Saturday, February 14, 2009

ஒதுக்கப்பட்ட கல்....பாகம் 1( பெரியவர்களுக்கு மட்டும்)

மலர்விழிக்கு காலையில் எழுந்ததுமே பயம் தொற்றிக்கொண்டது... கணவனிடம் சொன்னாலும் திட்டு அவளுக்குத்தான்..

இந்த மாதிரி சமயங்களில்தான் தன் முட்டாள்தனமான ஜர்னலிச பிடிவாதத்தை நொந்துகொள்வாள்...

சில சமயங்களில் சேலஞ்சிங்காக இருக்கும் .. சில சமயம் சின்ன விஷயம் கூட மலைபோல பிரச்னைகளை கிளப்பி விடும்...எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் னு தெரியாது...எப்பவும் துணைக்கு வரும் அண்ணாமலையும் தேர்தல் செய்திகள் சேகரிக்க மதுரை சென்றுவிட்டான்...

மாட்டேன் , முடியாது என்கிற சொல்லே ஆசிரியருக்கு பிடிப்பதில்லை...

" சம்பளம், பாராட்டுன்னு மட்டு வாங்கி குமிக்கிறீங்க...கொஞ்ச‌ம் கஷ்டப்பட்டாதான் என்னவாம்...??"

ஆரம்பிச்சுட்டாரா?.. இனி இவர நிப்பாட்ட முடியாது...


" சரி போறேன் சார்.. அட்ரஸ சொல்லுங்க.." எரிச்சலோடு

" நீ ஒண்ணும் சிவப்பு விளக்கு பகுதிக்கு போகலம்மா... அதுல வேலை செய்யிற ஒரு பாலியல் தொழிலாளிய அவ வீட்டுல சந்திக்கிற அவ்வளவுதான்..."

ம். எவ்வளவு எளிதா சொல்லிட்டாரு?.. எப்படி இருப்பாளோ?. , என்னல்லாம் பேசுவாளோ, யாரெல்லாம் அங்கு இருப்பாங்களோ... னு மனம் ஒரு அருவருப்பான கற்பனை மட்டுமே கொள்கிறது...

சரி கேட்க வேண்டிய 10 கேள்விகளை, சட்டு புட்டுன்னு கேட்டுட்டு ஓடி வந்துட வேண்டியதுதான்.. கூடவே கேமராமேன் சுதிர் வருகிறார்.. ஓட்டுனர் பிச்சையா அண்ணன் இருக்கிறார்.

கணவனிடம் மேலோட்டமாக மட்டும் சொல்லிவிட்டாள்., பயத்தை வெளிப்படுத்தாமல்...


" இதெல்லாம் உனக்கு தேவைதானா?... சொன்னா, என்னவோ ஆணாதிக்கம் ரேஞ்சுக்கு கோச்சுப்ப... என்னமோ பாத்து நடந்துக்கோ...உன் வேலையில் நான் தலையிடவில்லை...எதுன்னா தேவைன்னா தொலைபேசியில் கூப்பிடு.." கொஞ்சம் வெறுப்பாகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..


எந்தவித மேக்கப்பும் போட்டுக்கொள்ளாமல், மிக சாதாரணமான சுடிதார் ஒன்றை போட்டுக்கொண்டு , சின்ன நோட்டுபுத்தகமும், பேனாவும் , ரெக்கார்டரையும், எடுத்துபோட்டு கைப்பையுடன் கிளம்பி விட்டாள்..


அந்த தெருவில் சென்று நளினா வின் அட்ரஸ் கேட்கும்போதே, பெண்கள் முகச்சுழிப்புடனும், ஆண்கள் கேலிச்சிரிப்புடனும் வழி சொன்னார்கள்...

தொலைபேசியிலும் நளினாவிடம் உறுதி செய்துகொண்டு அவள் வீட்டருகே வாகனத்தை நிப்பாட்டிவிட்டு பதட்டத்துடனே, அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினாள் மலர்விழி..


அழகான தோட்டத்தோடு கூடிய வீடு.. மிக அருமையாக கேரளாவின் வெள்ளை நிற புடவை மஞ்சள் ஜரிகையோடு ,உடுத்திக்கொண்டு பூஜையை முடித்து வெளிவந்தாள் நளினா...பேருக்கேத்தாற்போல் மிக நளினமாகவே இருந்தாள்....

