Friday, January 23, 2009

விதவை ஒரு ஊனமா?...

விதவை ஒரு ஊனமா?...

சிஃபியில் பொங்கல் பதிப்பில் வெளிவந்த கதை

http://sify.com/tamil/pongal/

அர்விந்த் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான் பாலுவிடம்...

" நீ கேட்டு சொல்லுடா.. உனக்குத்தான் அதைப்பற்றி பேச நெளிவு சுளிவுகள் தெரியும்."

"ஏய். வெளையாடாதேடா... இதென்ன பலசரக்கா பிடிக்குதா பிடிக்கலையான்னு கேட்டு சொல்ல... ?.. எனக்கு தயக்கமா இருக்குடா.."

" டேய் ..பிளீஸ்டா..உன் மனைவிக்கும் பவித்ராவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டுதானே?.."

" இருக்கலாம்.. ஆனா பவித்ரா நம்மகூட வேலை பார்த்த விமலின் மனைவி.. இப்ப நம்கூட வேலை செய்யும் தோழி...நான்

ஏதாவது கேட்கப்போய் என்னை தப்ப நினைக்க கூடாது... ஏன் நீயே கேளேன் தவறென்ன...உனக்குத்தான் அவர்கள்மேல் அதிக அக்கறையுண்டே.."

" என் காதல் தோல்விக்குப்பின், எந்த பெண்ணையும் ஏறெடுத்துகூட பார்ப்பதில்லைன்னுதான் உனக்கே தெரியுமே...நான் போய் ... எப்படிடா..முகத்தில் அடித்தாற்போல் ஏதாவது சொல்லிட்டா , நாளைமுதல் ஒரே அலுவலில்... யோசிச்சியா நீ?.."


"அப்ப நான் கொஞ்சம் முன்னோட்டமாய் சில விஷயங்கள் அவ கிட்ட சொல்லிடுறேன் இல்லையில்லை கேட்டுக்கிறேன்..
அப்புரமா நீ பேசு..."

அதேபோல் பாலு, தன் மனைவியின் மூலம் பவித்ரா இரண்டாவது திருமணத்துக்கு தயாரா என தெரிந்துகொண்டான்...

பவித்ராவுக்கு அந்த எண்ணமே இல்லை...சொன்னால் அர்விந்த் நம்புவதாயில்லை..தான் எப்படியும் அவளை சம்மதிக்க வைக்கணும்னு நினைக்கிறான்... ஆனால் அவள் மனதில் என்ன இருக்கு என தெரிந்துகொள்ள முடியவில்லை..

எதுவானாலும் பேசிடணும்னு நினைத்து பவித்ராவுக்கு ஒரு தனிமடல் மிகுந்த மரியாதையோடு அனுப்புகிறான்.

அதில் தான் அவளிடம் சில விஷயங்கள் குறித்து தனியாக பேசவிரும்புவதாக குறிப்பிடுகிறான்..

பவித்ராவும், எந்தவித தயக்கமுமின்றி பேச சம்மதிக்கின்றாள்...

தயக்கமெல்லாம் இப்ப அர்விந்துக்கு மட்டும்தான்.. எப்படி ஆரம்பிப்பது என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
.

முதலில் தன் காதல் தோல்விக்கான காரணத்தை கூறிவிட்டு, தனக்கு திருமணம் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்ததாகவும், பவித்ராவின் நிலைமையை முழுதும் அறிந்துபின் மண முடிக்க எண்ணமிருப்பதாகவும் சொல்கிறான்..


எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் தீர்க்கமாய் புன்னகையோடே பேச ஆரம்பித்தாள் பவித்ரா..

" மிக்க நன்றிதான் சொல்லணும், அர்விந்த் உங்களுக்கு....ஒரு விதவைக்கு வாழ்வு தர முன்வந்தமைக்கு...

ஆனா என்னைபொறுத்தவரைக்கும், அருமையா ஒரு குழந்தை இருக்கு வளர்க்க.. போதிய அளவு வசதியும் இருக்கு...
முன்பெல்லாம் தான் பெண்களுக்கு வேலி என்கிற பேரில் கண்டிப்பாக ஒரு தாலி தேவையாயிருந்தது...

இப்பல்லாம் நல்ல நட்புகள், புரிதலோடு கிடைக்கின்றன.. யாரும் இவள் விதவை, என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை...

என்னை எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிந்தே நான் வளர்க்கப்பட்டேன்... அதேபோல் என் கணவ்ர் விமலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தே என்னை நடத்தினார்... எப்பவும் அவரை நம்பியிருக்கும்படிக்கு செய்யவில்லை.... சில நேரங்களில் அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை தரத்தான் செய்கிறது மறுப்பதற்கில்லை...ஆனால் அடுத்த நொடியே அவர் நான் வருத்தப்படுவதை விரும்பமாட்டார் என நினைத்து உற்சாகமாய் எழுந்து என் நேரங்களை வீணடிக்காமல் உபயோகமான ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவேன்...

அவரை இழந்தது விபத்து... ஆனால் எனக்கும் சாமர்த்தியம் இருப்பதால் நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்...

சாமர்த்தியம் இல்லாத பெண்மணிகளுக்கு உங்களைப்போன்றோர் உதவி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்..

என் குழந்தைக்கு தந்தையில்லை என்கிற ஒரே ஒரு குறைபாடு மட்டுமே... அதுவும் வளர்ந்ததும் புரிந்துகொள்வாள்..
இதுவரை என் முழு கவனமும் அவள் மேல் இருப்பதால் அவளுக்கு அது பெரிதாகத்தெரிவதுமில்லை..."

" சரி பவித்ரா, ஆனா நான் உங்களுக்குத்துணையாக இருப்பதில் என்ன நஷ்டம்..உங்களுக்கு உஅத்வுவது என் பாக்கியமாய் நினைக்கிறேன்..?"

" முடிந்தால் அதை நீங்கள் வெளியிலிருந்தே செய்யலாமே அர்விந்த் நல்ல நட்போடு....

திருமணம் என்கிற பந்தம் விளையாட்டல்ல... கொடுக்கல் வாங்கல் நிறய உண்டு...திருமணமே வேண்டாமென்றிருந்த என்னையும் காதல் கொள்ள செய்தவன் விமல்..மகிழ்வான எங்கள் வாழ்க்கையிலும், சண்டை, ஈகோ இருந்தது...

ஆனாலும் சமமான அன்பு இருந்ததால் விட்டுக்கொடுத்து வெற்றிகண்டோம்....அப்படியிருக்கும்போது ஒரு பக்க காதலென்பது கதைக்கு மட்டுமே பொருந்தும்... இனி என் வாழ்க்கையில் குழந்தை , வேலை, நேரமிருந்தால் சேவை இவைதான் என் காதல்.. யாரும் எனக்காக பரிதாபப்படுவதுகூட என்னை ஊக்கமிழக்க செய்யும்... கணவனை இழப்பது என்பது என் போன்ற பெண்ணுக்கு ஊனமில்லை , தோல்வியுமில்லை அர்விந்த்... நான் ஒரு முன்னுதாரணமாய் இருக்கவே விரும்புகிறேன்..

ஒரு காதல் தோற்றால் என்ன..? உங்களுக்குள் காதல் இருக்கும்வரை யாரையும் நீங்கள் காதலிக்கலாம்... உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்..."

அப்படியே சிலையாய் இருந்தான்... யாருக்கு தாழ்வு மனப்பான்மை... எவ்வளவு அழகாய் தெளிவு படுத்திவிட்டாள்..

என்னுடைய பார்வைதான் அர்பமாய் இருந்துள்ளது...

இனி நான் அவள் தோழன் என பெருமைபடுவேன்....எதுவும் ஊனமில்லை... நம் மனதில் ஊன்றியிருக்கும் தேவையற்ற
பழமையான சிந்தனை தவிர என எண்ணி, உற்சாகமாய் வாழ்த்தி விடைபெற்றான் புதியவனாய்...

No comments: