Wednesday, July 9, 2008

வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர்கள்..


இந்த இழையில் என் வலைக்காகவும் பின்னாளில் நினைவுபடுத்திக்கொள்ளவும் நான் என் வாழ்நாளில் சந்தித்த அதிசயிக்கத்தக்க , அற்புதமானவர்களை பற்றி

எழுதுகின்றேன்.. என் வாழ்வையே மாற்றிய பங்குண்டு, என் வாழ்வை அர்த்தமாக்கியதும் உண்டு...மொத்தத்தில் இவர்களை சந்தித்தது நான் பெற்ற பெரும்பேறு..

இதில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. சம்பவங்கள் மட்டுமே உண்மை..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலில் அலிமா.... ஐஸ்வர்யாராயைவிட அழகி.. இதுக்குமேல் வெள்ளையாக முடியாத கலர்..நடுத்ததர உயரம்...ஆனால் இவையெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை..

என்னை ஆட்கொண்டது அவளின் குழந்தைத்தனமான, வெகுளித்தனமான புன்னகை... என் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு குடியிருக்க வந்தார்கள், கணவனும், மனைவியும், 2 மாத

கைக்குழந்தையும்.. நான் யாரிடமும் வலிய சென்று பழகுவதில்லை பொதுவாக... வெறும் புன்னகை பறிமாற்றம் மட்டுமே.. கணவர் பாகிஸ்தான், அலிமா, தாய்லாந்து.

காதல் திருமணம்..பலத்த எதிர்ப்பில்..

என் மூத்த பையனுக்கு அப்ப 3 வயது.. அவனை மட்டும் கூப்பிட்டு விளையாடுவார்கள்.. ஒருநாள் ஒரு விளையாட்டு சாமானுடன் அவன் வீடு திரும்ப,

" அதைக்கொண்டு குடுத்துவிடு என நான் சொல்ல, அதற்குள் அவர் ( சலீம்) " அது அவனுக்குதான் வாங்கினேன் என்றார்... ஆரம்பித்தது எங்கள் நட்பு..

" அலீமாவுக்கு குழந்தை வளர்க்க கொஞ்சம் உதவ முடியுமா?."

" கண்டிப்பாக.. கரும்பு தின்ன கூலியா?.."

அன்றிலிருந்து அவன் எங்கள் வீட்டு செல்லக்குழந்தை...அம்மாவிடம் இருக்கும் குழந்தை நான் வேலைவிட்டு திரும்பியதும் கைபோட்டு என்னிடம் தாவும்..

அப்படியே அழைத்துச்செல்லணும் அவனை.. என் கணவரின் மீசை பார்த்து மட்டும் பயம்.. ( கொஞ்சம் குழந்தைகிட்ட சிரிச்சாத்தான் என்னவாம்னு சொல்லணும்) அனேக நாட்களில்

என் வீட்டில்தான் அவனுக்கு தூக்கம் சாப்பாடு எல்லாம்..இத்தனைக்கும் அலிமாவும் நானும் அதிகம் கதை பேசுவதுகூட நேரமிருக்காது.. எல்லாம் குழந்தை பற்றி தான் பேச்சு இருக்கும்...

என்னைவிட என் பையன்மேல் அவர்கள் இருவரும் அன்பு செலுத்துவதும், அவன் பள்ளிவிட்டு

வந்ததும், அவனுக்கு வேண்டிய பழங்களை நான் சொல்லாமலே அழகாக வெட்டி மேசையில் வைப்பதும், அவனுடன் விளையாடுவதும்... சந்தோஷமான நாட்கள்., அவை.

அதேபோல் நான் வாரம்தோறும் வெளியே போனால் அவள் குழந்தையில்லாமல் செல்லுவதில்லை.. அவனுக்கு வேண்டிய பாலுடன் ,டயப்பருடன் 2 மணிநேரம்

அமைதியாக எந்த குழப்பமும் இல்லாமல் வருவான்.. அவளுக்கோ ஆச்சர்யமாயிருக்கும்.. அவளிடம் அத்தனை குழப்படி..நான் சொன்னால் உடனே கேட்பான் குழந்தை..

அவளிடம் பிடிவாதம்.. இப்படியாக என் குழந்தை அவளிடமும், அவள் குழந்தை என்னிடமும்...

ஆனாலும் அவளிடம் எப்போதும் ஒரு சோகம் குடிகொண்டிருக்கும்... கணவர் மிக அன்பானவர் என்றாலும் குடிகாரர்.. . அதனால் அடிக்கடி பிரச்சனை...வெளியில் காண்பிக்க மாட்டாள்.

அவள் கோபிப்பதும் அவர் அவளை கொஞ்சி கொஞ்சி ( ஹனி ஹனின்னு ) சமாதானப்படுத்துவதும் அற்புதமான ஓர் தாம்பத்யம்....

ஒரு நாள் இரவு 11 மணி. சலீமிடமிருந்து போன்.." அலீமாவை பார்த்தீர்களா?."

வீடு சென்று தட்டினால் ஆள் இல்லை... பதருகிறேன் நான்.." என்னாச்சு உங்க கிட்ட சொல்லலையா?.. போன் எடுக்கவில்லையா?.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு போனாளா?.."

" ஆமா.. கொஞ்சம் பிரச்சனை... ஆனா இப்ப எங்க போனான்னு தெரியலை.. பயமாயிருக்கு..."

" சரி நீங்க பயப்படாதீங்க . என் கணவர் சென்று தேடிப்பார்த்து கூட்டி வருவார்... வந்ததும் தகவல் தருகிறேன்..."

1 மணிநேரம் தேடியும் காணோம்.. அக்கம்பக்கத்தில் எங்கும் இல்லை..

பின்பு 2 மணிநேரம் கழித்து வந்தாள், அழுது முகம் வீங்கி....எனக்கு பயங்கர வருத்தமும், கோபமும்.. இத்தனை பழகியும் என்னிடம் கூட சொல்லாமல்..?

" ஏன் அலிமா, இந்த குளிருக்குள் குழந்தையையும் தூக்கிக்கொண்டு..?." அழுகிறாள்....

மறுநாள் பிரச்சனையை சொன்னபோது " இதெல்லாம் சகஜம் என்றும், நாளாக சரியாகிவிடும் என்று மட்டுமே ஆறுதலளிக்க முடிந்தது..செத்துவிடலாம் என்றுதான்

போனாளாம், பின் குழந்தையை கொல்ல மனமில்லாமல், ஒரு பேரூந்தில் ஏறி ஊர் முழுக்க சுற்றிவிட்டு வந்துள்ளாள்.. காதல் திருமணம் அதுவும் பாகிஸ்தானியருடன் என்பதால்

அவள் குடும்பத்திலும் மரியாதை இல்லையாம்.. குடும்பத்தில் மிகவும் பாசமுள்ளவள்... அன்றிலிருந்து என்னை அன்னையுமாக்கினாள்...எப்போதும் அவளை சந்தோஷப்படுத்தி

ஊக்கப்படுத்தி வெளியில் அழைத்துச்சென்று ஜாலியாக பார்த்துக்கொள்ளும் கூடுதல் மகிழ்ச்சியான பொறுப்பெனக்கு...

சலீம் குடும்பத்தில் மூத்த பையன், அப்பா கிடையாது. 3 தங்கை 2 தம்பி.. அனைவருக்கும் பணம் அனுப்பணும்.. பொறுப்புகள் அழுத்த அதிகம் குடிப்பார்.. ஆனால் மிகவும்

நல்லவர்...குடியை மட்டும் விடவே முடியவில்லை.. அவர்கள் புது வியாபாரம் ஆரம்பிப்பதால் வீடு மாற வேண்டிய சூழ்நிலை.. எனக்கு கவலையெல்லாம் அந்த குழந்தை

எப்படி என்னைவிட்டு பிரியும், நான் பிரிந்தாலும்.. என் பையனுக்கு சாம்பார் சாதம் ஊட்டும்போது என் கையை பிடித்து அவன் வாய்க்குள் வைப்பானே..என்மேல் படுத்து தூங்குவான்.

