Tuesday, November 23, 2010

அம்மா புராணம் - 1. ( துணிவு )


புரட்சி திருமணம் : 1


" நான் குடும்பத்தோடதான் தற்கொலை செய்யணும்." அழுதுகொண்டே வந்தார் எங்க சொந்தக்கார பெண்.. அம்மாவுக்கு அக்கா முறை..

கணவனை இழந்தவர்.. சொத்துக்கள் உண்டு.. ஆனால் கிராமம்...பொறுப்பில்லாத மூத்த மகன்..

வந்தவரை சாப்பிட வைத்து சாவகாசமாய் சமையல் வேலையெல்லாம் முடித்துக்கொண்டே பேசுகிறார் அம்மா..

எங்க வீடு முன்னறையிலேதான் அம்மா காய்கறி நறுக்குவார். அங்கேதான் தொலைபேசுவார்.. எல்லாமே அங்கேதான்..

ஆக மிக அலங்காரமெல்லாம் காண முடியாது..

என் தோழிகளின் வீடெல்லாம் மிக நேர்த்தியாக இருப்பதுபோல் ஏன் நம்ம வீடும் அப்படி இருக்கலாமே னு நினைப்பேன்..

ஆனா அதுக்கெல்லாம் முக்கியத்துவமே கிடையாது..

யார் வேணுமானால் எளிதாக அம்மாவை அணுகி பேசும்படியான வசதிகளை மட்டுமே கொண்டது..


அம்மாவோட அப்பா பெரிய காம்பவுண்ட் வீட்டில் 12 வீடுகள் கட்டும்போதும் அம்மாதான் கணக்குப்பிள்ளையாம்..

சில நேரம் செங்கல்கள் கூட வேலையாளோட சுமந்ததுண்டாம், ஆள் குறைவாய் இருந்தபோது..

பாட்டிக்கு பிள்ளை பெறுவதே வேலை.. அம்மாவுக்கு கீழ் 5 குழந்தைகள் .. ( இறந்தது தனி கணக்கு ) .

ஆக அம்மாதான் ஆண்பிள்ளை மாதிரி தாத்தாவுக்கு...அதோடு மாடுகள், கோழி , நாய் வளர்ப்பு, தோட்டம், வயல் வேலை, மாட்டுவண்டி,

என வீடு நிறைய ஆட்கள் விலங்குகளோடு வளர்ந்தவர்..எப்பவும் தானியங்கள் நெல், உளுந்து என காயும் மாடியில் முற்றத்தில்..


அதிலும் எங்க வீட்டு முற்றத்தின் வாசப்படிகளில்தான் அதிகம் அம்மா உட்கார்ந்திருப்பார்.... எதிர் வீட்டு மிகப்பெரிய வேப்பமரமும் அதன் சுகமான குளிர்ந்த காற்றும் ,

எங்க வீட்டு மாமரம் , அசோக மரம் , முருங்கை நிழலுக்கடியில்...

மிக சுகம் தரும்..

" என்ன பிரச்னை " என விசாரித்தார் அம்மா..

" திரும்பவும் அந்த பெண்கிட்ட பேசியிருக்கான் என் மகன்.. அவனை வெட்டுவேன் னு அலையுறாங்க அந்த சாதிக்காரங்க.."

" வேலை வெட்டி இல்லன்னா இப்படித்தான்.. சரி எங்க இருக்கான் உன் மகன்.?"

" தெரிஞ்சவங்க வீட்டில்..."

"என்ன முடிவு செய்திருக்க .?"

" அந்த தாழையூத்து பெண்ணை பேசி முடிச்சு வெச்சிருக்கேன்..அவங்க இவனுக்கு வேலையும் வாங்கி தருவாங்க.. பெண்ணுக்கு ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்.. அதனால வரன் அமையல... இவன் சம்மதிக்க மாட்டேங்கிறான்.. காதலிச்ச அந்த பெண்ணைதான் கட்டுவேன் னு சொல்றான்..

அந்த சாதிக்காரங்க இவனை கொலையே செய்திருவாங்க..எத்தனை நாள் இப்படி திரிவான்?.."

" சரி கிளம்பு.. "

" எங்க.?"

