Thursday, April 21, 2011

தத்தெடுத்தல்..:
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஏன் 10 வருடமெல்லாம் காத்திருக்கிறார்கள் என அதிசயப்பட்டதுண்டு..( என் குடும்பத்திலும் )

எப்படி அந்த அன்பை சேமித்து வைத்திருப்பார்கள் பல்லாண்டுகள் வலியோடு , சுமை, ஏக்கத்தோடு ...?

திருமணத்தோடு யோசிப்பேன், " ஒருவேளை என் உறவினர்கள் மாதிரி குழந்தை இல்லாவிட்டால் உடனே தத்தெடுக்கணும் " என..

ஆளாளுக்கு பல காரணம் சொல்வார்கள்.. குழந்தை ஜீன் எப்படியோ, நோய் எப்படியோ, குணம் , குலம் எப்படியோ...


ஏன் அன்பு செலுத்த இவையெல்லாம் சப்பை காரணங்களாய்.?.. ஆனால் இத்தகைய காரணங்கள் சொல்பவர்கள் தத்தெடுக்காமல் இருப்பதே நல்லதும்.. அந்த குழந்தைகள் தப்பிக்கும்..

முன்பின் அறிமுகமற்றவரிடம் நட்பு , பாசம் வருது .?.. ஆனால் ஏதுமறியாத பச்சைக்குழந்தையிடம் அன்பு , பாசம் வராதா?..

கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு மண்ணுக்குள்ள போற நமக்கு ரிஷிமூலம், நதீமூலம்னு சொல்லி வாழும் நாட்களை அனுபவிக்காமல் கட்டுக்கதை சொல்லி நரகமாக்கியவர்களை என்ன சொல்ல..?

ஆகவே காத்திருக்காதீர்கள் , தத்து குழந்தையிடம் அன்பு செலுத்த .. இல்லையில்லை , அன்பை பன்மடங்கு அனுபவிக்க..


( ஏன் சொல்ல மாட்டீங்க.. நீங்க தத்தெடுக்கவா செய்தீர்கள் என்றால் , மனதளவில் நான் எப்பவோ தயார்.. ஆனால் வாய்ப்பில்லை.. அவ்வளவே.. )

என்னுடைய உறவினர் பெண்ணுக்கு தத்தெடுக்க ஆசை. ஆனால் கணவரின் ஆணாதிக்கம் தடுத்தது.. :(.. (இருவரும் ஒரே தினம் மரணமும்.... )

வாயில்லா பூச்சிகளாய் வாழ்ந்திருக்கிறார்களே பெண்கள்... ???

வாரிசு இல்லையென்றால் அதிலென்ன வெட்கம் , கேவலம் , ஏமாற்றம்..?.. அன்பு செலுத்த , பெற முடிந்தும் அன்பில்லாத வாழ்வுதான் வெட்கப்படவேண்டியது...வருந்தவேண்டியது..

பெற்ற குழந்தைகளை போட்டிகள் என தொலைக்காட்சியில் வருத்துவதும் , குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் முன்பு சண்டையிடுவதும்தான் கேவலம்.. வருத்தம் எல்லாம்..

ஊனமுற்ற குழந்தை என்றாலோ , மன நலம தவறிய குழந்தை என்றாலோ கூட நம்மால் துளியும் வித்யாசப்படுத்தி பார்க்காமல் , சொல்லப்போனால் இன்னும் அதிகமாக அன்பு செலுத்த முடிந்த நம்மால் ஏன் பரிதாபத்துக்குறிய பச்சிழங்குழந்தைகளை தத்தெடுக்க முடிவதில்லை.. நம் மேல் மட்டும் குற்றமில்லை.. நாம் அப்படி பழக்கப்பட்டிருக்கோம் இச்சமூகத்தில்.. விசாலமான மனதை வளர்க்காமல் குறுகிய மனப்பான்மையோடு வளர்க்கப்பட்டிருக்கிறோம்..


தாய்லாந்தில் நமக்கு பிடித்தமான குழந்தை, ஆணோ, பெண்ணோ பெற்றுக்கொள்ள லட்சக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வந்து செலவழிக்கிறார்கள்.. ஏன் இந்த பேராசை.. இப்படியான பேராசை சூழலுக்குள் தள்ளப்படுவது மிகப்பரிய கொடுமையும் , மனச்சுமையுமல்லவா பெண்ணுக்கு.. ???..


குழந்தையின்மை என்பது மிக சகஜமாக பார்க்கப்படவேண்டிய விஷயம்..

எல்லாரும் மருத்துவமனை , கோவிலுக்குள் படையெடுக்காமல் தத்தெடுக்க ஆரம்பித்தால் அதைவிட வேறு சிறப்பான ஆன்மீகம் , நற்செயல் மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்..

இதை எந்த ஆன்மீகவாதியும் , சோசியக்காரனும், மருத்துவரும் கூட சொல்வதில்லையா?.. குழந்தை வரம் கேட்டு வருபவர்களிடம்.. ?.

உலக மஹா படிப்பு படித்ததால் மருத்துவதுறையின் முன்னேற்றத்தால் ஒரு குழந்தையை பெற முடியும்தான்.. ஆனால் செலவே இல்லாமல் அன்பை பெற வழி இருக்கும்போது ..?.
யோசிக்கலாமே.. ..நமக்கு தெரிந்தவர்களுக்கு ஆதரவும் துணிவும் கொடுக்கலாமே.. சமூக பார்வையை அலட்சியப்படுத்தவும், அதோடு சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவும் செய்யலாமே, வாழப்போகிற இந்த சில ஆண்டுகளில்..

போலித்தனமான கற்பிதங்களிலிருந்து வெளியே வந்து ஒரு முன்மாதிரியாக இருக்கலாமே..?..அதற்கான தெம்பை , எதையும் துணிவாக சந்திக்கும் ஆற்றலை கொடுப்போமே..

எங்க ஊரில் ஒரு பெண்மணி தன்னுடைய ஆறாவது பிரசவத்துக்காக என் அக்கா அனுமதிக்கப்பட்ட அறையின் அடுத்த அறையில் இருந்தார்..5 குழந்தைகள் இறந்தபின்.. சொந்தத்தில் திருமணம்.. குழந்தை 6 மாதம் மேல் கர்ப்பத்தில் தங்குவதில்லை.. ஆக 4ம் மாதம் முதல் மருத்துவமனையே கதி..

ஒரு நாள் இரவு நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது சலசலப்பு..

பிரசவ வலி வந்தது.. 6 மாதத்திலேயே.. நாங்களும் கூட சேர்ந்து நகம் கடிக்க , சிறிது நேரத்திலேயே , குழந்தை இறந்த தகவல்.. மற்ற எல்லோரையும் விடுவோம்.. அந்த தாய்.?.. குழந்தை பெறும் இயந்திரம்..?.. படைத்தால் இயந்திரத்துக்கு வெற்றி .. இல்லையென்றால் இயந்திரம் வீண்.. ?.. அப்படித்தானே?.. 6 முறை கர்ப்பம் தரித்து , லட்சம் கனவுகள் கண்டு, பயத்தில் நாட்களை ஆடாமல் அசையாமல் கழித்து..???

ஏன் இந்த முட்டாள்தனமான எதிர்பார்ப்புகள்..?...சமூகத்தில் கட்டுடைக்க வேண்டியவற்றில் இதுவும் முக்கியமான ஒன்று..

சுமந்து பெறுவதால் மட்டுமே ஒருவர் தாய் ஆகவோ, தன் ரத்த உறவு என்பதால் மட்டுமே ஒருவர் தந்தை ஆகிடவோ முடியாது..

உலகிலுள்ள அனைத்து குழந்தைகளையும் நேசிக்க முடிந்தவர்கள் மட்டுமே பெற்றோர் என்ற சொல்லுக்கு அருகதையுள்ளவர்கள்.. மற்றவர்கள் வெறும் பேராசைகொண்ட சுயநலவாதிகள் மட்டுமே.. ( என்னையும் சேர்த்துதான் )

இதன் இன்னொரு வடிவம் வாடகைத்தாய்.. ஆரம்பத்தில் நானும் அதை சிறப்பென கருதி வேலாயி எனும் தொடர்கதை எழுதியதுண்டு..

யோசித்து பார்த்தால் , அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் , நம் வாரிசே உருவாகணும் என.. ?.. நாம் , நம் ஜீன்கள் , நம் சந்ததியினர் மட்டும் எந்தளவில் உசத்தி?.. யார் மதிப்பீடு செய்ய..?..

அப்படி ஒரு வாரிசை உருவாக்கிட , ஒரு ஏழைத்தாயின் உணர்ச்சிகளை அல்லவா விலை பேசுகிறோம்?.. அவருக்கல்லவா வாழ்நாள் முழுதும் குற்ற உணர்ச்சியை தருகிறோம்?.. யோசிப்பது கூட இல்லை .. நமக்கு காரியம் ஆனால் போதும்.. என்று பழகிவிடுகிறோம்.. அதை சமூகமும் ஏற்று நம்மை திட்டுவதற்கு பதில் விழா எடுத்து மாபெரும் வெற்றியாக அங்கீகரிக்கிறது... இது ஒரு வகை நுகர்வு கலாச்சாரமாய் மாறி வருகிறது.. அதிலும் இந்திய வாடகைத்தாய்கள் கம்மி விலையில்..:((!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல , ஒரு மகிழ்ச்சி, ஒரு நம்பிக்கை , வாழ்க்கையை முழுமையாக பொறுமையாக கற்பது போன்ற பல விஷயம் இருக்கிறது.. அந்த வாழ்வானது எல்லாருக்கும் மிக எளிமையான வழியில் கிடைக்கட்டும் , அனுபவிக்கட்டும்.. பெற்றால் தான் பிள்ளை என்ற பழைய குருட்டுத்தனமான நம்பிக்கையை உடைத்தெறிந்து விடுதலை தருவோம், பல குடும்பத்துக்கு , முக்கியமா பெண்களுக்கு...


வெளிநாடுகளில் அன்பு செலுத்த பிராணிகளை கூட பிள்ளைகள் போல் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்..இப்ப நம் நாட்டிலும் அந்த பேஷன் வந்தாச்சு.. நாம் மட்டும் இன்னும் பிடிவாதமாய் பெட்ரமாக்ஸே வேணும் னு இருந்தா எப்படி?..
சரி குழந்தைகளை மட்டும்தான் தத்தெடுக்கணுமா..? இல்லை.. முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோரை கூட தத்தெடுக்கலாம்.. உங்களால் வீட்டுக்கு அழைத்து வந்து கவனிக்க முடியாதுதான்.. ஆனால் மாதம் ஒருமுறை சென்று பேசிவிட்டு கூட வரலாம்.. முடிந்தால் பண உதவியும்.. சமீபத்தில் தெருவில் வீசப்பட்ட முதியோர்களை பார்த்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியுமடைந்தேன்.. யாரை குற்றம் சொல்ல?.. பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல்தானே இந்த நிலைமை.?..

இது பற்றி எழுதிய தத்து குழந்தை கதை

சென்னையில் மட்டும் பணம் செலுத்தி கவனிக்கும் முதியோர் இல்லமே நூற்றி இருபத்தைத்துக்கு மேலாம்.. . இலவச இல்லங்கள் தனி.. இப்ப இது ஒரு புது வகை தொழில்..நல்லவை இல்லாமல் இல்லை.. ஆனால் இதைத்தான் நம் கலாச்சாரம் என கொண்டாடுகிறோமா?.. இதற்குத்தான் தியாகம் செய்து , உடல் வருத்தி வளர்த்தார்களா ..?


இன்னொரு தத்தெடுத்தல் நலிந்த கிராமங்களை.. அது பற்றி பிறகு பார்ப்போம்..

( விசாரித்து பார்த்ததில் , தத்தெடுப்பதும் கூட அத்தனை எளிதல்லவாம்.. அப்படியானால் ஏன் இத்தனை அனாதை இல்லங்கள்..??..தத்தெடுப்பதை எளிமைப்படுத்தணும்.. தன் சொந்தக்காலில் நிற்க முடிந்தவர் , ஆணோ , பெண்ணோ , நன்றாக வளர்க்க முடியுமானால் , குறிப்பிட்ட வருடங்கள் கண்காணிப்போடு தத்தெடுக்க அனுமதிக்கணும்..அதே போல் ஓரின சேர்க்கை தம்பதியினருக்கும்.. சரி இதை தனியா பேசணும்.. இன்னும் அதை ஏற்கும் பக்குவம் நம் மக்களிடம் இல்லை என்பதே வேதனை .. )


நம்மையறியாமல் நம்மீது திணிக்கப்பட்டுள்ள பல்வகை கற்பிதங்களை இனியாவது தடுக்கணும்..கலாச்சாரம் , பண்பாடு என்ற போர்வையில் சகஜமாக்கப்பட்ட மனித நேயமற்ற செயல்களை ஊக்குவிப்பதை தடுக்கணும்..


லஞ்சம் வாங்கியாவது பங்களா வீடும், காரும் இருந்தாத்தான் மதிப்பு என்றளவில் நம் பார்வை பழக்கப்பட்டுள்ளது..

எளிமை வாழ்வே கேலிக்குறியது.. தோல்வியாக கணக்கிடப்படுகிறது..

அடுத்தவர்களை திருப்தி படுத்த பல போலி சந்தோஷங்களை காண்பிக்க வேண்டியுள்ளது.. அதற்கு குழந்தைகளையும் பலியாக்குகின்றோம், தேவையற்றவைகளை படிக்க சொல்லி..ஆடி, பாட சொல்லி., அடுத்தவரோடு எதிலும் போட்டி போட சொல்லி..

தத்தெடுக்க சில சட்ட திட்டங்கள் பர்றி தகவல்கள் இங்கே..

http://www.indiaparenting.com/adoption/4_1347/adoption-rules-in-india.html http://en.wikipedia.org/wiki/Christian_law_of_adoption_in_India http://www.indiachildren.com/adoption/laws.htm

( தத்தெடுக்க நான் வழிகாட்டியல்ல. எனக்கு தகுதியுமில்லை என்ற குற்ற உணர்வுடனே இந்தப்பதிவு.... )


//Adoption means you grew in your mommy's heart instead of her tummy // "Our children are not ours because they share our genes... they are ours because we have had the audacity to envision them. That, at the end of the day...or long sleepless night, is how love really works." Author: உன்க்னொவ்ன்படம்.: நன்றி கூகுள்


.

4 comments:

Ramani said...

சமூக அக்கறையுடன் கூடிய பயனுள்ள பதிவு
ஆனாலும் மூன்று பதிவுகளாக வரவேண்டிய பதிவை
சுருக்கமாக ஒரு பதிவாக்கிவிட்டீர்களோ என்ற
எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

தவறு said...

இதைப்பற்றிய சிந்தனைகள் நிறையவே உண்டுங்க பயணமும் எண்ணங்களும் சென்டிமெண்ட் மீறி இதை செய்யவும் நிறையவே சங்கடங்கள் இருக்கவே செய்யுது.

சிந்திக்கவைத்த பதிவுங்க பயணமும் எண்ணங்களும்.

தமிழானவன் said...

மிகச் சிறப்பான கட்டுரை. இதில் வாடகைத் தாய் வணிகத்தில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. ஏழைப் பெண்கள் சொற்பப் பணத்துக்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனியார் மருத்துவ மனைகளில் இதற்கு அதிக லாபமீட்டும் வழி என்பதால் இன்னும் ஊக்குவிக்கப்படுகிறது. தத்தெடுத்தல் என்பது இன்னும் விழிப்புணர்வு இன்னும் தீவிரமாக சமூகத்தில் பரப்பப்பட வேண்டும்.

தங்கம்பழனி said...

மிகச்சிறப்பான கட்டுரை என்று சொன்னால் வெறும் வார்த்தைகளாகிவிடும்...உள்ளத்து உணர்வுகளில் நிரம்பி மனதை பாதித்த கட்டுரை இது.. அதுவும் இந்த வரிகள் எம்மை மிகவும் கவர்ந்தவை.. ஆழ்மனதில் நித்ர்சன உண்மையை நிரந்தரமாய் தக்க வைத்தது. எனக்கு மட்டுமா.. மனித நேயம் உள்ள அனைத்து மனிதர்களையும் கவரும் அல்லவா? என்ன நண்பர்களே.. உங்களை கவர்ந்ததா இந்த வரிகள்..!


===>>கொஞ்ச நாள் வாழ்ந்திட்டு மண்ணுக்குள்ள போற நமக்கு ரிஷிமூலம், நதீமூலம்னு சொல்லி வாழும் நாட்களை அனுபவிக்காமல் கட்டுக்கதை சொல்லி நரகமாக்கியவர்களை என்ன சொல்ல..?<<====