Wednesday, April 29, 2009

ஒதுக்கப்பட்ட கல் பாகம் - 9-10

குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தவளிடம் பேச முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றான்...


வார்த்தைகளை கூட மென்மையாக பேசியே பழக்கமில்லாதவனால் எப்படி கீழிறிங்கி உடனே பேசிவிட முடியும்?..

அன்பை கூட அதிகாரமாய் காட்டித்தான் பழக்கம் அவனுக்கு...தன் அன்னை, அக்கா இருவரை தவிர வேறு பெண்களிடம் இறங்கி பேசியவனில்லை...

தான் தோல்வி கண்டது போல் காட்டிக்கொள்ளவும் கூடாது...

ஆனால் அவளின் இந்த தீர்மானத்தை வளர விடவும் கூடாது...

அவளாக பேசுவாள் அதனைத்தொடர்ந்து நாம் கொஞ்சம் விளக்கலாம் என்றிருந்தான்...

மணிக்கட்டில் கைகடிகாரத்தை மாட்டிக்கொண்டே, தெளிவான புன்னகையுடன்,

" ராஜ், நான் இன்றைக்கு வர தாமதமாகலாம்... வேலைக்கார பாட்டி சமைத்து வைப்பார்...ஏதேனும் தேவையென்றால் தொலைபேசுங்கள்.."

என்று சர்வ சாதாரணமாய் சொல்கிறாள்... அதில் அலட்சியமில்லை.. அக்கறை இருக்கு ...

கோபமில்லை... கவனிப்பும் இருக்கு...



சரி இப்போதைக்கு பேச முடியாது என்று எண்ணி தலையை மட்டும் ஆட்டினான்...

------------------------------
-------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் கழிந்தது.. எந்த வித நெருக்கமும் , வெறுப்பும் இல்லாமல்.. அதே நிலையில்...ஆனால் அவளோ புத்தகமும் கையுமாய்...முன்பு தொலைக்காட்சியாவது ஒன்றாய் அமர்ந்து பார்ப்பாள்..இப்ப அதுவும் இல்லை.

கேட்பதற்கு மட்டும் மரியாதையான பதிலோடு...எல்லா வேலைகளையும் எப்போதும்போல செய்துகொண்டு

பிரச்னை குறித்து பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்,

" அதை பற்றி பேச வேண்டாமே ராஜ்...எனக்கு கொஞ்ச நாட்கள் அவகாசம் வேண்டும் .. நாம் இப்படியே இருப்போமே...

நான் சொல்வதுதான் சரி என சொல்லவில்லை.. ஆனால் அதே சமயம் ஒரு குழப்பமான சிந்தனையில் இதை பேச விரும்பவில்லை..

கொஞ்ச நாள் கடத்தி பார்ப்போம்..." என விடுகதையாய் ஒரு புதிர் போடுகிறாளே தவிர, தீர்மானமாய் இருப்பதுபோல ஒரு பயம் தருகிறது..


வலிய சென்று அவள் கை பிடித்தாலும் நாசூக்காக தவிர்க்கிறாள்..

இரவின் தனிமை இன்னும் கொடுமையாய் ...அவனுக்கு.


------------------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்துக்கு சென்று முக்கிய தொலைபேசி அழைப்புகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டு கணினி முன்பு அமர்ந்தவளிடம் சுதிர் தயக்கத்துடன் வந்தான்..

எப்பவும் ஜாலியாக பேசுபவன், முகத்தில் சிரிப்பின்றி..

" வா சுதிர் உட்கார்... என்ன சேதி.. தேர்தல் வருதே ரொம்ப பிஸியா நீ.?.."

" ம்."

" சரி என்னாச்சு உன் கல்யாண விஷயம்... எனக்கெல்லாம் சொல்லமாட்டியா என்ன.?.. உங்கம்ம கிட்ட பெஎசி கூட நாளாச்சே.. சொல்லு.."

"ம்."

" அட என்ன ?.. நான் என்ன கேட்டாலும் ம். ம். னு பதில் சொல்ற. என்னாச்சு.?" னு பார்வையை கணினி விட்டு அவனிடம்..சிரிப்போடு...


" இல்ல .. நான் பேசக்கூடாதுதான்.. ஆனா.. "

" என்ன சுதிர்.. என்ன இது.. தெளிவா சொல்லுங்க என்கிட்ட என்ன தயக்கம்..? காஃபி போடவா... உனக்கும் சேர்த்து?."

" இல்ல எனக்கு வேண்டாம்.. "

" சரி அப்ப சொல்லு .." அவள் எழுந்து சென்று காஃபி தயாரித்துக்கொண்டே..

" ராஜ் அண்ணா பேசினார்..."

காஃபியோடு சட்டென்று திரும்பினாள்.ஆச்சர்யமாய்.....பார்வையிலேயே விழி உயர்த்தி என்ன என்று கேட்டாள்...

" என்னாச்சு உங்க இருவருக்குமிடையில்?.. தப்பா நினைக்காதீங்க மலர்.. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் நபரில் அவரும் ஒருவர்..."

" என்ன சொன்னார்...?.. " நேரடியாக கேட்டாள்..

" அவருக்கு பிடிக்காட்டி வேலையை விட்ருங்களேன் மலர்...இது ஒண்ணும்..." சொல்லி முடிக்குமுன்பே கையால் சைகை காட்டி நிப்பாட்டினாள்..

பின் சிறிது நேரம் அமைதியாக காஃபியை குடித்து முடித்தாள்..

" மன்னிக்கவும் சுதிர்.. அது பற்றி நான் யாரிடமும் பேசுவதாயில்லை... மேலும் பிரச்னை ஒண்ணும் பெரிசா இல்லை... பேசுமளவுக்கு.." சாந்தமாய் பேசினாள்...புன்னகையோடே..

" எது எப்படியோ மலர்.. நல்ல முடிவா மட்டுமே இருக்கட்டும்.. இத பற்றி பேசுவது நாகரீகமில்லை னு எனக்கு தெரிந்தாலும், நீங்க இருவரும்

நல்லா இருக்கணும்னு மட்டும் நினைக்கிறேன்.. தப்பா எடுக்காதீங்க..நான் அப்புரமா வாரேன்.." னு எழுந்து சென்றுவிட,

ஏன் இவர் சுதிர் கிட்ட எல்லாம் சொல்லணும் னு கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் அதை குறித்து அவர் வேதனைப்பட்டிருப்பது அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது...

சரி இன்று இதுபற்றி ஏதாவது பேசினால் கொஞ்சம் நிதானமாய் பேசலாம் என நினைத்துக்கொண்டாள்..

நளினாவிடம் இருந்து அழைப்பு...அவள் மகனுக்கு தமிழ்நாட்டில் ஆரம்பிக்க போகும் தொழிற்சாலைக்கு ஈடுபாட்டோடு வேலை செய்ய தைரியமாக ஒரு பெண் உதவியாளர் தேவை என்றும்,

தனக்குத்தெரிந்த பெண் யாராவது இருந்தால் சொல்லவோ அல்லது அவர்கள் பத்திரிக்கையில் விளம்பரம் தரவோ வேண்டும் என கேட்டுக்கொண்டாள்..

அடுத்த மாதம் தன் மகன் இதற்காக வெளிநாட்டில் இருந்து அவசரமாக வருவதாகவும்...


யாரை சொல்லலாம் என அதை பற்றி எண்ணிக்கொண்டிருக்கையிலேயே அம்மாவிடம் இருந்து அழைப்பு..' என்னம்மா பிரச்னை உங்களுக்குள்" என கேட்டு.

போனை வாங்கி அப்பா வேறு அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிட்டார்...எல்லோருக்குமே நல்லவர்தான் ராஜ்...

தான் எப்போதும் விட்டுகொடுத்ததில்லையே ...ஏன் இப்படி தலையை சுற்றி மூக்கைத்தொடணும்..?

கொஞ்சம் எரிச்சலாகவே வந்தது...ஒரு பக்கம் பாவமாயும்...

இப்படி மனதில் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே, நேரமானதும் சுதிர் கிளம்பியதும் தெரியாது வேலை மும்மரத்தில் இருந்தவளை

முதலாளியின் இருமல் சத்தம் நிமிர்ந்து உட்காரச்செய்தது...

உள்ளே நுழைந்தவருக்கு மரியாதை நிமித்தம் எழுந்தவளை உட்கார சொல்லிவிட்டு அவரும் உட்கார்ந்தார்...

வேலை பற்றி விசாரித்துவிட்டு,

" ம். என்னமோ பிரச்னைன்னு கேள்விப்பட்டேன்...ஒண்ணுக்கும் கவலப்படாத.. நான் இருக்கேன்... " னு பொடி வெச்சு பேசினார்...வழிசலுடன்...

இவள் முகத்தை சுருக்குவது கண்டு,

" ம் .. சுதிர் பேசியபோதே வந்தேன்.. எல்லாத்தையும் கேட்டேன்.." பல்லிளித்தார்...

இந்த ஆளுக்கு என்ன பதில் சொல்வது.. இல்லை சொல்லாமல் போவதா?..

" ஒஹ்ஹ்.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.. சார்... "னு சொல்லிட்டு கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள் மேற்கொண்டு பேசாமல்..


அசடு வழிய சிரிது நேரம் கழித்து அவர் செல்ல,


இனியும் தனியே அங்கே இருப்பது சரியில்லை என விரைந்து வீட்டுக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி..

அழைத்தாள் கணவனை ...

அவன் மிகப்பெரிய மருத்துவமனையில் இருப்பதாக சொன்னதும் தூக்கி வாரிப்போட்டது...

விபரம் கேட்டுக்கொண்டு உடனே ஆட்டோ பிடித்து விரைந்தாள் அங்கு...








ஒதுக்கப்பட்ட கல் - பாகம் -9


விடியும்போது இருவரும் இருவேறு சிந்தனைகளோடே எழுந்தனர்...

காலை காஃபியை தயாரித்து அவன் செய்தித்தாள் படிக்கும்போது அவன் முன் மேசையில் வைத்தாள்.

முந்தினம் அவள் பேசிய வார்த்தைகளில் மாறியிருந்தான் எனினும், விட்டுக்கொடுப்பதாயில்லை அவன்..

அவளோ சில காலமாவது அவனுக்கு புரிந்துணர்வு வரும் வரையிலும் அல்லது புரிந்து கொள்ள முயர்சிக்க முனையும் வரையிலாவது

பெற்றோருடன் சில காலம் தங்குவது என முடிவோடிருந்தாள்...


" உன்னிடம் சில விஷயம் பேசணும்.."

திரும்பிப்பார்த்தவள்,

" சமையல் முடிந்ததும் வருகிறேன் ... பேசுவோமே , நிதானமாக..." என்று சொல்லி சென்றவளை,

" அது முக்கியமில்லை.. எனக்கு முக்கியமாக ஒன்று தெரியணும்..."

" என்ன " என்பதுபோல் விழிகளை சுருக்கினாள்.

" நீ இந்த வேலையை விட்டுவிட்டால் நாம் சந்தோஷமாயிருக்கலாம் என நினைக்கிறேன்..வேலையை விடணும் கண்டிப்பாக.."

பதில் சொல்ல வாயை திறந்தவள், கையிலிர்ந்த துண்டில் கையை துடைத்துக்கொண்டு,

சொல்ல வந்ததை சொல்லாமல் அப்படியே சமையலரைக்கு தொடர்ந்தாள்..

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவன், கத்தினான்...

" என்ன நான் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்கிறேன்... மதிக்காமல் , ஒன்றுமே சொல்லாமல் போறாயே?..?"

முகத்தை மட்டும் எட்டிப்பார்த்தவள்,

" வேலையை விட முடியாது ...மன்னிக்கவும்"

வேகமாய் எழுந்து வந்தவன்,

" என்ன ஒரு திமிரான பதில் இது...?"


" கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் சொல்ல வேண்டிய விதத்தில் பதில் இருக்குமே..."

" சரி இப்ப சொல்.. வேலையை விடுவியா மாட்டியா?.. இறுதியாக..?"

" இப்போதைக்கு விடுவதாயில்லை..." என அவள் சொல்லிமுடிக்குமுன்னே பளார் என அறைந்தான்...

அறைந்த கன்னத்தை அப்படியே பிடித்துக்கொண்டு அடுப்பினை அணைத்துவிட்டு அதிர்ச்சியில் சுவரோடு சாய்ந்து நின்றாள்..

கண்ணீர் மட்டும் சொல் பேச்சு கேளாமல் மடை திறந்த வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது...

காலிங் பெல் அடித்ததோ, பால்காரன் வந்து பால் தந்ததோ, தொலைபேசி மணி அடித்ததோ, எதுவும் ஏறவில்லை...

சில மணித்துளிகள்...

வழிந்ஹ கண்ணீரை துடைத்துக்கொண்டு, ஒப்பனை அறை சென்று குளிர்ந்த நீரை நன்றாக முகத்தில் தெளித்துக்கொண்டு, கண்ணாடியில்

தன் முகத்தை ஒரு வித வெறுமையோடு பார்த்துக்கொண்டு, பால்கனியில் உள்ள நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.

அதற்குள் அடுத்த தொலைபேசி அழைப்பு ...

நிதானமாக எடுத்தவள்,

" மலர், நலம்தானே?.. இன்றைக்கு ஒர் முக்கியமான வேலை எனக்கு எங்கள் பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள்.. அது விஷயமாக

அலைச்சல் இருக்கு .. நாம் நாளை சந்திப்போமா?.."

" அய்யோ என்னாச்சு?" நாற்காலி விட்டு எழுந்தாள்.

" ஹ என்னத்தம்மா சொல்ல... கணவர் கட்டாயத்தால் இந்த தொழிலுக்கு வந்தவள்... நல்ல வீடு வாசல் னு சமாதித்தாள்.. குழந்தை இல்லை..

இப்ப கணவன் வேறொரு பெண்ணை மணம் முடிக்க போகிறான் என்றதும் இப்படி.. இன்னும் அவனையெல்லாம் ஒரு ஆண்பிள்ளைன்னு இவளும் நம்பிகிட்டு..

எப்படியோ வாழ்க்கையில் யார் மேலாவது ஒரு பிடிமானம் வைத்துவிடுகிறார்கள் தன்னிலையோ உண்மையோ அறியாமல்.. எவ்வளவோ அறிவுறை தைரியம்

எல்லாம் சொல்லிருக்கேன்.. எல்லாம் தலை ஆட்டிவிட்டு, இப்ப திடீர்னு ....இவங்களை போல உள்ள பெண்களை திருத்தவே முடியாதும்மா.."

பேசி முடித்ததும் , பக்கத்தில் உள்ள செடிகளுக்கு அதே நினைவில் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருந்தாள்..

ஆண் சார்ந்த சமுதாயமாகவே இருப்பதால்தானோ இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆண்டாண்டு காலமாய் ஊறிப்போய்விட்டதோ?..

நாமே எல்லாத்துக்கும் மறைமுகமாக அனுமதிக்கின்றோமோ?..

அலுவலகம் கிளம்பியவன், தூரத்திலிருந்தே,


" கிளம்புறேன்.. தொலைபேசி மின்சார ரசீதுகள் இருக்கா?.."

பதிலில்லை..

" சரி சாரி.. என்னை ரொம்ப கோபப்படுத்திட்ட நீ.." என்றான் வேண்டாவெருப்பாக...

" எனக்கு கோபமேதுமில்லை இப்ப.. ஆனா நீங்க சொல்வதுதான் சரி " என்றாள்..

" என்ன வேலையை விடப்போகிறாயா?.."

" இல்லை.. நாம் பிரிந்தேவிடலாம் ..நேற்று நீங்க சொன்னதுபோல்... காலை வரை எனக்கு அந்த எண்ணம் இல்லை...

ஆனால் இனியும் ஒரு புரிதல் இல்லாமல் நீடிப்பதில் அர்த்தமில்லைதான்...

நீங்கள் அடித்தது எனக்கு வலியில்லை.. ஆனால் அந்த எண்ணம் எப்படி வந்தது...?. நான் திருப்பி அடிக்க முடியாது என்பதாலா?.."

தெளிவாக கோபமே இல்லாமல் மிக நிதானமாக அவள் கேட்டதும் அரண்டு விட்டான்...

சரிசெய்து கொண்டிருந்த கழுத்துப்பட்டையை அவிழ்த்துவிட்டான்...

" என்ன சொல்ற நீ.. தெரியாமல் நடந்தது அது.. அதை பெரிது படுத்தாதே... அதான் சாரி சொல்லிட்டேன்ல.."

" இல்ல ராஜ்... நான் யோசித்து பார்த்தேன்.. நான் உங்களுக்கு தகுதியில்லை... உங்களை கவனித்து உங்கள் பேச்சை மட்டும் கேட்பதுபோலான பெண்கள்

நிறய பேர் இருக்கிறார்கள்... என்னுடைய வளர்ப்பு அப்படியானதில்லை.. எனக்கு சிந்திக்க பழக்கப்படுத்தியிருக்கிறார் நாத்ஹிகரான என் அப்பா...

அன்பாய் இருக்க சொல்லியே இறக்கப்படும்படியும் வளர்த்துவிட்டார் அம்மா..."

" கணவனுக்கு பணிவிடை செய்வது மட்டுமே சொர்க்கத்தை அடையும் வழி என இன்னும் நினைக்கும் அப்பாவிகள் பலர் இருக்கின்றார்கள்.. அவர்களை

நீங்கள் அடித்தாலும் ஏன் என்று கூட கேட்கமாட்டார்கள்... உங்க மேல் தவறில்லை. உங்க குடும்ப வளர்ப்பு அப்படி..நான் உடனே செல்ல மட்டேன்..

நல்ல நண்பர்களாய் பிரிவோம் .. சரியா..?" புன்னகையோடு தீர்க்கமாய் பேசியது கேட்டு அதிர்ந்தான்...


நெருங்கி வந்து அவன் கைகளை பிடித்தாள்

" எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை ராஜ்... அலுவலகம் போய்ட்டு வாங்க நிதானமாக பேசுவோம்... நான் எப்பவும் உங்களுக்கு ஒரு நல்ல தோழி.."

அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தான் சோபாவில்...

தன் மாற்று உடைகளையும் துண்டையும் எடுத்துகொண்டு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் குளிக்க சென்றாள் குளிர்ந்த நீரில்...


-----------------------------------------------------------------------------------------------------------

1 comment:

Vadielan R said...

உங்கள் ஒதுக்கப்பட்ட கல் மிகவும் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி இதை தொடர்கதை அல்லது நாவலாக ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு எழுதிப் போடுங்கள்