Tuesday, August 25, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 13..

மருத்துவமனை லிஃப்டில் பார்த்த அந்த முகத்தை மீண்டும் மீண்டும் யோசித்து நியாபகப்படுத்த பார்த்தாள்

ஆனால் பத்திரிக்கை துறையில் பல்லாயிரம் பேரை சந்தித்துள்ளதில் சரியாக நியாபகம் வரவில்லை

சரி இனியும் மண்டையை குழப்ப வேண்டாம் என கிளம்பினாள்

--------------------------

ராகவிடமிருந்து தொலைபேசி அழைப்பு...

தொழிற்சாலை குறித்தும் , உதவியாளர் குறித்தும் பேசவேண்டும் வர முடியுமா என..

ஆனால் நாளைய அறுவை சிகிச்சைக்கு அண்ணியையும் குழந்தையையும் தயார் படுத்தணும்.. இன்னும் பல வேலை காத்திருக்கு...

நாளை சாயங்காலம் சந்திப்பதாக சொல்கிறாள்..ஆனாலும் ஏனோ பிடிவாதம்

----------------------------------------------------------------

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததாக மருத்துவர் சொல்கிறார்... எல்லோருக்கும் பாரம் குறைந்த உணர்வும் மிக்க மகிழ்ச்சியும்.

அண்ணியார் தன் கணவனை கூட பாராமல் கிட்னி தானம் வழங்கிய நபரை பார்த்து எப்படியாவது தன் நன்றியை தெரிவித்தே ஆகணும்னு துடிக்கிறார்..கண்ணீரோடு..

சரி அவர் முகத்தை பார்க்காமல் அந்த அறைக்கு மட்டும் சென்று வர அனுமதி கொடுத்தார் மருத்துவர்...

உள்ளே சென்றதும் முன்பகுதி திரையினால் மறைக்கப்படிருந்தது...

அவரின் கால் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு, அங்கேயே அழுதுவிட்டு நன்றியோடு வெளியேறினார் ...

வெளியே காத்திருந்த ,மலர், அண்ணியாரை அணைத்துக்கொண்டு அழைத்து சென்றார் அறைக்கு...

-----------------------------------------------------------------------------------

ஒரு வாரம் எங்கேயும் நகர முடியவில்லை...

அண்ணிகூடவே அவரது வீட்டில் உதவியாக இருப்பதும் குழந்தைகளை கவனிப்பதுமாய்...

அடுத்த வாரம் ராகவ் இடமிருந்து தொலைபேசி..கட்டாயம் சந்தித்தே ஆகணும் என..

கொஞ்சம் நெருடலாய் இருந்தது... இவன் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறான் என்று..

சரி எப்படியும் நளினாவையும் பார்த்து இந்த தொடரை முடிக்கவேண்டும் என கிளம்பினாள்..

எப்போதும்போல் நளினா வந்து வரவேற்கவில்லை...

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என வேலையாள் சொன்னார்.

உள்ளே சென்றதும் , உட்கார முயற்சித்த நளினாவை கைத்தாங்கலாய் பிடித்தாள் மலர்..

விசாரிப்புகள் முடிந்ததும் தொலைபேசி அழைப்பு..

" உனக்காகத்தான்மா காத்துகிட்டிருக்கான் ராகவ்.. உன்னோட தொலைபேசி வேலை செய்யவில்லையா என்ன.?"

" ஒஹ்ஹ் .நான் கவனிக்கலை.. ஒருவேளை சார்ஜ் இல்லாது இருக்கும்.."

" சரி இந்தா மா நீயே பேசு.."

" ஹலொ.. ஹலோ.."

" சத்தமேயில்லையே.?"

" இங்க சிக்னல் கிடைக்காது.. வெளியே வெராண்டாவில் போய் முயன்று பாரும்மா.."

மீண்டும் தொலைபேசி அழைக்க...

வெளியே சென்று காதில் வைத்தவள்,

" என்ன ஆச்சர்யமா இருக்கா ?.. நான் பேசுவேன்னு எதிர்ப்பார்த்திருக்க மாட்ட இல்ல?.."

" .."

" எவ்வளவு பெரிய வேலை செஞ்சிட்டு இப்படி அமைதியா இருக்க நீ..?"

" ஒரு நிமிஷம்.. வந்து.."

" நீ ஒண்ணும் சொல்லவேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும் எனக்கு கிட்னி குடுத்து என்னை பிழைக்க வைக்க இந்த உலகத்தில் உன்னை விட மேலான தெய்வம் யார் இருக்க முடியும்..?"

"..."


" ஒருநாளும் உன்னை நான் தொடக்கூடாது, நான் சுத்தமில்லாதவள்னு சொல்லிட்டே இப்ப உன்னோட உருப்பு என் உடம்பில்..இதுதான் கடவுளின் தீர்ப்பா?..

"அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா உனக்கு நான் மகனாக பிறந்து இந்த கடனையெல்லாம் தீர்க்கணும்..."


அப்படியே அதிர்ச்சியில் சோபாவில் உட்கார்ந்தாள் மலர்... ஏதும் பேச முடியாமல்..

தன்னோட குடும்பத்துக்கும் நளினா சேவை செய்துள்ளாரா?.. அவர் தான் காதலித்ததாய் சொன்ன அந்த பெரிய மனிதன் தன் அண்ணியின் கணவரா... ?

மெதுவாக திரைச்சிலையை நகர்த்தி உள்ளே வந்தவள்,

தொலைபேசியை அப்படியே நளினா கையில் கொடுத்தாள் கண்ணீரோடு....

" என்னம்மா, என்னாச்சு.."

எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு.... அப்படியே நளினாவின் காலடியில் உட்கார்ந்துவிட்டாள்..

போனை வாங்கி காதில் வைத்த நளினாவும் , பதில் பேச வார்த்தையின்றி கண்ணீரை மட்டுமே சாரை சாரையாக வடித்தாள்...

அங்கே பெரும் அமைதி , மகிழ்வோடு நிலவியது, இருவர் மனதிலும் பல்லாயிரம் கேள்வியோடு,...

இவை ஏதும் புரியாமல் உள்ளே வந்த ராகவ் , மலரின் கண்ணீரை பார்த்து கலக்கத்தோடு...பரிதவிக்கிறான்...

No comments: