Wednesday, February 25, 2009

பெரியவா சொன்னா...................குட்டிக்கதை..:)

பெரியவா சொன்னா...................

" டேய் எந்திரிடா.." வடிவேலு எழுப்பிக்கொண்டிருந்தான் விஜையை....

" ம்ஹூம் .. மாட்டேன்... " சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொண்டான்...

" டேய் , கண்ணா, நீ இன்னிக்கு ஊருக்கு போய்டுவேன்னுதானே டா என் பிரண்டஸயெல்லாம் வரச்சொல்லிருக்கேன்...

ஏண்டா இப்படி இம்சை பண்ணுறே...கெ...ள...ம்...பு..டா
.....பிளீஸ்..."

எழுந்து உட்கார்ந்தான் விஜய்..

" அந்த சோகக்கதய ஏண்டா கேக்க?"

" அய்யோ.. ஆரம்பிச்சுராதடா... எனக்கு வேலை இருக்கு.. வேணுமானா செந்தில் ஃப்ரீயா இருக்கான் அவன்கிட்ட சொல்லு .."

தப்பிச்சவனை பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தினான்...


"டேய் எனக்கு ஒன்ன விட்டா யாருடா இருக்கா... பாருடா.. ஆச ஆசயா ஊருக்கு கெளம்பினா இப்ப வரவேண்டாம்னு சொல்றாங்க...கேட்டா ஓவர் அட்வைஸ்... டேய் ஊருல ஒலகத்துல என் வயசுப்பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி 2 பிள்ளைக்கு அப்பனா திரியிறாங்க... ஆனா என் பேச்ச கேட்கமாட்டேங்கிறாங்கடா...

அவுங்க பேச்ச நான் கேட்கணுமாம்.. ,... ஜெனரேஷன் கேப்.. புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களேடா..

சொன்னா, " பாரு உன் அக்காவ அவ எங்க பேச்ச கேட்டு ஜம்முன்னு இருக்கா பாருன்னு சொல்றாங்க..."

" சரி சரி நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போயேண்டா.. பெரியவங்க மனசு கோணாம.."

" வந்துட்டாரு இவுரு அட்வைஸ் பண்ண, ஓசில என்கூட தங்கிட்டு, எனக்கே அட்வைஸா...?"

" இல்லடா, தங்கமே, செல்லமே, நீ சொல்லு கண்ணு கேக்குறேன் ( தலையெழுத்து....) அவ்வ்வ்வ்வ்வ்"

"ம்.. அப்படியே மெயிண்டைன் பண்ணு குறுக்கால பேசாத...என் பிரண்ட் அப்படி பண்ணித்தான் இப்ப விவாகரத்துல போய் நிக்குதுடா....."

" ஆமா.."

" என்ன இருந்தாலும் நமக்கு கெடக்கிற மரியாதை, காதல் அதுல இருக்கிறதா தெரியல டா..."

" சர்தான்.."

"கட்டின சுடிதாரோட வந்தாகூட போதும்...நான் பாத்துக்குவேன் டா.என் பொறுப்பு...."

"ரைட்டு.."

' அவ என்னை பாக்க... நான் அவளை பாக்க..... அவ நிலத்தை பாக்க....அது ஒரு சொகம்டா..."

" சோ................கம்..."

" என்ன..."

" இல்ல சொகம்தான்... நீ சொல்லு...."

"அய்யோ ஒத்துகிற மாட்டேங்குறாங்களேடா.... என் நெலமய தாண்டி வந்தவங்க தானே அவுங்களும்... ஏண்டா இப்படி?."

" கர்...உர்....." குறட்டை சத்தம்....

" தன் மகனின் இஷ்டத்தையும் கொஞ்சம் காது குடுத்து கேக்கணூம்டா இந்த பெற்றோர்...தான் பிடிச்ச பிடிவாதமாய் இருந்தால் எல்லோருக்குந்தான் நஷ்டம்..."


".."

" அவுங்க இஷ்டப்படி பள்ளிக்கூடம், ஆடைகள், கல்லூரி, வேலை... எல்லாத்தையும் தட்டாமல்தானே செய்து வந்தோம்... கல்யாணத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம்...பிடிக்கிறாங்க பெற்றோர்...?"

"..."

" டேய், நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்...அடப்பாவி...தூங்கிட்டியா...???" தலயணையை எடுத்து வீசுகீறான்...

அதிர்ந்து தெளிந்து எழுகிறான்.....வடிவேலு..


" சொல்லு டா, இதுக்கொரு முடிவு சொல்லுடா......" கையை பிடித்து கத்துகிறான்...


" நான் என்ன டா சொல்ல... இப்பவே போன போட்டு, "

" போட்டு..??'


" உங்க அப்பாகிட்ட..."

" அப்பாகிட்ட...???"


" நீ காதலிக்கிற பொண்ண கட்டிக்க சம்மதம் பேசுறேன் ...சரியா... கைய விடு..."

" அடேய் மவனே.. இன்னிக்கு உன்ன இரண்டுல ஒண்ணு பாக்காம விடப்போறதில்ல....." தேடுகிறான் எத வெச்சு அடிக்க என்று..

" ஏன் .. நான் இப்ப தப்பா என்ன சொல்லிட்டேன்னு இம்புட்டு கொலவெறி..?"

" அதத்தேன் எங்க அப்பாவும் சொல்றாருடா... காதலிக்க சொல்லி.... பொண்ணுக்கு எங்கடா போவேன்...?.. இவுரு மட்டும் நல்லா பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொண்ணு பார்த்து, கெத்தா மாப்பிள்ளை ஊர்வலம்லாம் போய் கல்யாணம் பண்ணுவாறு... நான் மட்டும் நானே பாத்துக்கணுமாம்.... நியாயமாவா இருக்கு....?"

" ஓ.. அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆ" எந்த பக்கமா ஓடலாம்னு கண்ணை உருட்டி பார்த்துவிட்டு வடிவேலு ஓட்டமாய்....

Tuesday, February 24, 2009

ஒதுக்கப்பட்ட கல் ‍ பாகம் 4

ஊரோரமாய் ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு....மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து டாடா சுமோவில் ஏற்விட்டு,

" ஏம்மா , வீடு செல்லுமுன் எங்கள் தோட்டம் ஒன்று உள்ளது அஹை பார்த்துவிட்டு செல்வோமா"
என கேட்டாள் நளினா...

" தாராளமாய்.. வீட்டில்தான் பேசணும் என்றில்லை .உங்கள் வேலை எதுவும் தடைபட வேண்டாம்..." என்றாள் புன்னகையுடன்..


வாகனம் சென்ற வேகத்தில் ஜன்னலின் அருகில் அமர்ந்திருந்தவள் முகத்தில் விழும் கூந்தலை கூட மெதுவாக பின்னுக்குத் தள்ளிவிடும் அழகை ரசித்தாள் மலர்..

அவளின் சோகக்கதையை எப்படி ஆரம்பித்துதெரிந்து கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருந்தாள்..


" இப்படித்தான் இருக்கும் நான் வளர்ந்த ஊரும்...ம்.." என பெருமூச்சு விட்டவள்,

" ஆமா நான் எதுல நிப்பாட்டினேன் ..?...ம்.. ஆஹ்ஹ்..ஆமா... நான் பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது,

பள்ளி அலுவலர் ஒருவர் வந்து என் ஆசிரியரிடம் ஏதோ முணுமுணுக்க, அவர் என்னை அழைத்து தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லுமாறு பணித்தார்..


நானும் ஏதாவது நடனப்போட்டி , பாட்டுப்போட்டிக்காய் இருக்கும் என்றே மகிழ்வுடன் சென்றேன்..

அங்கு சென்றதும், என் அண்ணா அழுத முகத்தோடு நின்றுகொண்டிருந்தான்....

உடனே கலவரமடைந்தேன்....


தலைமை ஆசிரியரை கூட கண்டுகொள்ளாமல் ஓடி சென்று அண்ணாவை பிடித்து உலுக்கினேன்...

கண்டிப்பாக அம்மாவுக்குதான் ஏதோ ஆகியிருக்கணும் என்று....பயத்தில்..
.

அவனோ, " அப்பாவுக்கு........."


அதற்குள் தலைமை ஆசிரியர் வந்து என்னை தாங்கிப்பிடித்துக்கொண்டு அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் எல்லாம் சரியாகிவிடும் என என்னென்னவோ சொன்னார்.... எதுவும் அந்த கணத்தில் ஏறவில்லை...

உடனே அப்பாவை பறந்து சென்று பார்க்கணும்போல் இருந்தது...

அண்ணாதான் சைக்கிளில் வைத்து வேகமாய் ஒட்டி சென்றார்...அதுவரை அதிர்ச்சியில் இருந்த நான்,

கத்தி அழ ஆரம்பித்துவிட்டேன்....


பின் மருத்துவமனையில் சென்றதும் அப்பாவை ஐ.சி.யு.வில் வைத்திருந்தபடியால் யாரையும் அனுமதிக்கவில்லை....

என்னுடைய வாழ்வில் தாக்கிய முதல் சோகம் அது...அதன் பின் அப்பாவின் செயல்கள் அனைத்தும் பாதியாக குறைக்கப்பட்டன....


இனி எப்போதும் வரலாம் அதே அட்டாக் என்பதால் மிக கவனமாக இருந்தோம்...


நான் 10ம் வகுப்பு தேர்வு முடிந்த வேளை, அண்ணா கல்லூரி மூன்றாவது வருடம்... அது வரை விட்டு வைத்திருந்த உயிர் எங்களையெல்லாம் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றது...


அம்மா படுத்த படுக்கையில்.....

நான் மேற்கொண்டு படிக்க இயலாத நிலைமை....

அண்ணா, மாமாவின் பட்டரையில் வேலைக்கு சேர்ந்தான்.


இப்பத்தான் பல உறவுகளின் உண்மையான சுயரூபங்கள் தெரிய ஆரம்பித்தது....


பக்கத்தாத்து கிட்டு மாமா கொஞ்சம் மன வளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு என்னை பெண்கேட்டு வந்தார்...


அடுத்த தெருவில் இன்னொருவர் ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டு ரவுடித்தனம் பண்ணும் தன் கடைசி மகனுக்கு

தானே எல்லாம் செய்வதாய் சொல்லி பெருமையாய் பெண் கேட்டார்...


இதெல்லாம் ஏன் என்று பார்த்தால் , என் ஜாதகம் சரியில்லையாம்.... போகிற இடம் அழிந்துவிடுமாம் என பரவலாய் ஒரு பேச்சு.... அதையும் கிட்டு மாமாவே செய்துள்ளார்... அவருக்கு எப்பவுமே என்மேல் ஒரு கண்ணு..


மாமி வெகுளி...

அப்பப்ப எனக்கு உதவி செய்வதாய் அங்கங்கே தொடுவார்... என்னால் இதை யாரிடமும் சொல்ல கூட முடியாத நிலை...


ரோட்டில் நடந்து சென்றால் பார்வையிலேயே எல்லாத்தையும் மேயும் வெறி கொண்ட நாய்களின் பார்வை...

அப்படியே செருப்பை கழட்டி அடிக்கலாமா, கொன்று விடலாமா என்று தோன்றும் அப்போதெல்லாம்...

ம்.. எப்படியெல்லம் வளர்ந்த நான் இன்று பலருக்கு விருந்தானேன்
...." பெருமூச்சு விட்டாள்....


பின் என் மாமா, தன் பெண்ணை என் அண்ணாவுக்கு மணமுடித்துவிட்டு அம்மாவையும் அழைத்து செல்ல எண்ணி,

என்னை இரண்டாம் தாரமாக 45 வயது காரருக்கு மணம் முடித்து வைத்தனர்...


நடக்கின்ற எதையும் எதிர்க்கும் திராணியில்லை எங்க மூவருக்கும்..


திருமணம் ஆனதும்தான் தெரிந்தது பகலில் மூத்த தாரத்துக்கு பணிவிடை செய்யவும், இரவில் அவருக்கு விருந்தாகவும் , சொத்துக்கு வாரிசு பெத்துபோடுவதுமே என் வேலை என்று...

அப்போதுதான் முதன்முதலாக வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்ய எண்ணினேன்...

ஆனால் அதற்கும் கடவுள் வழிவிடாமல், அடுத்த பிரச்னையை தந்தார்...

அடிமை மாதிரி நடத்தியவர்கள் கருவில் குழந்தை சுமக்க ஆரம்பித்ததும் கொண்டாடினார்கள்..


குழந்தை பிறந்து 3 மாதம் என்னிடம் , அதன்பின் என்னிடம் தராமல் பிரிக்க ஆரம்பித்தார்கள்..."


