வேலாயி- பாகம் 5 எனதுயிரே, எனதுயிரே எனக்கெனவே படைத்தானே!.. *
*===================================================================*
ஆசைப்பட்ட மனைவி அருகிருந்தும், அன்பா பேச முடியலை...விடிந்ததும் போனால் இரவுக்கு வருவதற்குள் தூங்கிப்போகிறாள்.. என்ன செய்ய.. இப்படியே ஒரு வாரமா?. தாங்குமா?. கோபமாக வருகிறது சிவாவுக்கு..இன்றைக்கு எப்படியும் தனியாக நம் தோப்புக்கு அழைத்துச்சென்றாவது பேசவேண்டும்... தனியாக இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கமாட்டேங்குதே...பெரியப்பாவின் மகனிடம் சொல்லிவைத்தான்..
அதேபோல் காலையிலேயே கிளம்பிவிட்டான் தீபாவுடன்..எல்லோர் மறுத்தும் தனியாக. போகும் வழியெல்லாம் தென்னைமரங்களும் , ஆலமரங்களும், அதிலுறங்கும் பறவைகளும்...அதன் கூவல்களும்...வாய்க்காலில் வீசிடும் குளிர்காற்றும் ,
ரோட்டில் கிடக்கும் பன்னீர்பூக்களும், வீடுதோறும் பூத்திருக்கும் தாள்பூக்களும்..,, ரம்மியத்தைக்கூட்டுகின்றன.
தோட்டத்தில் பம்புசெட்டில் வேகமாக பாய்ந்து செல்லும் நீரும் , அதனருகில் வளர்ந்த ரோஜா மற்றும் மல்லிச்செடிகளும்... சென்றதும் தோட்டக்காரர் இள்நீர் வெட்டித்தந்தார். பின்னர் நொங்கும்.. அடடா, என்ன ருசி..கிளிகள் பறந்து மரத்துக்கு மரம் தாவி..ரசித்துக்கொண்டே,
" அங்கே பாருங்கள், சிவா, அந்த கிளிகளையும் , அவையின் கொஞ்சும் மொழிகளையும்.."
" நீ கிளிகளை பாரு, நான் கிளியைப்பார்க்கும் கிளியை ரசிக்கிறேன்.."
முதன்முதலாக வெட்கம் , சிரிப்பாக வருகிறது தீபாவுக்கு..
" பாருங்களேன் இந்த ரோஜாவை , என்ன அழகு..கூடவே அந்த மல்லியின் மணமும்.."
" எந்த ரோஜாவை, கன்னங்கள் சிவந்து நிறம்மாறும் இந்த ரோஜாவையா?.."
இதற்குமேல் அவளால் ஒன்றும் பேச இயலவில்லை... ஆண்மையின் ஆழுமையில் பெண்மை பலவீனமாகுது
வெட்கத்தில்...பார்வையே கேள்விகேட்க, புன்னகை மட்டுமே பதிலாகவும், புதிய உலகம் இருவருக்கு மட்டுமாக தொடங்குகின்றது...
பம்புசெட்டில் தண்ணீரை தீபாவின் மேல் தெளித்துக்கொண்டே, விளையாட்டை ஆரம்பிக்கிறான்..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பழைய ஆல்பத்தை பார்த்து நினைவுகளில் மூழ்கியவளின் மனதை மீட்டது மாமியாரின் குரல்...
" அங்கு என்ன பண்ணிகிட்டு இருக்க?. கூப்பிட்டு எத்தனை நாழியாச்சு?...
" இதோ வந்துட்டேன் அத்தை.."
மாடியிலிருந்து இறங்கி வந்தவளை காரணமில்லாமல், குழந்தையை சாக்கு வைத்து திட்டிக்கொண்டிருக்கிறாள், மாமியார்..
இதையெல்லாம் அடுப்படியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வேலாயிக்கு வருத்தமாக இருக்கிறது..
மாமியார் அந்த புரம் சென்றதும்,
" ஏம்மா , உங்களை கண்டபடி திட்டுறாங்க பெரியம்மா, நீங்களும் ஒண்ணும் பேசமாட்டேங்கறீங்க..?"
" அவங்க என்ன இன்னிக்கு புதுசாவா திட்டுராங்க வேலாயி, பத்து வருஷமா அப்படித்தானே...நீ ஏன் கவலைப்படுற?."
" ஏம்மா புளு பூச்சில்லைன்னு இந்தம்மா சொல்லும்போது எனக்கு நெஞ்சை அடைக்குதும்மா...அதையாச்சும் கொஞ்சம்
உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நிப்பாட்டச்சொல்லுங்கம்மா.....ஏம்புள்ள மேல உசிரே வெச்சுருக்கிற மகராசி, உங்களை
ஏன் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ..?." என்று சொல்லிக்கொண்டே பாத்திரம் கழுவியவள், சத்தத்தைக்காணோம் என்று
திரும்பிப்பார்த்தால் தீபா மெளனமாக அழுதுகொண்டிருந்தாள்...
" அய்யோ , எம்மவராசி, நானே கிறுக்குத்தனமா அதைபற்றி பேசுப்புட்டேனா?..அறிவில்லாத சிறுக்கிம்மா நானு.. மனசுல ஒண்ணும்
வெச்சுக்காதேம்மா.. " என்று வேலாயியும் கூட சேர்ந்து அழ ஆரம்பித்ததும்,தீபா கண்களை அழுத்தத்துடைத்துக்கொண்டு, முகத்தில்
புன்னகை வரவழைத்துக்கொண்டு,
" இல்ல வேலாயி, எனக்கு அம்மா மாதிரி நீ.. நீ பாசமா பேசினதால் கொஞ்சம் கலங்கிட்டேன்.. வருத்தமெல்லாம் ஒன்றுமில்லை.."
என்று சொல்லிவிட்டு கல்லூரி கிளம்ப சென்றுவிட்டாள்..
மாடியில் சென்றதும் இவள் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்து சிவா அவள் தாடையை தூக்கி மெதுவாக,
" என்னம்மா ஆச்சு, அம்மா ஏதும் பேசினாங்களா, காலங்காத்தால?..நான் மன்னிப்பு கேட்கிறேன்மா உன்னிடம்..."
" இல்லீங்க ஒண்ணுமில்லை.. நீங்க கிளம்புங்க.. " என்று புன்னகையுடன் சமாளித்தவளிடம்,
" சொல்லு , கண்கலங்கியிருக்கே.. நான் வேணுமென்றால் அம்மாவிடம் இன்று பேசுகிறேன்..."
" நீங்க சும்மா இருங்க.. அவங்க என்ன என்னை கொடுமையா படுத்துராங்க.. ஏதோ வருத்தம் வாரிசு இல்லையேன்னு...
எல்லா தாய்க்கும் உள்ளதுதான்.. எனக்கு பழக்கமாயிடுச்சு சிவா.."என்று சொல்லும்போதே இயலாமையில் மறுபடியும் அடக்கிய
கண்ணீர் மீறிக்கொண்டு எட்டிப்பார்க்க, அடக்கமுடியாமல் தோற்றுப்போய் அந்தப்பக்கம் திரும்ப,
சிவாவுக்கும் அவள் நிலைமை பார்த்து கண்ணீர் வந்து அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்..
"உனக்கு விருப்பமென்றால் சொல்லும்மா, நாம் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம்...எப்பவோ சொன்னேனே?.." " வேண்டாம் சிவா.. அத்தைக்கும் உங்கள் குடும்பத்தார் யாருக்கும் அதில் விருப்பமில்லை... அவர்களுக்கு உங்கள் மூலம் ஒரு வாரிசு
வேண்டும்..அத்தை சொல்வதுபோல் நீங்கள் வேணுமென்றால்,..." அப்படியே அவள் வாயை தன் கையால் பொத்திவிட்டான்..
" தயவுசெய்து இன்னொருமுறை இப்படி பேசாதே தீபா.. பெரிய தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு, என் உயிரையே எடுக்குது உன்
வார்த்தை.. எனக்கு நீ போதும்..... எத்தனை ஜென்மத்திலும்..."
" சிவா உங்களை கணவனா அடையா எவ்வளவு புண்ணியம் செஞ்சிருக்கணும் நான்... உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன் சிவா.."
உதட்டைக்கடித்து கண்ணீரை அடக்கியவள் மீண்டும் பொங்கி பொங்கி அழுதாள் நீண்ட நாட்களுக்குப்பிறகு..
****************************************************************************************தொடரும்..*********
Friday, March 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment