Wednesday, April 29, 2009

ஒதுக்கப்பட்ட கல் பாகம் - 8ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே நளினா கதை சொல்லிக்கொண்டிருந்தாள்..

மூவரில் ஒருத்தி அதிர்ஷ்டசாலி என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்து கதை கேட்டாள் மலர்..

" ஆமாம்மா. மூவரில் ஒருத்தியைத்தான் என் மகனுக்கு மணம் முடிக்க போகிறேன்..அதற்காக அவர்களை தயார்படுத்திக்கொண்டும் இருக்கிறேன்.. எனக்கு பின்னால் அவர்கள் நான் செய்துவந்த அனைத்து சேவைகளையும் தொடரணும்...வாழ்க்கையில் பல அடிகளை , ஏமாற்றங்களை, வலிகளை தாங்கியவர்கள்.. அதனாலே இவர்களை தேர்ந்தெடுத்தேன்..."

" உங்க மகன் வெளிநாட்டில் .. அப்ப இவங்க எப்படி இங்க ..?"

" ஆமா .. அவன் இப்போது வேலை பார்ப்பது ஒரு பெரிய அராபிய ஷேக்கிடம்தான்... கொஞ்ச நாள் நன்றாக சம்பாதித்துவிட்டு இங்கு வந்தே தொழில் தொடங்கும் எண்ணம்.அதில் முழுக்க முழுக்க ஆதரவற்றவருக்கே வேலை...

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் , அவன் முதலாளியும் இத்தகைய சேவையில் மகிழ்ச்சியோடிருக்கிறார், மேலும் உதவ.."


"அவன் பிறப்பால் இந்து... வளர்ந்தது கிறிஸ்துவ பள்ளி, கல்லூரியில்... வேலை பார்ப்பது இஸ்லாமியரிடத்தில்..ஹஹ..அவன் யோகம் எல்லாமே அவனுக்கு நல்லவர்களாய் அமைந்தது...மேலும் ஆண் என்பதாலும்...." என அவள் சொல்லும்போதே அவள் பெண் என்பதால் அடைந்த வேதனை இன்னும் அவள் மனதில் ஆழமாய் பதிந்திருப்பது தெரிந்தது...

" ச‌ரி ஒரு க‌டின‌மான‌ கேள்வி.. பிடிக்காவிட்டால் ப‌தில் வேண்டாம் .. வ‌ருத்தினாலும் ம‌ன்னியுங்க‌ள்.."

" ப‌ர‌வாயில்லை கேள்.என்ன‌ பெரிதாக‌ கேட்டுவிட‌ப்போகிறாய்.. நீ?... எல்லா அறுவ‌றுப்புக‌ளையும், கேலி கிண்ட‌லையும் ஏமாற்ற‌ங்க‌ளையும் பார்த்தவ‌ள் நான்.. இதுக்கு மேலும் என்னை யாரும் காய‌ப்ப‌டுத்திட‌ முடியாது என்ன‌ள‌வில்..

கோவிலுக்கு சென்றால் என் முக‌த்தின் மீதே காரித்துப்பிய பெண்கள் உண்டு.., அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர் என் வாடிக்கையாள‌ர் என‌ தெரியாம‌லே..ச‌ரி நீ கேட்க‌ வ‌ந்த‌தை கேள்..." சிரித்தாள்" இல்லை, இன்னும் இந்த‌ தொழில் செய்கிறீர்க‌ளா என்ன‌?.."

" ம். என்ன‌ ப‌தில் சொல்ல‌..இப்போது என் மீதான‌ பார்வையே வேறு.. இந்த‌ தொழிலை பொறுத்த‌ வ‌ரை வ‌ய‌சுக்குத்தான் ம‌திப்பு.. ஆனாலும் துணை தேடி வ‌ருப‌வ‌ர்க‌ளும் உண்டு... அவ‌ர்க‌ள் எங்க‌ளைப்போன்ற‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ளையே விரும்புவார்க‌ள்...கூடவே அழைத்துச்செண்று அவர்களுக்கு பணிபுரிய மட்டுமே உபயோகிப்பவர்களும் உண்டு.. இதில் சிலர் ம்அனைவியை இழந்தவர்கள், அல்லது மனைவியால் கவனிக்கப்படாதவர்கள்..

ஆனாலும் நானே இதை 2 வ‌ருட‌ம் முன்பு நிப்பாட்டிவிட்டேன்.. அத‌ற்கு கார‌ண‌ம் ஒரு தொழில‌திப‌ர்...அவ‌ரை ச‌ந்தித்த‌தே நில‌த்த‌க‌றாரில்தான்..அவ‌ருடைய‌ தொழிற்சாலையை ஒட்டிய‌ நில‌ம் விலைக்கு வ‌ந்த‌போது ப‌ல‌த்த‌ போட்டி..ஆனால் நான் இதை ந‌ல்லெண்ண‌த்துக்கு வாங்குகின்றேன் என்ற‌தும் விட்டுக்கொடுத்த‌ மாம‌னித‌ர்.. அதில் ஏற்ப‌ட்ட‌ ப‌ழ‌க்க‌மே காத‌லாய் மாறிய‌து..காதல் என்று கூட சொல்ல முடியாது .. சிறந்த நட்பு..." என‌ சொல்லும்போதே வெட்க‌ப்ப‌ட்டாள் ந‌ளினா.


என் உட‌ம்பையே பார்த்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ருள், முத‌ன்முத‌லாக‌ ம‌ன‌தை மட்டுமே பார்த்த‌ ம‌ஹான் அவ‌ர்..

வாய் திற‌ந்து 4 வார்த்தை தொட‌ர்ந்து பேசிட‌மாட்டார்..அவ‌ர் க‌ண்க‌ளிலேயே குடியிருக்கும் அத்த‌னை இர‌க்க‌ம்..நாங்க‌ள் இருவ‌ரும் ச‌ந்திப்ப‌து என்னை சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் கூட‌ தெரியாது..

ஏனெனில் அவ‌ர் மிக‌ப்பெரிய‌ புள்ளி இங்கு...அவ‌ருக்கு என்னால் எந்த‌ பிர‌ச்னையும் வ‌ர‌க்கூடாது என‌ மிக‌ க‌வ‌ன‌மாக‌ இருப்பேன்..

நாங்க‌ள் இருவ‌ரும் ச‌ந்தித்துக்கொண்டால் என்ன‌ பேசுவோம் என‌ நினைக்கிறாய்..?.. "


" ம். சொல்லுங்க‌ள்.." புன்ன‌கைத்தாள் ம‌ல‌ர்..


" இல‌க்கிய‌ம் பேசுவோம்..ஆத‌ர‌வ‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு எப்ப‌டி உத‌வ‌லாம் என‌ பேசுவோம்..என‌க்கான‌ தைரிய‌த்தை த‌ருவார் அவ‌ர்...மறுபடியும் புதிதாய் இவ்வுலகில் பிறந்த உணர்வை தந்தவர் அவர்..கசக்கி பிழிந்து தூக்கி எறியப்பட்ட வாசனையற்ற மலரான என்னை மீண்டும் மணம் பரப்பும் மலராக மாற்றியவர்.. ஆண்கள் மேலே வெறுப்போடு இருந்த நான் இப்படிப்பட்ட சிலரையும் சந்தித்தது நான் செய்த பாக்கியம் மா."

" யார் என‌ நான் அறிய‌லாமா.?.. அப்படி ஒரு நல்ல மனிதரை தெரிந்துகொள்ளும் ஆவல்தான்.."

புன்ன‌கைத்தாள் ந‌ளினா..." இல்லைம்மா.. அது ம‌ட்டும் தெய்வீக‌மாக‌ இருக்க‌ட்டும்.. என் ம‌ன‌தினுள்ளே.. ஆனால் தேவைப்ப‌ட்டால் சொல்லுகிறேன்.உலகத்தில் நம்மை எந்த எதிர்பார்ப்பும் இல்லாது யாராவது நேசித்தால் அதுதான் மிகப்பெரிய அதிர்ஷ்டம் .. நான் அனுபவித்துவிட்டேன் மா,.." என்றாள் புதிரோடு...

இன்றாவ‌து சீக்கிர‌ம் திரும்பிட‌ணும் என‌ அவ‌ளிட‌ம் விடைபெற்றுக்கொண்டு ம‌ல‌ர் வேக‌மாய் வீடு வ‌ந்து சேர்ந்தாள், வ‌ழியிலேயே கொஞ்ச‌ம் காய்க‌றியையும் வாங்கிக்கொண்டு...

நுழைவிலேயே வெளிநாட்டு கார் நிற்கிறது..

அடுக்க‌க‌ம் மாடியில் நுழையும்போதே வேக‌மாய் வெளிவ‌ருகிறார், க‌ண‌வ‌னின் அக்கா..கோடீஸ்வரி... ப‌ய‌த்தோடே ம‌ரியாதைக்காக‌ சிரித்து வைத்தாள்..

ஆனால் அதை அல‌ட்சிய‌மாக‌ முக‌த்தை சுழித்துக்கொண்டு இடிப்ப‌துபோல் இற‌ங்கி சென்றாள் நாத்த‌னார்..

உள்ளே நுழைந்த‌துமே,


" இன்னிக்கு என்ன‌ காவ‌ல் நிலைய‌த்தில் அம்ம‌ணிக்கு வேலையோ?.. " கோப‌மாக‌ செய்தித்தாளை எடுத்துப்போட்டான் முக‌த்தில்.


எடுத்து பார்த்த‌வ‌ள் அதிர்ந்தாள்.. ந‌ளினாவோடு அருகில் தானும் நிற்ப‌துபோல் . பழி வாங்கிவிட்டான் "உண்மை இன்றே "பத்திரிக்கைக்காரன்.. ..( மன்னிக்கவும் உண்மை என்ற பத்திரிக்கை இருப்பதால்)


ஒஹ்ஹ் அதுதான் அக்கா விரைவாக‌ வ‌ந்து ப‌ற்ற‌ வைத்துவிட்டு சென்றாளோ.. எல்லாம் புரிந்த‌து.. ஆனால் எடுத்து சொன்னால் கேட்க‌க்கூடிய‌ ம‌ன‌நிலையில் அவ‌னில்லை..


" நான் ந‌ளினாவின் பெண்க‌ளை காப்பாற்றிட‌ உத‌வி செய்ய‌ போனேன்..."


" போதும் நிப்பாட்டு.. என‌க்கு எந்த‌ விள‌க்க‌மும் தேவையில்லை...இனி நான்தான் முடிவு செய்ய‌ணும்...உங்கூட‌ வாழ‌ணுமா வேண்டாமா னு..எங்க‌ வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ளை எதிர்த்துகொண்டு உன்னை திரும‌ண‌ம் செய்த‌மைக்கு நல்ல‌ பாட‌ம் என‌க்கு.."அதிர்ச்சியுற்றாள் ம‌ல‌ர்.. அக்கா‌ பேச்சை கேட்டு ஆர‌ம்ப‌த்தில் இருந்தே குழ‌ப்ப‌ம்.. விருப்ப‌மில்லாவிட்டாலும் துர‌த்தி துர‌த்தி காத‌லித்து எல்லார் ச‌ம்ம‌த‌த்தையும் பெற்று க‌ர‌ம் பிடித்த‌வ‌ன் இன்று அப்ப‌டியே மாறிப்போன‌தென்ன‌?..


த‌ன்னை மீறி வ‌டிந்த‌ க‌ண்ணீரை துடைத்துக்கொண்டு, குளித்துவிட்டு உடை மாற்ற‌ சென்றாள்..


" சாப்பிடுறீங்க‌ளா?.. "

ப‌திலேயில்லை..அவ‌ளும் சாப்பிட‌ பிடிக்காம‌ல், கொஞ்ச‌ம் பாலை ம‌ட்டும் அருந்திவிட்டு , வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு , கணவனுக்காக பூஜையறையில் செய்ய வேண்டியதை செய்துவிட்டு , புத்த‌க‌ம் எடுத்துக்கொண்டு ப‌டுக்க‌ சென்றாள்..

வேக‌மாய் வ‌ந்த‌வ‌ன் த‌லைய‌ணை எடுத்துக்கொண்டு வேறு அறைக்கு சென்றுவிட்டான்...

அப்போது அவ‌னின் கோப‌த்தின் வேக‌ம் வ‌ருத்த‌ம‌ளித்த‌து... ச‌ரி என்ன‌ இருந்தாலும் அவ‌னின் ந‌ல்ல‌ குண‌ங்க‌ள் ப‌ல‌வ‌ற்றை அசைபோட்டுக்கொண்டு, ஈகோ பார்க்காம‌ல் பேசிட‌லாம் என‌ நினைத்து

அவ‌ன் அறைக்கு வ‌லிய‌ சென்றாள்...மெதுவாக கதவை தட்டி, சம்மதம் வாங்கி உள்ளே சென்றாள்...க‌ண்டுகொள்ள‌வேயில்லை அவ‌ன்..கணினியில் மும்முரமாய் இருந்தான்..

எப்ப‌டி ஆர‌ம்பிப்ப‌து என‌ த‌ய‌க்க‌ம் அவ‌ளுக்கு..

" அக்கா வ‌ந்தாங்க‌ போல‌..?"


" " பதிலில்லை

" என்ன‌ விஷ‌ய‌மாம்..?"

" உன‌க்குத்தேவையில்லை. நீ போகலாம்.." க‌டின‌மாக‌ வ‌ருது..


" நிஜ‌மாத்தான் சொல்றீங்க‌ளா , பிரிவ‌து ப‌ற்றி?"


" ஆமா, என் குடும்பத்தில் இதெல்லாம் ப‌ழ‌க்க‌மில்லை.. இப்ப‌டி செய்தி பேப்ப‌ரில்வ‌ருவ‌து..நாங்க‌ யோசிக்க‌ணும்.."

புதிதாக ‌" நாங்க‌ " னு த‌ன்னை த‌னியே விட்டு சொல்லுகிறார்...

இனி இப்ப‌ பேசி பிர‌யோச‌ன‌மில்லை என‌ நினைத்து வெளியேறிய‌வ‌ள், சிறிது யோச‌னைக்கு பின், தைரிய‌மாக‌ உள்ளே வ‌ந்து,


" ஆனா ஒண்ணு, நீங்க‌ தான் என்னை அதிக‌மாக‌ இழ‌ப்பீர்க‌ள் உங்க‌ளை நான் இழ‌ப்ப‌தைவிட‌...என்னை அவ்வ‌ளவு சீக்கிர‌ம் ம‌ற‌ந்துவிடுவீர்க‌ளா?..என்ன‌?.
......................................என்னாலும் முடியாது.." மேலும் க‌ண்ணீர் வ‌ர‌, சொல்லிவிட்டு வேக‌மாய் திரும்பிவிட்டாள்..

அவ‌ள் சொல்லிவிட்டு போன‌தும், அவ‌ளின் வார்த்தைக‌ள் அவ‌னை குடைய‌ ஆர‌ம்பித்த‌து...என்ன‌தான் கோப‌த்தில் சொன்னாலும், எவ்வ‌ள‌வு பெரிய‌ உண்மையை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.. ம‌ற்ற‌ பெண்க‌ளைப்போல் ச‌வாலாக‌ எடுத்துக்கொள்ளாம‌ல், ஈகோ இல்லாம‌ல், த‌ன் நேசிப்பையும் வெளிப்ப‌டுத்திவிட்டு..?

உள்ளூர‌ ம‌கிழ்ந்தான், அவ‌ளை புரிந்துகொள்ளாம‌லேயே..ஆனாலுமமிதை வைத்து அவளை வழிக்கொணரலாம் என்றும் நினைத்தான்.

அவ‌னை ம‌கிழ்வித்த‌வ‌ள், அவ‌ன் சொன்ன‌ வார்த்தைக‌ளின் வீரிய‌த்தை குறித்து நினைத்து த‌லைய‌ணையை ந‌னைத்தாள்...அவ‌ளின் க‌வ‌லையெல்லாம் பெற்றோருக்கு என்ன‌ ப‌தில் சொல்வ‌தென்ப‌தாக‌வே இருந்த‌து..


மனதினுள் நளினாவின் வரிகள் ஓடின...

" உலகத்தில் நம்மை எந்த எதிர்பார்ப்பும் இல்லாது யாராவது நேசித்தால் அதுதான் மிகப்பெரிய அதிர்ஷ்டம்."


விடியும்போது இருவ‌ரும் எதிர்பாராத‌ , முரண்பாடான முடிவோடு எழுந்த‌ன‌ர்..

No comments: