பால் கெட்டியதோ தாய் பாசம் கெட்டியதோ?????
" அம்மா , அம்மா?.."
" அம்மா தூங்குறீங்க போல. பலகாரம் தர வந்தேன்.... சரி அப்புரமா வாரேன்.."
" யாரு விக்னேஷ் தம்பியா?.."
" இல்லம்மா நான் அருண்.."
" எப்பப்பா வந்த ஊர்ல இருந்து?. எல்லாரும் சொகந்தானே?"
" ஆமாம்மா.. இப்பத்தான், ஊர்ல எல்லோருக்கும் நிம்மதி உங்களைப்பற்றி சொன்னதிலிருந்து..இதோ அம்மா அனுப்பிய பலகாரம்"
" அட.. வெச்சிருந்து சாப்பிடுவியா.. சரி சரி. குளிச்சுட்டு வா.. ஆப்பம் தயார் பண்ணுறேன் .. சாப்பிடு.."
----------------------------------------------------------------------------
கடந்த 3 மாதமாக சுகந்தி அம்மா தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பசங்களுக்கு சமைத்து கொடுப்பதும்
அவர்களும் தன் அன்னையைப்போலவே நினைப்பதும், தாங்க முடியா சந்தோஷம் சுகந்திக்கு..
ஆனால் இவை யாவும் இதுவரை ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் வேணுகோபாலுக்கு
தெரியாது... பாதி நாட்கள் வெளிநாட்டுப்பயணம்... மீதி நாட்களும் படுக்க மட்டுமே வீட்டுக்கு...
அந்தஸ்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்..மிக வெற்றிகரமாக 2 பிள்ளைகளை வளர்த்து வெளிநாட்டுக்கு அனுப்பியவர்..
சொந்த வீட்டை வாடகைக்கு கூட கொடுக்கமல் இருந்தவர், மனைவியின் கட்டாயத்தின்பேரில், துணைக்காக சரி என்றார்..
இன்று ஞாயிறு ,அதிசயமாக வீட்டில் , வாசலில் பேப்பருடன்...
"அம்மா..."
" யாருப்பா நீங்க?.. ஓ மாடியில் உள்ளவரா.. என்ன வேணும்"
" அம்மா இல்லியா.. இந்த பாத்திரத்தை கொடுக்க வந்தேன் அங்கிள்.."
-------------------------------------------------------------------------------------------------
" என்ன நடக்குது இங்க?..பாத்திரங்கள் எல்லாம் ?..."
" நானே சொல்லணும்னு இருந்தேன் .. மாடியில் உள்ள 5 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்.. அவர்கள்
அதற்கு பணம் 10,000 மாதம் தருகிறார்கள்..."
" ஓஹோ.. உனக்கு தேவையான பணத்தை நானும் , உன் பிள்ளைகள் இருவர் தரவில்லையா?.. ஏன் இப்படி
என் மானத்தை வாங்குகின்றாய்..?.. ஒரு சமையல்காரியாய்..???"
" அதாங்க வித்யாசம்.. உங்களுக்கு தெரிவதெல்லாம் அந்த பணம். அதனால்தான் அப்படிச்சொன்னேன்...இப்பத்தான்
வாழ்க்கையில் முதல்முறையாக முழுவதும் வாழ்வதுபோல் உணர்கிறேன்.. பிள்ளை பிறந்ததுதான் தெரியும்.. நான் பட்டிக்காடு
என்று சொல்லி குழந்தைகளை படிக்க வைக்க ஊட்டி காண்வெண்ட் அனுப்பினீர்கள்.. அப்புரம் ஐஐடியாம், வெளிநாடாம்..."
" ஓ பணம் சம்பாதிக்கிறோம் என்ற திமிர் வந்துவிட்டதா?.. என்னிடம் அனுமதி கேட்காமல் செய்கிறாயென்றால் ,என்னை கூட விட்டு போகத்தயாரா ?"
".நான் ஏங்க போகணும்.. என்ன குறை வெச்சீங்க இதைத்தவிர.. எனக்கும் கடமை இருக்கு உங்களுக்கு ஆயுசுக்கும் சேவை செய்ய..ஆனா; எனக்காக முதல்முறையா
வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன் , இதை நிப்பாட்ட மாட்டேன் என்றே தோன்றுகிறது...பேரப்பிள்ளையாவது கொஞ்சலாம் என்றால் பேசும் பாஷை புரியவில்லை..
பிரசவித்தவளுக்கு ஒரு வருடம்தான் பால் கெட்டி அவதிப்படுவாள்... ஆனால் நானோ 25 வருடமாக பாசத்தை கெட்டி வைத்து அவதிப்பட்டுள்ளேன், இந்த போலி
வாழ்க்கையில்... இப்பதான் 5 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கேன்.. என் மனத்தில் சுமையாக தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம், அவர்கள் " அம்மா" என்று அழைக்கும்போது
அப்படியே பீறிச்சு வெளிவருகிறது..... கடைசி காலத்தில் இதற்காக எதையும் இழக்க தயார்..
பயமுருத்தவில்லை... புரிந்து கொள்ளுங்கள்.." என்று கண்ணீருடன் சென்றுவிட்டாள் சுகந்தி..
பெருமிதம் கொண்டிருந்த தன் போலி வாழ்க்கையின் மறுபக்கத்தினை உணர்ந்தவராய் அதிர்ச்சியில் மாடிக்கு ஏறினார் வேணுகோபால்..
" அங்கிள் நீங்களா?.. கூப்பிட்டா நானே வந்திருப்பேனே?." பயத்துடன் சீனு..
" அங்கிள் இல்லப்பா, அப்பான்னு சொல்லுவியா?.."
*******************************************************************************************************************
No comments:
Post a Comment