Friday, June 11, 2010
சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...
சிறை சந்திப்பு - தனிமைப்படுத்துதல் - 1 ...
தலைநகருக்கு வெளியே கிட்டத்தட்ட 40 கி.மீ தூரத்தில் அமைந்திருக்குது முக்கிய குற்றவாளிகளின் மிகப்பெரிய சிறை...பாங்குவாங் சிறைச்சாலை..
80 ஏக்கர் பரப்பளவில்.. சுமார் 8000 கைதிகள் இருக்கிறார்கள்.. வெளி சுவர் சுமார் 2400 மீட்டர் நீளமும் , 6 மீட்டர் உயரமும் , 1 மீட்டர் பூமிக்கடியில் ஹை வோல்டேஜ் வயர்கள் பதிக்கப்பட்டும் இருக்கிறதாம்....
இதில்தான் வெளிநாட்டவர் பலரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..
ஆலயத்தின் மூலம் பலர் சமூக சேவையாக இச்சிறையிலுள்ள வெளிநாட்டவரை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பல காலமாக நானும் இதில் பங்கெடுக்க ஆவல் கொண்டிருந்தாலும் வேலை குடும்பம் நிமித்தமாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமலே தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன்..
இந்த வாரம் தோழியர் இருவர் தாம் செல்லவிருப்பதாகவும் முடிந்தால் கலந்துகொள்ளுமாறும் சொல்லவே அதற்கான ஏற்பாடுகளோடு கிளம்பினோம்..
காலை 8 மணிக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு தயாரானேன்..கிட்டத்தட்ட 1 மணி நேர பயணம்.. மழை வேறு தூர ஆரம்பித்தது..தோழி ஃபார்சூனரை அதி வேகத்தில் ( 120-140 கிமீ )மோட்டார் வே யில் முன்னால் ஓட்ட, நான் அவரை பின்பற்றி ஓட்ட , சில நேரம் இடையில் புகும் வாகனங்களும் மழையும் தடுமாற செய்தது...இருப்பினும் அப்பப்போ தொலைபேசிக்கொண்டார்..புது இடம் ...புது வழி..
ஒருவழியாக 9 மணிக்கெல்லாம் அங்கு சென்று பாஸ்போர்ட் ( அல்லது ஓட்டுனர் லைசென்ஸ் ) காண்பித்து நாம் சந்திக்கவிருக்கும் நபரின் முழு விபரங்கள் தந்து அங்குள்ள அலுவலில் சமர்ப்பித்து காத்திருந்தோம்.
தோழி ஒரு பெரிய லிஸ்ட் வைத்திருந்தார்.. பல நாட்டினர்..யாரை சந்திக்க விருப்பம் என என்னை கேட்டார்.. எனக்கு என்ன தெரியும் நீங்களே யாரையாவது சொல்லுங்கள்.. என்றேன்.
சரி , ஒரு நபர், சீக்கிரம் விடுதலையாகிறார்.. பாகிஸ்தானியர்.. நன்றாக பேசுவார். என்றார்.
அவர் விபரம், அவர் தங்கியிருக்கும் அறை, கட்டிட எண், நாடு , எல்லா விபரமும் அளித்தோம்..
தோழிகள் கடந்த 2 வருடமாக சந்தித்துள்ளதால் என்னை தயார்படுத்தினார்கள்..
நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம், எப்படி பேசுவது என்பதல்ல , எதெல்லாம் பேசக்கூடாது, தவிர்க்கணும் என்பதை மட்டுமே..
அதற்கு அவர்கள் " நீ ஒண்ணுமே கவலைப்பட வேண்டாம்.. உன் காதுகளை, புன்னகை படற விட்டு மட்டும் கொடுத்தால் போதும்.. அதுமட்டும்தான் அவர்களுக்கு தேவை.." என்றார்கள்..
உள்ளுக்குள் சின்ன பயம்.. நான் சந்திக்க விருக்கும் நபர் போதை மருந்து கடத்தலில் மாட்டிக்கொண்டவராம்.. எப்படி இருப்பார்.?.. என்ன பேசுவது?..
யோசித்துக்கொண்டிருக்கும்போதே 9.30 க்கு அழைத்து அனுமதிக்கான படிவம் கொடுத்தார்கள்.. பின் ரோட்டை கடந்து எதிரிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்குள் வலது காலெடுத்து நுழைந்தோம்..
மிகப்பெரிய ராட்சத கதவுகள், ராட்சத பூட்டுகளோடு ..கொண்டிகளோடு.. பல காவலர்கள் துப்பாக்கியோடு...
அருகில் புத்த பிட்சுகள் சின்ன மண்டபம் போன்ற இடத்தில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.. சுமார் 30 பேர்..
கையில் வேறெதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என சொன்னதால் எல்லாவற்றையும் வண்டியிலேயே வைத்தேன்.. வாகன சாவியும் மொபைலும் மட்டும் கையில்..
அவர்கள் இருவரையும் பரிசோதித்துவிட்டு என்னை மட்டும் நிப்பாட்டினார் ஒரு பெண்.. தொலைபேசியை லாக்கரில் வைத்து விட்டு வர சொன்னார்..
