Friday, March 21, 2008

வேலாயி - பாகம் 8 இடியும் , புயலும்..* *===================================*
அம்மா மறுபடியும் வருவதாக கேள்விபட்டதும் சிவாவும் தீபாவும் செய்வதறியாது திகைத்தனர்...ஆனாலும் தீபாவை சமாதனப்படுத்தும் விதமாக,
" ஒன்றும் கவலைப்படாதேம்மா.. சமாளிப்போம்.. எப்பவானாலும் தெரியத்தானே போகுது...?..தைரியமா இருப்பா..."
" என்னைப்பற்றி பயமிலைங்க.. வேலாயிக்கு ஏதாவது தொந்தரவு குடுப்பாங்களோன்னு தான் பயமாயிருக்கு..."
" இல்லை அவங்க இங்க ஒரு கல்யாணத்துக்குதான் வருகிறார்கள்...அனேகமாக 2 நாள் தங்கிவிட்டு மறுபடியும் ஊருக்கு சென்று விடுவார்களாம்..அறுவடை காலம் மாமாவுக்கு உதவி தேவை போல, கணக்கு வழக்குகளில்..."
இரண்டு நாள் எப்படி சமாளிக்க என்று பலவிதமான யோசனை போட்டு வைத்திருந்தார்கள்...சரி முத்துவை என்ன பண்ணுவது?.. யார் வீட்டுக்கு அனுப்புவது?...
ஆயிரம் குழப்பங்கள்.. வந்தும்விட்டார் மாமியார்.. வந்ததும் வராததுமாய் உள்ளே கூட நுழையாமல், தோட்டத்தை சுற்றிப்பார்க்கிறார்...அவுட் ஹவுஸில் மாற்றம்..முகம் சுழிக்கிறார்.. யோசிக்கிறார்..சரி பரவாயில்லை, அழகாத்தானே இருக்கு.. பிரச்சனையில்லை என்று கால் அலம்பிக்கொண்டு, நுழைகிறார்....
மாலை சாப்பாடு வரைக்கும் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.. திடீரென்று முத்து புத்தகப்பையுடன் வருகிறான்...
" ஆஸ்பத்திரியில ஆத்தாகூட தங்கமுடியாடியாதாம்..அதேன் வந்துட்டேன்..."
" தனியாவா வந்த..?.." பதருகிறாள் தீபா... சிவா கண்காமிக்கிறான் , சீக்கிரமாக உள்ளே கூட்டிச்செல்லும்படி..
தீபாவும் உள்ளே முத்துவை அழைத்துச்செல்கிறாள்.. பின்னாலேயே மாமியார்..
" இவன் எதுக்கு இங்க வந்தான்..?"
" வேலாயிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அத்தை..அதான்.."
" அதனால, அவ சொந்தத்துல யாராவது பாத்துக்க வேண்டியதுதானே?..."
" ஆமா.. நான் தான் அவனுக்கு படிப்பு சொல்லிக்குடுக்க இங்கவரச்சொன்னேன்..."மெதுவாக மென்னு விழுங்கி ...தீபா..
சாப்பாடு எடுத்து வைக்கிறாள் முத்துவுக்கு.. ஆச்சரியத்துடன் மாமியார், மேலும் சந்தேகத்துடன், சிவாவிடம் செல்கிறார்..
" என்னடா தம்பி, சிவா... முத்து பய இங்க வந்திருக்கான்.. கேக்க மாட்டியா?.. என்னமோ போங்க.. ரொம்ப இடம் கொடுக்காதீங்க...எனக்கு இது சுத்தமா பிடிக்கலை.."
" சும்மா இரண்டு நாளுக்குத்தான் மா.."
முத்துவை மாடிக்கு அழைத்துச்சென்று கட்டிலில் உட்கார வைத்து பாடம் நடத்துவது குறித்து மறுபடியும் பொறுமுகிறார் மாமியார்...
வீட்டின் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்குது...
