Tuesday, June 10, 2008





பாகம் 1


ஞாயிறன்று சுமார் 200 கி.மீ தூரத்திலுள்ள சாராபுரி எனுமிடத்திற்கு சென்றோம்..இயற்கை சூழ்ந்த இடத்தில் பலவிதமான சாகச விளையாட்டுகள் அமைத்துள்ளனர்.. அதில் முக்கியமானது, விரைந்து ஓடும் காட்டாற்றில் மிதவை படகில் துடுப்பு போடுவது..சுமார் 6 மாடி உயரமுள்ள அருவியிலிருந்து கயறு பிடித்து கீழே இறங்குவது , போன்ற ஆபத்தான , அதே சமயம், கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்..
இது தாய்லாந்து வந்ததிலிருந்தே ஆசை .. இப்போதுதான் நிறைவேறியது...
ஓட்டுனரிடம் சொன்னால் அவருக்கு அப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாதாம்...கேக்கணுமா, பிள்ளைக்கும் , அப்பாவுக்கும், முணுமுணுப்புக்கு...
பேசாமல் வாருங்கள், நான் அழைத்துச்செல்கிறேன் என்று தைரியப்படுத்திக்கொண்டு, மலையில் வண்டியில் ஏற ஆரம்பித்தோம்...
கடைசியில் ஒருவழியாக கண்டும்பிடித்துவிட்டோம்...
அது ஒரு பள்ளத்தாக்கு, நடுவில் காட்டாறு.. அதில் ரோடு உள்ளது ரோட்டுக்கு மேல் முக்கால் அடி தண்ணீர்.. கடந்து அந்த பகுதி போனால் தான் விளையாட முடியும் ..யோசிக்கும்போதே எதிர் பக்கம் கார் வந்ததால், தைரியமாக ஓட்டுனர் காரை செலுத்த கார் சரியாக ஆற்றின் மையப்பகுதியில் சென்று நின்றுவிட்டது... கேக்கணுமா, எனக்கு விழுந்த வசவுகளை... ( எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில்...ஹிஹி.. பழகிவிட்டது..)
இப்ப காரை தள்ளணும்.. என் பக்கம் கதவை திறக்க முடியாது.. கணவரும் , ஓட்டுனரும் , இறங்கி காரைத்தள்ள, முடியவில்லை... ( பின்ன உள்ளே இருப்பது யாரு?..) இதை பார்த்துக்கொண்டிருந்த எதிர் காரிலிருந்தவர்கள் உதவ ஓடி வந்தார்கள்..
நான் இற‌ங்க‌லாம் என்றால் சின்ன‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுகிறான்..ஒருவ‌ழியாக‌ நானும் இற‌ங்கி த‌ள்ளிய‌தும் கார் முன்னேறிய‌து... ந‌ன்றி சொல்லிவிட்டு மேட்டிற்கு சென்றோம்... குதிரை ப‌ழ‌க்கும் இட‌மும், சூரிய‌காந்தி தோட்ட‌மும், ம‌லைக‌ளின் ப‌ச்சை ப‌ட்டாடையும், அலுப்பு ச‌லிப்புக‌ளை நீக்கிய‌து..ர‌ம்மிய‌ம் தொற்றிக்கொண்ட‌து..
முத‌லில் எடிவி ( ATV- ALL TERRAIN VEHICLE/SPORT UTILITY )எனும் 4 ச‌க்க‌ர‌ மோட்டார்வாக‌ன‌ம்..க‌ர‌டு முர‌டான பாதையில் போக‌க்கூடிய‌து... நானும் என் பெரிய‌ ம‌க‌னும் ஏறிக்கொண்டோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 கி.மீ ப‌ய‌ண‌ம், ம‌லைமேலே ஏற்ற‌மும், ச‌ர்ரென்று கீழே இற‌க்க‌மும்.களிமண் சகதியிலும், பாறைகளிலும். ப‌ய‌மாக‌த்தானிருக்குது, இருந்தாலும் பைய‌னிட‌ம் காண்பிக்க‌ முடியாதே...கீழே இற‌ங்கும்போது க‌த்துறான், " அம்மா ஆக்ஸிலேட்ட‌ரை போடாதீங்க‌, பிரேக‌ ம‌ட்டும் பிடிங்க‌ என்று.." சும்மாவே உத‌ற‌ல்..அக்க‌ம் ப‌க்க‌ம் பார்க்க‌க்கூடாது.. ப‌ள்ள‌த்தாக்கை பார்த்தால் போச்சு.! க‌ண்டிப்பாக‌ ஓட்ட‌ முடியாது...
ஒருவ‌ழியாக‌ ப‌த்திர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்... அடுத்து காட்டாற்றில் மித‌வை ப‌டகில் ப‌ய‌ண‌ம்.. தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை உட‌ம்புக்கும் , த‌லைக்கும் போட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு, ப‌ட‌கில் குடும்ப‌த்தோடு உட்கார்ந்தோம்..
"உன‌க்கு தெரிய‌மா, எப்ப‌டி போக‌ணும்னு"
" ம். அதெல்லாம் ப‌ய‌மில்லை , வாங்க‌ "..என்று தைரிய‌ம் சொல்லியாச்சு , இருந்தாலும் உள்ளுக்குள் உத‌ற‌ல்.. சின்ன‌ப்பைய‌ன் இருக்கானே என்று.. ப‌ட‌கோட்டியும் எங்க‌ளுட‌ன்.. ஆற்றில் ஆழ‌ம் அதிக‌மில்லை.. இடுப்ப‌ள‌வே த‌ண்ணீர், இருந்தாலும் இழுப்பு அதிக‌ம்...

நான் ( தைரியசாஆஆஆஆஆ...லி) முன்னால் உட்கார‌ அவ‌ர்க‌ள் மூவ‌ரும் பின்னால் ப‌ய‌ந்துகொண்டே..
ப‌டிப்ப‌டியாக‌ கீழே இற‌ங்கும் த‌ண்ணீர் பாய்ச்ச‌ல் மிக‌ அழ‌கு.. அழ‌குதானே ஆப‌த்தும்..?.
முத‌ல் ப‌டியில் மித‌வை அழ‌காக‌ இற‌ங்கிய‌து... தைரிய‌ம் வ‌ந்துவிட்ட‌து...
அடுத்தும்.... ப‌ர‌வாயில்லையே...
மூன்றாவ‌து கொஞ்ச‌ம் பெரிதும் சிக்க‌லான‌தும்...நேரே செல்ல‌ வேண்டைய‌ ப‌ட‌கு,
ஒரு பாறையில் முட்டி, மோதி, ச‌டாரென்று திரும்பிய‌து.. என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகுதோ என்று எண்ணும்போதே ப‌ட‌கு க‌விழ்ந்து அனைவ‌ரும் ப‌ட‌குக்கு அடியில்.....

No comments: