Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.





செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..




செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்