Saturday, April 9, 2011

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?






யார் இந்த அன்னா ஹசாரே.?.

நன்றி இட்லிவடை
அன்னா பற்றிய வாழ்க்கை குறிப்பு ( இன்று டைம்ஸ் நாளிதழில் தழுவி எழுதியது நன்றி: யதிராஜ் )

எவ்வித உடமைகளோ, குடும்பமோ,வங்கியிருப்புக்களோ இல்லாத முற்றும் துறந்தவர். 10 x 10 அளவேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் வசிக்கிறார். கதராடை மட்டுமே உடுத்துவார்.

இந்த 71 வயது இளைஞர் பிரச்சனைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களையும், பயணங்களையும், உண்ணா விரதங்களையும் மேற்கொண்டுள்ளார்.

மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. என்னுடைய உயிரிழப்பால் கவலைப்பட எனக்கென்று உற்றார் எவரும் இல்லை, தவிர தேச நன்மைக்காக ஏதேனும் செய்யும்பொழுது உயிர்விடுவதையே நான் பெருமையாக நினைக்கிறேன் என்கிறார் இவர்.

அன்னாவோ பந்தங்களிலிருந்து எப்பொழுதும் தள்ளியே நிற்பதென்று உறுதி பூண்டுள்ளார்.

தனது சேமிப்பு அனைத்தையும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக அற்பணித்த ஹஸாரே, மக்களிடம் குடிப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டுமென பிரமாணமெடுத்துக் கொள்ளச் செய்தததோடு மட்டுமல்லாமல், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையு வற்புறுத்தி, சிறிய குடும்பத்தின் நன்மைகளைப் பிரச்சாரம் செய்தார்.

கிராமத்தினரை சுய தொழில் புரிய தூண்டிய ஹஸாரே, மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி கால்வாய்களையும், நீர் நிலைகளையும் ஏற்படுத்தச் செய்தார். இதன் மூலம் தண்ணீர் பிரச்சனை பெருமளவில் குறைந்ததோடு மட்டுமல்லாமல், தரிசு நிலங்கள் மேம்படவும் உதவின.

இவர் செய்த சாதனைகள் மூலம், இந்திரா ப்ரியதர்ஷினி வ்ருக்ஷமித்ரா, க்ருஷி பூஷணா, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், மகஸேசே,கேர் இண்டர்நேஷனல் ஆஃப் த யூஎஸ்ஏ, ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் போன்ற விருதுகள் இவரைத் தேடி வந்து குவிந்தன. தென் கொரிய அரசாங்கம் கூட இவரது சாதனைகளுக்காக இவரைக் கவுரவித்தது.

--------

இப்படி அற்புதமா போகுது இவரைப்பற்றிய செய்தி.. ஆனால் நடப்பதென்ன?.

மத்திய அரசு பணிந்தது: உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறார் ஹசாரே.!!!!!!!

காந்தீயம் வென்றுவிட்டது ..

--------------------

இந்தியருக்கு மட்டும் வருடம்பூராவும் ஏப்ரல் ஃபூல் ஏன்.?..

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். - அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுக்கிற மாதிரி நடிக்கும்..

-
அன்னா ஹசாரே ஏழை.

அவர் மாசற்றவரே.. மிக நல்லவரே.. ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம?..

இந்த போராட்டத்தில் எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?..அது எத்தனை முக்கியம்..?




அவருக்காக மெழுகுவத்தி ஏந்தும்போது,



வாழ்நாளில் ஊழல் செய்தவன் , துணை போனவன், அடுத்தவன் உழைப்பை சுரண்டியவன் , அடுத்தவன் வாழ்வை அழித்தவன் , மிரட்டியவன், மிரட்டல் வந்ததா கதறி பொய் சொன்னவன் , அதுக்கு தொண போனவன் ,சாதீ ய மும்முரமா வளர்ப்பவன் , பெண்களை இழிவுபடுத்துபவன் , ஆபாசத்தை வளர்த்தெடுத்து சிறார் கொலைக்கு துணை போறவன், எப்பவும் கெட்ட வார்த்தை மட்டுமே பேசி சமூகத்தை கழிப்பிடமாக்குபவன் , மதவெறி பிடித்தவன் , வன்முறை செய்பவன், அதற்கு துணை போகிறவன் கையெல்லாம் பொசுங்கி போற மாதிரி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.. :)))) ( ன்/ள் போட்டுக்கலாம் )

எத்தனை பேரால் மெழுகுவத்தி ஏந்த முடியும்னு தெரிஞ்சிருக்குமே..

என் கையும் பொசுங்கியிருக்குமே..:)..எப்பவோ நானும் லஞ்சத்துக்கு துணை போயிருக்கேனே..அவ்வ்..


அன்பின் அண்ணா ஹசாரே,

அடுத்த முறை உண்ணாவிரதம் இருக்கும்போது உங்களை ஆதரிப்பவர்களும் உங்களைப்போல மாசற்றவராக மட்டுமே இருக்கணும் என வேண்டுகோளை மறக்காமல் சொல்லிடுங்கள்..( இல்லையென்றால் உங்களோடு சேர்ந்து உங்கள் போராட்டத்தையே அசிங்கப்படுத்துகிறோம் திருடர்களாகிய நாங்கள் )


ஊழல் என்ற பூதம் ஏதோ அரசிடம் மட்டுமே இருப்பதுபோல ஊடகம் பூச்சாண்டி காண்பிப்பதும் , அதை விரட்ட , மக்கள் படையெடுப்பதும் பங்கெடுக்கும் எமக்குள்ளே குறுகுறுப்பை தருது..

எங்ககிட்டே குடியிருக்கும் பேயை யார் விரட்டுவது.?..

உங்களிடம் உள்ள சக்தி அரசை திருத்துவதாக மட்டுமல்லாமல் , பொதுமக்களுக்கும் ஒரு பாடமாக இருந்தால் நன்று..


வேர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பலவிதத்தில் பரவியிருக்கு.. தாமிரபரணி தண்ணீரை கொக்கோ கோலா எடுத்தா கண்டுக்க மாட்டோம்,. ஏன்னா அதை பற்றி எடுத்து சொல்ல இன்னொரு காந்தியோ அன்னா ஹசாராவோ தேவை நமக்கு.. இவர் போராட்டம் ஒரு சட்டம் ஏற்ற தான்.. அப்படியென்றால் இதுவரை இருக்கும் சட்டங்கள் பயன்படவில்லை என்றுதானே அர்த்தம்.. அதை நேர்வழியில் செலுத்த எந்த அன்னா ஹசாரா வர காத்திருப்போம்..?

நாம் அன்றாடம் கண்டுகொள்ளவேண்டிய கலங்க வேண்டிய பிரச்னை ஆயிரம் நம்மைசுற்றி இருக்கிறது.. எப்பவும் ஒரு அன்னா ஹசாரேவுக்காக நாம் காத்திருக்கோம்.. அவர் எடுத்த காரியம் வெற்றி பெற்றதும் மறந்திடுவோம்.. எங்கேயோ ஏதோ வெற்றி பெற்றதாகவும் அதில் பங்கெடுத்ததற்காக நம்மை நாமே பாராட்டி ஏமாற்றிக்கொள்வோம்..


ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.. அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்குமுன் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டு இனி பங்கெடுப்போம்.. அதையே அன்னா ஹசாரே போன்றோரும் எதிர்பார்ப்பதோடு அழுத்தமும் தரணும்.. இல்லையென்றால் இது பத்தோடு பதினொன்று அவ்வளவே.. நாட்டை திருத்த கூட வேண்டாம்.. முதலில் அன்னா ஹசாராவைப்போல் நம்மால் மாற முடியுமா என எண்ணிப்பார்த்துக்கொள்வோமே.. அப்போது அந்த மெழுகுவத்திக்கும் ஒரு வெளிச்சம் இருக்குமே..

இங்குதான் நாம் தவறு செய்கிறோம்.. போராட்டத்தின் அர்த்தமே நமக்கு தெரியவில்லை.. எங்கோ நடக்கும் போராட்டத்துக்கு ஊடகத்தின் ஆதரவு இருப்பதால் மட்டுமே நாம் ஆதரவு தெரிவிப்பதோடு நின்றிடக்கூடாது.. அன்றாட வாழ்க்கையில் போராட பழக்கணும் குழந்தைகளை , சாதி வெறி, மத வெறி, பெண்ணடிமை , லஞ்சம் , ஊழல், சமூக விரோத செயல்கள் , ஏற்றத்தாழ்வு, திருநங்கை வாழ்வு, வன்முறை, இப்படி பலப்பல.. இதை செய்ய நாள் நட்சத்திரம், துணைக்கு ஆட்படை எண்ணி காத்திருக்க தேவையில்லை. சகஜமாக்கப்படணும் கேள்விகள் கேட்கணும்..தினமும்..

