http://sgtamilbloggers.blogspot.com/2011/01/blog-post.html
நல்லிதயம் கொண்ட அன்பானவர்களே,
நமக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள சிங்கை செந்தில் நாதனுக்கு, இன்று காலை சிங்கை நேரப்படி 10.00 மணிக்கு (இந்திய நேரம் காலை 7:30 மணிக்கு) இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நுண்கிருமி (வைரஸ்) காய்சலால் நலிவுற்ற செந்திலின் இதயம், துடிப்பு எண்ணிக்கையைக் குறைக்க மூச்சு திணறலில் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துக் கொண்டிருந்தார், பிறகு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை சமாளித்து வந்தார், பின்பு பேஸ் மேக்கரிலும் இதயச் செயல்பாடுகள் குறைய ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு, மாற்று இதய சிகிச்சை தான் ஒரே வழி மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால் தற்காலிகத் தீர்வாக மின்கலம் மூலம் இயங்கும் செயற்கைக் கருவி வழியாக இதயம் செய்யும் இரத்த ஓட்ட செயல்பாடுகள் சீராக்கப்பட்டது. உடல் நிலையும் நன்கு தேறி வர ஒராண்டுகாலமாக பகுதி நேரமாக பணிபுரிந்தும் வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து செந்திலைத் தொடர்பு கொண்டு மாற்று இதயம் கிடைத்துள்ளதாகவும், இன்று காலை 10:00 மணிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் செந்தில் சேர்ந்துள்ளார், முதல் நிலை மருத்துவ சோதனைகள் அனைத்தும் முடிந்துள்ளது. 10: 00 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்.
நல்லிதயங்களே, செந்திலின் இதய சிகிச்சை நல்லமுறையில் நடந்து, விரைவில் நலம் பெற உங்களுக்கு தெரிந்த வகையில் வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் செய்யுங்கள்.
கூடவே செந்திலின் இதயமாகச் செயல்படப் போகின்ற அந்த முகம் தெரியாத (மூளைச் சாவு) கொடையாளியின் ஆன்ம சாந்திக்கும், அவரின் இல்லத்தினரின் மன அமைதிக்கும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒருகாரணத்திற்காகத் தான் செந்தில் தனக்கான மாற்று அறுவைச் சிகிச்சை உடனே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதே இல்லை, நடக்கும் போது நடக்கட்டும் என்றே சொல்லிக் கொண்டு வந்தார்.