சிவா சென்று திறக்கிறான்..மாமியாரும் கூடவே.
வெளியில் ரஞ்கிதம்...சிவா தடுமாறுகிறான்..
" அய்யா அவுட் ஹவுஸ் சாவி தர முடியுங்களா?.. வேலாயிக்கு கொஞ்சம் சாமான் எடுத்துப்போவணும்...?." வெகுளியாக கேட்கிறாள்.. மாமியார் பத்தி தெரியாதவள்..
நிலை குலைகிறான் சிவா......மாமியார் அதற்குள் துளைத்தெடுக்கிறார்கள்..
" இருங்கம்மா.. தீபாவை கேட்கணும்.." யோசிக்க பதிலை தள்ளிப்போடுகிறான்...மாடிக்குச்செல்கிறான்...
அதற்குள் மாமியார் ரஞ்சிதமிடம் பேச ஆரம்பிக்கிறார்கள்.. விவரமாய் தெரிய வருகிறது...ரத்தக்கொதிப்பு அதிகமாகிறது...
தீபா சாவியுடன் வந்து ரஞ்சிதத்தை அனுப்பி வைக்கிறாள்....
உள்ளே நுழைந்தவளுக்கு மாமியாரின் தோற்றமே பயம் கொடுக்கிறது...
" என்ன நடக்குது இங்கே?.." சத்தமாக..
" ..." மாடிக்கு தப்பலாம் என்று படியில் பதில் சொல்லாமல் கால் வைத்தவளை பிடித்து நிறுத்தி மறுபடியும்,
" என்ன நடக்குது எனக்குத்தெரியாமல்னு கேட்டேன்.. உன்னைத்தான்.. .." முன்னால் வந்து நிற்கிறார்...
" சிவாகிட்ட கேட்டுக்கோங்கம்மா..." விரைவாக மாடிப்படி ஏறி உள்ளே நுழைந்து பயத்தில் சிவாவின் மேல் சாய்ந்து கொள்கிறாள் ஒரு நிமிடம்...
" சிவா.. வேற வழியில்லை.. நேரம் வந்தாச்சு.. எதிர்கொள்ளணும்... தயவுசெய்து நிதானமாக..." பெருமூச்சு விடுகிறாள்...அதற்குள்" சிவா ,சிவா"
என்று அலறல் சத்தம் கேட்குது...கீழே ஓடுகிறான் சிவா..
" என்னடா நாடகம் நடத்துரீங்க இரண்டு பேரும்... எனக்குத்தெரியாமல்... அதுக்குதான் என்னை மவராசன் ஊருக்கு அனுப்பிச்சயா?..@#$%^&@#$%^&" அசிங்கமாக திட்டிதீர்க்கிறார்...30 நிமிடங்கள்...
சிவா அப்படியே சோபாவில் சாய்ந்தவன்...மனதுக்குள் சீக்கிரம் சத்தம் ஓயட்டும், பக்கத்து வீடுகளுக்கு கேட்கக்கூடாதே என்று மட்டும் நினைக்கிறான்...
இப்போது மாமியார் ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார்.. பித்து பிடித்தவர் போல்.., தன் குடும்ப கெளரவம், தன் பரம்பரை வசதி பற்றி வில்லுப்பாட்டே ஆரம்பித்துவிட்டார்... கல்லு மாதிரி சிவா வாய் பேசாமல் இருப்பது மேலும் ஆத்திரம் வருகிறது..
மாடிக்கே போகாதவர் கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறார், தீபாவிடம் சண்டை போட..பதறுகிறான் சிவா.. பின்னால் ஓடுகிறான்...
முத்துவை பார்த்ததும் கோவம் உச்சிக்கு போகிறது..நன்றாக திட்டுகிறார் தீபாவை.. தீபாவும் ஒன்றும் பேசவில்லை...தலையைக்குனிந்து கொள்கிறாள்.
"எல்லாம் இந்த சனியனால் வந்தது..." கை ஓங்குகிறார் முத்து மேல்...
