Thursday, May 20, 2010
பற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..
அமைதியான , ஜாலியான எப்போதும் புன்முறுவலுடனேயே காணப்படும் தாய்லாந்து மக்கள் முகங்களில் வழிந்தோடுது சோகம்..
ஆளுங்கட்சியினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் கடந்த 45 நாள் போராட்டம் ராணுவ தலையீடால் நேற்று முடிவுக்கு வந்தது..
செஞ்சட்டை தலைவர் ஒருவரின் அகால மரணத்துக்குபின் போராட்டம் தீவீரமடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தார்கள்..
பொதுஜனத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி சட்ட திட்டத்துக்குட்பட்டே போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட அஹிம்சை வழியில்..
இருப்பினும் பிரதமர் கண்டுகொள்ளாததினால் லிட்டர் கணக்கில் அனைவரின் ரத்தம் சேகரித்து பார்லிமெண்ட் வளாகத்தில் ஓடவிட்டனர்..அப்படியாவது இரக்கம் வரட்டும் என..
அதுவும் எடுபடவில்லை.. பின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான வேர்ல்ட் டிரேட் செண்டர் அருகில் கூடாரத்தை அமைத்தனர்..
அவர்களின் முக்கிய கோரிக்கையான பாரளுமன்றத்தை கலைத்து புது தேர்தல் நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..( பேச்சுவார்த்தை நடக்கும்போது பார்த்தால் இருபக்கமும் கககுலுக்கி மிக தோழமையுடனே நடந்தது ஆச்சர்யப்பட வைத்தது.. )
பின் பிரதமர் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்ற அவசர கால சட்டம் போட்டார்.. போராளிகள் இடத்தை காலி செய்ய கெடு மேல் கெடு விதித்தார்.. பலமுறை இக்கெடு பயனளிக்கமல் போனதற்கு ராணுவத்திலும் காவல்துறையிலுமே செஞ்சட்டைக்காரர்களின் உறவுகள் இருந்தது முக்கிய காரணி..
இதில் செஞ்சட்டை தலைவரின் அகால மரணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.. எங்கள் அனைவரையும் ( சுமார் 6000 பேர் ) சுட்டாலும் நகரமாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்திருந்தனர்..
ஆனால் வர்த்தகமும் டூரிஸ்மும் அதிக பாதிப்படைந்ததால் வேறு வழியின்றி ராணுவ தாக்குதல் நேற்று அறிவித்தபடி நடந்தது..
இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ( வெளிநாட்டு பத்திர்க்கையாளர்கள் உட்பட) பலியாகியும் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் , போராட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் நிப்பாட்டப்பட்டதாலும் வேறுவழியின்றி ஒருவழியாக செஞ்சட்டை தலைவர்கள் நால்வர் சரணடைந்தனர்..
அவர்களை சரணடைய செய்த கோபத்திலும் , வருத்தத்திலும் நகரத்தில் ஆங்காங்கே முக்கிய கட்டடங்களீல் தீ வைத்துவிட்டனர்..
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வேர்ல்ட் டிரேட் செண்டர் என புகழ்பெற்ற புதிய அழகான கட்டடம் தீக்கிறையானது..
நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது...
வீதியெங்கும் அவசரகால சட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டது..
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப புத்த மதத்தை தழுவி அதன் நெறியோடு வாழ்ந்து வரும் மக்கள் இப்போராட்டங்களை கண்டு அலுப்படைந்துள்ளனர்..
( என் அண்டை வீட்டு தாய் பெண் கேத்ரீனா, ஐஸ்வர்யாராய் போன்ற அழகுடையவர்.. நேற்று முழுதும் அழுது சிவந்த முகத்தை பார்க்கவே சகிக்கலை.. அப்பப்ப வந்து என் குழந்தை உங்க வீட்டிலேயே இருப்பதால் சிரமமேதுமில்லையே னு கேட்டுக்கொண்டார்..ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை..கைகளைப்பற்றி தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது.. குழந்தைக்கு தாய்லாந்து உணவு ( சூப்) செய்து கொடுத்தால் மிக மரியாதையாக அருந்தியது குழந்தை..சூழ்நிலை புரிந்து.. அதே போல் என் வேலையாளும் பலரும் செஞ்சட்டைக்கு ஆதரவு..அவர்களின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது..)
போராட்டக்காரர்களின் மீது ராணுவ ஆக்ரமிப்பு , துப்பாக்கி சூடு , கட்டாய வெளியேற்றம், வெற்றியல்ல என்பது செஞ்சட்டைக்காரர்களின் எண்ணம்..
பேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய பிரச்னை அழிவில் வந்து முடிந்தது..
இருப்பினும் மற்றொரு நாட்டின் உள்விவகாரம் எந்தளவு உள்ளது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.. நாம் பார்வையாளர் மட்டுமே.. எந்த பெரிய விபத்து நடந்தாலும் சிறிதும் கோபமோ , எரிச்சலோ காண்பிக்காது புன்னகையோடே வந்து கைகுலுக்கி விபத்து பற்றி பேசி அல்லது உடனே மன்னிப்பு கோரி நம்மை ஆச்சர்யப்படுத்தும் இம்மக்களுக்கா இந்த நிலை என்று நினைக்க தோணுது..
புத்த பிட்சுகள் காலில் செருப்பின்றி பிச்சை பாத்திரம் ஏந்தி வர அவர்களுக்கு பொருள்கள் வழங்கும் மக்கள் பொது இடத்திலேயே உடனே முட்டிக்கால் போட்டு வணங்கி தம் கைகளில் பொருள்களை நீட்ட பிட்சுகள் எடுத்துக்கொள்வார்கள்.. தானம் வழங்கும்போதும் வழங்கும் கைகள் தாழ்ந்து இருக்கணும் என்ற கோட்பாட்டை இன்னமும் பின்பற்றி வருவதை பார்க்க அதிசயமாயிருக்கும்..
புத்த பிட்சுகள் நம்மை பார்க்க கூட மாட்டார்கள்.. ஒரே ஒரு காவி சீலை.. பிச்சை பாத்திரம்.. செருப்பில்லாத கால்கள்..அரசருக்கு மேல் மரியாதை செய்யப்படுபவர்கள் தேசத்தில் இப்படியும் ஒரு போர்க்களமான நிலை..
பிரச்னைகள் யாரை எந்த நாட்டை , மதத்தை விட்டது..? பிரச்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாய் பிரதமர் இன்று அறிவித்தார்...
படங்கள் நன்றி..: http://www.nationmultimedia.com/
Subscribe to:
Posts (Atom)