Saturday, November 14, 2009

சந்தீப்பின் சந்திப்பு




சந்தீப்பின் சந்திப்பு

வாரக்கடைசி இரு நாட்கள் உங்களோடு செலவிட வருவான் சந்தீப் என ஒரு மாதம்
முன்பே காகிதம் அனுப்பிவிட்டார்கள் பள்ளியில்.

அவனோடு சனி, ஞாயிறு இரு தினங்கள் செலவழித்து அதை பற்றி புகைப்படத்தோடு
சில வரிகளும் எழுதி ஆல்பம் ஒன்றில் ஒட்டணும். பின் பள்ளியில் அவனோடு
கழித்த அந்த இரு நாட்களைப்பற்றி சுவாரஸ்யமாக சொல்லணுமாம்.


காத்திருந்த சந்தீப் நேற்று வந்துவிட்டான்.

வீட்டுக்குள் நுழையும்போதே, , " அம்மா உங்களுக்கு ஒரு அதிசயம்
காத்திருக்கின்றது கண்டுபிடியுங்கள் பார்ப்போம் " என மாலைப்பொழுதை
இனிமையான புதிரோடு வரவேற்ற குழந்தை.

நானும் ஐன்ஸ்டீன் அளவு யோசித்து ஒண்ணும் முடியாமல் உதட்டைப்பிதுக்கிய
பொழுது, சட்டென்று முதுகுக்கு பின்னாலிருந்து வந்தான் சந்தீப்..

வாவ், என மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு சந்தீப்பை தழுவி நலம் விசாரித்து
முடிப்பதற்குள் , சந்தீப்புடனான பிரயாணங்களுக்கு திட்டமும் கூடவே
சொல்லப்பட ஆச்சர்ய விழிகள் இப்போது பயத்தில்..

சந்தீப்பை உடனே நீச்சல் குளத்துக்கு அழைத்து சென்றனர்.

முடிந்து வந்ததுமே, வாராந்திர சாமான் வாங்க செல்லும் மாலுக்கு அழைத்து சென்றோம்.

சந்தீப்பை எங்கு உட்கார சொல்வது முன் சீட்டிலா பின் சீட்டிலா என்ற
கருத்தாய்வுகள் தொடர்ந்து முன் சீட்டிலேயே அமர்ந்தான்.

சந்தீப் வந்ததால் இன்று மட்டும் ஐஸ்கிர்ரிம் வாங்கிக்கொள்கிறேனே என
கெஞ்சும்போது என்ன சொல்ல ?. பெரியவன் எனக்கும் வாங்கிக்கவா என கேட்க,
க்ர்ர்ர்ர்ர்ர், வேண்டாம் நீ வாங்கினால் எனக்கும் ஆசை வந்திடும் , என
தடுப்பதை பார்த்து சந்தீப் யோசித்திருக்கலாம்.

வீடு வந்ததும் , கொஞ்சம் விளையாட்டு , பின் ,இப்ப சந்தீப்பை எங்கு தூங்க
சொல்வது?... யார்கூட?..

தன்கூடவே படுத்துக்கொள்ளணும் என குழந்தை சொல்ல சந்தீப்புக்காக இடம்
ஒதுக்கப்பட்டது..

காலை எழுந்ததுமே ஒவ்வொருவராக வந்து சந்தீப்புக்கு காலை வணக்கம்
சொல்லவும், சந்தீப்புக்கு வெட்கம் போல.

பெரியவர் , சந்தீப்ப்பிடம் வழியனுப்பிவிட்டு பள்ளிக்கு செல்ல நானும்
சின்னவரும் சந்தீப்புடன் மார்கெட் சென்று வந்தோம்.. சீட் பெல்ட்
போட்டதிலிருந்து திரும்ப வீடு வந்து சேரும் வரை சந்தீப்பின் கேள்விகளாய்
குழந்தை கேட்க, ஒரே கதாகலாட்சேபம் தான்.

சில பதில்களில் திருப்தியடையாதபோது நான் சிறிது எரிச்சல்பட்டுவிட,
சந்தீப் முன் எரிச்சல்பட்டதுக்கு ரொம்பவே அவமானப்பட்டார் குழந்தை.

பின் இருவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டியதாயிற்று.

வந்து உணவருந்திவிட்டு, சிறிது நேரம் ஆங்கில வார்த்தை கொண்ட சீட்டுகள்
விளையாடிவிட்டு, தூங்கிவிட்டனர் இருவருமே சோபாவில்.

அப்பாடா ஒருவழியாய் போன மாத ஆ.வி படிக்க நேரம் கிடைத்ததென்று நான் படிக்க
உட்கார, தூக்கத்தினூடையே, " அம்மா, சாயங்காலம் தயாராக இருங்கள்,
சந்தீப்பை பூங்கா அழைத்து சென்று ஊஞ்சலில் விரைவா ஆட்டிவிடணும் " என
சொல்லிவிட்டு, மீண்டும் தூங்க....ஆச்சர்யத்தில் நான்..

கவனமாக சந்தீப்போடு எடுத்த படங்களை பெரியவர் வந்து பார்த்து கமெண்ட் அடிக்க ,

இதோ கிளம்பிக்கொண்டிருக்கிறேன் பூங்காவுக்கு சந்தீப்போடு..

சந்தீப் யாரென புரிந்தீர்கள்தானே..?


சிறுவர்தின பதிவு..