Tuesday, February 24, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 2

ஆடுவோமே பள்ளு பாடுவோமே...


" என் இயர்பெயர் மீனாட்சி " என சொல்லும்போதே அந்தக் கண்களிலேயே ஒருவித ஆனந்தம் , சிறுபிள்ளைபோல் தெரிகிறது...

யாருக்குத்தான் ஆசை வராது தம் சின்ன வயது வாழ்க்கையின் நினைவுகளை அசைபோடுவது...


" என்னுடைய அப்பா பள்ளியில் ஆசிரியராகவும் சாயங்காலம் கோவில் திருப்பணிகளை செய்பவராயும் இருந்தார்...

நானும் என்னுடைய ஓய்வு வேளைகளில் கோவில் படிகளைக்கழுவி , கோலம் போடும் பணியை செய்வேன்.."

அப்பா எனக்கு பாட்டு கூட அந்தப்படிகளிலேயே கற்றுத்தந்தார்...சுருதி சுத்தமா இருக்கணும் அவருக்கு..நல்ல கனத்த குரலில் பாடுவார், கண்மூடி..

கொஞ்சம் பிசகினாலும் கோபம் வரும்.. அடிப்பதுபோல் கை ஓங்குவாரே தவிர, பின் செல்லமாய் கோபித்துக்கொள்வார்..

நான் பெரிய அளவில் பாட வேண்டும், ஆட வேண்டும் என விரும்பியவர்...

ஒரே அண்ணா... அதிகம் பேசாமலேயே என் மீது பாசமும், பாதுகாப்பும் காட்டுவார்..

உலகமே தெரியாத அம்மா... ஆனா வித விதமா சமையலும் கோலமும் தெரியும்...

அதிர்ந்து பேசினாலே வீட்டின் லஷ்மி கோபிப்பாள் என எண்ணம் அன்னைக்கு...

என் காலில் ஒரு சின்ன முள் குத்தினாலும் துடித்துப்போகும் மொத்த குடும்பமும்...

என் கால்களை மடி மீது எடுத்து வைத்துக்கொண்டு ஆளாளுக்கு கை வைத்தியம் பார்ப்பார்கள்..."

சொல்லும்போதே விழி திரையினில் நீர்,,அதை விழாமல் சமாளிக்கிறாள் நளினா..

" இரும்மா .. குழந்தை அப்படியே அசந்து தூங்கிட்டாள் போல... அவளை கொண்டு அவ அம்மாகிட்ட கொடுத்துவிட்டு வாரேன்..."

" ஓ.. அப்ப இது உங்க பேத்தி இல்லையா..?"

"ஹஹ.. இல்லம்மா.. ஆனா இவ அம்மாவும் எனக்கு பெண்போலத்தான்... ஆந்திராக்காரி.. என்ன வயசு இருக்குங்கிற..?"

சொல்ல முடியாமல் சிரித்து மட்டும் வைத்தாள் மலர்..

" என்கிட்ட வரும்போது அவளுக்கு 16 வயதுதான்மா.."

யாரோ வேலைக்கு என சொல்லி ஏமாற்றி அவளை இந்த இடத்தில் தள்ளி விட்டு சென்றுவிட, தற்செயலாக நான் அவளை சந்தித்தேன்...

தன் வயற்றில் ஒரு குழந்தை கூட இருப்பது தெரியாமல் குழந்தையாக இருந்தாள்...

பொதுவா இப்படி ஏதும் நேராது.. ஆனா நேர்ந்தாலும் கருக்கலைப்புதான்... ஆனல் இவள் விஷயத்தில் அதற்கும் இடம் இல்லாது நாள் கடந்துவிட்டது..

பின் ஒருவழியாக இந்தக்குழந்தையை பெற்றுவிட்டு என்னோடே தங்கிவிட்டாள்.. "

அதற்குள் குழந்தையை தேடி அந்தப்பெண்ணே வந்துவிட ,

அறிமுகமும் செய்து வைத்தாள்...வெட்கப்பட்டாள் குழந்தையாக அவளும்..நேருக்கு நேர் கூட பார்க்காமல்..

கொள்ளை அழகு என்பார்களே அது கொட்டிக்கிடந்தது அவளிடம்.. மிக மெலிந்த தேகம் .. ரோஜாப்பு இதழ்கள்..நீள மூக்கு.. சிரிக்கும்போது மட்டுமே தெரிந்த தெத்துப்பல்..

ஆந்திரா பெண்மணிகள் அழகுதான் என ஒரு நிமிடம் எண்ணிவிட்டு,

ஏன் இந்த சின்ன வயசுல..இப்படியெல்லாம்... அப்ப்டி என்ன வேறு வேலையே இல்லையா என்ன ?.. என கண்களை சுருக்கி , புருவத்தை நெளித்து

பரிதாபப்பட்டு குழம்பிக்கொண்டிருந்த வேளையில், அதையும் படித்தவளாக,

" உன் சந்தேகம் எனக்கு புரிகிறது... அதெல்லாம் பெரிய கதை .. சொல்லுகிறேன் " என்றாள் நளினா..

" நீங்க ரொம்ப புத்திசாலி..."

" ஹஹ.. " இளக்காரமாய் ஒரு சிரிப்பு உதிர்த்தாள்...

" உண்மையாய்தான் சொல்லுகிறேன்.. நான் மனதில் நினைத்தவுடன் சொல்லிவிட்டீர்களே."

" ஹஹ,.. புத்திசாலியாய் இருந்தால் என்ன...அது தேவையற்றதாய் போய்விட்டதே...தேவைப்படும்போது.."என்றாள் விரக்தியுடன்..

" சரி என் கதையை தொடருமுன், என்ன சாப்பிடுகிறாய் சொல்..?என்ன சமைக்க சொல்லட்டும்...வெஜிடேரியனா, இல்ல ?"

" அப்ப நீங்க..எல்லாம் சாப்பிடுவீங்களா..?"

" ஹஹா.. வேறு வழி... அதையெல்லாம் மாட்டேன்னு சொல்லத்தான் முடியுமா இந்த தொழிலில்... முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கும்மா..?"

" அத விட நெறய இருக்கு... குடிக்க சொல்லி வற்புறுத்துவாங்க... சில சமயம் பீடி, சிகரெட்டும் " னு சொல்லும்போதே பல் கடித்து முகம் சுழிக்கிறாள் , மலர்...

" சரி சரி.. இதெல்லாம் நான் இனி சொல்லல...என்ன சாப்பிடுகிறாய் சொல்.."

" இல்ல இல்ல.. பரவால்ல.. நீங்க எல்லாத்தையும் தயங்காமல் சொல்லுங்க.. நான் நிருபராய்தானே வந்துள்ளேன்" என சமாளிக்கிறாள்..

" சரி உனக்கும் சமைக்க சொல்லிவிட்டு வருகிறேன்... அதுவரை இந்த ஆல்பத்தை வேணா பாரேன்.."

" இல்லீங்க.. வேண்டாம்.. வேண்டாம்.. நான் அலுவல் திரும்பணும்.. வேறு அவசர வேலை ஒன்றுள்ளது என தப்பித்தாள்..

" ஓஹ்.. அப்ப எங்க வீட்டிலெல்லாம் சாப்பிட மாட்டீங்க அப்படித்தானே.." புன்னகையுடன்..

" அய்யோ அப்டிலாம் இல்லீங்க... மன்னிக்கவும் கண்டிப்பா இன்னொருமுறை சாப்பிடுகிறேன்.."

உடனேயே உள்ளே சென்று தட்டில் வீட்டில் செய்யப்பட்ட கைமுறுக்கும், கொஞ்சமாய் பால்கோவாவும் எடுத்து வந்தாள்..

கூடவே குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஆரஞ்சு பழச்சாற்றையும் எடுத்து ஒரு கண்ணாடி தம்ளரில் மிக பொறுமையாக ஊற்றி எடுத்து வந்தாள்..

அவள் செய்யும் ஒவ்வோரு செயலிலும் ஒரு அழகு இருந்தது.. கூடவே மென்மையும்...

"சரி தொடருகிறேன்... இப்படி செல்லமாய் நான் வளர்ந்து , நான் வயதுக்கு வரும்போதுதான் அந்த சோகம் நிகழ்ந்தது...

அண்ணா பிளஸ் டூ... நான் ஏழாம் வகுப்பு...நான் வௌயதுக்கு வந்த சேதி கேட்டு ஊருக்கே சாப்பாடு போட்டு கொண்டாடினார் என் அப்பா."

எல்லோருமே அதிசயித்தார்கள், இவருக்கு ஏன் இந்த டாம்பீகம்னு..."

" ஏன் நல்லதுதானே செய்கிறேன் ஊர்ருக்கு சாப்பாடு போடுவதற்கு ஒரு காரணம் என்பார் அப்பா..

நான் என் விடுமுறை முடிந்து பள்ளி சென்றுவிட்டு வந்தபோது என் ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்

பக்கத்தாத்து கிட்டு மாமாவும் அப்பாவும்.. அப்பா முகத்தில் களையே இல்லை..

அம்மாவோ ஏதோ பறிகொடுத்ததுபோல்..மாமாதான் கவலையே வேண்டாம் ஹோமம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல்

படுத்திக்கொண்டிருந்தார்..

ஆனாலும் அப்பாவுக்கு முன்புபோல் எதிலும் ஆர்வமில்லை..அப்பப்ப என் வீணையை வாசிக்கச்சொல்லி கேட்பார்.. ஆடச்சொல்லி ரசிப்பார்..

அதையும் கொஞ்ச நாளில் எரிச்சலடைய தொடங்கினார்..

அண்ணா திட்டிக்கொண்டிருப்பான், ஜாதகம் எல்லாம் பொய் என்று.. எனக்கு ஒன்றுமே தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்..

ஆனால் எல்லாமே விளங்க வைக்க வேண்டிய நாள் மறுநாள் நான் பள்ளியிலிருக்கும்போதே வந்தது............


***************************************தொடரும்*******************************************

No comments: