Friday, January 23, 2009

இல்லத்தரசனின் தீபாவளி

சாந்தி அக்காவின் கதை ஒன்று சிஃபி.காமில் மலர்ந்துள்ளது.
http://tamil.sify.com/fullstory.php?id=14781545

பாராட்டுகள் & வாழ்த்துகள்
*
இல்லத்தரசனின் தீபாவளி

"என்ன இவன் இன்னும் கிளம்பலையா..? என்ன சொல்றான்..? பெண் வீட்டுக்காரங்க எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்களே..?" - அம்மா அறைக்குள் வந்து சத்தம் காட்டிவிட்டுச் சென்றார்..

"இங்க பாருப்பா.. செல்லமா வளர்ந்துட்ட.. இனி அப்படியில்லை.. போகிற இடத்தில் நல்லபடியா நடந்துகிட்டு நம்ம குடும்பத்தைப் புகழும்படி நடந்துக்கணும்.. ஏன் இப்ப கண்ண கசக்கிற?" அப்பா.

"நான் கூட உங்க வீட்டுக்கு திருமணம் ஆகி வந்தப்ப ரொம்ப பயந்துட்டேன்.. ஆனா இப்ப பாரு, மாமனாரே மெச்சும் மருமகனாய், மனைவிக்கேத்த மணாளனாய் , குடும்பத்துக்கேத்த இல்லத்தரசனாய் மாறிட்டேனே.." அத்தான்..

"சரி சரி மசமசன்னு நிக்காம மறுவீட்டு பலகாரத்த எடுத்து வையுங்கோ" அக்கா அதட்டலுடன் உள்ளே நுழைய, பதறிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான் தண்டராமன்.. பாவம்.. கோதண்டராமனை அப்படித்தான் அழைப்பார் அவர் அக்கா.

"இத பார்டா, தண்டம், என்னை நம்பியும், 3 தலைமுறையா, சிறந்த இல்லத்தரசர் பரிசு வருடம் தவறாம, தீபாவளிக்கு நம் குடும்பத்துக்குப் பரிசு கிடைப்பதாலும்தான் நம் வீட்டில் மாப்பிள்ளை எடுத்துள்ளார்கள்.. என், மற்றும் நம் குடும்பப் பெயரை நீயும் கட்டாயம் காப்பாத்தணும்.. அதை விட்டுட்டு, அழுது வடிஞ்சுண்டு வந்து நிக்கப்டாது புரியுதா..?"

"என்னம்மா நீ, அவனே அரண்டு போய் இருக்கான், அந்த பெண்ணைப் பார்த்து..."

"இல்லப்பா, ஐ.நா சபை வரைக்கும் போயிருக்கு அந்தப் பொண்ணு... அவ மனசு நோகாம நடந்துக்கணுமே.. அவா சம்பந்தம் கிடைத்ததே ரொம்ப பெருமையா நினைச்சுண்டிருக்கேன் நான்.. நாழியாச்சு கிளம்பு, கிளம்பு..."

"அப்பா, எனக்கு இன்னும் சமைக்கக்கூடத் தெரியாதே.."

"அதெல்லாம் பயமா..? தொலைபேசியில் சொல்லிட்டாப் போச்சு... துணி துவைக்க, மடிக்க, சிறப்பு வகுப்புகள், நம்ம நாராயணன் ஆரம்பிச்சுருக்கான்.. அவன்கிட்ட சேர்த்துவிடுறேன்.. என்ன அந்தாத்து மாமனார் கிட்ட கொஞ்சம் பவ்யமா நடந்துக்கோ... மாமனார், மருமகன் சண்டைங்கிற பேச்சுக்கே இடம் கொடுக்காதே.. அவா வீட்டுல அந்தாளு வெச்சதுதான் சட்டமாம்..."

"மச்சினங்காரன் உன்னை மாதிரியே ஒருத்தன் கடைக் கண்ணிக்கு போக வர இருக்கான்.. அவனையும் அனுசரிச்சுக்கோ.. மத்தபடி பொண்ணு தங்கம். அலுவலிருந்து வந்ததும், சாமர்த்தியமா நடந்துக்கோ.. அவளோட ஓட்டுநர் பெண்ணிடம் மறுநாள் என்ன, எங்கு வேலை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேத்தாற்போல் தயார் செய்.."

"காலாகாலத்துல புள்ள குட்டின்னு வந்தா நீதான் மகராசன்.. பிள்ளை வளர்ப்பது எப்படின்னு அண்ணா சாலையில் கோர்ஸ் இருக்கு படிச்சுக்கோ.."

"என்ன, பிரசவத்துக்குன்னு அவளுக்கு 6 மாதம் விடுமுறை.. அப்பத்தான் உனக்கு கொஞ்சம் கஷ்ட காலம்... ஹிஹி..." அத்திம்பேர்..

"எனக்கு பயமாயிருக்கு... நான் போமாட்டேன்.."

"அட. இதென்ன பிடிவாதம்....? உனக்காவது பரவாயில்லை தம்பி, ஒரே பெண், என் மாமனார் வீட்டில் நாந்தான் மூத்த மருமகன்.. கீழே வதவதன்னு 8 பிள்ளைகள்.. ம். ஒழுங்கா படிச்சு நானும் பெரிய வேலைக்குப் போய் தனிக்குடித்தனம் போயிருக்கலாம்.." அண்ணன்.

"சரி சரி, அம்மா, அக்கா, அண்ணி எல்லாரும் மாடிக்கு வருவதற்குள், நாம சீக்கிரம் கீழே போகணும்.. இல்லாட்டி காதுல ரத்தம் வருமளவு பேசிடுவாங்க.." அண்ணன்.

"அப்பா இனி மறுபடியும் எப்ப நான் இங்கு திரும்பி வருவேன்?" அழுகையோடு..

"ஒண்ணும் கவலை வேண்டாம்.. தாலி பிரிச்சு கட்டுதல், 3ஆம் மறுவீடு, எண்ணெய்க் குளியல், குலதெய்வ வழிபாடு, ஆடி அமாவாசைன்னு மாதத்துக்கொண்ணு இருக்கு. சும்மா விடுவோமா...?"

"அப்படியே இல்லாட்டியும் மாமாவுக்கு நெஞ்சு வலின்னு சொல்லி வரவழைச்சுட மாட்டோமா, இல்ல மாமா?.." அசடு வழிகிறார் மருமகன்..

"இப்ப கேட்டோமா..? இல்ல... கேட்டோமா?.. மாமா எப்ப காலியாவான், மன்னர் எப்ப ஆகலாம்னு கனவு காணுறியா?.."மாமா.

"கோவில் குளம்னு சந்திக்காமலா போய்டுவோம்?.. அந்த ரகசியத்த நான் சொல்லித் தாரேன்டா தம்பி..."

"ஆமா, நீயும் கெட்டது போதாதுன்னு இவனையும் கெடுத்துரு.."

அலங்கரித்து கீழே அழைத்து வருகிறார்கள்.. பட்டுவேட்டி சரசரக்க, குனிந்த தலை நிமிரக்கூட தைரியமில்லாமல், அடிமேல் அடிவைத்து நடக்கிறார் மாப்பிள்ளை.. தெருவாசலில் சென்று காரில் ஏறும் சமயம் ஒரே சிரிப்பொலி... பக்கத்து வீட்டு வயசுப் பெண்கள், பல்சரிலும், யமஹாவிலும் உட்கார்ந்து கொண்டு கலாட்டா பண்ணுகிறார்கள்..

"பாருங்க இந்தக் காலத்துப் பெண்களை... அப்பப்பா, தெருவில் ஒரு பையனை நடக்க விடுறதில்லை... இதுங்க கிட்ட இருந்து பையனைக் காப்பாத்திக் கரை சேர்க்கும் வரையிலும் போதும் போதும் என்றாகிவிடுகிறது.." அம்மா பெண்ணின் தாயாரிடம் அலுத்துக்கொண்டார்..

"நீங்க நல்லா வளர்த்துருக்கீங்கன்னு கேள்விப்பட்டுத்தானே பையனே எடுத்தோம்.." பயப்படும்படி, பூமி அதிரும்படி சிரிக்கிறார் மாமியார். பயந்தே போய்விட்டான் கோதண்டராமன்.. ஒட்டுகிறான் வீட்டுக்குள், கைகளை விலக்கிக்கொண்டு.. எல்லோரும் பின்னாலே ஓடுகிறார்கள்..

"வேண்டாம், என்னை விட்டுருங்க," கத்துகிறான்..

தீபாவளிக்காக பட்சணம், அலங்காரம் செய்துகொண்டிருந்த எல்லாரும் கீழேயிருந்து மாடிக்கு விரைகிறார்கள்.. அங்கே கோதண்டராமன் கட்டிலிலிருந்து கீழே விழுந்து பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தான்..

"என்னாச்சுடா? என்ன வேண்டாம்...?" பரிவோடு அக்கா.

"கனவு எதாச்சும் கண்டியாப்பா?" கரிசனத்துடன் அண்ணி..

"இதுக்குத்தான் இரவு கண்ட கண்ட புத்தகம் படிக்காதேன்னு சொன்னேன்பா.." அன்போடு அம்மா.

அங்கும் இங்கும் சுற்றும் முற்றும் பார்க்கிறான்.. 'ஒண்ணுமே மாறலையா?.. ஹைய்யா, நான் இன்னும் மரியாதையான ஆண்பிள்ளைதானா?'

"சரி சரி.. சீக்கிரம் குளிச்சுட்டு விமான நிலையம் சென்று அவன் வருங்கால பெண்ணையும் அவள் குடும்பத்தாரையும் வரவேற்று வரச் சொல்.." அத்தான்.

"அய்யோ அத்தான் வெளிநாட்டுப் பெண்ணா?.. வேண்டவே வேண்டாம் எனக்கு.. நம்மூர் கிராமத்துல நம் குடும்பத்துக்கு அடங்கின பெண்ணா பாருங்க போதும்"

"நீதானடா சொன்னே, ரொம்ப படிச்ச பெண்ணா, வெளிநாட்டில் வேலை பார்ப்பவளா இருக்கணும்னு.."

"அக்கா, அப்ப அப்படி சொன்னேன்.. இப்ப இப்படி சொல்றேன்... இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேண்டாம்"னு சொல்லிட்டு இன்னும் ஆண்மகனாய், கம்பீரத்தோடு அதட்டிவிட்ட சந்தோஷத்தோடு குளியலறைக்குள் புகுந்தான் கோதண்டராமன்.

No comments: