Wednesday, August 11, 2010

பொண்ணுகளே இப்படித்தான் - குட்டிக்கதை





















"ரகு , என்னோட நண்பர் நவீன் சென்னைல இருக்கார். கூட படித்தவர் சொல்லிருக்கேனே.
அவர் நிச்சயமா உனக்கு ஒரு வேலை வாங்கி தரமுடியும்.."

" கூடப்படிச்சவங்கெல்லாம் இன்னுமா நியாபகம் வெச்சிருப்பாங்களா சுசி.?"

" எல்லாரும் போல அல்ல இவர். ரொம்ப உதவும் மனப்பான்மை அதிகம்.."

-----------------------------------------------------

" சார் கவலைய விடுங்க.. ஒரு வேலை வாங்கி தர முடிஞ்ச எனக்கு உங்க இருவரின் கல்யாணத்த நடத்த முடியாதா?."

" அப்படி இல்ல ரொம்ப தொந்தரவு செய்றேனோ னு.."

" சுசிக்காக என்ன வேணா செய்யலாம் சார்.. கடைசி வருஷம் புராஜக்ட் நேரம் என் அப்பாக்கு முடியாம போச்சு..
அப்ப சுசிதான் இழுத்து போட்டு என் புராஜக்டையும் முடிச்சு தந்தா. ரொம்ப குடுத்து வெச்சவங்க சார் நீங்க."

" ம். புரியுது.. ஆனா வீடு பாக்கணும் , அது இதுன்னு பெரிய வேலைகள் இருக்கே.. இரண்டு வீடுகளும் பகை எங்க காதலுக்கு ."

" கவலைய என்கிட்ட விடுங்க சார். நம்ம பசங்க இருக்காங்க.. எள்ளுன்னா எண்ணெயா நிப்பாங்க.. நீங்க சுசிய வர சொல்லுங்க,."

-------------------------------------------------

" சுசி நீ இப்போதைக்கு என் அக்கா வீட்டில் இரு.. எல்லாம் சரியானதும் நானும் சாரும் வந்து அழைத்து செல்கிறோம்."

" கஷ்டமா இருக்கு நவீன். எங்களால உனக்கு அதிக சிரமம்.. "

" ஏன் இப்படி தனித்து பேசுற சுசி.? . நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. உனக்கு செய்யாம யாருக்கு செய்ய.?"


" சார் , இந்தாங்க 20,000 ரூபாய் .. சம்பளம் வரும் வரை சமாளிங்க..மேற்கொண்டு ஏதும் வேணுமுன்னா தயங்காதீங்க.."

சுசிக்கு
கண்ணீர் வந்தது..ரகுவோ பிரமித்து போய் நின்றான்.

----------------------------------------------

" அழகான வீடு.. நவீன் நல்ல வீடா செலக்ட் செய்திருக்கான்... பாருங்க எனக்கு செடிகள் பிடிக்கும் னு எத்தனை செடி வாங்கி வெச்சிருக்கான்.?"


" இங்க பாரு .. சமையல் அறையில் பாத்திரங்கள் கூட..."


"ஆமா சுசி . கட்டில் மெத்தை , மேசை , நாற்காலி கூட அவனே வாங்கிட்டான் , நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல.."

" என்ன தங்கமான மனசு பாருங்க.. ஒரு கல்லூரி தோழிக்காக இத்தனை மெனக்கெட முடியுமா யாராச்சும்..? ரியலி ஐயம் ப்ரவுட் ஆஃப் ஹிம்.."

" ம்... சுசி அப்புரம் ஒரு முக்கியமான விஷயம்.."

" சொல்லு ரகு."


" ம். சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. இனி நவீன் கூட பேசுவதை குறைச்சுக்கோ.."

" என்ன சொல்ற ரகு.? "

" ஆமா.. இதுநாள் வரை நீ பழகியது வேற . இனி நீ என்னோட மனைவி .."

" சோ . வாட்.. என்ன பேசுற ரகு.. இவ்வளவு செஞ்சவனுக்கு நான் நன்றியோட இருக்க கூடாதா?"

" நன்றியோட இருக்க , நான் இருக்கேன்.. ஆயுசுக்கும் நண்பனா. ஆனா நீ மட்டும் குறைச்சுக்கோ னு சொல்றேன்."

" புரியல ரகு.. "


" நீயும் நவீனும் நட்பா இருப்பது எனக்கு பிடிக்கல னு புரிஞ்சுக்கோயேன்.. விளக்க முடியாது " சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

----------------------------------------------------------------------------------

" சார் எப்படி இருக்கீங்க.. வீடுல்லாம் புடிச்சிருக்கா.?..
"

"ம். ரொம்ப நன்றி நவீன். நீங்க இல்லாட்டி எங்களால ஒண்ணுமே செய்திருக்க முடியாது.. வாழ்நாள் பூரா மறக்க மாட்டேன் இந்த உதவியை.."


" என்ன சார் பெரிய வார்த்தைல்லாம் சொல்லிட்டு... ஆமா சுசி எங்க.? . நல்லா ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தேன்.."

" ஓஹ் . அதுவா.. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் நவீன்.. "

" சொல்லுங்க சார்.."

" அது வந்து.. வந்து.. இப்ப கல்யாணம் ஆனதும் சுசி கொஞ்சம் தனிமையை விரும்புறார்போல தெரியுது..ஒருவேளை அவ பெற்றோரை பிரிந்ததால் இருக்கும்.."


" இருக்கும் இருக்கும் சார்..நல்லா பாத்துக்கோங்க அவளை .. நான் வரேன் சார்.."

" இருங்க நவீன் .. நீங்க எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான் இனி.. நாம சந்திப்போமே அலுவலகத்தில்;."


"பரவால்ல சார்.. ஏதாச்சும் உதவின்னா கூப்பிடுங்க "

----------------------------------------------------------

கனத்த
மனதோடு " இந்த பொண்ணுங்களே இப்படித்தான் " னு மனதுள் சொல்லிக்கொண்டே வெறுப்பாய் சென்றான்..


உதிர்ந்த
ஒரு துளி கண்ணீரை துடைத்தவளாய் நவீன் செல்வதை மாடியிலிருந்து பார்த்தாள் சுசி..