Sunday, August 10, 2008

தத்து குழந்தை..சிறுகதை



" என்னம்மா , இன்னுமா கிளம்புற.. நேரமாச்சு.. சீக்கிரம்..."
" இதோ வந்துட்டேங்க... குழந்தைக்களுக்கு பரிசாக வாங்கிய சில பொருள்களை எடுத்துவைக்கிறேன்.."
ரிஷியும், ரேஷ்மாவும், ஆசையோடு , சந்தோஷமாக காரில் வந்து அமர்ந்தனர்..., ஏகப்பட்ட பரிசுபொருள்களோடு.
" ரேஷ்மி, நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத..."
" இல்லை, இல்லை .. சொல்லுங்க....தப்பா எடுத்துக்கிறமாதிரி சொல்லமாட்டீங்க..." சிரிப்புடன்..
" நாம தத்தெடுக்கப்போற குழந்தையை பரமாரிக்க ரொம்ப பொறுமை வேணும்பா..."
"ஆமா, அதுக்கென்ன?.."
" இல்ல , ஒரு குழந்தைன்னா பரவாயில்லை.. இரண்டு குழந்தை.. அதுதான் ..."
" அதுக்கெல்லாம் தயாராதான் இருக்கேங்க..."
"அதுகில்லப்பா, இரண்டு குழந்தைக்கும் வேளாவேளைக்கு கவனிப்பு, வேணும்.. நீ ரொம்ப பொறுமைசாலி... ஆனாலும், குழந்தை தெரியாமல்
இருப்பிடத்திலேயே , மலம் கூட கழிக்கலாம்... அதுதான்.."
" ஏன் ரிஷி , இதுக்கெல்லாமா யோசிக்கணும்.. அந்த குழந்தைங்க தரப்போற புன்னகை, மனநிம்மதியும் , மகிழ்ச்சியும், நான் செய்யப்போற
எல்லாத்துக்கும் ஈடாகாதே...இத்தனை நாள் இதனையெல்லாம் இழந்ததற்கு மொத்தமா சேர்த்து அனுபவிக்கப்போறேன்னு நினைக்கும்போதே
சந்தோஷமாயிருக்கு ரிஷி..."
" சரிங்க தலைவியே, ஆனா இந்த ரிஷியையும் கொஞ்சம் அப்பப்ப கவனிச்சுக்கோங்க, தயவாக....."கெஞ்சுவதுபோல்..
" ரி....................ஷ்ஷ்ஷ்ஷீஈஈஈஈஈஈஈஈஈஈ" செல்லமாக இடித்தாள் ..
" அடிக்கடி மருத்தவமனை, செலவுகள் என்று எதிர்பாராத விஷயங்கள் வரலாம்... "
" அய்யோ .. என்ன ரிஷி... இதுகூடவா புரியாமலா..?.."
" இல்லம்மா, அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு என்ன வருத்தம் , நோய் என்றுகூட நமக்குத்தெரியாது.. ரொம்பவும் பாசம் வெச்சுட்டு ..அப்புரம், ஒருவேளை பிரிய..."
ரிஷியின் வாயைப்பொத்தினாள் ரேஷ்மி..
" போதும் ரிஷி.. இதுக்குமேல ஒண்ணும் பேசாதீங்கப்பா... கடவுள் இருக்கிறார்..."
வண்டியை நிறுத்தி கண்கலங்கியவளை அணைத்துக்கொண்டான்...
" உன்னுடைய வெகுளித்தனமான , இளகிய மனம் தெரிந்துதான் சொன்னேன்டா, மன்னிச்சுக்கோம்மா"
கார் மெதுவாக, முதியோர் இல்லத்துள் நுழைந்தது, இரு முதியோரை, குழந்தையாக, கொஞ்சுவதற்கு, தத்தெடுக்க ஆவலாய் வந்தார்கள் குழந்தைப்பேறு
இல்லாத, காதல் திருமணத்தால் உறவுகளையும் இழந்த ரிஷியும் , ரேஷ்மாவும்...



No comments: