Monday, February 18, 2008

மெல்லத் திறந்தது காதல்.... (சிறுகதை)

சாந்தி

மருத்துவ கல்லூரி மாணவருக்கு பிரிவு நாள்...
உற்சாகத்தின் உச்சியில் இருந்தாள் சினேகா... இருக்காதா, ஐந்து வருட காதல் இன்று வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கும் நாள்...
கல்லூரியின் நுழைந்த முதல் மாதத்திலேயே கவர்ந்தவன் அர்விந்த். அவனுடைய சிரித்த முகமும், உதவும் குணமும் யாரையும் கவர்ந்திடும்.... படிப்பில் இருவருக்கும் போட்டி..... ஆனால் பெரிய அழகனில்லை.. ஆனால் கலைகளிலே, அழகிலே சினேகாவுக்கு இணைகூட யாருமில்லை. எப்போதும் முதல் பரிசு அவளுக்குத்தான் நாட்டியத்தில்... அவளுக்கு ரசிகனானான் அர்விந்த்.
எதிர்பாராது ஆடும்போது மயங்கி இவள் விழ, மருத்துவனாய் மட்டுமன்றி, மனத்துக்குள் காதலனாயும் துடித்துப் போனான். அவனுடைய விசேஷ கவனிப்பு அறியாதவள் போல் அவளும் காதல் பிடியில் சிக்குண்டாள்.... அதன்பிறகு இருவருடைய நடவடிக்கையும் மற்றவருக்கு அத்துப்படி... அவனுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்பதைக் கண்களாலேயே இவள் அறிவாள்.. இவளுக்கு எந்த விஷயம் பேசினால் பிடிக்கும் என்பதும் அவள் எண்ணங்கள் என்ன என்பதும் அவன் அறிவான்..
ஆனால் மனத்துக்குள் மட்டும் ஒரு சொல்ல முடியாத பயமா, தயக்கமா, இல்லை இது வெறும் ஈர்ப்பா, என்று இனம் புரியாத கேள்விகளால் இருவரும் தாமதித்தார்கள்.... பேசக்கூட பயந்தார்கள்.. கல்லூரி விழாவென்றால் அழையா விருந்தாளியாய் இவளுக்கு உதவிட அவனிருப்பான்.... அனடமி வகுப்பு, பிற விசேஷ வகுப்புகள் முடிந்து நேரமாகிவிட்டால், அவள் பத்திரமாய் ஹாஸ்டல் செல்ல நண்பர்களுடன் வலுக்கட்டாயமாய் இவன் செல்வான்...
அஸைன்மெண்டுக்கு தேவையான புத்தகங்களை எங்கிருந்தாவது இவளுக்காகக் கொண்டுவந்து தருவான்.. ஆனால் அவள் தோழி மூலமே எல்லாம் .. நேரிடையாக அல்ல... கல்லூரிச் சுற்றுலாவின்போது சொல்லிவிடுவானோ என்று அவள் பயந்த பயம்தான் எத்தனை...?
இப்படியே மற்றவர் கிண்டல், கேலிக்கு அப்பப்ப சிறிதளவு ஆளானாலும், எப்படியும் படிப்பு முடிவதற்குள் காதல் தெரிந்துவிடும் என்று இன்றுவரை இருவரும் தள்ளிப் போட்டனர்.
ஆனாலும் மனத்துக்குள் லட்சம் கனவுகள், அவன் தன் காதலை, எப்போது, எப்படி சொல்வான், வெட்கப்படுவானா?.. அல்லது வெட்கப்பட வைப்பானா? மலர் தருவானா? அங்கு வார்த்தைகளுக்கு இடமுண்டா?.. அல்லது மொளனம்தான் பறைசாற்றுமா?.... நான் மயங்குவேனா என் வாழ்நாளில் அந்த இனிய பொழுதில்..... இப்படி கனவுகளுடன் அவள் காத்திருக்க..., விழா முடிந்து 1000 கனவுகளுடன், அர்விந்த் கூப்பிடுவான், பேசுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றம்...
அவன் எப்போதும் போல் நண்பர், நண்பிகளுடன் சிரித்துப் பேசி அரட்டையடிக்க, இவளுக்குக் கோபம், ஏமாற்றம் தலைக்கேறுகிறது..... அதிர்ந்து பேசிக்கூட பழக்கமில்லாதவள்... விழிகளில் நீர் முட்டுகிறது..... கல்லூரியில் உள்ள பலர் இவளின் காதலுக்காக ஏங்கியிருக்கையில் இவளோ, அவனுக்காக மட்டுமே ஏங்கி தவமிருக்க , துடிக்கச் செய்கிறானே..!
தோழிகள், 'பொறுமையாயிருப்பா' என்று சொல்லச் சொல்ல பொங்குது இவள் மனம்.. காதலும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்...அதன் வலி.. நேரே சொல்கிறாள், அவன் இருக்குமிடத்திற்கு..... இவள் வந்ததும், பைக்கில், சுவரில் உட்கார்ந்திருந்த, எல்லோரும் ஆச்சர்யமாய் எழுந்து நிற்க....
ஒரு நிமிடம் பதற்றமாய், என்ன சொல்ல, எப்படி அவனை அழைக்க என்று தெரியாமல் விழிக்க, அவனே கிட்ட வந்தான்... அவன் வரவும், "உங்க..... கூட.... ஒரு ஐந்து நிமிடம்..... தனியா.... பேச... லாமா...." என்று திக்கித் திணற.., அதற்குள் இந்த பாழாய்ப்போன கண்ணீர் அசிங்கமாய் வந்து தொலைக்கிறதே.. அதற்குள் தோழர்களெல்லாம், 'போ, போ' என்று இவனை விரட்ட... பக்கத்தில் ஒரு மரத்தடியில் யாருக்கும் கேட்காதபடி இடமாக பார்த்துக்கொண்டு ஆரம்பித்தாள், இல்லையில்லை கொட்டித் தீர்த்தாள்...
"ரொம்ப சந்தோஷம் .. நல்லா நிரூபிச்சிட்டீங்க உங்க ஆண் பலத்தை.... இத்தனை நாள் காதல்னு நினைச்சு ஏமாந்தது நான் மட்டும்தான்... உங்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு.... உங்களையும் யாரும் குறை சொல்ல முடியாதபடி நல்லா நடிச்சுட்டீங்க.. நான் தான் படிச்ச பைத்தியக்காரி.... இத்தனை நாள் நீங்க நடந்துகிட்டது காதல் நாடகம்னு என்னால நம்ப முடியாத அதிர்ச்சி எனக்கு... இன்னும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கோங்க, இந்த ராட்சஸி மாதிரி சண்டைபோடுற பெண்ணைக் கைபிடிக்கலயேன்னு.... ஒரு பத்ரகாளி வாழ்க்கைத் துணையா வரலயேன்னு... நானும் நிம்மதியா போகிறேன், ஒரு கோழையைக் காதலனா நினைச்சு வாழ்ந்ததை எண்ணி ஏமாந்தவளாய்...." பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு...
"எனக்கு இப்ப பல சந்தேகம் வருதுடா" என்றவள் நிறுத்தினாள், விம்மி விம்மி அழுவதற்கு.....
ஒன்றும் செய்ய இயலாதவனாய் பிரமை பிடித்தவன் போல் நின்றிருந்தான், சற்றும் எதிர்பார்க்காததால்.. காதலைச் சொல்ல தனக்கு அருகதை இல்லை என்றே எண்ணியிருந்தவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறாள்.
"சாரி.. உங்க மரியாதையைக் குறைக்கக்கூட எனக்கு இனி தகுதியில்லை.... உங்களுக்கென்ன, இனி நல்ல வரதட்சணையோட அழகான பெண் வருவாள்.... பெரிய வீட்டுக்கு மாப்பிள்ளையாய்ச் செல்வீர்கள்... கல்லூரிக் காதலெல்லாம் வெறும் விளையாட்டுதானே?" என்று இடைவெளியின்றி பேசினாள் கண்ணீருடன்...
"ஒரு நிமிஷம்...", "பிளீஸ்..", "சினேகா..", "வெயிட்.." என்று இவன் சொல்லச் சொல்ல, எதையும் காது குடுத்துக் கேட்க விரும்பாதவளாய்த் தன் கோபத்துக்கு மட்டும் அர்த்தத்தைப் புரிய வைப்பதிலேயே குறியாயிருந்தாள்...
"நீங்க என்னைக் காதலித்தது உண்மையா, நடிப்பா, விளையாட்டான்னு எனக்குத் தெரியாது அர்விந்த்... ஆனா ஒரு பெண்ணுக்கு அரிதாக, ஒரு முறை மட்டுமே வரும் காதல் எனக்கு உங்களிடம் மட்டுமே வந்ததுனு இப்ப, இந்த நேரத்துல சொல்ல வேண்டியிருக்கேன்னு நினைச்சு வெட்கப்படுகிறேன்... இருந்தாலும் என் மனச் சுமையை இறக்கிவிட்டேன் என்ற மனதிருப்தியுடன் செல்கிறேன்... இனி, மறக்க முயற்சி செய்வேன், கஷ்டம்தான்.. இருந்தாலும்....." என்று மேற்கொண்டு ஏதும் பேசமுடியாது அழுதுகொண்டே ஓடிவிட்டாள்...
அவனிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காமல்.... ஏதும் செய்ய திராணியற்றவனாய், சந்தோஷம், துக்கம், அதிர்ச்சி, இவை யாவும் சேர்ந்து கொடுத்த உணர்வுகளில், அவளைக் கூப்பிடக்கூட வார்த்தைகளின்றி.... அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் போவது தெரிந்து கலவரமாய், நண்பர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டு ஆளுக்கொரு கேள்வி கேட்க, இவன் கையைத் தலையில் வைத்து அப்படியே உட்கார்ந்தான்..... பைக்கின்மேல்...
=============================================


5 நாள் கழித்து அவள் பெட்டிகளுடன், ஹாஸ்டலைக் காலி செய்துகொண்டு தோழி ரேணுவுடன் ரயில் நிலையம் வர, நண்பர்களுடன், புது தெம்புடன், நம்ம ஹீரோ அர்விந்த் காத்திருந்தார்...
"ஏ, அங்க பாருடா, சினேகா வந்தாச்சு" என்கிறார் நண்பர்...
"சரிடா, நீங்கல்லாம் இங்க இருங்க, தேவைன்னா நான் கூப்பிடும்போது வாங்க" சொல்லிவிட்டு கூட்டத்தில் நுழைகிறான் அர்விந்த்..
சினேகாவும் தோழியும் பெட்டியை உள்ளே ஏற்ற முயலுகையில், "சினேகா..." பார்த்துவிட்டு பதிலேதும் கூறாமல்
"சினேகா, நான் உன்கூட பேசணும்..."
" "
".. சினேகா , வெயிட்...பெட்டிய அப்புறம் ஏத்திக்கலாம்.. மொதல்ல நான் பேசணும்.." சத்தம் அதட்டலாக மாறுது...
"எனக்கு நேரமாச்சு.. மத்தவங்களையும் நாம தொந்தரவு பண்ணிக்கிட்டிருக்கோம்.. வழிவிடுங்க" என்று, பெட்டியைத் தூக்கி அவள் உள்ளே ஏற, படக்கென்று பெட்டியைப் பிடுங்கிக்கொள்கிறான்...
"எதுவானாலும் வெளியில் சென்று பேசிக்கொள்ளலாம்.. நீ இந்த ரயிலில் செல்லவில்லை" அதிகார தொனியில்.... அர்விந்த்..
"சாரி, ரேணு, உன் தோழியை அழைத்துச் செல்கிறேன், என் வீட்டுக்கு.. போனதும் உன்னிடம் பேசுவாள்.." என்று அவளைப் போகச் சொல்லிவிட்டான். அர்விந்தை இப்படி பார்த்ததே இல்லை ரேணு.. புரிந்துகொள்கிறாள்...
"அர்விந்த், என் வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.. என்ன இது முட்டாள்தனமான பிடிவாதம்.. பிஹேவ் யுவர்செல்ப்ஃ".. அவள்.
"சாரி சினேகா..." என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று பெட்டியுடன் நடந்தான்... அவள் பின்தொடர்வதை அப்பப்போ உறுதி செய்துகொண்டு..
"அர்விந்த், அர்விந்த் ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்..பிளீஸ் ..." கத்திக்கொண்டே அவள்...
அதற்குள் நண்பர்கள் அருகில் வந்து பெட்டியை வாங்கிக்கொள்ள, அர்விந்த் இன்னும் கொஞ்சம் தைரியமாக,
"அன்னிக்கு, ஒரு நிமிஷம்னு நான் சொல்லச் சொல்ல, கெஞ்சக் கெஞ்ச, நீ பாட்டுக்குப் போற???" நண்பர்கள் மத்தியில் சொன்னதும் அவனை, அவன் வேகத்தை, கோவத்தைத் தடுக்க முடியாது தோற்றவளாய்க் கண்களை மட்டும் மூடிக்கொண்டாள்..... எல்லாம் தன் பலம் மீறி நடப்பதாய் உணர்ந்தாள்.... உள்ளுக்குள் மட்டும் இனம்புரியாத ஒரு சின்ன சந்தோஷம்..... அதை மீறுது ஊருக்கு போகமுடியாத தோல்வியின் வருத்தம்... நண்பர்கள் மத்தியில் வெட்கம்.....
பாகம்- 3- தனிமையிலே இனிமை காண முடியுமா? -
=============================================


"சினேகா நீ என்கூட பைக்கில் வாரீயா, இல்லாட்டி கால் டாக்ஸில வரயா?"
"டேய் , மச்சி என்னடா பேசுறான் இவன்...? ஏய் அர்விந்த், அவ எப்படி தனியா...? கெளம்பு, கெளம்பு, நீ அவளோட போற"னு சொல்ரான் வெங்கெட்...
"டேய் என் பைக்".. அர்விந்த்
"ஒண்ணும் பண்ண மாட்டோ ம்.. என்ன மிஞ்சி போனா, கொஞ்சம் பெட்ரோல், extra fittings எடுப்போம்.. சரியா.. ரொம்ப முக்கியம்... போ...டா" முறைக்கிறான், ஹமீத்.
"சரி, இப்ப ஏன் உங்க வீட்டுக்கு போறோம் , அர்விந்த்... நான் ஊருக்குப் போகணும்" சின்ன பிள்ளையாய், பிடிவாதத்துடன்...அவள்.. "சினேகா, இது ரயில் நிலையம்.. இங்க வெச்சு ஒண்ணும் பேசவோ, சண்டை போடவோ, அல்லது நீ கத்தவோ முடியாது... அதுக்காகத்தான், என் வீட்டுக்கு.. சரியா?
அங்கு என் அம்மா மட்டும்தான் இருப்பாங்க... நீ ரயிலை மிஸ் பண்ணிட்டதா சொல்லிக்கலாம்...சரி... ஏறு மா வண்டில.."
முதன்முறையாக "மா" போட்டு உரிமையா பேசவும், மனமோ தடம் புரள்கின்றது..
இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், "சரி நீங்க முன்னால ஏறுங்க"னு சொல்லிட்டு பின்னால் ஏறுகிறாள்...
முன் கதவைத் திறந்தவன், ஏதோ நினைத்தவனாக" முடியாது நான் பின்னால்தான் ஏறுவேன்.... கோழைங்கதான் முன்னால" என்று சொல்லிவிட்டு , பின்னால் வந்து மரியாதையாகவே தள்ளி அமர்கிறான்....
அதற்குள், விவேக் மாதிரி எப்பவும் கல்லூரியில் காமெடி பண்ணும் சுருளி, ஜன்னல் பக்கம் வந்து, "வாழ்த்துக்கள் சினேகா.. சட்டய பிடித்து மாப்பிள்ள கிட்ட நல்லா 4 கேள்வி கேட்ட கட்சீ நாள்..." என்றதும்,
"டேய், அடங்க மாட்டீயா நீ, மாம்ஸ், இவன அள்ளிட்டுப் போங்கடா.. வருவல்ல அரியர்ஸ் கிளியர் பண்ண, மவனே அப்போ வெச்சுக்கறேன் ஒன்ன..." சிரிப்பு வந்தாலும் சிரிக்காத மாதிரி சீரியஸ்ஸா முகத்த கஷ்டப்பட்டு வெச்சுக்கிறான்... அர்விந்த்.
"மாம்ஸ், ஹேப்பி லா..........ங் ஜெர்னி டா" கத்தி சிரிக்கிறான் வெங்கிட்...
"டேய். போ டா... போ........டா..அப்படியே டிக்கெட்டை கேன்ஸல் பண்ணீருங்கடா.." பல்லைக் கடிக்கிறான்....அர்விந்த்.
டாக்ஸி கிளம்பியது... மொளனம், பல விதமான கேள்விகளைக் கிளப்பியது இருவருக்குள்ளும்.. ஆனால் அவனுக்கு மட்டும் "புராஜெக்ட் காதல்" வெற்றிக் களிப்பு... "எதாவது சாப்பிடுறயா?" அன்பொழுகக் கேட்டான்... பதிலில்லை..
"ஏதாவது சாப்பிடுறீங்களான்னு கேட்டேன், மேடம்..."
ஒரு பெருமூச்சுவிட்டு முறைத்துப் பார்த்துவிட்டு, திரும்பிக்கொள்கிறாள்....
சிக்னலில் வண்டி நிற்கிறது.....மொளனம் கனக்கிறது....
"ஐ ய ம் சாரி..." மெதுவாக அவன்...
பதிலில்லை, ஏன் ஒரு முறைப்பு கூட இப்போ இல்லை.. அவளிடம்..
"சினேகா..." மெல்லியதாக பயத்துடன் கூப்பிடுகிறான்...
பதிலேயில்லை....
இப்போது உண்மையிலேயே பயப்பட ஆரம்பிச்சுட்டான்...
ஒருவேளை நாம அவளைக் கூட்டி வந்த முறை அவளுக்குப் பிடிக்கலயோ?
"நான் எங்க வீட்டுக்கு போன் பண்ணனும்.." திரும்பாமலே சொல்கிறாள்..
"இந்தா இதுல பண்ணு பா" அவன்.. முறைத்துவிட்டு, என்ன சொல்ல, எப்படி சொல்லனு யோசிச்சுட்டு, எண்களை அழுத்துகிறாள்..
"அப்பா, நான்தான் பா '" என்பதற்குள் கட் ஆகிறது...
"அடடா சார்ஜ் போச்சே...." அவள்
"பிளீஸ்.. இதுல பேசு..." கை படாமல் கஷ்டப்பட்டு மொபைலை வாங்கிக்கொள்ளும்போது..
கீழே விழுகிறது... இருவரும் ஒரே நேரமா அதை எடுக்க முயலணும்...???
முட்டிக்கொள்கிறார்கள் முதன்முறையாக....
அவளுக்கு வெட்கம்.. அவனுக்கோ, கேக்கணுமா????
மொபைலை சீட்டில், நடுவில் நல்ல பிள்ளையாய் வைக்கிறான்...
அவள் கவனமாக எடுத்துக்கொள்கிறாள்....
"அப்பா, சினேகா பேசுறேன்.. ரயில மிஸ் பண்ணிட்டேன் பா..."
"சரிம்மா .. பரவாயில்லை..... நானே ஒரு மணிநேரம் கழித்துப் பேசலாம்னு நினைத்தேன்... ஆமா., இது யாரு நம்பர்...?" - அப்பா...
"அது வந்துப்பா... நான் மிஸ் பண்ணியதும் என் கிளாஸ்மேட், வேறு ரயிலுக்கு டிக்கெட் புக் செய்ய வந்தவன், எனக்கு மொபைல் தந்து உதவினான்.. என் மொபைலில் சார்ஜ் இல்லை பா."
"சரி. சரி. கவனம்..மா.." மறுபடியும் அப்பா..... அதற்குள் வீடு வந்துவிடுகிறது...
வந்ததும் வெடிச் சத்தம் காதைத் துளைக்குது....
இவளுக்கோ வெடி என்றாலே அலர்ஜி... அப்படியே காதையும் கண்களையும் மூடிக்கொள்கிறாள்... பயப்படுகிறாள் ரொம்பவே. அவளை தன்மேல் சாய்த்துக்கொண்டு உதவ ஆசை.. ஆனால் கிட்ட போக முடியாதே...
"ஏய் சந்துரு, நிப்பாட்டு டா.. " அவன்..
என் அக்கா பையன்.. பேரு சந்துரு..
"ஓ . இவுங்கதான் உன்னோட ஆன்டியா?.." குழந்தை வெட்கப்படுது...
"உள்ளே வா" என்று அழைத்தவன் பின்னால் சென்றவளுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது...
=============================================


செடிகளுடன் கூடிய நீளமான நுழைவு வாயிலில் சுமார் 100 அடி தாண்டி வீட்டின் முகப்பில் நாலைந்து பேர், குறிப்பாக, பெண்கள் நிற்கிறார்கள்...காலை உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தவள், பின் தயங்கி காம்பவுண்ட் சுவர் பின்பக்கம் ஒதுங்குகிறாள், பயத்துடன்.
பிறகு.. "என்ன இது அர்விந்த்?.. என்ன விளையாட்டு இது..?" முதன்முறையாக கோபமாக அவன் கண்களைப் பார்த்து நேராகக் கேட்கிறாள்...
"ஒண்ணுமில்ல உள்ளே வா.."
"நோ.. நான் வரமாட்டேன்.. நீ என் கிட்ட பொய் சொல்லீட்ட... நான் உன்னைத் திட்டினதுக்கு நீ என்னைப் பழி வாங்கிறயா... ஊரைக் கூட்டி..?" அழுகிறாள் அவள்..
பயந்துவிட்டான் இவன்.. சூழ்நிலை இறுக்கமாகிறது...
"இல்லடா, சாரிடா, பிளீஸ்.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரில... நான் உன்கிட்ட டாக்ஸிலேயே சொல்லணும்னு நினைச்சேன் பா.. ஆனா நீ ஒத்துக்க மாட்டியோன்னு பயந்தேன் பா.. சாரிமா. ரியலி வெரி சாரி.." சமாதானப்படுத்துகிறான்.
"பி.....ளீ......ஸ், கம் இன் சைட்.. ஒருத்தரும் உன்கிட்ட ஒண்ணும் பேசாம நான் பாத்துகிறேன்.. பிளீஸ்.." முதன் முறையாக சினேகாவின் கையை அவளிடம் கேட்காமல் படக்கென்று பிடித்துக் கெஞ்சுகிறான்...
"நோ..... நோ. வே.. அர்விந்த், எங்க வீட்டுக்கு இந்த ஆர்ப்பாட்டம் தெரிஞ்சா, அப்பா கொன்னு போடுவார்.." கையை விடுவிக்கிறாள்.
நான் ஆட்டோ பிடிச்சு என் தோழி வீட்டுக்குப் போய்க்கிறேன்..... ஐ.. ஹேட் யூ பாஃர் திஸ்..." கையை உதறிவிட்டு அழுகிறாள்...
அதற்குள், அர்விந்த் அக்காவும் அத்தானும் வெளியே வருகிறார்கள். கலகலப்பானவர்கள்... அத்தான் ஒரு பெட்டியை வாங்கிக்கொள்கிறார்..
"என்னம்மா, என்னாச்சு, உள்ளே போய் சண்டை போட்டுக்கலாமே, நாங்களும் ரசிப்போமில்லயா?.." - அக்கா.
பதிலேதும் சொல்ல முடியாமல், உதட்டைக் கடித்துக்கொண்டே, குனிந்து வழியும் கண்ணீரை வெட்கத்துடன் துடைக்கிறாள்..
"எல்லாம் தம்பி சொல்லிட்டான், உள்ள வாம்மா.." என்று, கைபிடித்து அழைத்துச் செல்கிறார் வருங்கால நாத்தனார்..
செல்லும்போதே இவளை ரசித்துவிட்டு, நடந்துகொண்டே, "ம். மாட்டினாலும் மாட்டின ரம்பை கிட்டதான் பா" என்று தம்பிய கிண்டலடிக்க,
"உன் தம்பி புத்திசா.......லி டீ.. என்ன மாதிரியா?.." சைக்கிள் கேப்ல தன் பங்குக்கு பீஃலிங்ஸ் விடுறார் அத்தான்..
கோபம் தணியாவிட்டாலும், சினேகா கொஞ்சம் நிதானத்துக்கு வருகிறாள், மரியாதைக்காக...
அர்விந்த் அம்மா அருகில் வந்து ஆரத்தி எடுக்கிறார்...
உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்....
மறுபடி கண்ணீர் வருகிறது இவளுக்கு... ஆனால் இந்த முறை ஆனந்தக் கண்ணீரும்....
அர்விந்த் அம்மா விரல்களால் அவள் கண்னீரை துடைத்துவிட்டு, அவள் தலையைத் தன் தோள் மேல் சாய்த்து அவளைத் தாங்கிக்கொள்கிறார்..... விட்டால் மயங்கிவிடுவாள் போலிருக்கிறாள்.. ஜூஸ் குடிக்க வைக்கிறார் வாசலிலேயே... மறுக்கமுடியாமல் மடக் மடக் என்று குடிக்கிறாள்... 'மெதுவாம்மா..' என்று சொல்லித் தடவி விட்டு உள்ளே அழைத்துச்செல்கிறார்கள்...
அங்கு இருக்கு அதிர்ச்சி - 2....
=============================================


அவள் வீட்டின் முதல் வாசலில் நுழையுமுன், மறக்காமல், எல்லோரும், "வலது கால் முதலில்" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்... இவளுக்கு வலது கால் எது என்று மறந்து விடுகிற அளவு குழம்பிப் போயிருக்கிறாள்... காலை மாத்தி மாத்தி வைக்க முயல, எல்லோரும் சிரிக்க, நாத்தனார் உதவுகிறார்.. "இதுக்கெல்லாம் சேர்த்து பின்னால வசூல் இருக்குமா" என்று நாத்தனார் சொல்ல எல்லோரும் சிரிக்க, உள்ளே நுழைந்ததும் வெட்கத்துடன், பயத்துடன் மெதுவாகப் பார்வையைச் சுற்றவிட்டவள், அப்பா, சோபாவில் அமர்ந்து, அர்விந்த் அப்பாகூட பேசிக்கொண்டிருப்பதும், அம்மா சமையலறை வாயிலில் பெண்களுடன் நிற்பதும் தெரிகிறது...
ஒரு நொடி ஆச்சர்யமும் அதிர்ச்சியுமுற்றவள், மொத்த பலமிழந்து, "அம்மா..." என்று ஓடிச் சென்று விழுகையில், இடையில் அப்பா எழுந்து வந்து தாங்கிக்கொள்கிறார் தன் செல்ல மகளை.... நன்றாக அழட்டும் என்று தன் மேல் சாய்த்து வருடுகிறார்... மகள் அழுவதைப் பார்த்தும், நீண்ட நாள் பிரிவு, மெலிந்த உடல் பார்த்து, பெற்றோரும் கண் கலங்குகிறார்கள்.... கலகலப்பாயிருந்த வீடு மெளனமானது.... பல நிமிடம்...
மெளனத்தை உடைக்க அர்விந்த், சினேகா கோவத்தில் கல்லூரியில் சொன்ன வார்த்தைகளை வைத்து விளையாட ஆரம்பித்தான்..
"அம்மா , பாத்தீங்களா, அம்மா உங்க ராட்சஸி மருமகளை.."
"டேய், நீதாண்டா ராட்சஸன்.. இத்தினி நாளா என்கிட்ட கூட சொல்லாம..." - அம்மா..
"அக்கா நீ அடிக்கடி திட்டுவியே, உனக்கொரு பத்ரகாளிதான் பெண்டாட்டியா வருவான்னு, ப.லி.ச்.சி.ரு.ச்.சு பாத்தி...யா?.." சோகமா முகத்தை வைத்துக்கொண்டு..
"வாயக் கழுவுடா... நானே வருத்தமாயிருக்கேன், சண்டை போடுற மாதிரி தம்பி மனைவி வரலயேன்னு..." - அக்கா..
"அம்மா, அப்பா, என்ன செய்வீங்களோ தெரியாது, மறுபடி வெளிநாட்டுக்கு நாங்க போறதுக்குள்ள எங்களோட இந்த 2 மாத லீவுக்குள் கல்யாணத்தை வைத்துவிடுங்கள்.. இன்னிக்கே நான் ஷாப்பிங்ல புகுந்து விளையாடப் போறேன்.." சந்தோஷமாய் அக்கா ஏன் மாமா, உங்க மருமகன் ஒண்ணும் கோழையில்லையே" அர்விந்த், சினேகா அப்பாவிடம்...
"என் மனத்தையே நீங்களும் உங்க நண்பர்களும் மாற்றி 4 நாட்களில் இங்கே கூட்டி வந்தீர்களே, நீங்க கோழையா? யார் சொன்னது?.." ஒன்றும் தெரியாதவர் போல்.. சினேகாவின் அப்பா...
"அதிகமா வரதட்சணை வாங்கி, பெரிய வீட்டுக்கு மாப்பிள்ளையா போவேன்னு சொன்னியே சினேகா, இவங்களோட அழகான பெண்ணைத்தான் கட்டிக்கப் போறேன்.." மாமியார் வெட்கப்பட, அவர் கையை எடுத்து... சொல்கிறான் அர்விந்த்.
"அ.....ப்.....பா...போதும்.. நிப்பாட்ட சொல்லுங்க அவரை..." கெஞ்சி, கொஞ்சி அப்பாவின் நெஞ்சில் முகம் மறைக்கிறாள் மகள்..
=============================================