அதன்படியே பிரிந்தார்கள்..ஆனால் 1 மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் மறுபடியும் வந்தார்கள்... ஆனால், அடுத்த 3 மாதத்தில் வேலைநிமித்தம் நாங்கள் மாறவேண்டிய சூழ்நிலை..

இப்படி 8 வருட பழக்கம்.. மாறியபின் தொலைபேசியில் தொடர்பு.. சிலசமயம் 3 மாதம், 6 மாதம் கூட பேசாமல் இருப்போம், அவரவர் வேலை பழுவில்..

ஆனால் திடீரென்று அழைப்பு வரும்.. " இன்று வரலாமா.." ..

" என்ன கேள்வி அலீமா... உடனே வாம்மா.." என்ன வேலை இருந்தாலும் அலீமா குடும்பத்தினருக்கு முதலிடம்...பெரிய வண்டியை ( land rover) எடுத்துக்கொண்டு குழந்தையை அழைத்துக்கொண்டு

வந்திடுவாள்..சிலசமயம் கடற்கரை அல்லது குழந்தைகள் பூங்கா செல்வோம்.. மனம்விட்டு பேசுவாள்.. அவள் ஆறுதலைடைந்ததாக நினைத்துக்கொண்டு.. ஆனால்

நானல்லவோ மகிழ்ந்திருப்பேன் அவள் அன்பை கண்டு... இரக்க குணம் கண்டு...அழகு , அறிவு, வசதி எல்லாம் இருந்தும் அப்படி ஒரு எளிமை.. இன்னும் ஊருக்கு

போனால் அவள் அன்னையுடன் வயல் வேலையில் உதவி செய்வாளாம்.. அப்பா இல்லாமல் ஒத்தையாக அவள் அன்னை 4 பெண் , 1 பையனை படிக்கவைத்துள்ளார்.

ஒரு அக்கா அமெரிக்காவுக்கு அரசாங்கமே படிக்க அனுப்பியதாம்.. அமெரிக்கரை ( இந்திய வம்சம்) மணமுடித்து, விவாக ரத்தாகி 12 வயதில் ஒரு பையன்.. அவள் விடுமுறைக்கு

தாய்லாந்து வந்தால் 1 மாதம் புக்கெட் கடற்கரையில் வீடெடுத்து சொந்தங்கள் அனைத்தையும் சந்தோஷப்படுத்துவாராம்...எளிமையிலும் எளிமை..தன் அன்னையின்

மேல் , ஒரு மனநிலை சரியிலாத அக்காவின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பு என்னை அதிசயிக்கச்செய்யும்...எல்லாத்துக்கும் சேர்த்தாற்போல் அவள் சகோதரன் மட்டும்

சரியான ஜாலி பேர்வழி. அழிப்பதற்காகவே பிறந்தவன்.. ஆனாலும் மிக மரியாதைக்காரன் நான் பார்த்தவரையில்...20 வயதில் மணமுடித்து பின் மனைவியை

கைக்குழந்தையோடு அனுப்பிவிட, அவளை அலீமா அழைத்துவந்தாள் இங்கு...வெறும் 18 வயது.. அழகான குழந்தையுடன்.. ..அவளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தாள் வேலைக்கு அலிமா..

தன் சகோதரன் மனைவி என பார்க்காமல், ஒரு பெண் என மட்டுமே பார்த்து இளகிய மனம் அவளுக்கு...

( இன்று அலீமாவுக்கு முதுகுவலி.3 மாதத்துக்குபின் சந்திக்க செல்கிறேன்.. அவள் நினைவில் பதிவு..)

*************************************************தொடரும் *****************************************************

No comments: