி பேசுவது என்பதல்ல , எதெல்லாம்
பேசக்கூடாது, தவிர்க்கணும் என்பதை மட்டுமே..

அதற்கு அவர்கள் " நீ ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம்.. உன் காதுகளை, புன்னகை
படற விட்டு மட்டும் கொடுத்தால் போதும்.. அதுமட்டும்தான் அவர்களுக்கு தேவை.." என்றார்கள்..

உள்ளுக்குள் சின்ன பயம்..
நான் சந்திக்க விருக்கும் நபர் போதை மருந்து கடத்தலில் மாட்டிக்கொண்டவராம்.. எப்படி இருப்பார்.?.. என்ன பேசுவது?..

யோசித்துக்கொண்டிருக்கும்போதே 9.30 க்கு
அழைத்து அனுமதிக்கான படிவம் கொடுத்தார்கள்.. பின் ரோட்டை கடந்து எதிரிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்குள் வலது காலெடுத்து நுழைந்தோம்..

மிகப்பெரிய ராட்சத கதவுகள், ராட்சத பூட்டுகளோடு ..கொண்டிகளோடு.. பல காவலர்கள்
துப்பாக்கியோடு...

அருகில் புத்த பிட்சுகள் சின்ன மண்டபம் போன்ற இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள்..
சுமார் 30 பேர்..

கையில் வேறெதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சொன்னதால் எல்லாவற்றையும்
வண்டியிலேயே வைத்தேன்.. வாகன சாவியும் மொபைலும் மட்டும் கையில்..

அவர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு என்னை மட்டும் நிப்பாட்டினார் ஒரு பெண்..
தொலைபேசியை லாக்கரில் வைத்து விட்டு வர சொன்னார்..

மீண்டும் வெளியே சென்று
அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு வந்தேன்.

உள்ளே தாய்மக்களுக்கு என தனியாக இடமும், வெளிநாட்டவருக்கு என தனியாக இடமும் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்..

நீண்ட தாள்வாரம் . கிட்டத்தட்ட 50 தொலைபேசிகள்.. ஒவ்வொன்றிர்க்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது..

கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. பின் 3 அடி
இடவெளியில் நீண்ட தாள்வாரம்.. அதே போல அந்தப்பக்கமும் கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. இருவருக்குமான இணைப்பு தொலைபேசி வழியாக...

காத்திருந்தோம் . 10.30 வரை.. ஒவ்வொருவராக வந்தார்கள் ..

வந்தவரெல்லாருமே நம்மையும் பார்த்து சிரித்து
கையாட்டிவிட்டு சென்றார்கள்.. நம்மை தெரியாவிட்டாலும்..

மனிதர்களை பார்ப்பதே ஒரு குதூகலம் போல,...
மிக அழகாக ஆடை அணிந்திருந்தார்கள் சலவை செய்யப்பட்டு.. வாடிய முகம் ஏதுமில்லை..

முகச்சவரம் செய்யப்பட்டு தெளிவாக இருந்தார்கள்..
சினிமாவில் பார்ப்பதுபோல்.. ( நம்ம தமிழ்நாட்டு கைதிகள் தான் பாவமோ?.. இல்லை எனக்கு அவர்களைப்பற்றி தெரியவில்லையா..?)

எனது தோழியில் ஒருவர் சிங்களத்தவர், மற்றொருவர் டெல்லியை சேர்ந்தவர்,...
சிங்கள தோழி பன்னாட்டு சேவை நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்கிறாராம்... ( ரெட் க்ராஸ் மாதிரி ). ஆள் ஆஜானுபாகு தோற்றம் .. கம்பீரமான பெண்மணி,... அவர் காண வந்த நபர் சீக்கிரம் வந்துவிட சிங்களத்தில் இனிமையாக பேசத்தொடங்கினார்.. ஒட்டுக்கேட்டும் புரியவில்லை.:)

அடுத்த தோழிக்கும் ஆள் வந்துவிட்டார்.. அவர் மனைவி வெளிநாட்டிலிருந்து எழுதிய
கடிதத்தோடு தோழி வந்திருந்தார்..அதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்..அருகிலேயே..

நான் சந்திக்க வேண்டிய நபர் மட்டும் வந்த பாடில்லை.. வந்தால் மட்டும் அடையாளம்
தெரியுமா என்ன?.. செல்வோரையெல்லாம் இவராய் இருக்குமோ என பார்த்து கொண்டிருந்தேன்..

அதற்குள் அருகில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பஞ்சாபி நபர் ஒருவர், நீங்க
இந்தியரா, எனக்கு மேகசின் அனுப்பி தர இயலுமா என ஆசையோடு என் தொலைபேசி எடுத்து கிடைத்த சிறிது நேரத்தில் கேட்டார்..

தான் 16 வருடம் சிறையில் இருப்பதாகவும்
எம்பஸியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.. நான் கேட்டுக்கொண்டேன்..

எவ்விதமான சத்தியமும் அவர்களுக்கு தந்துவிடக்கூடாது.. ஆனால் கேட்டுக்கொண்டு முயல்கிறோம் என மட்டும் சொல்லணும்..

இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் சந்திக்க வேண்டிய நபர் வந்தார்..
வந்ததும் தோழி கண்டுகொண்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார்..இந்தப்பக்கம் உள்ள தொலைபேசியில்..

மிகுந்த மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.. மிகுந்த மரியாதையோடு, வரிக்கு வரி என்
பேரை மரியாதையோடு உச்சரித்து பல வருடம் பழகிய நபரைப்போல் பேசினார்..

( அவர்கள் பெயர் இங்கே பதிய இயலாது...இஸ்லாமியர்.. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்..அடுத்த முறை பெண்கள் சிறைக்கு செல்லலாம் என இருக்கிறோம்..முக்கியமாக இலங்கை அகதிகள் இருக்கும் டிடென்ஷன் செண்டர்... )

தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.. போதை கடத்தல் என சொல்லி 100 வருட
தண்டனை கொடுத்தார்களாம் ...வெளிநாட்டவர் என்பதால்...

இங்கு போதை கடத்தல் என்றால் உடனே மரண தண்டனைதான்.. இப்படி
கொல்லப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இங்கே...


தொடரும்.................

( எனக்கு பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை. அதனால் எதிர்பார்ப்பதுமில்லை.. ஆகையால் பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )

Saturday, June 5, 2010

பதிவுலக பந்து இப்ப பொதுஜனம் கையில்....





நர்சிம் , கார்க்கி செய்தது மிகப்பெரிய தவறே.. ஆனால் மனமாற மன்னிப்பு
கோரியுள்ளனர்..

அதை துச்சமென மதித்த சந்தனமுல்லை , தோற்று போக தயாராகிவிட்டார்..:(


தன் கையில் பந்து கிடைத்ததும் தாறுமாறாக விளையாட ஆரம்பித்துள்ளார் , சில கெட்டவர்களின் , கொலைகார எண்ணம் கொண்டவர்களோடு..( பின்னூட்டம் பார்த்தவருக்கு புரியும்..)

கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து ஒரு உன்னதமான காரியம் செய்திருக்கலாம்..தன்
மதிப்பை பன்மடங்கு அவர் உயர்த்தியிருக்கலாம்..

பதிவுலகமே அவருக்காக பரிதாபப்பட்டது. நர்சிம் மை எதிர்த்தது..

இப்ப நிலைமை தலைகீழாக மாறும்..


மனதார மன்னிப்பு கேட்ட நர்சிம்மை மன்னிக்க மெஜாரட்டி பதிவுலகத்தினர்
தயாராகவே உள்ளனர்..

பதிவுலகம் என்பது சந்தனமுல்லையும் வினவும் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ளணும்..


பெண்ணியம் போற்ற மனிதநேயத்தை கீழே போட்டு மிதித்துவிட்டார்கள்..

ஒரே நாளில் பிரபலாமானவர் பிரபலத்தை தக்க வைத்துக்கொள்ள தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்.. அவருக்கு தூபம் போடுபவர்கள் எத்தனை நாட்கள் அவரோடு இருக்காங்கன்னு புரிந்துவிடும்....:)

கண்டிப்பா மற்றோரு பெண்ணுக்கு இதே பிரச்னை வந்தாலும் வினவின் பக்கம்
தலைஎன்ன கால் வைத்து கூட படுக்க மாட்டார்கள்..

கொலைகாரன் ஒருவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் உலகில் கொலைகளே இல்லாமல்
செய்துவிடலாம் என்கிற இவர்களின் கண்டுபிடிப்பை என்ன சொல்ல?.. குழந்தைத்தனம் என்றா?,,.:)

பெண் என்பவள் முதலில் மனுஷி . மனிதநேயம் , தாய்மை உணர்வு கொண்டவள்..
பழிவாங்க துடிப்பவள் அல்ல..

உன் நண்பரை சொல் உன்னை சொல்கிறேன் என்பது சந்தனமுல்லை க்கு மிக பொருத்தம்..


படகு என நினைத்து முதலையின் முதுகில் பயணம் செய்ய நினைப்பதை என்ன சொல்ல..?????????


முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள்
, சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..

உங்க பழிவாங்கும் எண்ணம் என்ன முடிவை தரப்போகிறது என பொருந்திருந்து பார்ப்போம் ..


அரசியலில் கூட மன்னிப்பும் மறப்பும் அதிகமா இருக்கும்போது !!!!!!!!!!!

சந்தனமுல்லை இதுவரை வாசனை. இனி..????????

வருந்துகிறேன்... நர்சிம் ஐ / கார்க்கி யை அழைத்து நேரில் ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை அன்போடு கேட்டிருந்தாலே அவர்கள் ஒடிந்து போய் அழ வைத்திருக்க முடியும்..

அன்பால் கையாள வேண்டியதை அறிவாளால் கையாளப்போகிறீர்கள் கவனம் . உங்களை
பதம் பார்த்துவிடப்போகிறது...

பிரச்னைகளை தீர்ப்பதில் மிக தவறான வழியை தேர்ந்தெடுத்து தோற்றுபோக
தயாராகிவிட்டீர்கள்...

தமிழமுத குழுமத்தில் என்னை நேராகவே வேசி என்றும் தாய்லாந்தில் தொழில்
நடத்துபவள் , உனக்கு நல்ல மரணமே கிடையாது என்றும் சபித்தவர் பகலவன் என்ற நண்பர்.. அவரை மட்டுறுத்தி வெளியேற்ற மட்டுமே செய்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..

பின்னர் அவராகவே புரிந்துகொண்டு ஒரு மாதம் கழித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்...

எல்லாரையும் திருத்த முடியாது திருத்த புறப்பட்டால் வேலைக்காவாது..

சிலர் சொன்னால் திருந்துவார். சிலர் உணர்ந்து திருந்துவார்..

மற்றொன்று எனக்கு வேசி , ஸ்த்ரீ லோகர் என்பவர்கள் கெட்டவர்கள் என்ற
எண்ணத்தையெல்லாம் தாண்டியவள் நான்..

அவர்களை சமமாகவே எண்ணுகிறேன்..


அதனால் என்னை வேசி என்பதால் நான் வேசியாகிடப்போவதுமில்லை.. தெய்வம்
என்பதால் நான் கடவுளாகப்போவதுமில்லை... :)

இங்கு தினந்தோறும் வேசி என நீங்கள் சொல்லும் தொழிலாளிகளை புன்னகையோடே
கடந்து செல்கிறேன் .. கூடவே பயணிக்கிறார்கள்.. என் குழந்தைகளிடம் ஆசையாக பேசுகிறார்கள் பொது இடங்களில்...அதே போல திருநங்கைகளும் .. வித்யாசம் ஏதுமின்றி..

நம் நாட்டு மக்கள் அப்படியான பார்வையை எப்போது விசாலப்படுத்துவோம்.?


சர்ச் மூலம் சிறைச்சாலையிலுள்ளவர்களையும் பாலியல் தொழிலாளிகளையும்
சந்திக்கிறோம்..மனிதர்களாகவே பார்க்க முடியுதே தவிர குற்றவாளிகளாய் அல்ல... அவர்கள் மாட்டிக்கொண்டவர்கள்/ உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள் அவ்வளவே...

நாட்டில் நல்ல மனிதராய் வேடமிடுபவர்களிடம்தான் கவனமாய் இருக்கவேண்டிய
காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்...

மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்..
அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...

தண்டனைகள் மட்டுமே மனிதர்களை திருத்துமென்றால் உலகமே ஊனமாயிருக்கும்..


புரட்சி என்றாலே வெறுப்பாயுள்ளது..:(


இத்தனைக்கும் நான் சந்தனமுல்லையின் பப்புவை பற்றிய பதிவுகளை ஆசையாக படிப்பேன். நானும் ஒரு குழந்தைப்பையித்தியம் என்பதால்..

நர்சிம் கார்க்கி எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள்..


-------- தொடரும்.... தொடரலாம் கண்ணியமாக மட்டுமே....பிரச்னைக்குரிய பதில்கள் பிரசுரிக்கப்படமாட்டாது...