Friday, December 4, 2009
கிறுஸ்மஸ் மரமும் குழந்தைகளும் கேக்கும்..
கிறுஸ்மஸ் பண்டிகை வருகின்றபோதே அந்த குளிரும், கிறுஸ்மஸ் மெல்லிசை பாடல்களும் ஊரெங்கும் அலங்கார விளக்குகளும் மனதில் விவரிக்க முடியாத ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சியை நம்மில் கொண்டு வருகின்றன...
ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்வதிலேயே குறியாய் இருப்பதால் சாமான்கள் பட்டியலிட்டு யார் யாருக்கு என்னென்ன வாங்கிடணும் என அலைந்து திரிந்து வாங்குவதே இன்னொரு மகிழ்ச்சி..
கிறுஸ்மஸ் என்றாலும் பகிர்தல்தானே? அலுவலில் வேலை அதிகமாய் இருந்தாலும் இம்முறை கிறுஸ்மஸ் மரம் அலங்கரிக்கணுமா என கேள்வியாய் இருந்தது..
பெரியவருக்கு தேர்வு நேரம் .. சரி அவனை தொந்தரவு படுத்தாமல் நாமே வைத்திடலாம் என அலாமாரியின் மேலுள்ள கிறுஸ்மஸ் மரத்தையும் அலங்கார பொருள்கள் உள்ள பெட்டியையும் எடுத்து வந்து பிரிப்பதற்குள் சின்னவர் குதூகலத்தோடு வந்து ஒவ்வொன்றாய் வெளியில் எடுத்து பரப்ப ஆரம்பித்தார்..
சரி இனி அவருக்கு ஒரு வேலையை கொடுத்தால்தான் நாம் ஒழுங்காக மரத்தை விரிக்க முடியும் என நினைத்து நான் மரத்தை ஒழுங்குபடுத்த படுத்த அலங்கார தோரணங்களை மரத்தில் மாட்ட சொன்னேன்..
அவரும் அவர் விருப்பப்படி மாட்டவும் அது கீழே விழவும் ஓடி சென்று பிடிக்கவுமாய் ஒருவழியாய் குழந்தையின் கைவண்ணத்தில் மரம் தயாரானது. இப்ப விளக்கு போடணும்...
எல்லா விளக்குகளையும் எடுத்து வைப்பதற்குள் அப்பா வரவும் சரியாய் இருந்தது... வந்ததுமே குழந்தையின் உற்சாகத்தில் அவரும் உற்சாகமாய் ஒவ்வொரு சீரியல் பல்புகளை எடுத்து பரிசோதனை செய்து அதை மரத்தில் மாட்டினார்..
4 செட் சரியாக இருந்தது முக்கியமான இசையோடான விளக்கு மட்டும் எரியவில்லை.. அதுதான் விலையும் அதிகம்.. நீளமும்.. அதை போட்டாலே பளிச்சென உற்சாகம் வரும்... எரியவில்லை என்றதும் உடனே குப்பையில் போட்டார் .
நமக்குதான் மனசு கேட்காது .. உபயோகமில்லை என தெரிந்தாலும் பெண்களுக்கு உடனே கடாசிவிட மனம் வருவதில்லை எதையும் எப்போதும்...ஏனோ.?
ஒருவழியாக கிறுஸ்மஸ் மரம் ரெடியாகி வீட்டின் விளக்கெல்லாம் அணைத்துவிட்டு பாடலும் போட்டு ரசித்தாகிவிட்டது...
அடுத்து கேக் செய்ய உட்கார்ந்தால் ரகசியமாக செய்யலாம் என சமையலரைக்குள் நுழைந்தால் வாலு போல பின்னாலே தொடர்கிறார்கள் வால்கள் இரண்டும்..
" அம்மா என்ன செய்ய போறீங்க..?"
" ஒண்ணுமில்லை சஸ்பென்ஸ்.."
மாவு பட்டர் எல்லாம் சேர்த்து ஓவனில் வைக்க அறைக்கு வெளியே எடுத்து வரும்போது ஆளாளுக்கு வந்து கரண்டியை வைத்து கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள்..
முதலில் கத்த தோன்றியது.." சும்மா இருங்கள் "என்று.
அப்புரம் சரி அவர்களும் பங்கெடுக்கட்டும் என விட்டால் மாவை வேகமாக கிண்டி விழிம்பெல்லாம் வழிந்து....
சரி சரி விலகுங்கள் , உங்களுக்கென இன்னொரு நாள் தனியாக கேக் செய்யலாம் என சொல்லி விலக்கிவிட்டால் , கேக் பொங்குதா என முகத்தை ஓவன் கிட்ட வைத்து பார்த்து .
.கடைசியில் கேக் வந்தது கொஞ்சம் கடினமாகவே..
( ரொம்ப கிண்டினா இப்படித்தான்..:( )
அடுத்து டிசம்பர் 5ம்தேதி செல்லவிருக்கும் கிறுஸ்மஸ் நாடகத்துக்கும் சிறிது ஒத்திகை பார்த்தோம்.
கிறிஸ்து பிறப்பு குறித்த நாடகம்..
பெரியவர் நாடகத்தை வாசிப்பவர்..
சின்னவர் ஆடு மேய்ப்பாளராய்..
அதற்கேற்ற உடையை போட சொன்னால் மாட்டேன் நான் ஜீன்ஸ் தான் போடுவேன் என அடம்பண்ண. ஒருவழியாய் அதற்கொரு கதை சொல்லி சமாதனப்படுத்தி நாடக ஒத்திகையும் முடிந்தது..
இப்படியாக கிறுஸ்மஸ் ஆரம்பித்தது இங்கு...
Subscribe to:
Posts (Atom)