Wednesday, September 3, 2008




ரதியே விதியா? மதியா?



குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்தவளை முரட்டுத்தனமாய்
இழுத்து அடுத்த காட்சிக்கு தயார்படுத்தினான்..


லண்டன் குளிரோடு சேர்ந்து போட்டிபோடுது பயத்தில் நடுக்கம்.
எரிச்சலும் கோபமுமாய் ரதி...


ஆனா ஒன்றுமே சொல்ல முடியாது அவனிடம்...திருமணம் முடிந்து 1 வருடம் ஆகப்போகிறது.. இந்த அடிமைத்தனத்தில் அவள் மூழ்கி..


ஜாதகம் சரியாக அமைந்துள்ள காரணத்திலும், ஏழ்மையாலும், அவள் அழகு இங்கு விலைபோனது..


விது அல்லது விதி என அழைக்கப்படும் வித்யாசேகரன் தோற்றத்தில் ஜெயம் ரவி போலிருந்தாலும் குணத்தில் பயங்கர வில்லன்.


வெளிநாட்டு படிப்பு, உயர்ந்த உத்யோகம் கொடுத்த தெம்பு...யாரையும் விலைக்கு வாங்கிடலாம் என்னும் மனப்பான்மை..


படோபகமாக சென்னையில் திருமணம் முடித்த கையோடு ரதியை லண்டனுக்கு அழைத்து வந்து 2 மாதம் மோகத்தில் நல்லபடியாகவே கவனித்ததென்னவோ உண்மைதான்...


அதன்பிறகுதான் அவளை அடிமைப்படுத்த தொடங்கினான்..
தனிமை, கொடுமை எல்லாமுமாய் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியது...


இத்தனைக்கும், எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவள் ..எப்போதும் கலகலப்புடன், ஏதாவது போட்டியில் பங்கேற்று பரிசு வாங்கிக்கொண்டு உற்சாகமாய் வலம் வந்தவள்..


ஏழ்மையைப்பற்றி ஒருபோதும் அலட்டிக்கொண்டதில்லை அவள் திருமணம் வரையிலும்..


தன் கீழே இரு தங்கை இருந்த காரணத்தினாலும், எந்த வரனுக்கும் அவள் சம்மதித்தாள்..பெற்றோருக்கு எந்த பாராமும் தரக்கூடாது என்று மட்டுமே எண்ணினாள்..


அதிலும் வலிய இப்படி ஒரு பணக்கார வரன் அமைந்தது எல்லோரும் பெருமை படும்படியாக திருமணம் நடந்தது, இவற்றைவிட, பெற்றோரின் பாரம் சிறிதாவது குறைந்ததே என்பதில்தான் அவளுக்கு முழு மகிழ்ச்சியும்..


லண்டன் வந்ததும் தான் தெரிந்தது எப்பேர்பட்ட காமக்கொடூரனிடம் சிக்கியுள்ளோம் என்று..சிகரெட் வைத்து சுடுவதும்.. சாப்பாடு பிடிக்காவிட்டால் அவள்மேல் தூக்கி எறிவதும்..


ஆனாலும் தன் வீட்டினர் யாருக்கும் தெரியப்படுத்தி பச்சாதாபமோ , ஆறுதலோ பெறவில்லை..எப்படியும் திருத்திடலாம் என்றே நாட்களை எண்ணி வந்தாள்..பொறுத்துக்கொண்டாள்..தன் தங்கைகளுக்கு திருமணம் முடியும் வரையாவது பொறுக்கணும் என.

ஆனால் தன் துக்கங்களை பகிர்ந்து கொள்ளக்கூட பக்கத்தில் யாரும் தோழி இல்லையே..எங்கு அழைத்துச்சென்றாலும் கழுகுக்கண்ணால் பயமுறுத்துகிறான்...யாரிடமும் பேச அனுமதியில்லை...


இந்த நேரத்தில்தான் அவளுக்கு இணையத்தின் துணை அவனிடம் மன்றாடியதில் படிப்பதற்காக அனுமதி கிடைத்தது...


சில குழுமங்களில் , கணினி சார்ந்த படிப்பு பற்றி விவரம் கேட்க அவள் தன் மடலின் ஐடி தர, மறுநாள் வந்து விழுந்தது ஒர் மடல்..


அப்படித்தான் அறிமுகமானான் மதி என்ற மதியழகன்..நடிகர் பிரசன்னா போல.. புத்திசாலியும், அதே சமயம்,குறும்பாயும்.


சிறிது சிறிதாக கணினி இணையம் மூலமே சொல்லித்தரும் பொறுப்பிலிருந்தான் அவன்..தமிழன் என தெரிந்ததும் இரட்டிப்பு சந்தோஷம்...


அப்படியே கணினியோடு நல்ல நட்பும் ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாய் தன் வருத்தங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்...



மதியும் தந்தை இழந்தவன்.. தாய் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்து லண்டன் அனுப்பியதாகவும் தன் தாய் மேல் உயிரே வைத்திருப்பதாக கூற அவன் மேல் ரதிக்கு மரியாதை பன்மடங்காயிற்று..


ஒருவாரமாக நல்ல காய்ச்சல் ரதிக்கு.. அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளவேயில்லை விது.


" மாத்திரை சாப்பிடு எல்லாம் சரியாபோயிரும்.. ரொம்ப பிலிம் காட்டாதே.." இதுவே அதிக கரிசனம் கணவனிடமிருந்து...
ஒருவாரமாக மடலோ எந்த பதிலோ வராமல் இருப்பது கண்டு மதி பயந்துதான் போகிறான்..மடல் மேல் மடல் அனுப்புகிறான்..


பதிலேயில்லை.


"ஒருவேளை அந்த கொடூரன் அவளை ஏதாவது செய்திருப்பானோ?.. சே நான் ஒரு மடையன்.. போன் நம்பராவது வாங்கி வைத்திருக்கலாம்.. "


யோசிக்கும்போதே சாட் அழைப்பு மதியிடமிருந்து... அப்படி ஒர் உற்சாகம் அவனுக்கு...


அவனுடைய பரிதவிப்புகளை, ஆறுதலை பார்த்து அதிசயித்துதான் போகிறாள் ரதி..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை...மிக சாதாரணமாகவே பேசுகிறாள்


" ஏன் ஒரு மடல் கூட இல்லை.. நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.."


" காய்ச்சல் நேரம் இணையம் பார்க்க விரும்பலை அதான்.. ஆமா நீங்க ஏன் பயப்படணும்..?"


" உன்னை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் ரதி..எனக்கும் ஒரே நல்ல தோழி நீதான்."


இப்போது எரிச்சலாய் வந்தது அவளுக்கு..


" யாரும் என்னை மிஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது...சரி அப்புரம் பேசுகிறேன்" என்று நாசுக்காக சேட் ஐ கட் பண்ணுகிறாள்..

ஆனாலும் தனக்கென ஒரு ஜீவன் பரிதாபப்பட, விசாரிக்க இருக்கே என உள்ளூர மகிழ்ந்தாலும்...


அவனுடைய அலுவலக பார்ட்டிக்கு வேண்டா விருப்பாய் அழைத்துச்சென்றான் விது.. அங்கும் அவனின் உதவியாளரான நடிகை போன்றிருந்த பெண்ணோடு நடனமாடுவதும், அவ்ளோடு குடித்து கும்மாளமிடுவதையும் சகித்துக்கொண்டாள்...எரிச்சலாயிருந்தாலும்..


மனச்சுமை நீங்க மதியிடமும் சொல்ல அவனுக்கோ கோபம் வருகிறது...


" நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படணும் ரதி.. பேசாம இந்தியா போய்விடு.. ஒரு வேலை பார்த்து கூட பிழைத்துகொள்ளலாம்..இப்படி கொடுமை அனுபவிப்பதைவிட.."


" எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாகிவிடும் மதி...ஆனால் அதற்கும் 2 வருடம் பொறுக்கணுமாம். அதுதான் என் வேதனை.."அதையும் சிரித்துக்கொண்டே சொல்கிறாள்..


அவளைப்பார்க்க பாவமாய் இருக்குது மதிக்கு.. பெண்ணாய் பிறந்தால் இத்தனை வேதனை அனுபவிக்கணுமா என்ன?.. முதலில் தன் தாய் , இப்ப இவள்..


ஒரு முடிவுக்கு வருகிறான் மதி...ஆனால் ரொம்பவும் தயக்கம்.. மெதுவாக நடவடிக்கை எடுக்கணும். முதலில் அம்மாவிடம் சம்மதம் வாங்கணும்... அம்மாவுக்கு எடுத்துச்சொல்ல, அவரோ எல்லாத்துக்கும் பயப்படுகிறார்..


" அடப்பாவமே.. தம்பி, நல்லாயிருப்பே, அந்த பொண்ணை அவ வீட்டுல சேர்த்துடுப்பா எப்படியாவது..இவ்வளவு கொடுமை அனுபவிக்கிறது தெரிஞ்சு எந்த பெற்றோரும் சும்மா இருக்க மாட்டாங்க..."



" அய்யோ அம்மா, இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் னு நினைக்கிறா...அதனால்தான் நானே அவளுக்கு விடுதலை தரலாமான்னு யோசிக்கிறேன்...ரொம்ப நல்ல பொண்ணும்மா.."


"என்ன சொல்லன்னே தெரில தம்பி.. நீ எதை செய்தாலும் நல்லதாய் செய்வாய்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் உனக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதே.."


ஒருவழியாய் அம்மாவின் சம்மதம் கிடைத்ததும், அவளிடம் தொலைபேசி எண் கேட்கிறான்..ஆயிரம் யோசனைக்குபின் கொடுக்கிறாள் பயந்துகொண்டே..

அடுத்த வாரம்....


" பிறந்த நாள் வாழ்த்துகள் ரதி..."


திடீரென அழைப்பு வந்ததும் அதிலும் தானே மறந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துடன்... அதிர்கிறாள்..


" ம். அங்.. எ..ன்.ன.. யாரு..நீங்..க..?"


"நான் மதி.. சரி வாழ்த்து சொன்னா நன்றி லாம் கிடையாதா.?"


" அய்யோ சாரி.. நானே மறந்துட்டேன் .. நீங்க எ..ப்ப..டி..?"


" ஓஹ்.. அந்த அளவு ஆயிபோச்சா நிலைமை..?"


"இல்ல அப்படி இல்ல.. சும்மாதான்...சரி வேலையிருக்கு அப்புரமா பேசுறேன்..."


" சரி உனக்கு விருப்பமிருந்தால் நான் உனக்கு ஒரு விருந்து தரலாம் னு நினைக்கிறேன்...உங்க அப்பா சார்பானு வெச்சுக்கோயேன்.."


" அய்யய்யோ அதெல்லாம் ரொம்ப அதிகம்.. அவருக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுடுவார்..."


" தெரிஞ்சாதானே?.. "


" இத பாருங்க நீங்க என் தோழர் என்பதால் ரொம்ப உரிமை எடுத்துக்காதீங்க..."


"சரி நேரடியாகவே கேட்கிறேன் ...எத்தனை நாள் இந்த சிறையிலேயே இருப்பதாய் உத்தேசம்.."


" என்ன சொல்றீங்க நீங்க .. எனக்கு விதிச்சது இதுதான்... இப்படியே வாழ்ந்துட்டு செத்து போறேன்.. "


" சரிதான்.. வாழ்ந்தா சரி.. அதுதான் தினம் தினம் செத்துகொண்டிருக்கிறாயே..??"


" ம். பரவாயில்லை எல்லாம் ஒரு குழந்தை வந்தால் சரியாயிடும்... வாழ்க்கையே ஒரு போராட்டம்தானே.. எல்லாருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.."


"ம். தத்துவமா. ஹஹ.. நல்லாருக்கு.. கேக்க..நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா??"


