Friday, March 21, 2008

வேலாயி- பாகம் 1
================

" ஆத்தா பத்து ரூவா வாங்கியாரச்சொல்லிச்சு" 7 வயது முத்துமாலை

" சரி . இங்க வாயேன் கிட்ட.. அப்பதான் தருவேனாம்.." தீபா..

மூக்கை உறிந்துகொண்டு பம்பரத்தோடு அருகில் வருகிறான் வேலாயியின் மகனான முத்து என்ற முத்துமாலை...

தீபா நகரத்தில் புகழ்பெற்ற கல்லூரியொன்றில் பேராசிரியர்..கணிதப்புலி...
தலைமகளாக நடுத்தர வர்க்கத்தில் பிறந்து இரு தங்கைகளின் வழிகாட்டி, பிரியமானவளும்..


சிவாவின் அழகிய காதல் மனைவி...அவர்கள் காதலித்ததே ஒரு விபத்துபோல....

பத்து வருடம் ஆகிறது திருமணம் முடிந்து....

வேலாயி இவர்கள் குடும்பத்தில் 8 வருடமாக வேலை பார்க்கிறாள்..
திருமணம் ஆகி கணவனுடன் பட்டணம் வந்து
தீபாவின் வீட்டில் வேலைக்காரியாய் சேர்ந்தவள்.. வெகுளி..சிரிப்புதான் அவள் பாஷையோ.. திட்டினாலும் சிரிப்பாள்...


தீபாவும் , வேலாயியும் ஒரே நேரத்தில் மாசமாயிருந்தார்கள்.7 வருடம் முன்பு.. தீபாவுக்கு பிரசவ வேளையில், மருத்துவமனையின
தவறாலோ, விதியாலோ குழந்தையை காப்பாத்த முடியவில்லை...


அதற்குபின் அவளுக்கு அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை..
வேலாயிக்கு பிறந்த முத்துமேல் தீபா அதிக பிரியம் கொண்டாலும், மாமியாருக்கு ஏனோ அவனைக்கண்டாலே ஆகாது..


ஏற்கனவே தீபாவை காரணமின்றி திட்டி தீர்ப்பவர்...அதிலும் அவள் முத்துவை அழைத்து கொஞ்சினாலோ, அவ்வளவுதான்..

ஆனால் காதல் கணவன் சிவாவுக்கு பாவமாயிருக்கும் தீபாவிடம்.. இருந்தாலும் அன்னையின் மீதுள்ள பயத்தால் ஒன்றும் சொல்ல
முடியாத நிலை..தன்னை தீபா திருமணம் செய்ததே பெரிய பாக்கியமாக நினைப்பவன்..


அதனாலேயே அம்மாவின் ஆசையான
குழந்தைக்காக இன்னொரு திருமணத்தை மட்டும் பலமாக எதிர்ப்பவன்..அந்த காதல் நாட்கள் தான் எவ்வளவு சுகமானவை..


---------------------------------------------------------------------------­-----------------------------------
கல்லூரியில் ஆசிரியாராக தீபா வேலை பார்த்த போதுதான் அதே கல்லூரியின் வங்கிக்கு கேஷியராக வந்தான் சிவா...


விடுதி மாணவிகளின் சார்பாக வங்கியின் விஷயங்களையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பும் தீபாவுக்கு...

அப்படி அடிக்கடி வரும்போதுதான் சிவாவின் அறிமுகமும்..ஆனால் சிவாவோ முகத்தை பார்த்துகூட பேசமாட்டார் யாரிடமும்...

சின்ன வயதிலேயே அம்மை போட்டதினால், அதன் தழும்புகள் சிவாவின் முகத்தில் .. அதனாலேயோ என்னவோ தயக்கம்.. தானுண்டு தன் வேலையுண்டு
என்ற குணம்... தீபாவோ அமைதியானவள்.. யாராவது பேசினால் காதுமட்டும் கொடுக்கும் பழக்கம்.. வாய் பேசாது, புன்னகைமட்டுமே..


ஆனால் கண்டிப்பான ஆசிரியை...மாணவிகள் மத்தியில்..பார்வையிலேயே பேசிவிடுவாள் ..அதனால் தீபாமேல் மரியாதை கலந்த பயம்
இப்படி இருக்கும் சமயத்தில் மொத்தமாக பணம் கட்ட சென்ற இடத்தில் சிவாவுக்கும் ஒரு மாணவிக்கும் பண விஷயத்தில் மாற்றுக்கருத்து
வந்து பிரச்சனை பெரிதாகியது....


மாணவி அழுகையோ அழுகை... சிவாவோ தான் அதற்கு பொறுப்பல்ல என்று,...
அப்போதுதான் தீபா தலையிட்டு அந்த மாணவியை சமாதானப்படுத்தி, நிதானமாக தேடும்படி மற்ற மாணவிகளையும் அழைத்து
பிரச்சனையை தீர்க்க முயன்றாள்..


சிவாவிடமும்,
" சார், மிச்சத்தொகையை நானே கட்டிவிடுகிறேன்.. கொஞ்சம் அவகாசம் மட்டும் தாருங்கள்.."
முதன்முறையாக ஆச்சர்யமுடன் பார்த்தான் சிவா...


" பரவாயில்லை மேடம், என் தவறும் அதிலுள்ளது.. ஆகையால் நானும் அதில் பங்குகொள்கிறேன்.."
இப்படியாக இவர்கள் பொறுப்பேற்ற வேளையில், மற்றொரு மாணவிமூலம் மிச்சப்பணம் வந்து சேர்ந்து
யாருக்கும் பிரச்சனையின்றி முடிந்தது...அதிலிருந்து தீபா வந்தால் மட்டும் சிவா எழுந்து அவளுக்கு வேண்டிய
உதவி செய்வதும், உபசரிப்பதும், வாடிக்கையானது..


மற்ற ஆசிரியருக்கு வேடிக்கையானது..
" என்ன தீபா, அந்த சிடுசிடு கடுகு ஆசாமி, உங்கள பாத்ததும் அப்படியே உருகுராரு..?.. எங்ககிட்டலாம்., பேசவேமாட்டாரு..?."


அவளுக்கும் சிவாவின் தாழ்வு மனப்பான்மை புரிந்ததால் அதை பற்றி இவர்களிடம் விளக்காவிடினும், மனதுக்குள்
சிவாவின் உபசரிப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் தோன்றியது.......................


***************************************************************************­**தொடரும்..............

No comments: