Monday, March 8, 2010
மாதாவின் மாறுபட்ட பார்வை.....- மகளிர் தின சிறுகதை..
" ரத்னம் கொஞ்சம் இப்படி உட்காரேன். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." ஈஸி சேரில் சாய்ந்தபடி அழைத்தார் கணேசன்.
" இருங்க அடுப்புல பால் வெச்சிருக்கேன் முடிஞ்சதும் வாரேன்." அடுப்படியை துடைத்துவிட்டு வந்து அமர்ந்தாள் அருகில்..தரையில்...
"இப்படி இங்கிட்டு உட்காரேன்..".. நாற்காலியை காண்பித்தார்..
" இல்லங்க . எனக்கு இதுதான் வசதி.. என்னிக்கு உங்களுக்கு மேல உசரமா உட்கார்ந்தேன் இப்ப உட்கார ?. " னு சொல்லிட்டு கீரை ஆய ஆரம்பித்தாள்..
" ரொம்ப நாளா என் மனசுல உறுத்திட்டே இருந்ததை கேக்கணும்னு நெனச்சேன்"
ஆச்சர்யமா பார்த்தாள் புருவத்தை சுருக்கி ஒரு புன்னகையோடே..
" நான் 40 வருடமா வேலைக்கு போனபோது உன்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்திருக்கேன். கருப்பு, அழகில்ல , வசதியில்ல, படிப்பில்லன்னு.?.. ஆனாலும் நீ ஏன் ஒரு வாட்டி கூட மறுப்பேதும் சொல்லாமல் எப்படி தாங்கிக்கிட்ட?.. என்னோடு என் குடும்பத்தினருமல்லவா உன்னை பாடாய் படுத்தினார்கள்?.. ஆனா அன்னிக்கு நீ என்னை கவனித்த மாதிரிதான் இப்ப நான் ஓய்வு பெற்ற பிறகும் அதிக அன்போடு கவனிக்கிறாய்...அதிசயப்பிறவிதான் நீ.. " அவர் சொல்லும்போதே கண்கள் கலங்கியிருந்தன..
அதை காணாதவளாய் , பெரிதும்படுத்தாதவளாய் , " அட , நான் என்னத்த பெரிசா செஞ்சுட்டேன்.. ?. நல்லா உழைச்சீங்க, பிள்ளைகளை படிக்க வெச்சீங்க வெளிநாட்டுக்கு அனுப்பி பெருமை சேர்த்தீங்க..நாம பட்ட கஷ்டம் பிள்ளைகள் படலையே..அதுக்கு நீங்கதானே காரணம்.?" என விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.
" இல்லை ரத்னம் . நான் உன்னை கொடுமைப்படுத்தினது எனக்கு இன்னும் உறுத்துது. மனசார மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறேன்..." அவள் கையை பிடித்துக்கொண்டார்..
" அட என்ன நீங்க சின்ன புள்ள மாதிரி.. வேலை விஷயமா வெளில போற மனிதருக்கு ஆயிரம் தலைவலி இருக்கும்.. அதையெல்லாம் நம் மேல கொட்டாம யார் மேல கொட்டுவார் னு நினைச்சுப்பேன்.. இதப்போய் பெரிசு பண்ணிட்டு.. விடுங்க.."
" இருந்தாலும் உனக்கு மட்டும் அப்படி ஒரு பொறுமை எப்படி ரத்னம்.. வெறுப்பே வரலியா?.."
" வந்துச்சுங்க.. செத்துடலாம்னு கூட தோணிருக்கு மொதல்ல.. அப்புரம் ஒரு நாள் நான் 3வது குழந்தை உண்டாயிருந்தப்ப என் ரத்தம் RH Negative வகையை சேர்ந்ததால் அதற்கான ஊசியை 2வது குழந்தைக்கு பின் சரியாக போடாததால் 3வது குழந்தை மன நலமற்ற குழந்தையாய் பிறக்க வாய்ப்பிருந்தமையால் நாம் அழித்தோமே.. அது எப்பவும் என்னால் மறக்கவே முடியாது.. எனக்கே ஒரு விசேஷ குழந்தை அப்படி கிடைத்திருந்தால் நான் எப்படியெல்லாம் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருந்திருப்பேன் ஊரார் பழிகளை தாங்கிக்கொண்டு.. அதேபோல்தான் நீங்கள் என்னை பழிக்கும்போது ஒரு மனநிலை தவறிய குழந்தையின் செயலாய் எடுத்துக்கொண்டு சகித்தேன்.. இன்னும் அன்பை பொழிய ஆரம்பித்தேன்.. அது என்னை கைவிடவில்லை.."
" ஒரு அன்னைக்கே உரிய அழகான எண்ணம்தான்..என்னையே
மாற்றினாய்..நான் கொடுத்து வைத்தவன்தான்.." பெருமிதப்பட்டார்..
"ஆனா , எனக்கு ஒரு சின்ன ஆசை இருக்குங்க..."
" சொல்லு ரத்னம் . அது என் கடமை.." " வாரம் ஒருமுறையாவது அப்படியான விசேஷ குழந்தைகளை சென்று அவர்களோடு நான் பொழுதை கழிக்கணும்னு..........அதுக்கு நீங்க சம்மதிக்கணும்..." என இழுத்தாள் மெதுவாக
" மாட்டேன்... " கறாராய் சொன்னதும் பயந்துபோனாள்.
பின் சிரித்தார்..
" நீ மட்டுமல்ல ரத்னம் . என்னையும் அழைத்து போ.. நானும் அப்படியே பொழுதை உபயோகமாய் செலவிட விரும்புகின்றேன்..."
பெருமையோடு கணவனை பார்த்தாள் ரத்னம்...
Subscribe to:
Posts (Atom)