ஏன் படைத்தான் இறைவன்..?
கிறுஸ்மஸ் தினமன்று கார் அந்த ஊரில் நுழையும்போதே சில்லென்ற காற்றும் போட்டிபோட்டுக்கொண்டு வரவேற்குது...
அண்ணாவான ( சித்தப்பா மகன் )அவனை சந்திக்கப்போகிறோம் என்றதுமே மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி . அதே சமயம் கவலையும்...
ஆனால் அந்த கவலையை கண்டிப்பாக ஒளித்துவைத்திட வேண்டும் சந்திக்குமுன்.. என கட்டுப்பாடு போட்டேன் மனதுக்கு..
" ஏய் ராஜ். எப்ப கல்யாணம் . உனக்கு... "
" உனக்குத்தெரியாதா சாந்தி.. நம்ம அத்தை பொண்ணு அவனுக்குத்தான் கொடுக்கணும்னு சொல்லிருக்காங்க..."
இப்படி அப்பாவின் குடும்ப விசேஷங்களில் ஒன்று சேரும் 20க்கும் மேற்பட்ட அக்கா , அண்ணா, அத்தான் , அண்ணியின் விளையாட்டுப்பேச்சுகளும் பதிலுக்கு ஏச்சுகளுமாய் நிறைந்த பழைய நினைவுகள் மனதுள்..
எல்லோருக்கும் பிடித்தவன் ராஜ்...பெரியவரிடம் மரியாதையா....?.. ராஜைப்பார்த்து கத்துக்கணும்..
படிப்பா?...( திருச்சி ஜோசப் காலேஜில் எம் .எஸ்.ஸி..)..... விளையாட்டா... ?...( தேசிய சாம்பியன் )
எப்போதும் புன்னகையுடனே இருக்கும் அந்த முகம்...
கடவுள் பக்தியோ அளவிடவே முடியாது... ( அதுமட்டும் அப்பா குடும்பத்தாரின் வளர்ப்பு)
எல்லாம் சிறப்பாகத்தான் இருந்தது அவனிடம் அவன் டாக்டரேட் முடிந்து அசாம் ஷில்லாங்கிலிருந்து திரும்பும் வரை...
எம்.எஸ்ஸி, முடித்து நியுக்ளியர் அறிவியலில் டாக்டரேட் பண்ணும் விதமாக அசாம் ஐஐடியில் படிக்க சென்றான் மிக ஆனந்தமாக... கடைசி வருடம் புராஜக்ட் கைடுடனான அவன் வாழ்க்கை நரகத்தில் தொடங்கியது...
மிக கொடூரமாக நடந்துகொண்டாராம் கைடு... இயற்கையிலேயே மிக மென்மையான சுபாவம் கொண்ட அவன் மனது,
அதைக்கூட தவறாக எண்ணாது, எல்லாம் தன் நல்லதுக்கென்றே எடுத்துக்கொண்டானாம்.. புதிய இடம், ஹாஸ்டல் வாழ்க்கை, புதிய உணவுப்பழக்கம் இவையெல்லாம் தராத வலியை கைடு மொத்தமாகத் தந்துள்ளார்...
ஆனால் அதையும் குடும்பத்தாரிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என மறைத்து மனதினுள்ளே புழுங்கித்தவித்துள்ளான்..
எல்லா வேலையும் செய்து தரணுமாம் கைடுக்கு...
அதுவே அவன் மனநிலையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது...
யாரைக்கண்டாலும் அந்த கைடு போல தன்னை அடிக்க வருகிறார்கள் போல போபியா ஏற்பட்டுள்ளது....
எப்பாடு பட்டாவது புராஜக்டை முடிக்கணும் என பல்லைக்கடித்து பொறுத்ததன் விளைவு, டாக்டரேட் கிடைத்தது..ஆனால் வாழ்க்கையே தடம்புரண்டது...இதற்கிடையில் அமெரிக்காவிலிருந்து அவனுக்கு அழைப்புகள் போஸ்ட் டாக்டரேட்டுக்கு... அவன் செய்துள்ள ரிசர்ச் மிக அவசியமானதாம் ...
ஊருக்கு வந்தால், ராணுவத்தில் இள வயதிலேயே மேஜரான தம்பிக்கு திருமணம் நெருக்குவதாகவும், அதனால் அண்ணாவான இவனும் சீக்கிரம் திருமணம் பண்ண வேண்டிய கட்டாயம்...
தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துள்ளான், தன் நிலைமை அறிந்தே.. மருத்துவரோ திருமணம் நடந்தால் சரியாகிவிடும் என சொல்ல, திருமணமும் தோல்வியில் கடைசியில்;.
ஓவ்வொரு வருடமும் நான் லீவில் செல்லும்போதெல்லாம் அவன் மன நிலை சரியில்லாதவன் என்றே சொல்ல முடியாத அளவுக்கு மிக அன்பாய் என்னிடம் உட்கார்ந்து பேசுவான்... பலத்த நியாபக சக்தியும் கூட...
ஆனால் இடையிடையேஅவனுக்கு அதிகமாகிடுவதாக என் அண்ணன் சொல்வார்...
இடையில் சித்தப்பா தவறிவிட, சித்தியோடு இருந்தான் .. மத்த சகோதர சகோதிரி வெளியூர் மற்றும் வெளிநாட்டில்...
ஒருமுறை ஏதோ பயத்தில் , சித்தியையும் தாக்கியுள்ளான்... உடனே மற்ற சித்தப்பா, அண்ணா எல்லோரும் அவனை இந்த மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லத்தில் சேர்த்துள்ளார்கள்... மிக மிக அழுதானாம்.. போக மாட்டேனென்று...
இந்த வருடம் சித்தியும் மரணித்துவிட, அவனுக்கு இருந்த ஒரே தொடர்பும் போனது போல்..
மற்றவர்களெல்லாம் அவனை சென்று அடிக்கடி சந்தித்தாலும், அவனுக்கென்று உயிராய் நேசித்தது அவன் தாய்தான்..
நான் சென்று அவனை சந்தித்ததும் மனம் கொள்ளா மகிழ்ச்சி ... மிக நிதானமாக பேசினான் 1 மணி நேரம்...
பைபிள் வசனம் கூட மனப்பாடமாய்....
அங்கிருந்த முழு நேரமும் அவன் பேச நான் கேட்டுக்கொண்டிருந்தேன்...
பேசி முடிக்கும் தருவாயில், இன்னும் அவனை அந்த பயம் ஆட்கொண்டிருப்பதை, அறிய முடிந்தது...
எதிலும் நம்பிக்கை வர தயங்குது அவன் மனது... அந்த அளவுக்கு அவன் காயப்பட்டுள்ளான் என்பது புரிந்து இறைவன் மீதே கோபம் வருகிறது ....
மாதம் 5000 ரூபாய் பணம் கட்டுவதால் கவனிப்பெல்லாம் குறைவில்லைதான்...
ஆனால் சிறைக்கைதியாய் இருப்பதில் அவனுக்கு இஷ்டமில்லை... வெளியே சாதாரணமாய் வர , வேலை பார்க்க ஆசை...
ஆனால் யார் பார்த்துக்கொள்வது... ?..
அவனும் மற்ற எல்லோர் போலும் படித்த படிப்பிற்கு வேலை, குடும்பம் என நல்லபடியாக நிகழ்ந்திருக்கலாம்...
ஏன் அவனுக்கு மட்டும் இப்படி?..
இப்படியான பல கேள்விகளோடு விடை தெரியாமல், விடைபெற முடியாமல் அவனிடம் விடைபெற்றேன்...
என் குழந்தைகளுக்கும் மாமாவை காண்பித்த திருப்தி மட்டுமே...வாழ்க்கையை குறித்தான எதிர்பாராத திருப்பங்களையும் மகனுக்கு எடுத்துறைத்தேன்...
என்னுடைய சுமைகள் எதுவும் பெரிதாயில்லை அதன்பின்பு.......பெரிய மகனுக்கும்...
( பேர் மாற்றப்பட்டுள்ளது)
Friday, January 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Wish you Happy Birthday to you,,
Deva..
Post a Comment