சுருட்டையான குட்டைமுடி...அதி சொறுகிய கொஞ்சம் கதம்பம்.. நெற்றியில் திருநீறு.... மஞ்சள் நிறம்.. வயது 42 என்று கேள்விப்பட்டாலும் 30 வய்துக்குரிய தோற்றமும் சுறுசுறுப்பும்...விழிகள் மட்டும் கலங்கியதுபோல், கொஞ்சம் சுருக்கம் விழுந்தாலும் , அழகாக தீட்டிய கண்மை அதையும் மறைத்தது...முத்துப்பல் வரிசை...இயற்கையோ, செயற்கையோ எனும் சந்தேகம் எழும் அளவிற்கு...குறை என்று பார்த்தால் அந்த பெரிய மூக்கு மட்டுமே...அதுவும் காந்த விழி கண் பார்வையில் அடிபட்டு போயிற்று... கிட்டத்தட்ட ஒரு நடிகையை ஒத்து இருந்தாள் அவள்..

வாய் நிறய வாஞ்சையுடன்" வாங்க , வாங்க " என உள்ளே அழைத்தாள்....

பிச்சையா அண்ணாவை மட்டும்" வாங்கண்ணா " என உரிமையோடு கூப்பிட்டதும் கொஞ்ச‌ம் கூச்சமே பட்டார்...

பக்கத்து அறையில் சில பெண்கள் அமர்ந்து ஏதோ கைத்தொழில் செய்துகொண்டிருந்தார்கள்....

அவர்களிடம் " இதோ அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு, அடுக்களைக்கு சென்று,

" தாயம்மா, காபியும் , பலகாரமும் கொண்டு வாருங்கள், 3 பேருக்கு " என கட்டளையிட்டாள்..


அதற்குள் கேமரா கண்களை சுழல விட்டாள் மலர்விழி... என்ன ஒரு நேர்த்தியில் அலங்கரிக்கப்பட்ட வீடு...

எங்கு பார்த்தாலும் கடவுள் படம் , குடியிருக்கும் ஒரு ஆலயம் போல....மென்மையான வீணை இசை ஒலிக்கிறது ....மேசையில் வெண்கல சட்டியில் தண்ணீரில் மிதக்கவிட்ட ரோஜாவும் அரளியும்....பக்கத்து அறையிலிருந்து வருகிறது சாம்பிராணி, பத்தியின் மணம்...மூலையில் வெண்கல பானையில் வைக்கப்பட்ட செடிகள்... அதனருகிலேயே பட்டுத்துணிமேல் வைக்கப்பட்ட வீணையென்று... இது உண்மையிலேயே ஒரு பாலியல் தொழிலாளியின் வீடுதானா?..

தொலைக்காட்சியின் பெட்டிக்குமேல் பெரிதாக பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்தில் நளினாவும், அவள் குழந்தையும்..அணைத்துக்கொண்டு..சின்ன வயதில்...

பின் இன்னொரு புகைப்படம் அவள் பிள்ளை பட்டம் வாங்குவதாய்... அடுத்து ஏதோ வெளிநாட்டில் ...

" காபி சாப்பிடுங்க " என அவள் கையாலேயே எல்லோருக்கும் வழங்கினாள் ...அன்பொழுக...

எப்படி ஆரம்பிப்பது என்று கூட தெரியவில்லை...

தயவுசெய்து புகைப்படம் வேண்டாம் என்றதும், சுதிரும், பிச்சய்யா அண்ணனும் எழுந்து வெளியே சென்றுவிட ,

மலர்விழி கேள்விகளை ஆரம்பிக்க சங்கோஜப்பட்டுக்கொண்டிருக்க,


புன்னகையுடன்,

" என்னம்மா கேக்க போறீங்க... ரொம்ப தயக்கமா.... சரி நானே ஆரம்பிக்கிறேன்.."

என மிக சகஜமாக கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்.... அதற்குள் இரண்டு பொடிசுகள் சிறுமியை துரத்திக்கொண்டு ஓடிவர

" ஆச்சி" னு கத்திக்கொண்டே மடியில் வந்து முகம் புதைத்தாள் சிறுமி....அப்படியே வாரி தோளில்போட்டுக்கொண்டாள் நளினா......

" நான் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் . என் இயற்பெயர் மீனாட்சி..." என விழிகள் விரிய மிக உற்சாகமாக பேச தொடங்கினாள்..


***************************************தொடரும்************************************************
பொது வாழ்த்து..

நல்லுலகம் படைத்தவனே!
நலமளித்த இறையவனே!!
சொல்லெடுத்து நான்வணங்க
சுகமளிப்பாய் தமிழாலே!


பாலோடு பண்பாட்டை;
பாசத்தை அளித்(த) தாயே
வாழ்வதனை எளிதாக்கி
வழிகாட்டும் தந்தையவர்
கலை,கல்வி , ஒழுக்கத்தை
கற்பித்த ஆசான்கள்
இன்பத்தில் துன்பத்தில்
இணைந்திட்ட நட்புகளே

அன்புக்கு காட்டாக
அகமகிழும் உறவுகளே
எங்கெங்கே போனாலும்
இனிமைக்குத் தமிழேயாம்
அனைவருக்கும் என்வணக்கம்
அழகான முகமன்தான்




கவியரங்கத்தலைவருக்கு நன்றி

கவியரங்க கச்சேரியில்
கருத்தாய் கலகலப்பூட்டி
ஆளுக்கொரு கவிபடைத்து
அசத்திய அசாத்திய ஆசாத்(ஜீ)
வாழ்த்திடவே தடைபோட்டு
வாய்ப்பினையே பறித்துவிட்டீர்
வணங்கி ஆசிபெற வர‌
வரவேற்று வழிநடத்துவீர்..
ஆனைகள் பெருமிதத்தில்
அசைந்தாடி களிக்குமிங்கு
பூனைக்கொரு மிடங்கொடுத்தீர்
பூரித்தேன் நன்றி ஐயா..

சபையோர்க்கு வணக்கம்..

மொக்கையே பிரதானமென
மொழிபழக கலந்துவந்தேன்
அரவணைத்தீர் அன்பொழுக,
பயிற்றுவித்தீர் பண்புடனே.
கவிதையை சமர்ப்பிக்க
கவியரங்கில் வாய்ப்பளித்தீர்
பயத்துடனே எண்ணத்தை
படைத்துவிட்டேன் சபையினிலே
பக்குவமாய் பிழைதிருத்தி
படிகளேற துணைசெய்வீர்..



இனி வரும் நாளில்.....



அருமையா தூங்குற பச்சபுள்ள‌
அழவிட்டு பள்ளி போவதென்ன.?
அலுவலகம் சென்ற அம்மாவோ
அவசரமாய் வருகின்ற‌ அவலமென்ன ?

நிதானமாய் ஒதுங்க இடமில்லை
நிழல்தரும் மரமோ செத்தொழிந்ததென்ன?‌
நித்தமொரு கட்சி கூட்டமுன்னு
நிலமுழுதும் குழியாய் ஆனதென்ன..?

அரசாங்க‌ வேலை செய்வதற்கே
அட்டைபோல் லஞ்சம் உரிவதென்ன?.
காசு பணமாய் காண்பித்தால்தான்
கட்டையுமிங்கு வேகுவதென்ன?

கன்னி தான திருமணத்தினிலே
கற்போடு பண‌ம் விலையானதென்ன?
சன்னிதான பூஜையிலுமிங்கு
சல்லிக்காசே பெரிதானதென்ன?

பொக்கிஷமான பெரியோரெல்லாம்
பொதிகளாகவே போன பொறுப்பென்ன?
வெட்கி வேதனை பட வேண்டியதும்
விதியாலே கலாச்சாரமானதென்ன ?

மதிக்க வேண்டிய மத சட்டமிங்கே
மதம்பிடித்து சின‌ வெறிகொண்டதென்ன?
சதிகார கும்பல் மும்பையிலே
சகோதரனை தொலைத்த‌ அவலமென்ன

இனமொன்று இழிநிலை அரசியலால்
இலங்கையில் இன்று அழிவதென்ன
தினம் உழைத்திட்ட விவசாயியும்
தற்கொலையையே நாடுவதென்ன ?..

பிரச்னை, துன்பம் பலவிருந்தாலும்
பிரிந்தே விலகிநின்றால் முடிவென்ன?
அன்பும் மனித நேயமுமே எம்
மதமாய் வாழ்ந்திட்டால் பயமென்ன?

இனிவரும் நாளில் பிறர்வாழ்வையுமே
தன்வாழ்வாய் நினைத்தால் தப்பென்ன?
துன்பத்தை இன்பமாய் மாற்றிடவே
துணிந்தே செயல்ப‌ட்டால் துயரென்ன?

சுற்றியுள்ளவர் வாழ வைத்திட்டால்
சுகமே பெற்றிடுவோம் வேறென்ன?
சுற்றுகின்ற பூமியை சுற்றமாக்கினால்
சுதந்தர வாழ்வினிமேல் தூரமென்ன?


முதியோர், குழந்தை பாசத்தையும்
முழுதுமே பயன்பட்டிட வழியென்ன?
குடும்பத்தின் சொத்தே அனுசரிப்பில்
கூடியே வாழ்ந்திட்டால் பழியென்ன?

அரசியலும் ஒருவித நல்தியானமே
ஆழம் கண்டுவிட்டால் வெறுப்பென்ன?
நற்செயல்கள் தீயாய் பரவிவிட்டால்
வன்முறை ஒழித்திடலாம் தோல்வியென்ன?