Friday, September 24, 2010

புர்கா போட்ட பெண்கள்.



















இந்த செவ்வாய் அன்று ஏற்கனவே எழுதியிருந்தேன் ஐடிசி க்கு சென்று அகதிகளை சந்தித்ததாக..


10 மணிக்கு வரிசையில் நின்று படிவம் நிரப்பி கொடுத்துவிட்டு அமர்ந்தால் எதிரே 2 வட இந்தியர் , ஒரு பாகிஸ்தான் பெண்மணி , 3 இஸ்லாமிய தாய் பெண்கள் ( கல்லூரி செல்லும்

பெண்களாயிருக்க கூடும்.. )

நான் சுவற்றை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு பார்வையை செலுத்த வேறு வழியில்லை.. இவர்கள் 6 பேரையும் மாற்றி மாற்றி பார்த்தே ஆகவேண்டிய நிலைமை,..


அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கணும்..

அந்த பாகிஸ்தான் பெண்மணி 6 அடி உயரம் , மெலிந்த தேகத்தோடு மிக அழகாக ஒரு மாடல் போல் இருந்தார்.. இஸ்லாமியர் என்பதன் அடையாளமாக

தலையில் துப்பட்டா மட்டுமே அனிந்திருந்தார்.. அது அவருக்கு மேலும் அழகூட்டியது என்றே சொல்லலாம்..

கால் மேல் கால் போட்டு மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.. ( கம்பீராமன பெண்மணிகள் எப்போதும் என்னை கவர்ந்திடுவார்கள்.:) )

கால் , கை விரல்களில் மிக பொருத்தமான நகப்பூச்சுகள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள எப்படி நேரம் செலவழிப்பார்கள் என்பது எப்போதுமே நான் வியப்பதுண்டு...

நான் செய்யாவிட்டாலும் அதை முழுமனதாய் ரசிப்பேன்.. இங்கே பார்க்கும் சில தாய் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்பவமுண்டு..

கணவர் தான் " சைட் அடித்தது போதும் வா." என அழைத்து செல்லணும் அத்தனை அழகு பதுமைகள் பொருத்தமான அலங்காரத்தோடு , ஆப்பிள் கன்னங்களோடு

கன்ணை கவர்ந்ததுண்டு.. ( நல்லவேளை ஆணாய் பிறக்கவில்லை :)) ).. அதே போல திருநங்கைகளும் அத்தனை அழகு இங்கே...


அதே போல சிறுமிகளும் அவர்கள் உடுப்புகளும் தலை அலங்காரமும்..எப்போதும் ரசனைக்குறியவை..

காலில் அணியும் காலணியில் கூட பாருங்கள்.. பெண்களுக்கென்றால் அதில் கல் பதித்து , அழகான சம்க்கி , பூக்கள் கொண்டு அழகழகான வேலைப்பாடுகளுடன் .

ஒரு அலுவலில் , ஏன் காவல்துறை , நீதிமன்றம் , மருத்துவமனை போன்ற வெற்றிடமாக இருக்குமிடத்தில் கூட ஒரு பூந்தொட்டியையோ, பச்சை இலை செடிகளையோ வைத்து பாருங்கள்..

மனதுக்கு எத்தனை இதம்...

ஒரு பிரச்னையின் போது நாம் கேட்கும் மெல்லிய இசை?.. நல்ல திரைப்படம்./. கடற்கரையில் காலார நடை..?.

இப்படி ரசனைகள் நம் மனதினை மாற்றும் வல்லமை படைத்தவை..

"A THING OF BEAUTY IS JOY FOREVER " John Keats சொன்னது எத்தனை நிஜம்.?


அழகு படுத்திக்கொள்வது , அழகை ரசிப்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை வைத்து மட்டுமே எடைபோடுவதுதான் தவறான விஷயம்..

இப்படி இருக்க , எனக்கு மிக வேதனை தந்த விஷயம் என் முன்னால் அமர்ந்திருந்த அந்த 3 இஸ்லாமிய வாலிப பெண்கள்..

தலையில் வெள்ளை முக்காடு..

உடம்பு முழுதும் கருப்பு அங்கி போன்ற உடை..

கைகளுக்கும் , விரல்களுக்கும் கூட கருப்பு துணியால் மூடி, கால்களுக்கு சாக்ஸ் போட்டு கருப்பு ஷூ போட்டு மூடி...:(

கண்களை தவிர வேறெதுவும் காணமுடியாது..