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________

அதற்குள் தோட்டமும் வந்தது......


வேலையாள் ஒடி வந்து கதவை திறந்து விட்டு, இளநீர் வெட்டி தந்தான்...அன்போடு..

சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள் மலர்.... சோலையாக மலையடிவாரத்தில் குளு குளு என்றிருந்தது...


அதை அறிந்தவளாய்,

" இந்த தோட்டத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு கோபித்து சென்றவர் இதன் முதலாளி.." என சொல்லிவிட்டு

விழுந்து விழுந்து சிரித்தாள்...


வியப்புடன் " ஏன் அப்படி "'

எனக்கேட்டாள் மலர்... " நான் அவரை கல்யாணம் செய்ய்வில்லை "என்கிற கோபம்...

அவருக்கு அருமையான குடும்பம் உள்ளது...மேலும் இத்தொழிலுக்கு வந்தபின் பலரும் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு

செல்வதில்லை.. அப்படி ஓர் தாழ்வு மனப்பான்மை உண்டு...

ஒரு 10 வருடமாக கடவுள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன்...

பணம் சம்பாதிப்பதில் வெறியாயிருந்தேன்...

என்னை அனுபவிக்க ஆசைப்பட்டவரையெல்லாம் என் காலடியில் விழச்செய்து அதில் என் கோபத்துக்கு பழி தீர்த்தக்கொண்டேன்...

என்ன செய்தாலும் உள்மனம் அமைதி அடையவேயில்லை....


என் குழந்தையை மட்டும் நல்லதொரு கான்வெண்டில் படிக்க வைத்தேன்....

அந்த பாதிரியார், மிக மிக நல்லவர், அன்பானவர்.........எல்லாருக்கும் உதவி செய்பவர்...


ஆனால் ...................அவருக்கும் .............மாதமொருமுறை..
.. என சொல்லி புன்னகைத்தாள்...


பின் அவசரமாய், " இதையெல்லாம் எழுதிவிடாதேம்மா" என்று கேட்டுக்கொண்டாள்.....


______________________________
__தொடரும்___________________ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 3


மேகமே மேகமே வானிலா தேயுதே..


பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைக்கிறது . ஒரு சினிமா பாடல் ஒலியில்..

இருவரும் பரஸ்பரம் புன்னகைக்கிறார்கள்...

நளினாவோ, தொலைபேசியை அருகில் வைத்து பார்த்ததும் மேலும் புன்னகைக்கிறாள்...

" ஹலோ..."

" "

"ம்.நல்லாருக்கேன்.. நான் அப்புரமா பேசவா.. இங்க ஒரு முக்கிய விருந்தாளி வந்திருக்காங்க..."

" "

" ஹ .. ஹா.. நீங்க ரொம்ப முக்கியமான ஆள்தான் யார் இல்லன்னு சொன்னா...ஹஹ.."

" "
" சரி...மன்னிக்கவும் நானே.. திரும்பி கூப்பிடுறேன் ..."

அதற்குள் மலர் எழுந்து வாயில் அருகில் சென்றாள்....அவளுக்குத்தேவையான தனிமையை தர..

" பரவாயில்லை நீ உட்காரும்மா... நான் அப்புரமா பேசுவதாய் சொல்லியுள்ளேன்...."

" இல் ..........ல நீங்.....க பேசியிருக்கலாமே.."

". அவர் ஒரு பெரிய அரசியல்வாதிமா... ."

" ஓ யாரு.." அவசரமாய் இயல்பான ஆசையில் கேட்டுவிட்டாள் மலர்.

" ஹ.. மன்னிக்கவும் மா .. பேர் சொல்ல மாட்டேன் யாரிடமும்... ஹிஹி.. இது ஒரு வித தொழில் ரகசியம்னு வெச்சுக்கோங்களேன்..."

" ஓ ..மன்னிக்கவும்.. நாந்தான் தவறா கேட்டுட்டேன்.."

".ம். பரவால்ல... இவரை எனக்கு கடந்த 5 வருடமாகத்தான் தெரியும்...எங்க தொகுதிக்காரர்தான்.. ஆனால் என்னுடைய கஸ்டமர் இல்லை.."

" அப்படியானால்..?.."

"அதாவது எங்கள் தொகுதியின் ஏழை மக்களிடம் நான் கொஞ்சம் பாப்புலர்...ஆகையால் அவர்கள் ஓட்டு வேண்டி என்னிடம் வருவார்கள்.."

"ஓஹ் அப்ப வெற்றி பெற்றா சொன்னபடி செய்வாங்களா..?"

" வெற்றி பெற்றா இல்லை... பெறுவதற்கு முன்னாலே, எங்கள் தேவைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு...

இப்படி பல வழிகளில் , மருத்துவமனை, சாலை வசதி , பள்ளிக்கூடம், வேலைவாய்ப்பு , என பல முன்னேற்றம் பெற்றுள்ளார்கள் ஏழைகள்.."

" ஆஹா இது நல்ல யோசனையால்ல இருக்கு... ஆமா ஒருவேளை அவர்கள் அப்படியும் தோற்றுவிட்டார்கள் என்றால்..?"

" ம். அப்படியும் நடந்துள்ளது... ஆனாலும் அவர்கள் பெரிதாக எடுப்பதில்லை.. மக்கள் அவர்களை பாராட்டிக்கொண்டிருப்பதால் அந்த புகழ் போதையே அவர்களுக்கு போதுமானது போல்.."

" ஆச்சர்யமாய் தான் இருக்கு..."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மலருக்கு தொலைபேசி அழைப்பு... இது 3 வது முறையாக...கணவரிடமிருந்து..

" ம்."

"ம்."

" இல்ல இன்னும் முடியலை.."

" "
" ஒண்ணும் பிரச்னையில்லை.. நான் வந்துடுவேன்.." மெல்லிய குரலில் சொல்லுகிறாள்..."


" என்னம்மா உன் கணவரா?.. மணிக்கொருதரம் அழைக்கிறார்... ரொம்ப பிரியமோ?.."

புன்னகைக்கிறாள் பதிலேதும் கூற முடியாமல்...

" கொடுத்து வைத்தவள் நீ என நினைக்கிறேன்..."

அதற்கும் புன்னகை..

" இப்படி ஒருத்தர் எனக்கு கிடைத்திருந்தால் நான் இந்த தொழிலுக்கு வந்திருப்பேனா?.."