கொஞ்சம் கோபத்துடன் இப்போது..


"கணவனுக்கு பயம், பெற்றோருக்கு மரியாதை உடன்பிறந்தவருக்கு நன்றி, எல்லாம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் எல்லாம் அளவோட... தன்னையே அழித்துக்கொண்டு பெரிய தியாகி ஆகி இதையெல்லாம் செய்யணும்னு கட்டாயமில்லை..."

" சரி எனக்கு வேலையிருக்கு.... நான் தொலைபேசியை வைக்கிறேன்....."

" கொஞ்சம் இருங்க... நான் இன்னிக்கு உங்ககிட்ட பேசியாகணும்..நீங்க ஒத்துழைக்காவிட்டால் உங்க வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டி வரும்.."


அழ ஆரம்பித்துவிட்டாள்..


" என்ன மிரட்டலா?..இதுக்குதான் உங்ககிட்ட சொன்னேனா?."

" மிரட்டல் எல்லாம் இல்லை... ஆனா நீங்க ஒரு நல்ல முடிவு எடுக்கணும் இந்த கூண்டிலிருந்து விடுபடணும்...அதுதான் என் ஆசை..."


" விடுபட்டு அப்புரம் , வேலை கிடைத்து, அப்புரம் இரண்டாவது திருமணத்துக்கு பெற்றோர் இன்னும் வேதனை அனுபவிக்கணுமா?.. "


" ஏன் எப்பவுமே எதிர்மறையா நினைக்கிறீங்க..முதலில் வெளியே வாங்க... மற்றதை அப்புரம் யோசிக்கலாம்.."

" நீங்க நடைமுறை தெரியாமல் பேசுறீங்க.. மாப்பிள்ளை கிடைப்பது ஒன்றும் எளிதல்ல.. அப்படியே கிடைத்தாலும்..எனக்கு இன்னொரு வாழ்க்கக பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.."


" இனி நினையுங்களேன்..சரி நேராகவே சொல்கிறேன்...நான் உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்.. சம்மதிப்பீங்களா?... "


அதிர்ச்சி அடைகிறாள்..


" கண்டிப்பா முடியாது... எவ்வளவு தைரியம் உங்களுக்கு.. இதுக்குத்தான் என்னிடம் பேசினீர்களா?.. " சட்டென்று வைத்துவிட்டாள் தொலைபேசியை...


மணிக்கணக்காய் அழுதாள் ஏன் என்று தெரியாமலே... அவனுடைய அக்கரை, தன்னுடைய கஷ்டம் பெற்றோர், தங்கையின் நிம்மதி , கணவனின் கொடுமை எல்லாம் மாறி மாறி திரைக்காட்சி போல வந்து குழப்புது அவளை.. ஆனாலும் தன் குடும்ப கெளரவத்திற்காக பிடிவாதமாய் இருக்கிறாள் தன் முடிவிலிருந்து...


அடுத்த ஒரு வாரம் அவனிடம் தொடர்பு கொள்ளாமல் பார்த்துகொண்டாள்... ஆனால் அவனிடமிருந்தோ மடலுக்கு மேல் மடல்...

இந்த ஒரு வாரம் அவனிடம் பேசாமல் இருப்பது பெரிய சோதனையாக இருக்குது..

ஏன் ஒரு நல்ல நண்பனாவே இருக்கலாமே .. ஏன் இப்படி கட்டாயப்படுத்தணும்.. நான் ஏதும் சொல்லி இருக்கக்கூடாதோ அவனிடம்... இப்ப அவனையும் இழந்து நிற்கிறேனே..


ஆசுவாசப்படுத்திக்கொண்டு மடல் திறந்தவளுக்கு அதிர்ச்சி...பயமும்...


" இந்த மடலுக்கும் பதில் இல்லாவிட்டால் நாளை நான் உன்னை நேரில்

சந்திக்கவேண்டி வரும்
"



**********உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க அப்புரமா முடிக்கிறேன்...***************