Sunday, June 27, 2010

பிராயசித்தம் - சிறுகதை..







மொபைலையும் இமெயிலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் முருகேசன்...

" ஏங்க இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க.." டாக்டர் மனைவி 10 வது தடவையா
புன்னகையோடு சொல்லிவிட்டு முதுகில் ஒரு தட்டும் தட்டிவிட்டு சென்றாள்.

இந்தியா சென்றிருந்த மகன் லோகேஷோட அழைப்புக்காக

காத்திருந்த
முருகேசனுக்கு எதுவுமே காதில் விழவில்லை..

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்....................ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.....................

டக்கென எடுத்தார்..


" கண்டுபிடிச்சுட்டேன் அப்பா.."
பதிலேயில்லை.. மகிழ்ச்சியில் மூச்சு முட்டுவது போலிருந்தது

" அப்பா ..அப்பா என்னாச்சு இருக்கீங்களா..?."


" சொல்லுப்பா ரொம்ப மகிழ்ச்சி..சரி மதன் கிட்ட விபரம் சொல்லிட்டு நீ கிளம்பி
வந்துடு.."

" மரகதம் , நாம இப்பவே இந்தியா கிளம்புறோம்.. "

" என்னங்க நீங்க .மருமகள் பிரசவ நேரம். அவளோட பெற்றோர் வந்திருந்தாலும் நானும் கூட இருந்தா தான் நல்லாருக்கும்.. நீங்க கிளம்புங்க.."

---------------------------------------------------------


" என்னால இனியும் வச்சுக்க முடியாது உங்கம்மாவ.. உங்க தம்பிகிட்ட அல்லது
முதியோர் இல்லத்துல விடுங்க.. மீறி வெச்சிருக்கதுன்னா நான் போறேன் எங்கப்பா வீட்டுக்கு.."

குழந்தைகளை இழுத்துக்கொண்டு மாடி ஏறினாள் நீனா..
செய்வதறியாமல் திகைத்து நின்றான் சரவணன்,..

" நான் தான் சொன்னேன்ல மா.. அவ குணத்துக்கு கொஞ்சம் அனுசரிச்சு போ னு.. வாரத்துல ஒரு முறை வீட்டுக்கு வரேன்.,. வந்தா நிம்மதியில்லை.. "

மகன் நிலைமை கண்டே கண்ணீர் வடித்தாள் தாய்..

" சரி வாப்பா தோச ஊத்துறேன்.. " எதையும் மனதில் வைக்காமல் அழைத்தாள்
மகனை..

" நீங்க என்னம்மா நினைக்கிறீங்க..? தம்பி கிட்டயும் இருக்க முடியாது.. மாமனார்
வீட்டோட இருக்கான் தொழில பாத்துகிட்டு.. ...........பே.........சா.................ம......" தயங்கினான் மேற்கொண்டு சொல்ல...

அதை கேட்டு அழ கூட வலுவிழந்தவளாய் திரையை விலக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் முத்துலெஷ்மி..

---------------------------------------------------------------------------

" அட்ரஸ் சரிதானேப்பா.?.. இந்த குறுகலான தெருவிலா.. இரு யாரையாச்சும்
கேட்டுக்குவோம்.."முருகேசன் மதனிடம்..

" ஏம்ப்பா தம்பி, இந்த முத்துலெச்க்மி அம்மா வீடு...??? " முடிப்பதற்குள்.,

" அத்வா சார், தோ லெஃப்டுல கட் பண்ணி நேர போனீனா , கட்சீ வீட்டுக்கு முந்தின பச்சை பெயிண்ட் வீடு.. "

" மதன் , 40 வருடம் கழிச்சு பார்க்க போறோம்..நான் தனியா மொதல்ல போறேன் .
கார் இங்கயே நிற்கட்டும்.." இறங்கி நடந்து வீட்டு வாசலில் கால் வைக்கிறார்..பழைய நினைவுகளோடு...

----------------------------------------------------------------------------

" போறதுன்னா அந்த காவலியோட போய்டு.. குடும்பத்தோட செத்து
தொலையுறோம்.."

" அப்பா எனக்கொண்ணும் தெரியாது.. என்ன நம்புங்கப்பா.." கதறுகிறாள்...

முத்துலெஷ்மியின் பெட்டியை வீசுகிறார் அவர் தகப்பன்..

" மன்னிச்சுருங்க சார்.. தப்பு என்மேல தான்.. என்னை தண்டியுங்க சார்.. " காலை பிடிக்கிறான் முருகேசன்..

" போடா பொறுக்கி .. ஏழை பையன்னு இலவசமா படிப்பு சொல்லி கொடுத்ததுக்கு
நன்றியாடா நாயே.."

-----------------------------------------------------------------------

"என்ன இன்னும் முடிவு பண்ணலையா .. சரி நீங்க இருங்க உங்கம்மாவோட .. நானும் பிள்ளைகளும் கிளம்புறோம்.."

" இரு .. இரு.. பேசலாம்.."

" எனக்கு பொறுமையில்ல..அவங்களே சுமை.. இதுல அவங்கள பார்க்க வருகிற கூட்டத்துக்கும் கொட்ட உங்கப்பா சொத்தா இருக்கு.. ?.."

" நானே போறேன் மா.. நீ அவனையும் குழந்தைகளையும் நல்லபடியா பாத்துக்கோ
மா.. "

" அது எனக்கு தெரியும்.."


பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இதுநாள் வரை தேக்கி வைத்திருந்த
அழுகையை மொத்தமாக கொட்டவும், வாசலில் கேட்டை பிடித்தபடியே அதிர்ச்சியில் நின்றிருந்த முருகேசனை கண்களை சுறுக்கிக்கொண்டு சந்தேகத்தோடு பார்த்தாள் முத்துலெஷ்மி....


" இப்பவாவது என்கூட வருவியா எங்க வீட்டுக்கு லஷ்மி.. உனக்காக அங்கே ஒரு
கூட்டமே இல்ல இல்ல குடும்பமே காத்திருக்கு..........."

------------------------------------------------------------------------------------