ஒண்ணுமே சொல்ல முடியவில்லை மலருக்கு..."ம்." மட்டும் கொட்டினாள்...

எல்லாம் தலையெழுத்து வேற என்ன சொல்ல...

அவளாக குடும்ப கதையை தொடருவாள் என நினைத்தாள் மலர்.. ஆனால் நேரமாகிக்கொண்டே இருக்கிறது...

பாவம் பிச்சையா அண்ணாவும் , சுதிரும் காத்திருப்பார்கள் தோட்டத்தில்...

மீண்டும் இன்னொரு நாள் தொடரலாமா, இல்லை, அவர்களை அனுப்பிவிட்டு இவள் மட்டும் முடித்துவிட்டு செல்லலாமா என யோசனை..

சரி எதற்கும் அவர்களையும் கலந்தாலோசிக்கலாம் என நினைத்தவளாய், விபரங்களை நளினாவிடம் சொன்னாள்...

அவளும் சரி வாம்மா தோட்டத்துக்கு போகலாம் அன அழைத்துக்கொண்டே பக்கவாட்டில் உள்ள தோட்டத்துக்கு சென்றார்கள்..

வண்ண மலர்கள் பூத்து குலுங்க துளசி மாடத்தினை சுற்றி, செடிகளுக்கருகில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து இளநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும்..

போகும்போதே கேட்கிறாள் நளினா, மலரிடம்...

" இந்த மாதிரி பெண்கள் இத்தொழிலுக்கு வர யார் காரணம்னு நினைக்கிறே,,,?"

"என்ன சந்தேகம் .. சமுதாயம்தான்.." என 100% சரியான விடையை சொல்லிவிட்டோம் என்ற திருப்தியில்...

"ம்ஹூம்...ம்ஹூம்.." விரக்தியில் தலையை ஆட்டினாள் நளினா..."

" அப்போ" சட்டென்று நின்றவளாய் ஆச்சர்யத்துடன் அசையாது நளினாவை நோக்கினாள் கண்கள் சுருக்கி...

" குடும்பம்தான்... .."

"கு....டு...ம்..ப...மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" திறந்த வாயை மூடாது நின்றாள் நளினா...

பின் சுதாரித்தவாளாய், அதற்குள் இருவரும் அருகில் வந்ததால் விவரம் சொன்னாள்..

" எனக்கொண்ணும் பிரச்னையில்லைமா.. நான் இந்த வாரம் முழுதும் இங்குதான் இருப்பேன்... எப்போ வேணுமானாலும் தொலைபேசிவிட்டு வரலாம்.."

".. ஓஹ்.. மிக்க நன்றி.. அப்படியானால் நான் சென்றுவிட்டு நாளை அல்லது மறுநாள் வருகிறேன்..."

அதற்குள் சுதிர், மேடம் ஒரு புகைப்படம் மட்டும் பிளீஸ்..: " என்றான்..

" மன்னிக்கவும் சில காரணங்களுக்காக நான் அனுமதிப்பதில்லை..."

அதற்குள் மலருக்கு கோபம் வந்தது.." அவங்கதான் ஏற்கனவே வேண்டாம்னு சொன்னாங்கல்லா." என கண்காளாலேயே கோபத்தில் விழிகளை உருட்டி பேசினாள்..

" அய்யோ இல்லீங்க மேடம் .. உங்க தோட்டத்தை மட்டும்.. அவ்வளவு அழகா இருக்கு இந்த தோட்டம்.. இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா நாங்க இரண்டு பேரும் இங்கேயே தூங்கியிருப்போம்"

என சொல்லவும் எல்லாருமாய் சிரித்தார்கள்....

வேனில் ஏறி செல்லும்போதெல்லாம் ஏதோ வெகுநாள் பழகிய ஒரு உறவை விட்டு பிரிவதாகவே உணர்ந்தாள் மலர்...

அத்தனையையும் அசைபோட்டவளுக்கு " அவள் குடும்பத்தில் நேர்ந்த அந்த கொடுமையான விஷயம் என்ன என தெரிந்து கொள்ளாமல் வந்ததில் தலையே வெடித்துவிடும் போல குழம்பினாள்..

பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டே கணவனுக்கு உணவு பறிமாறும்போதும் தயிர் ஊற்றுவதற்கு பதிலாய் மீண்டும் சாம்பாரை ஊற்ற போனாள்...பின் அவன் " ஏய் என்னாச்சு..." னு சொல் கேட்டு சரிசெய்தாள்..

மறுநாள் அலுவலகத்தில் ஆசிரியர்,

" என்னம்மா சட்டு புட்டுன்னு முடிச்சுட்டு வருவியா, ஊர் கத ஒலக கதையெல்லாம் பேசிட்டு இருந்தியாக்கும்... ஒரு போட்டோ கூடவாடா உனக்கு எடுக்க சாமர்த்தியம் இல்லை..?"

என்று திட்டிக்கொண்டிருந்தார்...

" இந்த பாரும்மா., அவ சொந்த கத சோகக்கதயெல்லாம் வேணாம்.. பத்திரிக்கை வீற்கிற மாதிரி, கவர்ச்சியான தலைப்புல போடணும்.. உள்ளே மேட்டரும் படு கவர்ச்சியா குளு குளுன்னு ஜில்லுன்னு இருக்கணும் " னு

ஆடிக்கொண்டே கையை விரித்து பேசிக்கொண்டிருந்தார்...

" சார் உங்களுக்கும் 3 பெண்.. இருக்குன்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா..." னு மனதிலேயே பேசிக்கொண்டாள்..

" என்ன முணுமுணுக்கிற..?"

" ஒண்ணுமில்ல சார் இத ஒரு தொடராய் எழுதலாம்னு...."

" செய்யி.. தாராளமா செய்யி.. யார் வேணாமுன்னா.. நமக்கு தேவையெல்லாம் நம்ம ரோஜாப்பூக்கள் பத்திரிக்கை வித்தாகணும்.. அவ்வளவுதான்..சம்பளம் தரணூமோல்லியோ?"

என்று ஏதோ பெரிய ஜோக் ஒன்றை சொல்லிவிட்டவர் போல் சிரித்தார்....

குரூரமான எண்ணத்தை வெறுப்புடன் ஆனால் சகித்துக்கொண்டு,

" சரி சார் ,நான் கிளம்புறேன்." என்று கிளம்பி விட்டாள்..

அங்கு சென்றால் நளினா இல்லை... தொலைபேசியிலும் அழைக்கமுடியவில்லை..

" அம்மா உங்களை மருத்துவமனைக்கு வரச்சொன்னார்கள்.. தெரிந்த பெண் ஒருத்திக்கு அவசரமாக சிகிச்சைக்கு...போயுள்ளார்கள்..

உடனே அங்கு சென்றாள் மலர்..

அங்கு கோபமாக திட்டிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்ணை...கூட இரு பெண்களும் மருத்துவரும்...

" எத்தனை முறை சொல்லிருக்கேன் கவனமா இருன்னு...உன் உடம்பு தாங்குமா.. அவனுக அப்படித்தான் சொல்லுவான்க.. உனக்கெங்க போச்சு புத்தி.."


' சரி விடு மீனா... இப்ப என்ன செய்ய ம்உடியும் நான் பாத்துக்கிறேன் .. நீ கவலைப்படாதே" என்றார் மருத்துவர்...

நேரங்கெட்ட நேரத்தில் வந்துவிட்டோமோ என தயங்கி, ஒதுங்கி நின்றாள் மலர்...

கவனித்துவிட்டவள் , " வாம்மா எப்ப வந்த " என மிக அழகாக புன்னகையோடு வாஞ்சையோடு கைபிடித்தாள்.....

" அவங்க "

' ம். அவ என் பழைய காலத்து தோழி..இப்ப மருத்துவர்...:)."*********************************************தொடரும்*****************************************


ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 2

ஆடுவோமே பள்ளு பாடுவோமே...


" என் இயர்பெயர் மீனாட்சி " என சொல்லும்போதே அந்தக் கண்களிலேயே ஒருவித ஆனந்தம் , சிறுபிள்ளைபோல் தெரிகிறது...

யாருக்குத்தான் ஆசை வராது தம் சின்ன வயது வாழ்க்கையின் நினைவுகளை அசைபோடுவது...


" என்னுடைய அப்பா பள்ளியில் ஆசிரியராகவும் சாயங்காலம் கோவில் திருப்பணிகளை செய்பவராயும் இருந்தார்...

நானும் என்னுடைய ஓய்வு வேளைகளில் கோவில் படிகளைக்கழுவி , கோலம் போடும் பணியை செய்வேன்.."

அப்பா எனக்கு பாட்டு கூட அந்தப்படிகளிலேயே கற்றுத்தந்தார்...சுருதி சுத்தமா இருக்கணும் அவருக்கு..நல்ல கனத்த குரலில் பாடுவார், கண்மூடி..

கொஞ்சம் பிசகினாலும் கோபம் வரும்.. அடிப்பதுபோல் கை ஓங்குவாரே தவிர, பின் செல்லமாய் கோபித்துக்கொள்வார்..

நான் பெரிய அளவில் பாட வேண்டும், ஆட வேண்டும் என விரும்பியவர்...

ஒரே அண்ணா... அதிகம் பேசாமலேயே என் மீது பாசமும், பாதுகாப்பும் காட்டுவார்..

உலகமே தெரியாத அம்மா... ஆனா வித விதமா சமையலும் கோலமும் தெரியும்...

அதிர்ந்து பேசினாலே வீட்டின் லஷ்மி கோபிப்பாள் என எண்ணம் அன்னைக்கு...

என் காலில் ஒரு சின்ன முள் குத்தினாலும் துடித்துப்போகும் மொத்த குடும்பமும்...

என் கால்களை மடி மீது எடுத்து வைத்துக்கொண்டு ஆளாளுக்கு கை வைத்தியம் பார்ப்பார்கள்..."

சொல்லும்போதே விழி திரையினில் நீர்,,அதை விழாமல் சமாளிக்கிறாள் நளினா..

" இரும்மா .. குழந்தை அப்படியே அசந்து தூங்கிட்டாள் போல... அவளை கொண்டு அவ அம்மாகிட்ட கொடுத்துவிட்டு வாரேன்..."

" ஓ.. அப்ப இது உங்க பேத்தி இல்லையா..?"

"ஹஹ.. இல்லம்மா.. ஆனா இவ அம்மாவும் எனக்கு பெண்போலத்தான்... ஆந்திராக்காரி.. என்ன வயசு இருக்குங்கிற..?"

சொல்ல முடியாமல் சிரித்து மட்டும் வைத்தாள் மலர்..

" என்கிட்ட வரும்போது அவளுக்கு 16 வயதுதான்மா.."

யாரோ வேலைக்கு என சொல்லி ஏமாற்றி அவளை இந்த இடத்தில் தள்ளி விட்டு சென்றுவிட, தற்செயலாக நான் அவளை சந்தித்தேன்...

தன் வயற்றில் ஒரு குழந்தை கூட இருப்பது தெரியாமல் குழந்தையாக இருந்தாள்...

பொதுவா இப்படி ஏதும் நேராது.. ஆனா நேர்ந்தாலும் கருக்கலைப்புதான்... ஆனல் இவள் விஷயத்தில் அதற்கும் இடம் இல்லாது நாள் கடந்துவிட்டது..

பின் ஒருவழியாக இந்தக்குழந்தையை பெற்றுவிட்டு என்னோடே தங்கிவிட்டாள்.. "

அதற்குள் குழந்தையை தேடி அந்தப்பெண்ணே வந்துவிட ,

அறிமுகமும் செய்து வைத்தாள்...வெட்கப்பட்டாள் குழந்தையாக அவளும்..நேருக்கு நேர் கூட பார்க்காமல்..

கொள்ளை அழகு என்பார்களே அது கொட்டிக்கிடந்தது அவளிடம்.. மிக மெலிந்த தேகம் .. ரோஜாப்பு இதழ்கள்..நீள மூக்கு.. சிரிக்கும்போது மட்டுமே தெரிந்த தெத்துப்பல்..

ஆந்திரா பெண்மணிகள் அழகுதான் என ஒரு நிமிடம் எண்ணிவிட்டு,

ஏன் இந்த சின்ன வயசுல..இப்படியெல்லாம்... அப்ப்டி என்ன வேறு வேலையே இல்லையா என்ன ?.. என கண்களை சுருக்கி , புருவத்தை நெளித்து

பரிதாபப்பட்டு குழம்பிக்கொண்டிருந்த வேளையில், அதையும் படித்தவளாக,

" உன் சந்தேகம் எனக்கு புரிகிறது... அதெல்லாம் பெரிய கதை .. சொல்லுகிறேன் " என்றாள் நளினா..

" நீங்க ரொம்ப புத்திசாலி..."

" ஹஹ.. " இளக்காரமாய் ஒரு சிரிப்பு உதிர்த்தாள்...

" உண்மையாய்தான் சொல்லுகிறேன்.. நான் மனதில் நினைத்தவுடன் சொல்லிவிட்டீர்களே."

" ஹஹ,.. புத்திசாலியாய் இருந்தால் என்ன...அது தேவையற்றதாய் போய்விட்டதே...தேவைப்படும்போது.."என்றாள் விரக்தியுடன்..

" சரி என் கதையை தொடருமுன், என்ன சாப்பிடுகிறாய் சொல்..?என்ன சமைக்க சொல்லட்டும்...வெஜிடேரியனா, இல்ல ?"

" அப்ப நீங்க..எல்லாம் சாப்பிடுவீங்களா..?"

" ஹஹா.. வேறு வழி... அதையெல்லாம் மாட்டேன்னு சொல்லத்தான் முடியுமா இந்த தொழிலில்... முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கும்மா..?"

" அத விட நெறய இருக்கு... குடிக்க சொல்லி வற்புறுத்துவாங்க... சில சமயம் பீடி, சிகரெட்டும் " னு சொல்லும்போதே பல் கடித்து முகம் சுழிக்கிறாள் , மலர்...

" சரி சரி.. இதெல்லாம் நான் இனி சொல்லல...என்ன சாப்பிடுகிறாய் சொல்.."

" இல்ல இல்ல.. பரவால்ல.. நீங்க எல்லாத்தையும் தயங்காமல் சொல்லுங்க.. நான் நிருபராய்தானே வந்துள்ளேன்" என சமாளிக்கிறாள்..

" சரி உனக்கும் சமைக்க சொல்லிவிட்டு வருகிறேன்... அதுவரை இந்த ஆல்பத்தை வேணா பாரேன்.."

" இல்லீங்க.. வேண்டாம்.. வேண்டாம்.. நான் அலுவல் திரும்பணும்.. வேறு அவசர வேலை ஒன்றுள்ளது என தப்பித்தாள்..

" ஓஹ்.. அப்ப எங்க வீட்டிலெல்லாம் சாப்பிட மாட்டீங்க அப்படித்தானே.." புன்னகையுடன்..

" அய்யோ அப்டிலாம் இல்லீங்க... மன்னிக்கவும் கண்டிப்பா இன்னொருமுறை சாப்பிடுகிறேன்.."

உடனேயே உள்ளே சென்று தட்டில் வீட்டில் செய்யப்பட்ட கைமுறுக்கும், கொஞ்சமாய் பால்கோவாவும் எடுத்து வந்தாள்..

கூடவே குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஆரஞ்சு பழச்சாற்றையும் எடுத்து ஒரு கண்ணாடி தம்ளரில் மிக பொறுமையாக ஊற்றி எடுத்து வந்தாள்..

அவள் செய்யும் ஒவ்வோரு செயலிலும் ஒரு அழகு இருந்தது.. கூடவே மென்மையும்...

"சரி தொடருகிறேன்... இப்படி செல்லமாய் நான் வளர்ந்து , நான் வயதுக்கு வரும்போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது...

அண்ணா பிளஸ் டூ... நான் ஏழாம் வகுப்பு...நான் வௌயதுக்கு வந்த சேதி கேட்டு ஊருக்கே சாப்பாடு போட்டு கொண்டாடினார் என் அப்பா."

எல்லோருமே அதிசயித்தார்கள், இவருக்கு ஏன் இந்த டாம்பீகம்னு..."

" ஏன் நல்லதுதானே செய்கிறேன் ஊர்ருக்கு சாப்பாடு போடுவதற்கு ஒரு காரணம் என்பார் அப்பா..

நான் என் விடுமுறை முடிந்து பள்ளி சென்றுவிட்டு வந்தபோது என் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்

பக்கத்தாத்து கிட்டு மாமாவும் அப்பாவும்.. அப்பா முகத்தில் களையே இல்லை..

அம்மாவோ ஏதோ பறிகொடுத்ததுபோல்..மாமாதான் கவலையே வேண்டாம் ஹோமம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல்

படுத்திக்கொண்டிருந்தார்..

ஆனாலும் அப்பாவுக்கு முன்புபோல் எதிலும் ஆர்வமில்லை..அப்பப்ப என் வீணையை வாசிக்கச்சொல்லி கேட்பார்.. ஆடச்சொல்லி ரசிப்பார்..

அதையும் கொஞ்ச நாளில் எரிச்சலடைய தொடங்கினார்..

அண்ணா திட்டிக்கொண்டிருப்பான், ஜாதகம் எல்லாம் பொய் என்று.. எனக்கு ஒன்றுமே தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்..

ஆனால் எல்லாமே விளங்க வைக்க வேண்டிய நாள் மறுநாள் நான் பள்ளியிலிருக்கும்போதே வந்தது............


***************************************தொடரும்*******************************************

Saturday, February 14, 2009

ஒதுக்கப்பட்ட கல்....பாகம் 1( பெரியவர்களுக்கு மட்டும்)

மலர்விழிக்கு காலையில் எழுந்ததுமே பயம் தொற்றிக்கொண்டது... கணவனிடம் சொன்னாலும் திட்டு அவளுக்குத்தான்..

இந்த மாதிரி சமயங்களில்தான் தன் முட்டாள்தனமான ஜர்னலிச பிடிவாதத்தை நொந்துகொள்வாள்...

சில சமயங்களில் சேலஞ்சிங்காக இருக்கும் .. சில சமயம் சின்ன விஷயம் கூட மலைபோல பிரச்னைகளை கிளப்பி விடும்...எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் னு தெரியாது...எப்பவும் துணைக்கு வரும் அண்ணாமலையும் தேர்தல் செய்திகள் சேகரிக்க மதுரை சென்றுவிட்டான்...

மாட்டேன் , முடியாது என்கிற சொல்லே ஆசிரியருக்கு பிடிப்பதில்லை...

" சம்பளம், பாராட்டுன்னு மட்டு வாங்கி குமிக்கிறீங்க...கொஞ்ச‌ம் கஷ்டப்பட்டாதான் என்னவாம்...??"

ஆரம்பிச்சுட்டாரா?.. இனி இவர நிப்பாட்ட முடியாது...


" சரி போறேன் சார்.. அட்ரஸ சொல்லுங்க.." எரிச்சலோடு

" நீ ஒண்ணும் சிவப்பு விளக்கு பகுதிக்கு போகலம்மா... அதுல வேலை செய்யிற ஒரு பாலியல் தொழிலாளிய அவ வீட்டுல சந்திக்கிற அவ்வளவுதான்..."

ம். எவ்வளவு எளிதா சொல்லிட்டாரு?.. எப்படி இருப்பாளோ?. , என்னல்லாம் பேசுவாளோ, யாரெல்லாம் அங்கு இருப்பாங்களோ... னு மனம் ஒரு அருவருப்பான கற்பனை மட்டுமே கொள்கிறது...

சரி கேட்க வேண்டிய 10 கேள்விகளை, சட்டு புட்டுன்னு கேட்டுட்டு ஓடி வந்துட வேண்டியதுதான்.. கூடவே கேமராமேன் சுதிர் வருகிறார்.. ஓட்டுனர் பிச்சையா அண்ணன் இருக்கிறார்.

கணவனிடம் மேலோட்டமாக மட்டும் சொல்லிவிட்டாள்., பயத்தை வெளிப்படுத்தாமல்...


" இதெல்லாம் உனக்கு தேவைதானா?... சொன்னா, என்னவோ ஆணாதிக்கம் ரேஞ்சுக்கு கோச்சுப்ப... என்னமோ பாத்து நடந்துக்கோ...உன் வேலையில் நான் தலையிடவில்லை...எதுன்னா தேவைன்னா தொலைபேசியில் கூப்பிடு.." கொஞ்சம் வெறுப்பாகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..


எந்தவித மேக்கப்பும் போட்டுக்கொள்ளாமல், மிக சாதாரணமான சுடிதார் ஒன்றை போட்டுக்கொண்டு , சின்ன நோட்டுபுத்தகமும், பேனாவும் , ரெக்கார்டரையும், எடுத்துபோட்டு கைப்பையுடன் கிளம்பி விட்டாள்..


அந்த தெருவில் சென்று நளினா வின் அட்ரஸ் கேட்கும்போதே, பெண்கள் முகச்சுழிப்புடனும், ஆண்கள் கேலிச்சிரிப்புடனும் வழி சொன்னார்கள்...

தொலைபேசியிலும் நளினாவிடம் உறுதி செய்துகொண்டு அவள் வீட்டருகே வாகனத்தை நிப்பாட்டிவிட்டு பதட்டத்துடனே, அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினாள் மலர்விழி..


அழகான தோட்டத்தோடு கூடிய வீடு.. மிக அருமையாக கேரளாவின் வெள்ளை நிற புடவை மஞ்சள் ஜரிகையோடு ,உடுத்திக்கொண்டு பூஜையை முடித்து வெளிவந்தாள் நளினா...பேருக்கேத்தாற்போல் மிக நளினமாகவே இருந்தாள்....

சுருட்டையான குட்டைமுடி...அதி சொறுகிய கொஞ்சம் கதம்பம்.. நெற்றியில் திருநீறு.... மஞ்சள் நிறம்.. வயது 42 என்று கேள்விப்பட்டாலும் 30 வய்துக்குரிய தோற்றமும் சுறுசுறுப்பும்...விழிகள் மட்டும் கலங்கியதுபோல், கொஞ்சம் சுருக்கம் விழுந்தாலும் , அழகாக தீட்டிய கண்மை அதையும் மறைத்தது...முத்துப்பல் வரிசை...இயற்கையோ, செயற்கையோ எனும் சந்தேகம் எழும் அளவிற்கு...குறை என்று பார்த்தால் அந்த பெரிய மூக்கு மட்டுமே...அதுவும் காந்த விழி கண் பார்வையில் அடிபட்டு போயிற்று... கிட்டத்தட்ட ஒரு நடிகையை ஒத்து இருந்தாள் அவள்..

வாய் நிறய வாஞ்சையுடன்" வாங்க , வாங்க " என உள்ளே அழைத்தாள்....

பிச்சையா அண்ணாவை மட்டும்" வாங்கண்ணா " என உரிமையோடு கூப்பிட்டதும் கொஞ்ச‌ம் கூச்சமே பட்டார்...

பக்கத்து அறையில் சில பெண்கள் அமர்ந்து ஏதோ கைத்தொழில் செய்துகொண்டிருந்தார்கள்....

அவர்களிடம் " இதோ அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என சொல்லிவிட்டு, அடுக்களைக்கு சென்று,

" தாயம்மா, காபியும் , பலகாரமும் கொண்டு வாருங்கள், 3 பேருக்கு " என கட்டளையிட்டாள்..


அதற்குள் கேமரா கண்களை சுழல விட்டாள் மலர்விழி... என்ன ஒரு நேர்த்தியில் அலங்கரிக்கப்பட்ட வீடு...

எங்கு பார்த்தாலும் கடவுள் படம் , குடியிருக்கும் ஒரு ஆலயம் போல....மென்மையான வீணை இசை ஒலிக்கிறது ....மேசையில் வெண்கல சட்டியில் தண்ணீரில் மிதக்கவிட்ட ரோஜாவும் அரளியும்....பக்கத்து அறையிலிருந்து வருகிறது சாம்பிராணி, பத்தியின் மணம்...மூலையில் வெண்கல பானையில் வைக்கப்பட்ட செடிகள்... அதனருகிலேயே பட்டுத்துணிமேல் வைக்கப்பட்ட வீணையென்று... இது உண்மையிலேயே ஒரு பாலியல் தொழிலாளியின் வீடுதானா?..

தொலைக்காட்சியின் பெட்டிக்குமேல் பெரிதாக பிரேம் செய்யப்பட்ட புகைப்படத்தில் நளினாவும், அவள் குழந்தையும்..அணைத்துக்கொண்டு..சின்ன வயதில்...

பின் இன்னொரு புகைப்படம் அவள் பிள்ளை பட்டம் வாங்குவதாய்... அடுத்து ஏதோ வெளிநாட்டில் ...

" காபி சாப்பிடுங்க " என அவள் கையாலேயே எல்லோருக்கும் வழங்கினாள் ...அன்பொழுக...

எப்படி ஆரம்பிப்பது என்று கூட தெரியவில்லை...

தயவுசெய்து புகைப்படம் வேண்டாம் என்றதும், சுதிரும், பிச்சய்யா அண்ணனும் எழுந்து வெளியே சென்றுவிட ,

மலர்விழி கேள்விகளை ஆரம்பிக்க சங்கோஜப்பட்டுக்கொண்டிருக்க,


புன்னகையுடன்,

" என்னம்மா கேக்க போறீங்க... ரொம்ப தயக்கமா.... சரி நானே ஆரம்பிக்கிறேன்.."

என மிக சகஜமாக கணீரென்ற குரலில் ஆரம்பித்தாள்.... அதற்குள் இரண்டு பொடிசுகள் சிறுமியை துரத்திக்கொண்டு ஓடிவர

" ஆச்சி" னு கத்திக்கொண்டே மடியில் வந்து முகம் புதைத்தாள் சிறுமி....அப்படியே வாரி தோளில்போட்டுக்கொண்டாள் நளினா......

" நான் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் . என் இயற்பெயர் மீனாட்சி..." என விழிகள் விரிய மிக உற்சாகமாக பேச தொடங்கினாள்..


***************************************தொடரும்************************************************
பொது வாழ்த்து..

நல்லுலகம் படைத்தவனே!
நலமளித்த இறையவனே!!
சொல்லெடுத்து நான்வணங்க
சுகமளிப்பாய் தமிழாலே!


பாலோடு பண்பாட்டை;
பாசத்தை அளித்(த) தாயே
வாழ்வதனை எளிதாக்கி
வழிகாட்டும் தந்தையவர்
கலை,கல்வி , ஒழுக்கத்தை
கற்பித்த ஆசான்கள்
இன்பத்தில் துன்பத்தில்
இணைந்திட்ட நட்புகளே

அன்புக்கு காட்டாக
அகமகிழும் உறவுகளே
எங்கெங்கே போனாலும்
இனிமைக்குத் தமிழேயாம்
அனைவருக்கும் என்வணக்கம்
அழகான முகமன்தான்
கவியரங்கத்தலைவருக்கு நன்றி

கவியரங்க கச்சேரியில்
கருத்தாய் கலகலப்பூட்டி
ஆளுக்கொரு கவிபடைத்து
அசத்திய அசாத்திய ஆசாத்(ஜீ)
வாழ்த்திடவே தடைபோட்டு
வாய்ப்பினையே பறித்துவிட்டீர்
வணங்கி ஆசிபெற வர‌
வரவேற்று வழிநடத்துவீர்..
ஆனைகள் பெருமிதத்தில்
அசைந்தாடி களிக்குமிங்கு
பூனைக்கொரு மிடங்கொடுத்தீர்
பூரித்தேன் நன்றி ஐயா..

சபையோர்க்கு வணக்கம்..

மொக்கையே பிரதானமென
மொழிபழக கலந்துவந்தேன்
அரவணைத்தீர் அன்பொழுக,
பயிற்றுவித்தீர் பண்புடனே.
கவிதையை சமர்ப்பிக்க
கவியரங்கில் வாய்ப்பளித்தீர்
பயத்துடனே எண்ணத்தை
படைத்துவிட்டேன் சபையினிலே
பக்குவமாய் பிழைதிருத்தி
படிகளேற துணைசெய்வீர்..இனி வரும் நாளில்.....அருமையா தூங்குற பச்சபுள்ள‌
அழவிட்டு பள்ளி போவதென்ன.?
அலுவலகம் சென்ற அம்மாவோ
அவசரமாய் வருகின்ற‌ அவலமென்ன ?

நிதானமாய் ஒதுங்க இடமில்லை
நிழல்தரும் மரமோ செத்தொழிந்ததென்ன?‌
நித்தமொரு கட்சி கூட்டமுன்னு
நிலமுழுதும் குழியாய் ஆனதென்ன..?

அரசாங்க‌ வேலை செய்வதற்கே
அட்டைபோல் லஞ்சம் உரிவதென்ன?.
காசு பணமாய் காண்பித்தால்தான்
கட்டையுமிங்கு வேகுவதென்ன?

கன்னி தான திருமணத்தினிலே
கற்போடு பண‌ம் விலையானதென்ன?
சன்னிதான பூஜையிலுமிங்கு
சல்லிக்காசே பெரிதானதென்ன?

பொக்கிஷமான பெரியோரெல்லாம்
பொதிகளாகவே போன பொறுப்பென்ன?
வெட்கி வேதனை பட வேண்டியதும்
விதியாலே கலாச்சாரமானதென்ன ?

மதிக்க வேண்டிய மத சட்டமிங்கே
மதம்பிடித்து சின‌ வெறிகொண்டதென்ன?
சதிகார கும்பல் மும்பையிலே
சகோதரனை தொலைத்த‌ அவலமென்ன

இனமொன்று இழிநிலை அரசியலால்
இலங்கையில் இன்று அழிவதென்ன
தினம் உழைத்திட்ட விவசாயியும்
தற்கொலையையே நாடுவதென்ன ?..

பிரச்னை, துன்பம் பலவிருந்தாலும்
பிரிந்தே விலகிநின்றால் முடிவென்ன?
அன்பும் மனித நேயமுமே எம்
மதமாய் வாழ்ந்திட்டால் பயமென்ன?

இனிவரும் நாளில் பிறர்வாழ்வையுமே
தன்வாழ்வாய் நினைத்தால் தப்பென்ன?
துன்பத்தை இன்பமாய் மாற்றிடவே
துணிந்தே செயல்ப‌ட்டால் துயரென்ன?

சுற்றியுள்ளவர் வாழ வைத்திட்டால்
சுகமே பெற்றிடுவோம் வேறென்ன?
சுற்றுகின்ற பூமியை சுற்றமாக்கினால்
சுதந்தர வாழ்வினிமேல் தூரமென்ன?


முதியோர், குழந்தை பாசத்தையும்
முழுதுமே பயன்பட்டிட வழியென்ன?
குடும்பத்தின் சொத்தே அனுசரிப்பில்
கூடியே வாழ்ந்திட்டால் பழியென்ன?

அரசியலும் ஒருவித நல்தியானமே
ஆழம் கண்டுவிட்டால் வெறுப்பென்ன?
நற்செயல்கள் தீயாய் பரவிவிட்டால்
வன்முறை ஒழித்திடலாம் தோல்வியென்ன?