Friday, March 21, 2008

வேலாயி-பாகம் 6 ---ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!..*
*======================================================*
சிவா தீபாவுக்கு தைரியம் சொல்லுகின்றான்.." நீதானே, எனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றும் , என் வாழ்நாள் முழுதும் அது பற்றி
பேசவே கூடாது என்றாய்.. இப்போது நீயே தாழ்வு மனப்பான்மையில், உன் உரிமையை கூட விட்டுக்கொடுக்கும் அளவிற்கு, சோர்ந்து போகிறாய்..
என் திருமணத்திலிருந்து நீதான் என் முகம் பார்க்கும் கண்ணாடி..உன் சூரிய முகம் பார்த்துதான் நானே மலர்ச்சியடைகிறேன்.. ஆனால் என்னால்
உனக்கு அப்படி ஒரு மலர்ச்சியை தர முடியாமல் தோல்விகாண்கிறேன்.."
"சரி .விடுங்கள்.. இனிமேல் அப்படி எதுவும் பேசமாட்டேன்... எப்பவும்போல மகிழ்ச்சியாயிருப்பேன்..இப்ப சந்தோஷம்தானே?..
---------------------------------------------------------------------------­-----------------------------------
தீபாவளி ,பொங்கல் வந்தால் மாமியார் தவறாமல் தீபாவுக்கு நான்கு விதமான பட்டுசேலைகளும், புது டிசைன் நகைகளும் வாங்கிடுவார்...
ஊரார் பாராட்ட.. குலதெய்வம் கோவிலுக்கு ,விசேஷ பூஜைக்கு, அவளை அலங்கரித்து அழைத்துச்சென்று எல்லார் மத்தியிலும் நல்ல பெயர்
வாங்குவதிலும் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார்.. தீபாவும் மாமியார் மனமறிந்து வெளியில் விட்டுக்கொடுக்காமல் குடும்ப
கெளரவத்தை காப்பாற்றுவாள்..அதேபோல் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்கு அழைப்பு வந்துள்ளது.. குடும்பமாக
செல்லவேண்டும்..இதுமட்டும்தான் அவளுக்கு பிடிக்காத
விஷயம்... தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரும் விசாரிப்பார்கள், குழந்தை பற்றியும் , குளித்தது பற்றியும், நகரின் பிரபல குழந்தை
மருத்தவரிலிருந்து, சிறந்த தெய்வங்கள் வரை இலவச அறிவுறைகள், வழிமுறைகள், உண்மையான கரிசனங்கள், பொய்யான வருத்தங்கள்
எல்லாமாய் அவளைக் குழப்பி கைதிக்கூண்டில் ஊமையாய் ,வேடிக்கைபார்க்கும் பொருளாய், வேதனையைத்தரும்..சில சமயம் சிவாவுடன்
சென்றுவிட்டு விரைவில் திரும்பிவிடுவாள்.. ஆனால் மாமியாருடன் சென்றாலோ அதிக நேரமாகும்..இப்போதும் அப்படியே ஆனது...
எல்லோரிடமும் மாமியார் வருத்தப்படுகிறார்.. எவ்வளவுதான் நடிப்பது, அடக்குவது,, பலரின் பரிதாபப்பார்வையை.... தாங்க முடியாமல்,
சிவாவிடம் தொலைபேசியில் அழைத்து,
" தலையை வலிப்பதுபோலுள்ளது, வீட்டுக்கு போகலாமா?.."
" சாப்பிடாமலா தீபா?.. தவறாக நினைப்பார்களே?.. சரி கொஞ்சம் பொறு வருகிறேன்.."
சிறிது நேரத்தில் பெண்கள் பகுதிக்கு வந்து அம்மாவை கண்ஜாடையில் கூப்பிட்டு விஷயத்தை சொல்லிவிட்டு அழைத்துவந்தான்.. அம்மாவை திரும்பி வந்து
அழைத்துச்செலவதாகக்கூறிவிட்டு.. .. வீட்டிற்கு வந்ததும் தீபா சிவாவை உடனே அனுப்பிவிட்டு தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவள்
மறுபடியும் அழ ஆரம்பித்தாள்... மனநோய் வந்துவிட்டது அவளுக்கு.. எந்த கடவுளும் அவளுக்கு இப்ப துணையில்லாததுபோல் தவித்தாள்...
சின்னம்மா வந்தாங்களே, என்னாச்சோ , என்று வேலாயி, கொஞ்சம் பழச்சாரு எடுத்துக்கொண்டு மாடிக்குச்சென்றாள்.. அங்கு தீபா அழுது
கொண்டிருப்பதை பார்த்ததும் புரிந்துகொண்டாள்.. மெதுவாக அருகில் வந்து கட்டில் பக்கத்தில் தறையில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக
கோதிவிட்டாள்.. அவள் கவலையை முழுவதுமாகப் புரிந்தவளாய்...இப்போது கொஞ்சம் தீபா தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.. " ஏம்மா எத்தினி நாள்தான் இப்படி வருத்தப்படபோறீங்க?..ஏதாவது முயற்சி எடுக்கலாமே?.."
" இல்ல வேலாயி, எல்லா பரிசோதனையும் பண்ணியாச்சு.. என் கற்பப்பைக்கு ஒரு குழந்தையை சுமக்க வழியில்லையாம்.."
" அப்படீன்னா, எனக்கொரு யோசனை வருதும்மா.. என் உறவுக்காரி ரஞ்சிதம் இல்ல, ரஞ்சி, அவ போனவருசம் அந்த சிங்கப்பூர் சோடிக்கு,
ஒரு அழகான புள்ளயா பெத்து கொடுத்தாம்மா.. அவுகளுக்கு அங்கிட்டு அத செய்யமுடியாதாம்ல.. இவளும் கஷ்டப்பட்டளா, இரண்டு லட்சம்
வாங்கிட்டு, பெரிய ஆஸ்பத்திரில புள்ள பொறந்துச்சும்மா.. ஏம்மா நீங்களும் ஏன் அப்படி பண்ணக்கூடாது?. பெரியம்மா அவிக மகன் மூலம் தான் வாரிசு வேணும்னு
நினைச்சா..?..ஏதாவது தப்பா சொல்லிருந்தேன்னா மன்னிச்சுக்கோங்கம்மா..எனக்கும் சீக்கிரம் நம்ம வீட்டுல ஒரு குட்டி சேட்டைபண்ணணும், நான் அதை தொரத்திக்கிட்டு
திரியணும்னு ஆசைமா.." சிரிக்கிறாள் தீபா..
" வேலாயி, நானும் அறிந்திருக்கிறேன் வாடகை தாய் பற்றி.. ஆனால் இவங்க எல்லாரும் சம்மதிக்கணுமே.. அப்புறம் அதுக்கு நல்ல ஆளா
பார்க்கணும்.. அவங்க குழந்தையை நம்மிடம் பத்து மாதம் சுமந்து தரணும்.. எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா?..அய்யோ நெனச்சாலே..."
" நீங்க மட்டும் ஒரு வார்த்தை சரி னு சொல்லுங்கம்மா, மத்த விவரத்தை நான் வாங்கியாறேன்... ஓண்ணும் பெரிய விஷயமில்லை.. டக்குனு ஓடிறும்
நாளும் பொழுதும்...லேட் பண்ணாதீங்கம்மா.. இன்னிக்கே அய்யாகிட்ட பேசுங்கம்மா.."
" உனக்குதான் எவ்வளவு ஆசையும் , அவசரமும்..." அன்பாக வேலாயியின் கைகளை பிடித்துக்கொண்டாள்..
" ஆனா யார் இதுக்கு சம்மதிப்பாங்க வேலாயி..?..நமக்கு முன்ன பின்ன பரிச்சயமில்லாதவங்களை, எப்படி நம்புவது"
" ..ம்.. அதுவும் சர்தான்..ம்ம்.. சரி நீங்க அய்யாகிட்ட பேசுங்க.. மத்த விவரத்தை நான் ரஞ்சி கிட்ட கேக்குறேன்மா...கடவுள நம்புவோம்மா.."
---------------------------------------------------------------------------­-----------------------------
அன்று இரவே, சிவாவிடம் இதுபற்றி மெதுவாக கூறினாள், பயத்துடன்...பதிலே இல்லை..
" என்ன சிவா, ஏதாவது சொல்லுங்கள்.."
" உண்மையைச்சொல்லணும்னா , எனக்கு விருப்பமில்லை .உன் அளவு எனக்கு விசாலமான மனதில்லை தீபா..யாரோ ஒருவர்
நம் குழந்தையை சுமக்கணுமா?. அவர்கள் பழக்க வழக்கம் எப்படியோ?.அவர்கள் குடும்ப சூழ்நிலைகள், கோப தாபங்கள்.எல்லாவற்றையும்
யோசிக்கணுமே...?."
" ...ம்..."
" என்ன ..ம்...?.. உனக்கு வருத்தமா?.. நான் சொல்வது தவறா?.."
" இல்லை நானும் குழம்பிதானுள்ளேன்.. எதற்கும் மருத்துவரை சந்திப்போமே?.."
" சரி உன் விருப்பம்.. ஆனால் இப்போது அம்மாவிடம் எதையும் சொல்ல வேண்டாம்.. அவர்களுக்கு கண்டிப்பாக சம்மதமிருக்காது.."
---------------------------------------------------------------------------­------------------------------
மறுநாள், ஒரு முடிவோட இருந்தாள் தீபா.. சிவா சொல்வதும் சரிதான் தெரியாத யாரோ ஒருவரிடம் குழந்தைபெற்றுக்கொள்வது, நினைத்தாலே
பயமாயிருக்குது.. அதிலும் ஏதாவது தப்பு நடந்தால் மாமியாருக்கு பதில் சொல்லி முடியாது.. விபரீதமாகிவிடும்..இனி இதுபற்றி வேலாயியிடம்
எதுவும் பேசவேண்டாம் என்று சொல்லிடணும் என்று முடிவெடுத்த போது, வேலாயி,
" எம்மா, வேலை முடியட்டும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்.. இங்கிட்டு வேணாம்.. கோவிலுக்கு போவணும்... மாரியாத்தா நல்ல வழி தந்துட்டா.. உங்களுக்கு இன்னிக்கு லீவுதானே.. கெளம்புங்க" என்றவளை வினோதமாக ,ஆச்சரியமாகப் பார்த்தாள்..
***************************************************************************­**********************தொடரும்************************

No comments: