Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.