" தாழையூத்துக்கு முதல்ல போறோம்.. சம்பந்தம் பேசிட்டு.. அவனை கூட்டிட்டு நாளைக்கு கல்யாணத்த முடிச்சிரலாம்.. "

" நெசமாத்தான் சொல்றியா .?"

சென்றார்கள் . அண்ணாவோடு இரவு வந்தார்கள்..கூடி கூடி பேசினார்கள்..

விடிந்ததும்தான் தெரிந்தது அன்று எங்க வீட்டில் வைத்தே கல்யாணம் என்று..

அக்கா ,சின்ன அண்னாவிடமும் என்னிடமும் , அம்மா, அந்த அண்ணனை காண்பித்து ,

" இவன் வெளியே எங்காவது போகணும்னு சொன்னா போக விடக்கூடாது.. இந்த ரூம் விட்டு வெளியே அனுப்ப கூடாது , பாத்ரூம் தவிர.."

" எப்படீம்மா .?"

" நாங்க போய் தாலி வாங்கிட்டு சீக்கிரம் வந்திருவோம்.. .."

நானும் அக்காவும் , சின்ன அண்ணாவும் காவல்...

பெரிய அண்ணா, அப்பா எல்லாரும் சாப்பாடுக்கு சொல்ல போனார்கள்...

அண்ணி மாடியை தயார் செய்தார்.. தம்பதிகளுக்கு..

ஒரு பதினோரு மணியளவில் , அந்த அண்ணன் மெதுவா முன்னறைக்கு வந்தார்கள்..

அப்படியே முற்றம் வந்தார்கள்.. நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம்..

" அண்ணே உள்ள வாங்க.." சின்ன அண்ணா.

" இருல.. வாரேன்.. மாங்கா நல்லா காய்ச்சிருக்கே.. "

சொல்லிக்கொண்டே இருந்தவர் தப்பி ஓடினார் பின் தெரு வழியாக..

அண்ணா துரத்திக்கொண்டு பின்னால் ஓட ,

அவரை தொடர்ந்து அக்காவும் ஓட ,

சிலர் வேடிக்கை பார்த்ததும் ,

அக்கா சம்யோசிதமாக , திருடன் , திருடன் , " என கத்த ,

மூன்றாம் தெருவிலுள்ளவர்கள் கூட ஓடி சென்று அண்ணாவை பிடித்தார்கள்..

அடி விழுமுன் , சின்ன அண்ணா விபரம் சொல்லி வீட்டுக்கு அழைத்துவந்தார்..

இப்ப எல்லா கதவையும் பூட்டி வைத்தோம்..பூட்டு போட்டு..:)

அம்மா வந்ததும் , கேள்விப்பட்டதும் , அந்த அண்ணாவை திட்டோ திட்டுன்னு அப்படி திட்டினார்கள் .

" ஒன்ணு செய். இப்பவே இங்கேயே உங்கம்மாவுக்கு விஷம் வாங்கி கொடுத்துவிட்டு நீயும் செத்துப்போ.. உன்னால தான் அவளுக்கு எத்தனை நாள் பிரச்னை..

கணவனும் இல்லை.. நீயும் தறுதலை..உனக்கு காதல் ஒரு கேடு..அம்மாவை காப்பாத்த வழியில்லை.. இதுல..%&*^&%^(%^(&**% " அப்படி இப்படின்னு..

அந்தம்மா அழ, அந்த அண்ணன் வெட்கி தலை குனிய....கொஞ்சம் நேரம் சோகமானது அந்த சீன்...

மதியம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு தாழையூத்துக்கு சென்று பெண் அழைத்து வந்தார்கள்...

கூடவே சொந்தங்களும்.. எல்லாருக்கும் மாடியில் சாப்பாடு..

எங்களுக்கு தெரிந்த ஒரு பாதிரியார் அழைத்து ஆசீர்வதித்து , குத்துவிளக்கேற்றி திருமணம் நடந்தது வீட்டிலேயே சாமி படம் முன்பு..

சில பெரிய மனிதர்கள் சாட்சியோடு..

அப்புறம் அன்று எங்க வீட்டிலேயே மணமக்கள் தங்கினர் மாடியில்..

3 ஆண் குழந்தைகள் பெற்று , நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள்...இன்று..

இப்ப நினைத்து பார்த்தாலும் என்னால் நம்பவே முடியாது..

எப்படி ஒரே இரவுக்குள் அம்மாவால் அத்தனை காரியத்தையும் , அலைச்சலையும் அலுப்பின்றி செய்ய முடிந்தது..?

அதிலும் ரொம்ப ஆச்சாரமான இந்துக்களுக்கு , கோவிலில் சென்று கூட திருமணம் செய்யாமல் , அப்பவே , பெரியவர்கள் அழைத்து ,

புரட்சி திருமணம் செய்தார்கள் என்று.. ?.

உணவோ, உறக்கமோ எப்போதும் பெரிதாகவே தோன்றாது அவருக்கு..

எந்த நேரத்திலும் கூட சென்று உதவ தயாராயிருப்பார்.. எம்மையும் சில நேரம் , கிராமத்திலிருந்து வருபவர்கள் கூட பள்ளிகளுக்கு அனுப்புவார் அட்மிஷன் விஷயமென்றால்.. .எரிச்சலா இருக்கும்.. ஆனால் ஒருபோதும் மறுக்கவே முடியாது அம்மாவின் கட்டளைக்கு..

அதே போல மருத்துவமனைக்கும்.. எனக்கு அந்த வாடையே மயக்கம் தரும்.. ஆனா மாமாவிடம் அறிமுகப்படுத்த நான் கூட போவேன்.. விருப்பமேயில்லாமல்..

அம்மாவை திட்டிக்கொண்டே.. :).. அதிலும் கடைசியா பிறந்து தொலைச்சா அவ்வளவுதான்.. எல்லாருக்கும் எடுபிடி நாமதான்..:)

இதுல எனக்கும் சின்ன அக்காவுக்கும் அக்ரிமெண்ட் உண்டு..

அவளுக்கு வேண்டிய வெளி வேலைகள் நான் செய்து தரணும் வாங்கிக்கொடுக்கணும்.. அவள் எனக்கு இஸ்தரி போடுவது , படம் வரைந்து தருவது னு ஒப்பந்தம்..

இதில் வேற எங்க வீட்டில்தான் அந்த காலத்தில் தொலைபேசி இருந்தது..( இன்னும் சிலர் வீட்டில் ஆனா அனுமதி கிடையாது மற்றவருக்கு ) .. ஊர் முழுக்க எண் கொடுத்து வெச்சிருப்பாங்க.. யாருக்காவது தொலைபேசி அழைப்பு வந்தால் நாந்தான் ஓடி போய் சொல்லணும்..சில டிப்ஸ் மாதிரி பரிசும் கிடைக்கும்தான்.. :)

அதே போல செய்தித்தாள் பரிமாறலும்.. " ஏய் பொடிசு " னு எதிர் வீட்டு அங்கிள் கூப்பிட்டா " பேப்பர் வந்தாச்சா " னு அர்த்தம்,...

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லையென்பதால் என் மீது பிரியமும்.. விசேஷ கவனிப்பு உண்டு எனக்கு... அதனாலேயே அவங்க மகனுக்கும் எனக்கும் சண்டை வரும்..

அதனால எனக்கு உடம்பு சரியில்லாட்டி தெருவில் பலர் வந்து விசாரிப்பார்கள்.( எடுபிடியாச்சே ) . பெருமையாயிருக்கும்..:)

அதுவும் சரியா முழுப்பரிட்சையோடு ஏதாச்சும் ஒண்ணு வரும்.. அம்மை , டைபாய்டு , கை உடைத்தது.. என தொடர்ந்து 3 வருடம் தேர்வுக்கு போகவில்லை..

ஒருமுறை இப்படித்தான் எடுபிடி வேலையில் தவறு நடந்தது....ரொம்ப காமெடியா போச்சு... அது என்னன்னு கேட்கிறீங்களா?.. அடுத்த பதிவில்.....அதோடு இன்னொரு புரட்சி திருமணமும்...

முக்கியமா போலித்தனமற்றவராய் தன் சொந்தங்களை அக்கம் பக்கமுள்ளவர்களை அவர்கள் கஷ்டங்களை புரிந்து நேசித்தார்..

அதனால் அவருக்கு அலங்காரம் தேவையற்றதாய் இருந்திருக்கும் எதிலும்..

ஏற்கனவே அவர் செய்துவைத்த விதவை மறுமணம் பற்றி படிக்க

விதவை மறுமணம்

படம் : நன்றி கூகுள்..