நம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.. நம் நட்பிடம் தவறு என்றால் சொல்ல துணியணும்.. நம் கட்சி என்றாலும் நம் ஊர் , நம் இனம் , நம் மொழி என்றாலும் தவறை தவறு என எடுத்து சொல்ல துணிவை வள்:அர்க்கணும்.. இழிவுகளை பாராட்டுகளாக எடுக்க பழகணும்.. இல்லை நான் என் சொந்த பந்தங்களிலெல்லாம் தட்டி கேட்டால் விலக்கிடுவார்கள் , அதனால் நான் அரசை மட்டுமே கேட்பேன் , நானும் திருந்த மாட்டேன் என்றால் தயவுசெய்து அப்படியான நாடகத்தனமான ஆதரவு தருவதை விட நாடு எக்கேடும் கெட்டுப்போகட்டும் என விட்டுடுங்கள்..

மதுரையில் திரு.சகாயம் அவர்கள் பல சிக்கலில் மாட்டியுள்ளார்.. ஒரு நல்ல மனிதரை நல்லது செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். ஒன்றும் செய்ய முடியவில்லை.. அவருக்காக போராடலாமா?.. பயம் வருகிறதல்லவா?..

இதுதான் நாம்.. அதனால், காந்தியம் வென்றுவிட்டது , என நம்மை நாமே இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றிக்கொள்ள பழகிவிட்டோம்..

சமூகத்தில் உள்ள அனைத்து விரோதப்போக்குக்காகவும் , மனிதத்தன்மையற்ற செயலுக்காகவும் போராடணும், அன்றாடம்..நின்றுவிட்டால் மூழ்கிடுவோம்.. இது ஓடும் தண்ணீர் .. இடைவிடாமல் எதிர்நீச்சல் தேவை நமக்கு.. நம்மைப்பார்த்து பின்னால் வருபவர்களும் பழகிடட்டும்..

மெரீனா பீச்சுக்கு போக கூட தேவையில்லை.. கணினி முன் உட்கார்ந்தே உங்கள் கோபமான எழுத்தால் போராடலாம் நாகரீகத்தோடு.. மக்களிடையே உண்மை எது பொய் எது என விழிப்புணர்ச்சி கொண்டு வர போராடலாம்..

போராட்டம் என்பது வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா அல்ல கூட்டம் கூட்ட , பங்கெடுத்து மகிழ..



( போராட்டத்தில் பங்கெடுத்தவர்களை காயப்படுத்தவோ அவமானப்படுத்தவோ இந்த பதிவு அல்ல...அவர்கள் பங்கெடுப்புக்கு என் வாழ்த்து, பாராட்டு ஒரு பக்கமுண்டுதான்.. ஆனால் போராட்டம் என்றால் என்ன என புரியாமல் இருக்கிறோமே என்ற வருத்ததில் சில கருத்துகளை பகிர மட்டுமே.. புரிவோம்.. பங்கெடுப்போம் தினமுமே.. )

அன்னா ஹசாரேவுக்கு நன்றி/மரியாதை செலுத்த நான் என்ன செய்யணும்?..
-----------------------------------------------------------------------------------------------------------------

பதில் : நான் அன்னா ஹசாரே போல் சிறிதளவாவது மாறனும்..





படம் : நன்றி கூகுள்..





17 comments:

பொன் மாலை பொழுது said...

இது ஒரு ஆரம்பம்தானே ! இந்தியர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேடியே பழக்கப்பட்டவர்கள்.அதுதான் இதில் உள்ள சங்கடம். ஒருங்கிணைக்க ஆட்கள் வேண்டும் அங்கெங்கும். அதை நாம் தான் செய்யவேண்டும்.

சென்னை பித்தன் said...

உங்கள் பதிலே எல்லோரின் பதிலாகவும் இருக்க வேண்டும்.இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!

http://rajavani.blogspot.com/ said...

ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.

உண்மை பயணமும் எண்ணங்களும் வாழ்த்துகள்.

ப.கந்தசாமி said...

எனக்கு ஒண்ணு புரியலீங்க. இந்த அன்னா ஹஸாரே வெளியில தெரியற வரைக்கும் ஊழலை ஒழிக்க ஒரு சட்டமும் இல்லைங்களா?

இப்ப இவரு போராட்டத்தினால ஊழல் முழுவதுமாக ஒழிஞ்சு போயிடுமுங்களா?

இந்த மாதிரி எத்தனை டிராமாவப் பாத்திருக்கமுங்க.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கக்கு - மாணிக்கம் said...

இது ஒரு ஆரம்பம்தானே ! இந்தியர்கள் தங்களுக்கு ஒரு தலைவரை தேடியே பழக்கப்பட்டவர்கள்.அதுதான் இதில் உள்ள சங்கடம்//

ஆமாம் சரியா சொன்னீங்க.. அமைதியா பல தலைவர்குறிய அம்சத்தோடு இருப்பார்கள் வெளியே தெரியாது .. கண்டுக்கவும் மாட்டோம்.:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

சென்னை பித்தன் said...

உங்கள் பதிலே எல்லோரின் பதிலாகவும் இருக்க வேண்டும்.இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!//

நன்றி சென்னை பித்தன் சார்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

ஊழல்வாதி பிறப்பதில்லை.. நம்மிலிருந்துதான் உருவாகிறான்.

உண்மை பயணமும் எண்ணங்களும் வாழ்த்துகள்.//

வாய்ப்புகளை , வசதிகளை , நம் அலட்சியத்தோடு உருவாக்கிக்கொடுக்கிறோம்.. ஊடகம் துணை..

நன்றி தவறு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

DrPKandaswamyPhD said...

எனக்கு ஒண்ணு புரியலீங்க. இந்த அன்னா ஹஸாரே வெளியில தெரியற வரைக்கும் ஊழலை ஒழிக்க ஒரு சட்டமும் இல்லைங்களா?

இப்ப இவரு போராட்டத்தினால ஊழல் முழுவதுமாக ஒழிஞ்சு போயிடுமுங்களா?

இந்த மாதிரி எத்தனை டிராமாவப் பாத்திருக்கமுங்க.//


நீங்க அனுபவசாலின்னு தெரியுது சார்..

இத்தனை ஆண்டுகள் ஆச்சு சுதந்திரம் பெற்று .. ஒரு சட்டம் கூடவா ஊழலை தடுக்க முடியல..

ஆயிரம் சட்டம் வந்தாலும் ஊழலை மறைக்க முடியாது..

ஊழலின் ஊற்றுக்கண்ணே வேறு.. சுரண்டல் என்ற பேரில் ஏற்கனவே டாடா, அம்பானிகளுக்கு மாலை மரியாதையோடு எடுத்து கொடுத்தாச்சு..

அதனால் அதெல்லாம் எங்கே நியாபகப்படுத்தப்படுமோ னு இப்படி அப்பப்ப ஒரு நாடகத்தை போட்டு நாட்டில் இன்னும் ஜனநாயகமும் , நியாயமும் இருக்குன்னு மக்களை நிம்மதியா தூங்க வைப்பார்கள்..

Jayadev Das said...

ஆயிரமாயிரம் கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள், நாட்டை சுரண்டும் தொழிலதிபர்கள், நாட்டின் சொத்து முழுவதும் கொண்டு போய் வெளிநாட்டு வங்கியில் வைத்தவர்கள் மத்தியில் இப்படி ஒரு உன்னதமான மனிதர் தோன்றியிருக்கிறார். இவரிடமும் நொள்ளை நொட்டை என்று சொல்பவர்கள் தாங்கள் ஊழலுக்கு எதிராக என்ன சாதித்தார்கள் என்று யோசிக்க வேண்டும். அவருடைய போராட்டத்துக்கு ஊழல் பண்ணியவனும் ஆதரவு தெரிவிக்கிறான் என்றாலும் பரவாயில்லையே, திருந்துவான் என்று எதிர்பார்க்கலாமேஇத்தனை வருடமும் நடக்கும் ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யத் திராணி இல்லாமல், எருமை மாட்டு மேல் மழை பெஞ்ச மாதிரி இருந்து விட்டு, இப்போது போராடும் ஒரு நல்ல மனிதரைப் போய் விமர்சிக்கிறீர்களே... ...வெட்கக் கேடய்யா ..யாரோ சொன்னார்கள், PhD என்றால் Permanently Head Damaged fellow என்று, அதை நிஜம் என்று நிரூபிக்கிறார்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு நல்ல மனிதரைப் போய் விமர்சிக்கிறீர்களே//

கருத்துக்கு நன்றி நண்பரே..

அந்த நல்ல மனிதரைப்பற்றி இங்கு விமர்சனமில்லை..

ஆனால் இதிலுள்ள நாடகத்தை புரிஞ்சுக்கணும்.. அவர் கேட்பது ஒரு சட்டத்தை.. அது ஒண்ணும் பெரிய விஷயமேயல்ல .. இருக்கும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் மேலெல்லாம் இல்லாத நம்பிக்கை இந்த ஒன்றில் வரப்போகுதா?..

இது நாடகம் என புரியாதவர்களுக்கு கவலை வரும்தான்..

இன்னொரு பதிவு விபரமா எழுதுறேன் நாடகத்தை பற்றி..

எண்ணங்கள் 13189034291840215795 said...

PhD என்றால் Permanently Head Damaged fellow என்று,//

தவிர்ப்போம் இத்தகைய தாக்குதலை.. அவை விரும்பப்படா..

தலைத்தனையன் said...

எந்த மனிதருக்கும் இருக்கும் புகழாசை இவரையும் தொற்றிக்கொண்டதா தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் தன்னோடு அமரும் தகுதி சாதாரண, எந்த இமாலய சாதனையும் செய்யாத மனிதராக இருந்தாலும் m பரவாயில்லை. சுய ஒழுக்கம் உள்ளவராக இருந்தாலே போதும் என்ற அடிப்படையில் இருந்திருக்க வேண்டும் . கருணாநிதி போல் 90 வயது கடந்தும் தமிழை சொல்லியே மக்களைக் கொள்ளையடித்து தன் மக்களை வளர்க்கும், திமிர் பிடித்த தான் வைத்ததுதான் சட்டம் என்று வர்ணாசிரம கொள்கையில் உறுதி உள்ள ஜெயலலிதா போன்ற, தன் பெயர் மாற்றி சொல்லப்படுவதை சரி செய்ய முற்படும் ஒரு மக்கள் பிரதிநிதியை தலையில் அடித்தே உட்கார வைக்கும் ஒரு நடிகர் தலைவன். இப்படி நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய எந்த தகுதியும் இல்லாத அல்லது நல்ல தலைவர்களே இல்லாததினால் இருக்கும் பொறுக்கிகளில் குறைவாக குற்றப்பின்னணி உள்ளவன்/உள்ளவள் யார் என்று தெரிந்தெடுத்து அவனுக்கு அல்லது அவளுக்கு ஓட்டுப் போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நம் இந்தியர்களை நினைத்தால் மற்றுமொரு சுதந்திர போராட்டம் இன்றே இப்பொழுதே தேவை என்பேன்.

அன்ன ஹசாரே நடத்தும் பள்ளிக்கூடங்களில் விவேகானந்தரையும், சத்ரபதி சிவாஜியையும் மட்டுமே குழந்தைகள் சுதந்திர போராட்ட வீரர்களாக பயிற்றுவிக்கப்பட்டிருப்பது எந்தப்புற்றில் எந்தவகை பாம்பு என்று அறியாத நிலை நமக்கு. காய்தல் உவத்தல் இன்றி நாட்டுக்கு நல்லது செய்ய முற்படும் நல்லவன் வேண்டும். அவன் இந்துவாக இரு, கிறிஸ்துவனாக இரு, முஸ்லிமாக இரு அல்லது நாத்திகனாக இரு.

எனக்கு தெரிந்து ஒரு நல்லவன் உண்டு. அந்த நல்லவனுக்கு மூன்று செட் உடை மட்டுமே உண்டு. எங்கள் ஊருக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபொழுது இரண்டு செட் அழுக்காகி விட்டதால் தன் கையாலேயே அவற்றை துவைத்து மூன்றாவது செட் உடையை தானே இஸ்திரி செய்து போட்டுக்கொண்ட தலைவன் வேறு யாரும் அல்ல கம்யூனிஸ்ட் தலைவர் இப்பொழுதும் வாழும் நல்ல தலைவன் R நல்லகண்ணுதான்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

கம்யூனிஸ்ட் தலைவர் இப்பொழுதும் வாழும் நல்ல தலைவன் R நல்லகண்ணுதான். //

கருத்துக்கு நன்றி அப்பாஸ்..

இப்படியும் மனிதர்களா என வியக்கும்வகையில் இருக்கிறார் திரு.நல்லகண்ணு அவர்கள்.. ஆனால் பொழக்க தெரியாதவர் என அரசியல்வாதிகள் ஒதுக்கிடுவர்.. இவர்களைப்போன்றவர்களை நாம் முன்னிறுத்தணும்.. மக்களுக்கு அறிமுகப்படுத்தணும்..

தருமி said...

//எனக்கு ஆதரவு தரும் அனைவரும் என்னைப்போல அப்பழுக்கற்றவராக மட்டுமே இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்கணும்?.//

உங்களில் குற்றம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்ற ஏசு ... தலை நிமிர்ந்த போது யாருமில்லை அங்கு!

இந்தக் கதை தெரியும்தானே!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க தருமி ஐயா..



//உங்களில் குற்றம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்ற ஏசு ... தலை நிமிர்ந்த போது யாருமில்லை அங்கு!

இந்தக் கதை தெரியும்தானே!//

ஆமாம்.. ஆனால் குற்றம் இனியும் செய்பவரும் கூட சேர்ந்து ஊழலை ஒழிப்போம்னு சொல்வதெப்படி..?

ஆட்டுமந்தை பொதுப்புத்தியில் நம் மக்கள்..

அங்கு வரை சென்று ஆதரிப்பதைவிட நம் அருகில் ந்நடக்கும் அதிகர துஷ்பிரயோகங்களுக்கு ஒன்றுகூடலாமே?.. செய்கிறோமா ?.. இல்லையே..

இதையும் படியுங்கள்..

Hazare is being used, exploited: Digvijaya

http://ibnlive.in.com/news/hazare-is-being-used-exploited-digvijaya/149451-3.html


Digvijaya Singh: Well, again I feel he has been used, he's been exploited. Mr. Narendra Modi, who he said is a great Chief Minister has not appointed Lokayukta since last eight years. There is no forum in Gujarat where people can complain against corruption. Mr. Narendra Modi's Home Minister was charged in a false encounter case. He (former Gujarat Home Minister Amit Shah) has been known to be an extortionist, he's been asked not to enter Gujarat for a long time and there were so many other allegations against Mr Narendra Modi and his government, how can he be termed as an honest man?

Layman9788212602 said...

ஊழலை ஒழிக்கமுடியாது. ஆனால் குறைக்க முடியும். லஞ்சம் வாங்காத ஏன் தந்தையை லஞ்சம் வாங்கி அதில் மாத மாதம் தனக்கு பங்கு தர வேண்டும் என்று வீடு தேடி வந்து மிரட்டினான் ஒரு முதலமைச்சரின் மகன். அதற்கு இணங்காத காரணத்தால் பணி மாற்றம் செய்யப்பட்டு, பல இடர்களை சந்தித்து பணி ஒய்வு பெரும் பொழுது மன உளைச்சலுடன் ஒய்வு பெற்றார். லஞ்சம் வாங்கதவரையும் லஞ்சம் வாங்க தூண்டும் வகையில் தான் சமூக அமைப்பே இருகின்றது. ஒரு சமூக மாற்றமே வர வேண்டும். வெறும் சட்டத்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியாது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

லஞ்சம் வாங்கி அதில் மாத மாதம் தனக்கு பங்கு தர வேண்டும் என்று வீடு தேடி வந்து மிரட்டினான் ஒரு முதலமைச்சரின் மகன். //

என்ன கொடுமை..

இதே போல என் தோழி ஒருத்தியிடம், மேடம் இந்த சீட் ல இருந்தா நீங்க லஞ்சம் வாங்கியே ஆகணும். இல்லேன்னா வேற இடம் மாறிடுங்க னு சொன்னார்களாம்..

எப்படியெல்லாம் சோதனைகள் ??..

// ஒரு சமூக மாற்றமே வர வேண்டும். வெறும் சட்டத்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியாது. //

மிக சரி..

நமக்கு எழுத்து என்ற ஆயுதம் கிடைத்துள்ளது கண்டிப்பா செய்யணும்..