ஏற்கனவே தாய் மக்கள் பேசுவது சத்தமே கேட்காது..ரகசியம் பேசுவது போல மிக மென்மையான சங்கீத மொழியில் பேசுவர்..

இப்ப அங்கியினுள் பேசுவது ?.

அதில் ஒரு பெண் உணவருந்த ஆரம்பித்தார்.. கை விரல் வரை இருந்த அந்த தலை முக்காடானது , அவர் சாப்பிட மிக இடைஞ்சலாக வந்து வந்து விழுது சாப்பாட்டின் மேல்..

அதை பொருட்படுத்தாது ஒரு கவளம் எடுத்து வாயில் போட மற்றொரு கையால் அந்த துணியை பிடித்துக்கொள்ள , இப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவர் செய்வது பார்க்க கஷ்டமாயிருந்தது..

தண்ணீர் குடிக்கவும் அந்த பாட்டிலை துணிக்குள் எடுத்து சென்று கஷ்டப்பட்டே குடிக்கணும்..

அவர்களுக்கு அது பழகிப்போன ஒன்றுதான் இல்லையென சொல்லவில்லை..

ஆனால் இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பழக்கவழக்கத்தை வைத்து பெண்களை கஷ்டப்படுத்துவதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது..

எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.

ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் கருப்பு அங்கியில் முடங்கி விடுவார்.

எத்தனை எத்தனை ஆசைகளை விருப்பங்களை மற்றவருக்காக அவர் இருக்கும் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது?..

இது போல எத்தனை பெண்கள் தம் ஆசைகளை துறந்து துறவி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளார்கள்..?

கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..

இதில் திருமணம் செய்து வைத்துவிட்டு வெளிநாடு செல்வார் கணவர்.. , ஆயுசுக்கும் தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் காதல் பாட்டுகளை கற்பனை செய்துகொண்டு

2 ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கொண்டு , ஒரு நாடகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு...?????.. நல்லபெயர் எடுக்கவா?...

கடவுள்னு ஒருத்தர் இருப்பாரென்றால் அவருக்கு நம் மனம் புரியாதா?.. மனதளவில் நாம் சரியாக இருந்தால் போதாதா?..

இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே அப்பெண்களில் ஒருத்தி வந்து தாய் பாஷையில் அந்த படிவம் நிரப்பிட உதவி கேட்டார்..

அப்பதான் அந்த கண்களை சந்தித்தேன்.. அதிலேயே தெரியுது அவள் தாழ்ச்சி , புன்னகை...

உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?..

அப்படியானால் இஸ்லாமிய பெண்ணை தவிர மற்ற பெண்களை ஆண்கள் பார்க்கலாம் என்ற சமரசமா?..

இல்லை மற்ற பெண்களை பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்களா?..

கண்களுக்கு கடிவாளம் போடலாம் ... மனதுக்கு... கற்பனைக்கு எப்படி போடுவது?..

யாரை ஏமாற்றுகிறோம்?.. யாருக்காக...

ஒரு இஸ்லாமிய பெண்ணை என்னை போன்ற மற்றொரு பெண் ரசித்து பார்க்க கூடாதா?..

ஒரு பாகிஸ்தான் பெண்மணி கம்பீரமாக இருப்பதாய் மகிழும் நான் , எனக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளும் நான் இப்படி புர்காவினால் எத்தனை பெண்களை இழந்துள்ளேன்.?

பாராட்டு எல்லோருக்குமே பிடிக்கும்.. புர்காவுக்குள் புழுங்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்காய் இருக்கணுமா?..

நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...

உலகில் அடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றமோ, புரட்சியோ வருமென்றால் அது இந்த புர்காவிலிருந்து விடுதலையாக இருக்கணும் என்பது என் பேராசை..

நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..

நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..



வரணும்.. வரும்...


யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள்..

ஆனால் அதைவிட நான் அதிகம் காய்ப்படுகிறேன் ஒவ்வொரு முறை புர்காவினுள் ஒரு கைதியாக ஒரு பெண்ணை , சக மனுஷியை பார்க்கும்போது...:((




படம் : நன்றி கூகுள்..

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 4












Add Image

























மூன்றாவதாக பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..


3. பழிவாங்குதல் /வஞ்சம் தீர்த்தல்.


நான்கவனிக்கப்படவில்லை ( கவன ஈர்ப்பு வேலை செய்யவில்லை ) .. என் அதிகாரமும் பிரயோசனப்படவில்லை.. ( ஆளுமை எடுபடவில்லை ) எனும்போது கோபம் அதிகமாகி அடுத்த கட்ட நடவடிக்கையாக பழிவாங்குதல் / அல்லது வஞ்சம் தீர்த்தலில் வந்து நிற்பார்கள்..


அலுவலில் தாம் எதிர்பார்த்த புராஜெக்டில் தாம் இணைத்துக்கொள்ளப்படாவிட்டாலோ , இல்லை எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலோ இந்த நடவடிக்கை எடுக்க துணிவர்.
தம் மேல் உள்ள குறை என்ன என ஆராயாமல் , தன் ஈகோ பாதிப்படைந்துவிட்டதாய் எண்ணி பழிவாங்கினால் மட்டுமே பாடம் படிப்பிக்க முடியும் என மிக தவறான எண்ணத்தை ஆயுதமாக்கிக்கொள்வர்.


மாமியார் மருமகள் உறவிலும் எப்போதோ நடந்த பிரச்னையை மனதில் வைத்து மருமகளை தண்டிப்பது..
அதே போல மருமகளும் வயதான மாமியாரை தண்டிப்பது.. தம்பதியினர் இடையே பிரச்னைக்கு முக்கிய காரணமே ஈகோதான்..

ஆனால் தாம்பத்யம் என்ற மிக சிறந்த மருந்தானது இந்த ஈகோவை தவிடுபொடியாக்கிவிடும்..


இல்லற வாழ்வில் இருவர் மனமொத்து காமம் கொள்ளும்போது அங்கு நான் பெரியவன்/ள் நீ சின்னவன்/ள் என்பதற்கே இடமில்லை..
இருவரும் அடுத்தவரை திருப்தி படுத்துவதே முதன்மை என்ற எண்ணம் அங்கு மட்டுமே வருவதால் அங்கே ஈகோவுக்கு இடமேயில்லை..

அதனால்தான் எத்தனை பிரச்னை வந்தாலும் , சில நேரம் சண்டை போடுவதை பார்த்தால் அடுத்த நொடியே பிரிந்தால்தான் உண்டு போல என பார்ப்பவருக்கு தோன்றினாலும்,
தாம்பத்யமானது எல்லாவற்றையும் பொய்யாக்கிவிடும்..

சண்டைகள் வரலாம்.. அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்தும் கொள்ளலாம்.. ஆனால் ஒருபோதும் தாம்பத்யத்தை தள்ளி போடவோ இடைவெளி விடவோ கூடாது..


ஆனால் இதிலும் இடைவெளி வந்துவிட்டால் இந்த பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துக்கொண்டே செல்லும்..


ஒரு துணை அமைதியாக ஒதுங்கி சென்றாலும் அடிபட்டவர்/பாதிக்கப்பட்டவர் , அவரை சீண்டிக்கொண்டே இருப்பார்..
பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்..

" நீங்க அன்னிக்கு அப்படி செய்தீங்கல்ல.. அதுக்கு பலனா நான் இன்னிக்கு இங்கே இப்படி செய்கிறேன்.."


அவர் மறந்தே போயிருக்ககூடும் என்று என்ன செய்தார் என்று.. ?..

சரி மறந்துடு .. அத விட்டு வெளியே வா னு சொன்னா பிடிவாதமா வர மறுப்பார்கள்.


" உங்க அண்ணன்/அப்பா என்னை அவமதித்தார் ..." னு கணவனும் ,

" உங்க அம்மா என்னை கொடுமை படுத்தினாங்க . அதனால் உங்க ஊர் பக்கமே வர மாட்டேன் னு அமனைவியும் தத்தம் துணையையே பழிவாங்குவர்..


இதில் பாதிக்கப்படுவது தாமும் தம் வாரிசுகளுமே என எண்ணாமல்..
ஒரு நல்ல தம்பதி செய்ய வேண்டியது என்ன?.. நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் குழந்தைகளிடம் அவர்களை பற்றி குற்றம் குறை சொல்லாமல் கொஞ்சம் கவனமா வேணா இருக்க சொல்லிவிட்டு , உரிய மரியாதை கொடுக்க சொல்லி பழக்கணும்..

அக்குழந்தைகள் வித்யாசம் பாராட்டமல் செய்யும் மரியாதையே கூட குடும்பங்கள் மீண்டும் மனஸ்தாபம் இல்லாமல் ஒன்றுபட வழிவகுக்கும்.
அதே தான் துணைகளும்.

கணவனோடு மனஸ்தாபம் என்றாலும் அமைதியாக இருந்துகொண்டு , அப்பாவை குழந்தைகளிடம் விட்டுகொடுக்காமல் இருக்கவேண்டியது மனைவியின் கடமை.


அப்பா எத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறார் என்று சண்டையிருந்தாலும் மிக நேர்மையாக ஒரு மனைவி சொல்வாரென்றால் அவர் வெற்றியை தன் பக்கம் வைத்துள்ளார்.


அதே போல மனைவி மீது சிறு மனவருத்தம் கணவர் பேசாமலேயே, குழந்தைகளிடம் , " இது அம்மாவுக்கு உதவும்னு வாங்கி வந்தேன்.. அல்லது அம்மாவை ஒய்வெடுக்க சொல். நாம் வெளியே உண்ணலாம்.. அல்லது அம்மா பேச்சை கேள் அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க " என்பாரானல் அவர் மிக நேர்மையாக பிரச்னையை சமாளிக்க தெரிந்தவர் மட்டுமல்ல முன்னுதாரணமாய் இருப்பார்.


அதைவிடுத்து மனைவியை பழிவாங்க கணவன் அடிப்பதும் , அதை மனதில் வைத்துக்கொண்டு கணவனை பழிவாங்க மனைவி தாம்பத்யத்துக்கு ஒத்துழையாமல் இருப்பதும்....பிரச்னையை அதிகரிக்கும்.
பிரச்னையை ஆரம்பித்தவர் ஈகோ பாராது இரங்கி வரணும்..

தாமொருவனின்/ளின் ஈகோ முக்கியமா இல்லை மொத்த குடும்ப முன்னேற்றம் முக்கியமா?..


கோபம் எல்லாராலும் பட முடியும் .. எல்லாரிடமும் ஒரு நியாயமும் இருக்கும்...


பிரச்னை எப்படி வருகிறது என்பதை ஆராயாமல் அந்த பிரச்னையை எப்படி தீர்த்தால் என்னென்ன விளைவுகள் /தீர்வு கிடைக்கணும் என்பதை கொஞ்சம் முன்கூட்டியே ஆராய்ந்தால் இந்த பழிவாங்கும் எண்ணம் வரவே வராது..


நேர்மையா கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையா?..உங்க மேலதிகாரிக்கு உங்களை பிடிக்கவில்லையா?.. பொறாமையா.?
பொறாமையால் அவதிப்படாதவர் யாருமே இருக்க முடியாது... நாம் பொறாமைப்படும் அளவுக்கு நமக்கு ஆசீர்வாதம் கிடைத்திருக்கே என திருப்திகொண்டு அந்த பதவி உயர்வு ஏன் தனக்கு அளிக்கப்படவில்லை என நேரிலேயே சென்று விளக்கம் கேட்கலாம்..

பதில் எடக்கு மடக்கா இருந்தாலும் " எனக்கு உங்க பதில் திருப்தியில்லை.. மிக வருத்தம் .. இருந்தாலும் என் கடின உழைப்பு தொடரும் " என புன்சிரிப்போடு சொல்லி வர முடிந்தால் அதுதான் மிகப்பெரிய வீரம்..

அதை விடுத்து உன்னை என்ன செய்றேன் பார்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ?.. உன்னை எப்படி , எங்கே போட்டுக்கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என வெறிகொண்டு பழிவாங்க பேசித்திருவது மிக மிக அல்பமான கோழைத்தனம்..


நியாபகமிருக்கட்டும் கெட்டவார்த்தையோ கெட்ட செயலோ செய்வது வீரம் அல்ல.. அதை தாங்கிக்கொண்டும் கண்டுகொள்ளாமல் முன்னேறுவதே வீரம்...


ஆக இத்தகைய வீரம் தம்பதியினருக்கு இருந்தால்தான் குடும்பம் அமைதிபெறும்..


இல்லறத்தில் தோற்றுப்போக தயாராக இருப்பவர்களே அதிக வெற்றி பெருகிறார்கள்..

அவர்களை சுற்றியே குடும்பம் வலம் வரும் சூரியனை சுற்றுவது போல..


அதிக அன்பும் , அறிவும் இருப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்...

நீங்கள் எப்படி.?...:)

படம் : நன்றி கூகுள்.