இன்னிக்கு எப்படியாவது கேட்டுடணும் சதாவை...நானும் பார்க்கிறேன் ஒரு மாதமாய், அதற்கான சந்தர்ப்பமே கிடைப்பதாயில்லை.. இனியும் விடக்கூடாது.. அவன் அண்ணன் ,எனக்கு வில்லன் வேறு வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டான்..
அதென்னவோ அவனுக்கும் எனக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆவதில்லை... பின்ன என்னங்க , எங்க வீட்டு பேரழகியான ரதியை கண்ணு வெச்சா சும்மா விடுவேனா நான்...அப்ப சும்மா ஊரை சுத்திக்கொண்டிருந்தான், இப்ப அதிர்ஷ்டம் அமெரிக்கா பறந்துவிட்டான்..ரதியோ லண்டனில்.. இருக்கட்டும் அந்த கோபம்தான் அவனுக்கு...
அதுக்காக இப்போது நான் இழப்பதாயில்லை இந்த சந்தர்ப்பத்தை..
அதோ வருகிறாள் தேவதை.. என்ன அழகு.. ஆஹா இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?
அம்மணி தாவணி போட்டு நீண்ட கூந்தலில் பூ வைத்து... ம். நல்லாத்தான் வளர்க்கிறாங்கப்பா இந்த நாகரீக யுகத்திலும்... மத்த நாட்களில் ஜீன்ஸும் சுடிதாரிலும் வண்டியில் போகிறவள் , இன்று மட்டும் காரிலாமா, அதுவும் அண்ணனுடனா?..
அடப்பாவமே.. எப்படி போய் அவளிடம் பேச..?சம்மதிப்பாளா ?..திட்டுவாளா?..
அவன் அண்ணன் காரை எடுத்து வெளி வரும்வரை வெளி கதவினருகில் நிற்கப்போகிறாள்போல... இதோ ஓடிபோய் சொல்லிட வேண்டியதுதான்...
காலில் ஷூவையும் சாக்ஸையும் மாட்டிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைக்கிறது...
யாராவது எடுங்களேன்... நான்தான் கிடைத்தேனா?.. அருகில் யாருமில்லையே... டக்கென்று அலறும் தொலைபேசியை எடுத்து கீழே வைத்துவிட்டு கள்ளப்பார்வை பார்த்துவிட்டு வேகமாய் வாசல்நோக்கி நகர,
" யாரது போன்ல.." அதிகாரமாய் குரல் உள்ளேயிருந்து..
" யாருமில்லை.. ராங் நம்பர்தான்" ஹிஹி..ஹி..
அப்பாடா மூச்சிறைக்குது... வியற்வையை துடைக்கும்போது சதா என்னைப்பார்த்துவிட்டாள்..வெட்கத்தோடு புன்னகைக்கிறாள்...தாவணி போட்டாலே நம்மூர் பெண்களுக்கு இலவசமா வெட்கமும் வந்துடுது...அட.. நல்லநேரம்தான்..நல்ல மூடில் இருக்கிறாள் போல..
மெல்ல அவளை நோக்கி நடக்கிறேன்... அவள் வீட்டு நாய் என்னைக்கண்டு கொண்டு இப்பவா கெஞ்சணும்... தர்மசங்கடமான சூழ்நிலை...எனக்கோ பேயைக்கண்டமாதிரி உள்ளுக்குள் உதறல்...
" டாமி உள்ளே போ.." கீழ்படிந்து , பின் திரும்பி என்னை அப்புரமா கவனித்துக்கொள்வதாக சேதி சொல்லிவிட்டு சென்றது..
என் தயக்கத்தை புரிந்தவளாய்...,
" என்னவோ சொல்ல வந்தீங்க போல..."
" இல்ல..வந்து...."
" வந்து ..."
" வந்து..."
" அதான் வந்துட்டீங்களே, சொல்லுங்க...சும்மா.."
" வந்து ... என் பேரனை கல்யாணம் செய்துக்குவியா?..."என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டேன்....
Friday, January 23, 2009
தயக்கமா?..மனதிலே குழப்பமா?- குட்டிக்கதை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment