Tuesday, September 21, 2010

ஐடிசியில் உகாண்டா பெண்ணுடன் சந்திப்பு































கடந்த இரு வாரமாக ஐடிசிக்கும் , சிறைச்சாலைக்கும் செல்ல முடியவில்லை...

இந்த வாரம் எப்படியாவது சென்றே ஆகணும் என்று எண்ணினேன்..

அதே போல ஆலயத்தோழியிடம் சொல்லி நான் சந்திக்க இருக்கும் நபர்களின் விபரம் கேட்டேன்.

ஹிந்தி பேச தெரியுமா என கேட்டார்.... இல்லை ஆங்கிலமும் தமிழும்தான்..

ஹிந்தி சமாளிக்கும் அளவுதான் தெரியும்..

ஆங்கிலம், தமிழ் பேசும் அகதிகளை மட்டும் சந்திக்கிறேன் என்றேன்.

முன்பு சிறைச்சாலையில் சந்தித்த பாகிஸ்தானியரிடமும் ஆங்கிலத்தில் தான் பேசமுடிந்தது..

( இதுபோன்ற நேரங்களில்தான் ஏந்தான் ஹிந்தி படிக்காம விட்டோமோ னு வருத்தமா இருக்கும்.. )

போன முறை ஈழத்தமிழ்ப்பெண்ணை சந்தித்தேன்.. கூடவே ஒரு சிறுமியையும் , சிறுவனையும்...

ஒருவர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும்..

ஆனால் நான் காத்திருக்கும்போதே ஈழத்தமிழர்கள் சிலர் வெளியில் நம்மோடு அமர்ந்திருக்கையில், வந்து பேசி நட்பாகிடுவார்கள்..


9.30 க்கே நான் போய் படிவங்கள் எல்லாம் நிரப்பி கொடுத்தாலும் 10.30 க்குத்தான் உள்ளே உள்ள கதவை திறப்பார்கள்...

ஈழத்தமிழர்கள் பேசும் தமிழை கேட்பதே ஒரு இன்பம்.. மிக மரியாதையாகவும் தாழ்ச்சியோடும் இருக்கும்..

சில நொடிகளிலேயே அக்கா என அழைத்து உறவும் பாராட்டினால் கேட்கணுமா?..

நாம் ஏதும் பேச வேண்டாம் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் .. அத்தனை துயரம் நிறைந்த கதைகள் ஒவ்வொன்றும்..

நான் போன முறை சென்ற போது இப்படி ஒரு தம்பி மீன் குழம்பு செய்து அக்குழந்தைகளுக்கு எடுத்து வந்திருந்தார்..

பெண்ணுக்கு 13, சிறுவனுக்கு 11 வயதாம்.. கடந்த 6மாத வாசம் ...

அக்கா அவளோடு பேசுறீயளா ?. னு கேட்டதும் சரின்னு சொன்னேன்..

சில சாமான்களை உள்ளே வரை கொண்டு தரும்படியும் கேட்டார்..

நான் என் தோழியிடம் அனுமதி கேட்டேன் .. அவர் சிங்களவர்.. மிக நல்ல பெண்மணி..சேவைக்காக தன் வசதியான வாழ்க்கையையே விட்டு வந்தவர்.

அவர் சரின்னு சொன்னதும் அந்த தம்பியிடம் 2 பெரிய பைகளை வாங்கிக்கொண்டேன்..

எல்லா வகையான பரிசோதனைகளும் செய்துதான் உள்ளே அனுமதிப்பார்கள்..

நம்முடைய பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வார்கள்..

நான் சந்திக்க வேண்டிய ஈழப்பெண்ணை சந்தித்த பின் அக்குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்..

அதுவரை மிக துணிச்சலாக இருந்த நான் நொறுங்கிப்போனேன் ..

அவர்கள் முன்னால் கண்ணீர் சிந்தக்கூடாது என முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு பேசினேன்..

இருப்பினும் முடியவில்லை... என் குழந்தைகளே உள்ளே இருப்பது போல் ஒரு பிரமை...

மற்றொரு முக்கியமான கஷ்டம் என்னவென்றால் கிட்டத்தட்ட 50 பேரை ஒரே நேரம் இரு கம்பி வலை தடுப்புக்கு பின்னால் இருந்து பேச சொல்வார்கள்..


பல்வேறு நாட்டினர் , பல்வேறு பாஷைகள் என கூச்சலும் குழப்பமுமாய் இருக்கும்..

நாம் பேசுவது அந்த பக்கமுள்ளவருக்கு கேட்காது..

அவர் வாயசைவை வைத்தே அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனிக்கணும்..

ஏற்கனவே நொந்து போய் இருக்கும் அவர்களை மேலும் கத்த சொல்லி கொடுமைப்படுத்துவதாய் தோணும்..

இருந்தாலும் யாருமே பார்க்க வரமுடியாத அயல்நாட்டில் இப்படி யாராவது வந்து பேசுவது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம்..

ஒரே நேரம் ஒரு அறையில் 600 பேருக்கும் மேலாக கூட அடைத்ததுண்டாம்..

படுக்க முடியாமல் இடுக்கிக்கொண்டு உட்காரணுமாம்..

நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு அவர்கள் விவரிக்கும் ஒவ்வொண்ணும்..

ஒருவர் மேல் ஒருவர் படுப்பதுண்டாம்..

வாயில் வைக்க முடியாத உணவாம்..சோப்பு , ஷாம்பு, லோஷன், நாப்கின் ஏதுமின்றி பெண் பிள்ளைகள் சிலருண்டாம்.

இப்படி யாரவது சொந்தமோ நட்போ இருந்தால் அவர்கள் பிழைத்துக்கொள்வர்..

அதிலும் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் எடை னு பொருள்கள் தர முடியுமாம்..

அதே தம்பி அடுத்த முறை பொருள்கள் எடுத்து செல்லும்போது பிடிபட்டாராம்.. பவுடர் டப்பாவுக்குள் செல் போன் பேட்டரி இருந்ததை

காவலர் கண்டுபிடித்து விட்டனர்.. அவ்வளவுதான் இனி அவர் போகவே முடியாது சந்திக்க...

இது எனக்கு எச்சரிக்கையும்.. நான் இனி ஒருபோதும் அடுத்தவருக்காக இரக்கப்பட்டு பொருள்களை உள்ளே கொண்டு செல்லமாட்டேன்...

வேணுமென்றால் பணமாக கொடுக்கலாம்...உள்ளே கடை உள்ளது விலை அதிகமென்றாலும் தேவைப்படும் போது வாங்கிக்கொள்ளலாம்..

நான் இன்று சந்தித்த உகாண்டா நாட்டு பெண் 21 வயது..

கூட படித்த சிவிட்சர்லாந்து பெண்ணொருத்திக்கு வாடகை தாயாக முடிவு செய்து ட்ரீட்மெண்டுக்காக தாய்லாந்து அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.

இங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து பரிசோதனைகளும் நடந்திருக்கு...ஆனால் இவளுக்கான விசா முடிந்து விட இமிகிறேஷனில் மாட்டிக்கொண்டார்..

அந்த பெண் சுவிஸ் சென்றுவிட்டாராம்.. நல்ல பெண் என்றே கூறுகிறார்.. தான் படிக்க அவர்தான் உதவினாராம்.

இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை..

இப்போது ஆலயம் மூலமாக அவளை உகாண்டாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள் போல..

கடந்த 5 மாதமாக பித்து பிடித்தவளாய் இருக்கிறேன் என்கிறார்.

நீ சீக்கிரம் உன் நாட்டுக்கு திரும்ப ஏற்படு செய்கிறார்கள் என்றதும் முகத்தில் கொஞ்சம் பரவசம் , மகிழ்ச்சி..

கொஞ்சம் துணிவையும் , ஊக்கத்தையும் கொடுத்து அவரை மகிழ்விக்க வேண்டியதாயிருந்தது...

தன் பெற்றோர், தன் தம்பி, தங்கைகளுக்காக இந்த வாடகை தாய் வேலைக்கு சம்மதித்ததாக சொன்னார்...

இப்படி வந்து ஐடிசி யில் கிடப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை..என வருந்தினார்..

இப்படி எத்தனை எத்தனை பேர் உலகில் காரணமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்..?

பணத்துக்காக முன்பின் அறியாதவரிடம் உயிரையே பணயம் வைக்கும் தேவைக்கு எதனால் தள்ளப்பட்டார்கள்..?


ஒருபோதும் தீராத பல கேள்விகளோடு விடைபெற்றேன்...



படம் : நன்றி கூகுள்