மீண்டும் வெளியே சென்று அங்குள்ள லாக்கரில் வைத்துவிட்டு வந்தேன்.
உள்ளே தாய்மக்களுக்கு என தனியாக இடமும், வெளிநாட்டவருக்கு என தனியாக இடமும் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்..
நீண்ட தாள்வாரம் . கிட்டத்தட்ட 50 தொலைபேசிகள்.. ஒவ்வொன்றிர்க்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது..
கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. பின் 3 அடி இடவெளியில் நீண்ட தாள்வாரம்.. அதே போல அந்தப்பக்கமும் கண்ணாடியாலும் கம்பிகளாலும் தடுக்கப்பட்டிருந்தது.. இருவருக்குமான இணைப்பு தொலைபேசி வழியாக...
காத்திருந்தோம் . 10.30 வரை.. ஒவ்வொருவராக வந்தார்கள் ..
வந்தவரெல்லாருமே நம்மையும் பார்த்து சிரித்து கையாட்டிவிட்டு சென்றார்கள்.. நம்மை தெரியாவிட்டாலும்..
மனிதர்களை பார்ப்பதே ஒரு குதூகலம் போல,... மிக அழகாக ஆடை அணிந்திருந்தார்கள் சலவை செய்யப்பட்டு.. வாடிய முகம் ஏதுமில்லை..
முகச்சவரம் செய்யப்பட்டு தெளிவாக இருந்தார்கள்.. சினிமாவில் பார்ப்பதுபோல்.. ( நம்ம தமிழ்நாட்டு கைதிகள் தான் பாவமோ?.. இல்லை எனக்கு அவர்களைப்பற்றி தெரியவில்லையா..?)
எனது தோழியில் ஒருவர் சிங்களத்தவர், மற்றொருவர் டெல்லியை சேர்ந்தவர்,... சிங்கள தோழி பன்னாட்டு சேவை நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்கிறாராம்... ( ரெட் க்ராஸ் மாதிரி ). ஆள் ஆஜானுபாகு தோற்றம் .. கம்பீரமான பெண்மணி,... அவர் காண வந்த நபர் சீக்கிரம் வந்துவிட சிங்களத்தில் இனிமையாக பேசத்தொடங்கினார்.. ஒட்டுக்கேட்டும் புரியவில்லை.:)
அடுத்த தோழிக்கும் ஆள் வந்துவிட்டார்.. அவர் மனைவி வெளிநாட்டிலிருந்து எழுதிய கடிதத்தோடு தோழி வந்திருந்தார்..அதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்..அருகிலேயே..
நான் சந்திக்க வேண்டிய நபர் மட்டும் வந்த பாடில்லை.. வந்தால் மட்டும் அடையாளம் தெரியுமா என்ன?.. செல்வோரையெல்லாம் இவராய் இருக்குமோ என பார்த்து கொண்டிருந்தேன்..
அதற்குள் அருகில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பஞ்சாபி நபர் ஒருவர், நீங்க இந்தியரா, எனக்கு மேகசின் அனுப்பி தர இயலுமா என ஆசையோடு என் தொலைபேசி எடுத்து கிடைத்த சிறிது நேரத்தில் கேட்டார்..
தான் 16 வருடம் சிறையில் இருப்பதாகவும் எம்பஸியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சொன்னார்.. நான் கேட்டுக்கொண்டேன்..
எவ்விதமான சத்தியமும் அவர்களுக்கு தந்துவிடக்கூடாது.. ஆனால் கேட்டுக்கொண்டு முயல்கிறோம் என மட்டும் சொல்லணும்..
இவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் சந்திக்க வேண்டிய நபர் வந்தார்.. வந்ததும் தோழி கண்டுகொண்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார்..இந்தப்பக்கம் உள்ள தொலைபேசியில்..
மிகுந்த மலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.. மிகுந்த மரியாதையோடு, வரிக்கு வரி என் பேரை மரியாதையோடு உச்சரித்து பல வருடம் பழகிய நபரைப்போல் பேசினார்..
( அவர்கள் பெயர் இங்கே பதிய இயலாது...இஸ்லாமியர்.. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்..அடுத்த முறை பெண்கள் சிறைக்கு செல்லலாம் என இருக்கிறோம்..முக்கியமாக இலங்கை அகதிகள் இருக்கும் டிடென்ஷன் செண்டர்... )
தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.. போதை கடத்தல் என சொல்லி 100 வருட தண்டனை கொடுத்தார்களாம் ...வெளிநாட்டவர் என்பதால்...
இங்கு போதை கடத்தல் என்றால் உடனே மரண தண்டனைதான்.. இப்படி கொல்லப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இங்கே...
தொடரும்.................
( எனக்கு பின்னூட்டமிட நேரம் இருப்பதில்லை. அதனால் எதிர்பார்ப்பதுமில்லை.. ஆகையால் பொன்னான நேரத்தை அவசியம் இருந்தாலொழிய பின்னூட்டத்தில் செலவழிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.. எழுதுவது என் திருப்திக்கும் , சில செய்திகளை தர மட்டுமே... )
Subscribe to:
Posts (Atom)