அதற்குள் பல பைக்குகளின் சத்தம் வாயிலில்... அர்விந்த் வாசலை நோக்கிச் செல்ல,
"சரிம்மா, நீ போய் முகம் அலம்பி, கொஞ்சம் ஓய்வு எடுத்துட்டு இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு வாம்மா.. பூ வைக்கும் படலம், கீழே நீ வந்ததும்...." மாமியார்.. அர்விந்த் அறையைக் காட்டி மாடிக்குச் செல்லும்படி சொல்கிறார்..... விட்டால்போதும் என்று தப்பித்து ஓடுகிறாள் சினேகா வெட்கத்துடன்... உள்ளே சென்றதும் தான் தெரிகிறது அது அர்விந்த் அறை என்று....
புன்சிரிப்புடன் ஒவ்வொன்றாக பார்க்கிறாள்... ஏதாவது சேட்டை பண்ணலாமான்னு. கதவை மெல்லத் தாளிடுகிறாள்....
=============================================


"வந்தாச்சா வானர வாலுங்களெல்லாம்" அக்கா
"அக்கா , பிளீஸ் மரியாதை கொஞ்சம் தாக்கா".
"ஏன்டா... தொடர்ந்தாப்புல 5 நிமிடம் உன்னிடம் பேச முடியுதா..."
"சரி சரி சினேகா எங்க...?" அர்விந்த் கண்கள் தேடுகின்றன...
"அவள் சேலை மாத்த மாடிக்கு போயிருக்காள்." அக்கா.
"எ..ன்..னா...து............ என் ரூமுக்கா? யாரைக் கேட்டுக்கிட்டு.. அய்யோ.. கவுத்திட்டீங்க போங்க..."
தலையில் கைவைத்து ஓடுகிறான் 4 கால் பாய்ச்சலில், 4 படிகளைத் தாண்டி ஒவ்வோர் காலிலும்..
யாரும் நிப்பாட்டுமுன் சினேகாவின் அம்மா சொல்கிறார்...
"தம்பி போகட்டும். போய் என் மகளை சமாதனப்படுத்தட்டும்.. அவளை அமைதிப்படுத்துவது எளிதல்ல"
===========================================



கதவை தட்டி திறந்ததும் வேகமாக உள்ளே நுழைந்து தன் அலமாரியில், உள்ளவற்றைச் சரிபார்க்கிறான்..
அவள் கையில் இவனுடைய ஆல்பம், மற்றும் டைரி...
"சினேகா, அடுத்தவங்க டைரிய படிக்கக் கூடாது, குடுத்துவிடு.."
பின்னால் வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்கிறாள்...
இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது பக்குவமாய் வாங்கிடணும்னு நினைக்கிறான்.
"சினேகா உன்னிடம் ஒண்ணு சொல்லணும்" சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு...
"நல்லா ஏமாத்திட்டீங்க என்னை, இனி என்ன சொல்லப் போறீங்க?.." கிண்டலாக..சினேகா..
"சொல்லட்டா.." அவன்..
"..ம்..." ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள், கேட்க விரும்பாதவளாய்..
"சொல்லிருவேன்.." அவன்..
"...ம்..." ("சொல்லித் தொலை" --மனதுக்குள்..)
"சினே....கா..ஆ..ஆ........... ஐ லவ் யூ ....டா..."' கைகளை இரண்டையும் விரித்துக் கண்களால் வாவென அழைக்கிறான்...
அனைத்து உணர்ச்சிகளும் உச்சந்தலையில் ஒன்றுசேர ஓவென்று அழுதபடி கையிலுள்ளதைக் கீழே போட்டபடி அப்படியே கட்டிலில் உட்காருகிறாள்....
"இதுக்குதானடா இ..த்..த..னை நாள்................................, இந்தச் சொல்லுக்குத்தானே..........." மறுபடியும் பேச முடியாமல்..... அவனைப் பார்க்கவும் முடியாமல்..
அருகில் வந்து மென்மையாக அணைக்கிறான்.....
தடுக்கிறாள்.. விலகி ஓட,
"கிட்ட வராதே, அர்விந்த், நோ"
சொல்லச் சொல்ல முன்னேறுகிறான்...
"அர்விந்த், நோ" பலமாக..
இதற்கு மேல் அவள் போக வழியில்லை.. கத்துகிறாள்..
"அர்விந்த், நோ, பிளீஸ், கிவ் மி சம் டைம்... லீவ் மி அலோன்....பிளீஸ்.."
"நோ"..
"நோ, விடுங்க" மேலும் மறுக்க இயலாமல்.....
கதவு தட்டும் சத்தம் கேட்கிறது....
=================================================


முடிவு -1

விடுங்க..", "விடுங்க.."
தோழிகள் கதவைத் தட்டி உள்ளே வந்து,
"ஏய் சினேகா, என்னாச்சு? எழுந்திரு... இன்னிக்குக் கடைசி நாள், ஞாபகமிருக்கா?..
"என்ன பகல் கனவா டீ"
"ஏய் , உனக்கு பொக்கே வந்திருக்கு... ஹாஹா, அதுவும் இதயம் வடிவில் ஹாஹா.."
தோழிகள் கலாய்க்கிறார்கள்.... பொக்கே எடுத்துப் பார்க்கிறாள், பேரெதுவும் இல்லை.. குழம்பிக்கொண்டிருக்கும் போதே போன் வருகிறது....
"குட் மார்னிங். சினேகா....சாரி இன்னிக்கு உன் நாட்டியத்தைப் பார்க்க நான் வரமுடியாது.. ஆனால் முக்கியமானவங்க வருவாங்க... அப்புறம் என் பொக்கே கிடைச்சுதா?" அர்விந்த்..
"ஓ. சரி.. ஆமா. இல்லை.. நன்றி..." குழம்புகிறாள்...
"சாரி.. யார் வாராங்கன்னு சொன்னீங்க..."
"ஹாஹாஹா" சிரிக்கிறான் அவன்..
"சொல்லுங்க..."
"ம்.. உன் மாமியார். அதான் எங்க அம்மா.. ஹாஹா"னு சொல்லிட்டு போனை கட் பண்ணுகிறான்... பெருமூச்சு விடுகிறாள்...
கடைசிவரை நீ சொல்லமாட்டியா அர்விந்த்.....??????
அர்விந்த் சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.....................



முடிவு-2


கதவு தட்டும் சத்தம் கேட்கிறது....
இருவரும் பதற்றமாய்...
"என்னம்மா இன்னுமா சேலை கட்டுகிறாய், அல்லது தம்பி சொல்லித் தருகிறானா" அக்கா கலாட்டாவாய்..
"அக்கா, நான் கீழே போகிறேன், ஆனா, என் அறையில் எதுவும் இவளை நோண்ட விடாதே" அர்விந்த்.
சினேகாவைப் புதுப்பெண்ணாய் அலங்கரித்து, தேவதையாய் மாடிப் படியில் அழைத்து வருகையில் சொக்கித்தான் போகிறான் அர்விந்த்...
எல்லோரும் அவளையே பார்க்கிறார்கள் என்றதும், வெட்கம் பிடுங்கித் தின்ன, எங்கு பார்ப்பது என்று தவித்துத்தான் போகிறாள்., பின் தரையை மட்டும் பார்க்க..
தன்னை ஒரு முறையாவது பார்த்திட மாட்டாளா "நீ ரொம்ப அழகா இருக்க"னு சொல்லிட மாட்டோ மானு ஏங்குகிறான் அர்விந்த்...
பூச்சூடும் படலம் நடக்கிறது... அவள் தலையில் இவ்வளவு பூ வைத்தால் அந்தப் பூவுக்கு வலிக்குமேன்னு இவன் வருத்தப்பட்டு "போதும் விடுங்க.. பா..வம் சினேகா" என்று சொல்லவும், மாட்டிக்கொண்டான் எல்லோரது கிண்டலிலும்..." அவளுக்காக நீ பிள்ளை பெத்துக்குவாய் போல" என்று எல்லோரும் திட்ட,
"சரி எல்லாம் நல்லபடியாய் நடந்தது... சினேகாவுடன் கிளம்புறோம்" அப்பா..
"அய்யயோ .. சினேகாவைக் கூட்டிப் போக வேண்டாம்னு சொல்லுங்கம்மா.., அக்கா நீயும்..பிளீ........ஸ்...." அர்விந்த்.
"மாமா, 5 வருடமா ஒன்றாகப் படித்தும் நாங்க சரியாகூட பேசிக்கல... சினேகா கூட நிறைய பேசணும்" அர்விந்த்.
"என்னம்மா சொல்ற நீ" சினேகாவிடம் அப்பா..
"நான் உங்ககூட வருகிறேன் பா" வேண்டுமென்றே அவள், கிண்டலாக.. சிரிப்புடன்..
உடனே பக்கத்தில் உள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து வந்து சினேகா முன் மண்டியிட்டு, சத்தமாக, "சினேகா நான் உன்னை விரும்புகிறேன்... வில்.. யூ.. மேரி மீ..... பிளீஸ்.. ஸ்டே நவ்... என்கூடவே இரு..."
வெட்கப்படாமல் பாடிவிட்டு, அவளை மறுபடியும் வெட்கப்பட வைக்கிறான்...
"சரி.. சரி. தம்பி, சினேகா ஒரு வாரம் இங்கு தங்கட்டும்.. அடுத்த வாரம் ஊருக்கு வாருங்கள் அனைவரும்..." அப்பா..
"டேய் , எங்க ட்ரீட் என்னாச்சு... காரியம் முடிந்ததும் மறந்துடுவீங்களே எங்களை.." நண்பர்கள்..
"சரி சரி.. எல்லாரும் சினேகாவோட ஊருக்குப் போய்க் கொண்டாடுவோம். சரியா.. இப்ப எங்களைக் கொஞ்சம் தனியா விடுங்க பிளீஸ்.." யாருடைய அனுமதியும் எதிர்பார்க்காமல் அர்விந்த், சினேகாவின் கைப்பிடித்து இழுத்துச் செல்கிறான் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு... முதன்முதலாக காதல் கதை பேச....
"ஏய்..", "தம்பி..", "டேய்..", "மாப்பிள்ள..", "அர்விந்த்" என்ற எந்தக் குரலும் காதில் விழாமல்.........


---------------------------------முற்றும்.--------------------
=================================================

1 comment:

ஒளியவன் said...

அருமையான கதை அக்கா, கலக்கிட்டீங்க. மீதக் கதையெல்லாம் கூடிய சீக்கிரம் படிக்கிறேன்.