தீபாவுக்கு முதன்முதலாக கோபம் வருகிறது..மாமியாரின் கையை தடுக்கிறார்,..
" அவன் என்ன சாதின்னு தெரியுமா உனக்கு.அவ எப்படி என் குடும்ப வாரிசை சே. சே..."
" தெரியும் அத்தை மனித ஜாதி.. என்னைப்பற்றி என்ன வேணுமானால் பேசுங்கள் .. உங்களுக்கு உரிமை இருக்குது...இனிமேல் முத்துவையும், வேலாயி பற்றியும் பேசவேண்டாம்..."
" என்ன பண்ணுவ.. ஒரு பைசா என் சொத்தை தர மாட்டேன் தெரிஞ்சுக்க... எவ்வளவு தைரியமா இப்படி ஒரு சின்னத்தனமான காரியத்தை என் குடும்பத்துக்கு செஞ்சிருக்க..?.. "
" வேலாயி கடவுள் மாதிரி அத்தை .. பிரியத்தினால் மட்டுமே இதை எனக்கு செய்கிறாள்.. அதுவும் உங்களுக்காகதான்.. உங்க பையன் வாரிசுதான் வளருது அவளிடம்.. நான் நினைத்திருந்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்க முடியும்.. உங்களுக்காக தான் இப்படி ஒரு முடிவும், காத்திருப்பும்.."
" எனக்கு வேண்டாம் அவள் மூலம் பெற்ற குழந்தை... " அனைவரையும் திட்டி சாபம் விட்டுக்கொண்டே, சிவாவிடம், தான் இனி வரமாட்டேனென்றும், அவனையும் பார்க்க பிடிக்கவில்லையென்றும், சொல்லி உடனே தன் தம்பி மகன் வீட்டுக்கு இரவே பிடிவாதமாக போகிறார்..
ஒருபக்கம் , பிரச்சனை முடிவுக்கு வந்தது நிம்மதியாக இருந்தாலும், அம்மாவுக்கு புரிய வைக்க முடியாமல் தோற்றதும், வயதான காலத்தில் அழ வைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டான்...
தீபா அவனைப்புரிந்து கொண்டு அவனுக்கு தனிமையை குடுத்தாள்...தனித்தனியாக ஆளுக்கொருபக்கம் வருத்தம் ..சுனாமிக்குப்பின் அமைதிபோல்.... முத்துவோ தீபாவின் மடியில் ஒன்றும் அறியாமல் தூங்குகிறான்...
மேகமும் இருட்டிக்கொண்டே இடியுடன் , விடிந்தது மறுநாள்.. மழை பிச்சுகிட்டு வரும்போல..
முத்துவை ரெடி பண்ணி பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவாவுக்கு தோசை வார்த்து எடுத்து வந்தவளிடம்.
" எனக்கு பசிக்கவில்லை தீபா..இப்ப வேண்டாமே."
" என்மேல் எதுவும் கோபமா, சிவா?.. நான் அத்தையை எதிர்த்து பேசினது வருத்தமா சிவா?. மன்னியுங்கள் பா.." கையை ஆதரவாக பிடித்தபடி..
" அட அப்படியெல்லாம் இல்லம்மா. உன்மேல் என்ன வருத்தம் .. கொஞ்சம் குழப்பமாயிருக்கு, மனதுக்கு.. அம்மா சப்பிட்டாங்களோ இல்லையோ.. உடம்பு சரியில்லாதவங்க.. மாமா மகனுக்கு போன செய்து கேட்டுவிட்டு பின்பு சாப்பிடுகிறேன்..."
போன் செய்யப்போகிறான்.. அதற்குள் போன் ரிங் ஆகிறது..
எடுத்துப்பேசியவன் முகம் மாறுவதைக்கண்டு, தோசைக்கரண்டியுடன் நிற்கும் தீபாவுக்கு , வியர்க்கிறது..
**************************************************************தொடரும்.****

No comments: