Tuesday, January 25, 2011

குழந்தைகளும் கற்பனைகளும்..:


கதை சொல்லி தூங்க வைப்பது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் விஷயமென்றாலும் எப்போதாவது சுவையான சம்பவமாகிடுவதுமுண்டு..

எத்தனை கோபம் பிடிவாதம் என்றாலும் கதை வைத்தே லஞ்சமாக பேசி காரியம் சாதிக்கவும் முடிகிறது குழந்தையிடம்..முக்கியமா வீட்டுப்பாடம் சடசடவென முடியும்.. உணவு உள்ளே தள்ளப்படும்...ஜெபமும்...

ஏன் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாகிப்போனது ?..

ஏனெனில் நிஜத்தைவிட கற்பனை உலகம் மிக மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கிறது குழந்தைக்கு...

குழந்தைக்கு மட்டுமா ?... நமக்கும்தான்,..

டாம் & ஜெர்ரி விரும்பி ரசித்து அதில் மயங்கி நேரம் செலவாகுவது கூட தெரியாமல் இருப்போருண்டே நம்மில்..


நேற்றும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு என்னை அணைத்துக்கொண்டே கதை கேட்க தயாரானார்...

ரொம்ப ஒண்ணும் கஷ்டமில்லை என்றாலும் அப்போதுதான் கதையும் தயாரிக்கணும் என் மூளை... பாத்திரங்கள் அவரே சொல்லிடுவார்.. யார் இருக்காங்களோ இல்லையோ அவர் இருக்கணும்.. அதாங்க அவர்தான் ஜெர்ரி மவுஸ் .( எலி )

நான் , அல்லது அவன் அண்ணாதான் டாம்..

கூட துணை நடிகர்களாக காட்டிலுள்ள விலங்குகள் ..

இதில் வேறு பல நேரம் ஜெரி மவுஸ் பைக் ரேஸ் வேற போகும்.. அதுதான் ஜெயிக்கும்.. இப்படி கதைக்கான கருவும் அவரே இடையிடையே சொருகிடுவார்.. சில நேரம் என் கற்பனை தடை செய்யப்படுவதாக நான் குற்றம் சுமத்த, அவர் கோவித்துக்கொண்டு சண்டையிடுவார்...

எப்போதும் ஜெரி வெற்றி பெருவதில் எனக்கு உடன்பாடில்லை.. ( அப்புரம் வாழ்வை எப்படி சமாளிப்பதாம் என அம்மாவான எனக்கு கவலை... நியாயம்தானே?... )

ஆனால் அவருக்கோ, ஜெர்ரி எப்படி அடி வாங்கினாலும் , போராடினாலும், ஜெர்ரிதான் வெற்றி பெறணும்...


பெரியவருக்கு கதை சொல்ல இத்தனை சிரமப்படவில்லை.. சீனு உதவினான்.. அதாங்க சீனு நம்ம கழுதையார்.. அவர்தான் பெரியவரோடு பள்ளிக்கு போவதும் , ஆசிரியருக்கு தெரியாமல் சீனுவை சக நண்பர்கள் ஒளித்து வைப்பதும் , உதவுவதும், விமானத்தில் செல்வதுமாய் ஏகத்துக்கும் கதை விடுவேன்.. சிரித்துக்கொண்டே தூங்கிடுவார்.. சில நாள், நான் சொல்லும்போதே தூங்கிடுவேன்.. எழுப்பி வைத்து கேட்பார்.. ( என்ன கதை சொன்னோம்னே மறன்னு போயி..இடையில் கனவு வேற டிஸ்டர்ப் செஞ்ஞல்லே ).


நேர்று கதை ஆரம்பித்ததுமே, ஒரு ஊர்ல , ......................................ஒரு ஊர்.....................................ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல னு இழுத்தேன்...அவரே ஆரம்பித்து வைத்தார்.. " ஒரு ஜெர்ரி மவுஸ் இருந்தது.. அப்புரம் சீக்கிரம் சொல்லுங்கம்மா... " னு இன்னும் ஆசையோடு கட்டிப்பிடித்துக்கொண்டார்.. அதிலேயே அவர் ஆவல் புரியும்.. கற்பனை விண்டோ ஓப்பன் பண்ணிட்டார்னு அர்த்தம்...

அந்த ஜெர்ரி மவுஸ் பாலத்தில் செல்லும்போது டான்ஸ் ஆடிக்கொண்டே சென்றதால் பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது......................

........ஹெல்ப் என கத்தியது.. நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்ற முடியாமல் யானையை அழைத்து வந்தது.... இத்யாதி...


இதுக்குள் டென்ஷனாயிடுவார்... என்னாச்சு மா.. என்னாச்சுமா.. இப்படி காப்பாத்தி இருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே னு அடுக்குவார் ஐடியாக்களை...

" யானை வந்து தன்னோட நீண்ட தும்பிக்கையால் அந்த மவுஸ் ஏற செய்தது... அது உன்னை மாதிரி சேட்டைக்கார மவுஸ் ஆச்சே, யானை மூக்குக்குள் போய்விட்டது எலி.......................................வெளியே வரமாட்டேன் னு அங்கேயே உட்கார்ந்து கொண்டது..."


கை அசைவோடு சொல்லணும்.. என் கைதான் தும்பிக்கை.. அவர் விரல்கள் மவுஸ்.. பிடித்துக்கொண்டார்..

சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பு...


யானை மூக்கை சீந்தினாலும் வரமேட்டேன் னு பிடிவாதம்...

உடனே நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள் , நிறைய உறைப்பு சாப்பிடு... கண்ணீரும் தண்னீரும் வரும்.. அப்ப மவுஸ் வழுக்கி விழும்...

யானையும் உறைப்பு சாப்பிட்டு தண்ணீர் வந்ததும் , ஆவலோடு எல்லா விலங்குகளும் பள்ளிக்கு செல்லாமல் பாறைகள் மேலேறி உட்கார்ந்து காத்திருந்தன...

ஆனா மவுஸ் ஜாலியா , " ஐ வாட்டர் ஃபால்ஸ் ( நீர்வீழ்ச்சி ) னு குளித்து பாட ஆரம்பித்தது... ( ஏன்னா சின்னவருக்கு தண்ணீர்னா போதும் ஒரு நாளைக்கு 10 முறை கூட குளிப்பார்.. காய்ச்சல் என்றாலும் ) ..


சிரிப்பு தாங்க முடியலை...


சரி போதும் இன்னிக்கு.. தூங்கு னு சொன்னதும் கெஞ்ச கொஞ்ச ஆரம்பித்துட்டார்..

பிளீஸ் , ஒரு ஆயிரம் முறை...

சரி இன்னும் ஒரு சில வரிகள் என சத்தியம் வாங்கிக்கொண்டு , தொடர்ந்தேன்..

சின்ன சின்ன இலைகளை பூக்களை எடுத்து வந்து மூக்குக்குள் செலுத்தினால் மவுஸ் வெளியே வரும் என நட்புகள் சொல்ல ,

அதையும் செய்ய , அவற்றையெல்லாம் உள்ளேயிருந்து வாங்கிவைத்துக்கொண்டு , " ஆஹா நான் நல்ல மலர்படுக்கை செய்துவிட்டேன் .. நல்லா தூங்க போறேன் ' னு சொல்லி குட்நைட் சொல்லிச்சாம்...


சரி குட் நைட் சொல்லிடுச்சு போய் தூங்கு...


--------------------

தூக்கத்திலேயும் சிரித்தார்.. எந்த கதைக்குன்னு தெரியலை...

காலையில் எழுந்ததிலேருந்து சிரிப்பு.. பள்ளி விட்டு வந்ததுமே கதை தயாரா இருக்கணுமாம்...பள்ளி நட்புகளிடமும் ஆசிரியரிடமும் சொல்வாராம்....

குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கிடலாம் கதை மூலம்...அதில் நாமும் நுழைந்து ரசிக்கலாம் இலவசமாக.. உபயோகமாக...


கதையின் கரு ஒரு வரியாகக்கூட இருக்கலாம்.. ஆனால் சொல்லும் விதமும், குழந்தைகளை அந்த கற்பனை உலகில் சஞ்சீகரிக்க , அழைத்து செல்லும் மந்திர வித்தையும் வருவதற்கு முதலில் நாமே குழந்தையாகி அக்கதையை ரசிக்க பழகணும்... ( சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னும் என் கதையின் சீனு என்ற கழுதையார் ( 6 வருட பழக்கம் ) மற்றும் , தொடர்கதையின் நாயக நாயக்ர்கள் உயிரோடு வாழ்கிறார்கள் என்னில் )


அதே போல நிறைய கேள்விகள் கேட்க வைக்கலாம் குழந்தைகளை...


குழந்தைக்காக படம் வரைய கற்றுக்கொண்டிருக்கிறேன்....

http://www.ehow.com/how_5581915_draw-computer.ஹ்த்ம்ல்
படம் : நன்றி கூகுள்..