பரபரப்பூட்டும் காட்டாறு , மலை , அருவி விளையாட்டுகள் பாகம் 2
தலை குப்புர விழுந்ததும் எழலாம் என்றால் தண்ணீர் இழுக்கிறது... அப்போதுதான் சின்னவன் ஞ்ஜாபகம் வருது.. எங்கே சத்தத்தையே காணோம்.. அப்பாவும் மகனும் சுமார் 30 அடி தூரத்தில் , பத்திரமாக எழுந்து நிற்கிறார்கள்...என்னையும் பெரியவனையும் மட்டும் இழுத்து வந்துள்ளது தண்ணீர்.. ( ஆமா கொஞ்சம் கனம் அதிகம்..)
அங்கங்கே வலிக்குது , ஆனா எங்கெங்கேன்னு தெரியலை..
தண்ணீரில் எதிர்த்து சின்னவன் கிட்ட போனோம்... பேயரைந்தது போல் அப்பா..
" அப்பா, ஒன்னுல்ல, அப்பா, ஒன்னுல்ல, " என்று ஆறுதல்படுத்துகிறான் குழந்தை...
ஏதோ எல்லாரும் உயிரோடதான் இருக்கோம் என்று சந்தோஷம்...ஆழம் அதிகமில்லை...
அதற்குள் கவிழ்ந்த படகை திருப்பிப்போட்டு ஏறும்போது தேடுகிறான் படகின் துடுப்பை..
அது கோவித்துக்கொண்டு விரைவாக செல்லுது.. மீன் போல் ஒரே பாய்ச்சலில் நீந்தி அதை எடுக்கிறான் படகோட்டி..
ஒருவழியாக மீண்டும் ஏறி உட்கார்ந்தோம்.. அப்போதுதான் யார் யாருக்கு என்னென்ன காயம் என்று லிஸ்ட் தயாரித்தோம்.. பாவம் அவருக்கு கை முழங்கையில் அதிக சிராய்ப்பு.. எனக்கு காலில்... பிள்ளைகளுக்கு ஒன்றுமில்லை கடவுள் கிருபையால்..( இருந்தாலும்தான் என்ன.. பழகட்டும்)
என் காலில் ரத்தம் பார்த்து கூச்சலிடுகிறான் மகன்..
" ஐய இது ஜூஜூபி.. நானெல்லாம் சின்ன வயசுல..."
" அய்யோ ஆஅரம்பிச்சுட்டாளா உங்க அம்மா?.. இதுக்கு நான் தண்ணீரிலேயே இருப்பேனே.."
சரி ஏற்கெனவே வெந்த புண்ணில் வேல் , ஞாயமில்லைதான் என்று நிப்பாட்டிக்கொண்டேன் என் பிராதபங்களை..
ஒருவழியா இப்ப அடுத்து வந்த 10 படிகளையும் உலக கடவுளை வேண்டிக்கொண்டு மறுபடியும் விழாமல் வெற்றிகரமாக வந்து சேர்ந்தோம்.
அந்த ஆற்றின் இரு கரையிலும் வளர்ந்த மரங்கள் தன் அகன்ற கிளைகளை , நீரில் பரப்பி விளையாட, அதனூடே நாங்கள் செல்லும்போது எங்களையும் கொஞ்சம் பிடித்து கொஞ்சியதில், சின்னவனுக்கு கன்னத்தில் சிராய்ப்பு..
இடையில் திடீரென்று பெரியவான் " அப்பா உங்க கழுத்தில் பூச்சி " என்று ஏதோ டைனோசர் இருப்பதுபோல் கத்த, நானும் பயந்துபோய் பார்த்தால் ஒரு சின்ன வண்டு...
பிள்ளைகளுக்கு பூச்சி, எறும்பு கூட பார்ப்பது அரிதாகிக்கொண்டே வருகிறதே...
படகோட்டி மட்டும் துடுப்பு போட, என் அருகில் இருந்த துடுப்பை எடுத்து நானும் போட,
" நீ பேசாம இருக்கமாட்டியா.. உனக்கு தெரியாது.."
" இல்லீங்க அவன் பாவம்... ஒரு ஆள் எப்படி தனியாக "
" பாவம் பார்க்க ஆரம்பிச்சுட்டீயா...இனி எங்களை ஒழுங்கா போய் சேர்க்க மாட்ட.." பாவம் 1 என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்.
" இல்ல அங்க பாருங்க மத்த படகில் எல்லாரும் துடுப்பு போடுராங்க..நாமளும் போடணும்.. எனக்கு ஆசை என்று விடுங்களேன் " உணமையில் பாவமாயிருந்தது.. நானும் போட மகனும் போட, எளிதாக இருந்தது...
படிகள் வரும்போது நான் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி படகை திருப்ப, அது சரியாக இறங்கியது.. ஆனா இவர்கள் பயம்தான் தாங்கமுடியவில்லை..." அம்மா, ஆடாம அசையாம இருங்க என்று.."
ஒருவழியா கரை வந்ததும் ஒரு வாலிப கூட்டம் கொஞ்சம் எங்களை பொறாமையாக பார்த்தது.. நாங்கள் ப்ரிதாபமாக பார்க்கிறாங்க என்று நினைத்தால் அப்படியில்லையாம்..
ஆற்றில் விழுந்து எழுவதே கிளர்ச்சியாம்.. அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லையாம்... அதனால் இன்னொருமுறை போகலாமா என்று யோசிக்கிறாங்களாம்... நல்லா யோசிங்கப்பா.உங்க வயசு அப்படி... இருந்தாலும் என் கணவருக்கு இப்ப கொஞ்சம் திருப்தி... ஏதோ நாமும் கொஞ்சம் சாதனை பண்ணிட்டோம் என்று...( இல்லாட்டி திட்டு மழை பெய்திருக்கலாம் .. தப்பித்தேன்..)
அடுத்து, சின்னவனுக்கு உடுப்பு மாத்தி சாப்பாடு கொடுக்கணும் .. அது தான் பெரிய வேலை.. நல்லவேளை ஒரு நாய் கட்டிப்போட்டிருந்தார்கள்.. மேலும் அருகில் மாமரத்தில் மாங்காய் காய்த்து பறிப்பாரில்லாமல் இருந்தது அருகில் துரட்டியும் ( சரியா??) பறிப்பதற்கு.
ஓட்டுனர் மாங்காய் பறித்து போட ஒருவழியாய் சாப்பாடு சென்றது...
அனைவரும் குளித்து உடுப்பு மாற்றி இப்ப திரும்பவும் அதே ஆற்றை கடக்கணும்.. இந்த முறை தயாராக அங்கிருந்தவர்கள் இன்னோரு வண்டியில் வர, நாங்கள் ஆற்றில் சென்று இறங்கி தள்ள தயாராக இருக்கும்போது சர்ரென்று எங்களை ஏமாற்றிவிட்டு கார் விரைவாக மேலேறியது... சே எங்க அனைவரின் வீரமும் காட்ட முடியாமல் போய்விட்டது..
சரி முடிந்ததா , வீட்டுக்கு போகலாமா"
" அட என்ன இப்பதான் மணி 12 ஆகுது.. இன்னும் இருக்கு விளையாட்டுகள்... முதலில் சன்னாவும் சப்பாத்தியும் சாப்பிடுங்கள் " என ஆசுவாசப்படுத்தி அடுத்த விளையாட்டான அருவியில் கயிறு பிடித்து இறங்கும் ஆபத்தான விளையாட்டை நோக்கி சென்றோம்..
" ஆமா ஓட்டுனர் சாப்பிட்டாரா. பாவம் அவர்.."
" பாவம் 2..அப்பவே சப்பிட்டார்."
Tuesday, June 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment